அக்கிரமமான ‘டேம்999’

0

முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவது போல ‘டேம் 999’ என்ற திரைப்படம் பொய்யாக, புரட்டாக கேரள அரசின் ஆசியோடு திரையிடப்படுகிறது. முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து உச்சநீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் போன்றவை மூலமாக பணிகள் நடகின்றன. முல்லைப் பெரியாறின் தரவுகள் தமிழர்களின் பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலேயே உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைந்து சேதமேற்படுவது போல ‘டேம் 999’ என்ற திரைப்படம் பொய்யாக, புரட்டாக கேரள அரசின் ஆசியோடு திரையிடப்படுகிறது. முல்லைப் பெரியாரில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து உச்சநீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் போன்றவை மூலமாக பணிகள் நடகின்றன. முல்லைப் பெரியாறின் தரவுகள் தமிழர்களின் பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலேயே உள்ளது. முல்லைப் பெரியாறின் நதிமூலம் ரிஷி மூலம் தமிழகத்தின் தெற்குச் சீமைதான். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியின் மேற்கே உள்ள மலையில் உற்பத்தி ஆகின்றது. ஒன்றுபட்ட மதுரை – இராமநாதபுரம் மாவட்டத்திற்கு காலம் வழங்கிய அருட்கொடையாக முல்லைப் பெரியாறு அமைந்தது. கேரளத்தின் பிடிவாதப் போக்கால் நமது உரிமைகள் இந்த பிரச்சினையில் கேள்விக்குறி ஆகிவிட்டது. இந்த அணையிலிருந்து 10,570 மி.க.அடி தண்ணீருக்கும் அதிகமாகவே தமிழகம் பயன்படுத்தலாம். 1886 டிசம்பர் 7ஆம் நாள் ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகள் குத்தகை இருந்தும் கேரளா அதை மறுக்கின்றது. இந்த குத்தகத் தொகையைக் கூட்டியும் தமிழகம் கொடுத்துள்ளது. பழுது பார்ப்பு செலவுகளுக்கும் தமிழகம் பொறுப்பேற்றுள்ளது. உரிமைகள் இருந்தும் தமிழகம் பொறுத்து போனது மட்டுமல்லாமல், கேரளம் கேட்ட பணத்தையும் வழங்கி நாம் ஏமாளியாகிவிட்ட நிலைமை.

முல்லைப் பெரியாரில் 1979இலிருந்து நமது உரிமைகள் பறிபோக ஆரம்பித்தன. 25.11.1979 அன்று எம்.ஜி.ஆருக்கும், அன்றைய கேரள முதல்வர் முகமது கோயாவுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் கேரளா நியாயமற்ற முறையில் இத்தகைய சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஒப்பந்தத்தில் பறிபோன தமிழக உரிமைகள்:

• 1979 ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் அணையின் 48 அடி தண்ணீர் தமிழகத்தின் பயன்பாட்டில் இருந்தது. ஒப்பந்தத்திற்கு பின் 3இல் 2 பங்கு தண்ணீர் கேரளத்தின் இடுக்கி அணைக்கு சென்றது. மீதம் உள்ள 1 பங்கு தண்ணீரே தமிழகத்திற்கு கிடைத்தது.

• அணையின் பாதுகாப்பினை கேரளாவே ஏற்றுக் கொண்டது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசாருக்கு தமிழக அரசு ஊதியம் கொடுக்கிறது.

• அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டது.

• தமிழ்நாட்டின் கட்டுபாட்டிலிருந்து குமுளி – அணை வரைக்குமான சாலையை கேரள அரசு தனது கட்டுபாட்டில் கொண்டு வந்துவிட்டது. அணையில் நமது மீன் பிடிக்கும் உரிமையும் பறிபோய் விட்டது.

• போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு போன்றவற்றை தமிழகம் முற்றிலும் இழந்து விட்டது.

• 1979 ஒப்பந்தத்திற்கு முன்பு அணைக்கு தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் செல்ல முடியும். ஆனால் தற்போது தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு முன் சோதனை சாவடி ஒன்றை கேரள அரசு அமைத்து, வரி வசூலித்து பின்னர்தான் அனுமதி அளிக்கப்படுகின்றது.

• தமிழக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பல ஏக்கர் இடத்தில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து பல கட்டடங்களை கட்டியுள்ளது.

• படகில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளானாலும், அலுவலரானாலும் கேரள அரசின் சோதனைச் சாவடியில் பெயர் பதிவு செய்துவிட்டுதான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்திற்கு என தனி பாதை ஒன்று அமைக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரை இயலவில்லை.

• அணைக்கட்டில் தனியாக வயர்லஸ் செட் மற்றும் தனி நீர் மட்ட அளவுகோல் போன்றவற்றை பயன்படுத்தி கொண்டு கேரளா நமது உரிமைகளை பறித்துக் கொண்டுள்ளது.

• அணைக்கு அருகில் உள்ள தமிழக அரசின் வன விருந்தினர் விடுதி மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தையும் கடந்த பத்து ஆண்டு காலங்களில் கேரளா பறித்துவிட்டது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, பழ.நெடுமாறன் 1979 ஒப்பந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் தி.மு.க. 1989இல் ஆட்சிக்கு வந்தபோது இப்பிரச்சினை சிக்கலாகிவிட்டது என்பதை உணர்ந்த, அன்றைய முதல்வர் கலைஞர் திருவனந்தபுரம் சென்று இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், முல்லைப் பெரியாறை இடித்துவிட்டு கேரளா புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை தனக்கு திருப்பிக் கொண்டு, தனக்குத் தேவையான மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பதே கேரளாவின் திட்டம்.

கேரள பத்திரிகைகள் முதன் முதலாக அணையின் பலம் குறைந்து நீர் கசிகிறது என புரளியை கிளப்பிவிட்ட போதுகூட, வல்லுநர் குழு அங்கு சென்று பார்வையிட்டு நீர் கசிவு இல்லை என்று சொன்னபின்பும், அப்போதும் ஒரு பொய்யான சி.டி.யை உருவாக்கி அணைக்கு ஆபத்து என்று புழக்கத்தில் விட்டது. இவ்வாறு தொடர்ந்து 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளா நொண்டி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. தண்ணீரை கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோமே தவிர, தமிழகத்திற்கு தரமாட்டேன் என்ற கேரளாவின் பிடிவாத போக்கு தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் வெளி மாநிலங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றாலும் சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்று விநோதமாக, இந்தியாவில் எங்கும் இல்லாத சட்டத்தை கொண்டு வந்தது.

கர்னல் பென்னி குவிக் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று மதுரை, இராமநாதபுரம் மாவட்ட பாடுபடும் விவசாயிகள் நன்மை கருதி கட்டியபோது

இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும் இதனை தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் இப்புவியில் வரப்போவதில்லை.

– கர்னல் ஜே.பென்னி குவிக்

கேரளாவின் நடவடிக்கையால் பென்னி குவிக்கின் ஆசைக்கும், அவரின் இந்த உயிரோட்டமான மணிவாசகங்களுக்கு இன்று அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை நமக்கு உள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டு விடுமோஎன்ற வேதனை ஏற்படுகிறது. கேரளா முல்லைப் பெரியாறு மட்டுமல்லாமல் கன்னியாகுமரியில் நெய்யாறு, நெல்லையில் அடவிநயினார் திட்டம், கோவை அருகே பாண்டியாறு – புன்னம்புழா, ஆழியாறு – பரம்பிக்குளம் என முக்கிய நதிப் பிரச்சினைகளில் கேரளா வம்பு செய்கிறது.

கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அங்கு அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின் நீர்வளம் சுமார் 1,350 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,300 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக்கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல 11 மடங்கு ஆகும்) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 இலட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,98,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கின்றன. இதில் சுமார் 1 இலட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் செல்கிறது என்று திட்டக் குழுவின்1978ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியவை வறண்ட பகுதிகளாக உள்ளன. இவைகளைப் போன்றே மேற்குத் தொடர்ச்சி மலைகளையொட்டிய மாவட்டமான கோவை மாவட்டமும் வறண்ட பகுதியாகும். இம்மாவட்டங்களில் வறண்ட காலங்களில் அருந்துவதற்குக் கூடக் குடிநீர் இல்லாத அவல நிலை அடிக்கடி ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகளின் எஞ்சிய நீரை அணைகள் கட்டிச் சுரங்கங்களின் வழியாகத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் நிச்சயம் வளம் பெறும். இப்பிரச்சினையைப் பல வருடங்களாகத் தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

சாலியாறு படுகை, பாம்பாறு, அச்சன்கோவில் ஆறு, பெரியாறு படுகை, கல்லட ஆறு என பல நதி நீர் படுகைகளில் உள்ள நீரை பெற தமிழகம் முயன்ற போதெல்லாம் கேரளா தலை சாய்க்கவில்லை.மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்கு திருப்புவது பற்றி மத்திய அரசு 1976ஆம் ஆண்டு குழு அமைத்தது. இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து இந்த நதி நீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது. அதன் பின்பு, மத்திய, தமிழக, கேரள அரசுகள் சுமார் 11 முறை இதுபற்றிப் பேசியும் எவ்விதத் தீர்வும் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பேசக்கூடாது என கேரளா கூறியது.

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கண்ணகி கோவில் தெளிவாக தமிழக எல்லையில் இருந்தபோதும் அதில் கூட உரிமை கொண்டாடுகிறது. கேரள மக்கள் பலர் தமிழகத்தில் வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழகத்திலிருந்து அரிசி, சிமெண்ட், மணல், வைக்கோல், மீன், இறைச்சி, காய்கறிகள் என அனைத்து அத்யாவசியப் பொருட்களையும் கேரள பெற்றுக்கொண்டு நன்றியற்ற முறையில் நதிநீர் பிரச்சினைகளில் நடந்து கொண்டு அரியின் பூமி என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? நதி நீர்ப் பிரச்சினைகளில் கேரளாவின் மூர்க்கத்தனத்தை எதிர்க்கும் வகையில் தமிழர்கள் தெற்கே களியாக்காவிளை, செங்கோட்டை – புனியறை, கம்பம் – வண்டிப் பெரியார் எல்லைக் பகுதியில் தமிழக பாலக்காடு எல்லையில் ஒன்று திரண்டு இந்த அத்யாவசியப் பொருட்கள் போகாமல் தடுத்தால், கேரளா இதை எதிர்கொள்ள முடியுமா? தமிழகத்தின் பெருந்தன்மை, நாகரிகம் போன்றவை தெரியாமல் கேரளா விளையாடுகின்றது. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. இதை கேரளா உணர மறுத்தால் கடுமையான விளைவுகள் கேரளாவுக்குத்தான் உண்டாகும்.

கங்கை நதிநீர்ப் பிரச்சினைகளை இந்தியாவும் பங்களாதேஷும் பேசி முடித்துவிட்டது. ஆப்பிரிக்காவில் நைல் நதி சிக்கலையும் நாடுகளுக்கிடையில் பேசி தீர்க்கப்பட்டது. ஐரோப்பாவில் ருமேனியா, பல்கேரியா, பெல்ஜியம் இடையில் பாயும் நதிகளில் எஞ்சிய நீரை தாராளமாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் நதி நீரில் மாநிலங்களுக்டையில் எந்த பிரச்சினைகளும் இல்லை. இப்படி உலக அளவில் நாடுகளுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது கேரளாவின் பிடிவாத போக்கு ஒரு ஜனநாயக நாட்டுக்கு உகந்ததா என எண்ணிப் பார்க்க வேண்டும். கேரளாவில் அச்சுதானந்தன் ஆனாலும், உம்மன்சாண்டி ஆனாலும் சரி உலகவாதம், ஒன்றுபட்ட இந்தியா என பேசுகின்ற கட்சியைச் சார்ந்தவர்கள். இவர்களிடம் இருப்பது சுயநலமா, குறுகிய வட்டார நோக்கா, அல்லது அர்த்தமற்ற நடவடிக்கையா. நாகரீகங்களை, விட்டுக் கொடுப்பதை பெரிதாக பேசும் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த அச்சுதானந்தத்திற்கு ஏன் இந்த குறுகிய மனப்போக்கு என்று தெரியவில்லை? இவ்வாறு ஒவ்வொரு நதி நீர்ச் சிக்கலில் உபரி நீரை அண்டைய மாநிலம் என்ற உறவோடும், பொறுமையோடும், கண்ணியத்தோடும் கேட்டும் கொடுப்பதற்கு மனம் இல்லாத கேரளாவின் அணுகுமுறைக்கு காலமும் வரலாறும் தான் பதில் சொல்ல வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார் அணை செங்கோட்டை அருகே கட்டக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் கடப்பாறை மண்வெட்டியோடு முரட்டுத்தனமாக தமிழகத்தில் உள்ள செங்கோட்டைக்கே வந்தார் என்றால் இவர்களிடம் என்ன நியாயத்தை பேச முடியும்? இத்தனைக்கும் அடவிநயினார் தமிழக எல்லையில் உள்ளது. கேரளத்தின் ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தமிழகத்தின்மீது நேசத்தோடு இல்லாமல் குறுகிய எண்ணத்தோடு இருக்கிற இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு சி.டி. பொய்யான தகவல்கள் இன்றைக்கு டேம் 999 என்ற கற்பனையான திரைப்படம் போன்ற விவகாரமான, மோசடியான நடவடிக்கைகளில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட ஒரு மாநில அரசு துணை போகலாமா என்பதுதான் கேள்வி.

கேரளாவின் இந்த அர்த்தமற்றப் போக்கைப் பார்க்கும்பொழுது, சிறுமை கண்டு பொங்கியெழும் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.

தேடி சோறுநிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகு உழன்று – பிறர்
வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons