அச்சுறுத்தும் சீன – இலங்கை உறவு

0

நாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்ககைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது.

பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? தரை வழியாக சீனாவிலிருந்து பாகிஸ்தானின் தென் பகுதியான அரபிக் கடல் வரை நெடுஞ்சாலைகள் அமைத்து தனது மேற்குப் பகுதிக்கு கடல் வணிகத் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது.

பண்டித நேரு யாணுடி தளவாடம் சம்பந்தமான ஆலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடகிழக்கு, வடமேற்கு இந்தியாவில் பாதுகாப்பு அற்ற நிலை. இந்தியாவின் தென்பகுதிகள் குறிப்பாக தமிழகம் எனக் கருதியதால்தான் ராணுவம் தொடர்பான தொழிற்சாலைகள் அனைத்துமே தென்னகத்தில் அமைக்கப்பட்டன. இதனை மனதில் கொண்டுதான் சீனா இலங்கையைத் தனது தளமாக அமைக்கிறது. இலங்கையிலிருந்து தென்னகத்தில் உள்ள ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளையும், விண்வெளி சோதனை நிலையங்களையும், அணு உலைகளையும் தாக்கவோ தகர்க்கவோ முடியும் என்பதேகூட சீனாவுக்கு இலங்கை மீதான கரிசனத்திற்கு காரணமாக இருக்கலாம்

சில வாரங்களுக்கு முன்னதாக சீனாவின் உதவி அரச பாதுகாப்பு அமைச்சர் சோயு குபுங் இலங்ககைக்குப் பயணம் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சர் சோயு குயுங்கிற்கு இலங்கை அரசாங்கம் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்திருந்த போதும், அவர் யார் என்பதை ஊடகங்கள் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

சோயு குயிங்கின் இந்த பயணம் சீனக்குடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய முடிச்சுகளைப் போடுவதற்கான பிள்ளையார் சுழியாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. வான் புலிகளை எதிர்கொள்ள சீனா கொடுத்த முப்பரிமான ரேடர் இங்குதான் நிறுவப்பட்டுள்ளது. இறுதிக் கட்டத்தில் புலிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கு, இலங்ககை விமானப் படையிடம் உள்ள – சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப் 7 ரக ஜெட் போர் விமானங்கள் சீனக்குடாவில்தான் நிலை கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய கரும்புலித் தாக்குதல் படகையும் சீன உதவி அமைச்சர் சோயு குயிங் பார்வையிட்டார். அதன் பின்னர் விமானத்தில் பலாலிக்குச் சென்ற சீன உதவி அமைச்சருக்கு அங்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துரு சிக்வுடன் சோயு குய்ங்கும் அவருடன் வந்த ஆறு சீன அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். பின்னர் விமானப் படை, ஹெலிகாப்டரில் யாழ்ப்பாணம் கோட்டைக்குச் சென்று பார்வையிட்ட அவர்கள் கொழும்பு திரும்பி பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்சவைச் சந்தித்துப் பேசினர்.

சீனாவின் பாதுகாப்பு கூட்டமைப்பை விளங்கிக் கொள்ளாமல் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவது கடினம். சீனாவில் பாதுகாப்புத் துறை சார்ந்து மூன்று அமைச்சகங்கள் உள்ளன. முதலாவது, தேசிய பாதுகாப்பு அமைச்சகம். இதன் கீழ்தான் செஞ்சேனை எனப்படும் சீனாவின் முப்படைகளும் உள்ளன. இரண்டாவது அரச பாதுகாப்பு அமைச்சகம். இதுவே சீனாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பு. இதன் பிரதானமான கடமை வெளியகப் புலனாய்புப் பணிகளை மேற்கொள்வதாகும். இந்தியாவின் ரா எனப்படும் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவு போன்றவற்றுக்கு இணையாக இது செயல்படுகிறது. சுருக்கமாக இது என்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகன். இது சீனாவின் போலீஸ் துறைக்குப் பொறுப்பாக உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கைப் பேணுவது இதன் பொறுப்பு.

சீனாவின் வலுவான அமைச்சகம் ஒன்றின் உதவி அமைச்சரே இலங்கைக்கு வந்து சென்றுள்ள போதிலும், அதற்கு அவ்வளவாக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கும் காரணம் உள்ளது. அடக்கி வாசிக்கப்பட்டதால், சீனாவின் அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டவர்களே அதிகம் பேர்.

சீனாவைப் பொறுத்தவரையில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலாகக் கருதுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்ககையுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும் சீனா அவற்றைவிட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயங்கள்.

தென் சீனக் கடலிலும் பசிபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப் போரே நடத்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அண்மையில் இலங்கையுடன் ஜப்பான் செய்துகொன்ட கடல்சார் உடன்படிக்கை, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டைக் குறைப்பதை அடிப்படையாகக் கொண்டது. அந்த உடன்பாடு செய்யப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் தான், சீன அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணம் இடம் பெற்றுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க சீனா பெரும் வியூகத்தை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானத் தாங்கி கப்பல்கூட இந்தியப் பெருங்கடலில்தான் நிலைகொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும் தன் பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

சீனாவின் நீழ்மூழ்கிகளை எதிர்கொள்ளும் வகையில் விசாகப்பட்டினத்திற்கு அருகே நிலத்திற்கடியிலான நீர்மூழ்கித் தளம் ஒன்றை அமைக்கும் பணியை இந்திய தீவிரப்படுத்தி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இத்தகைய சூழலலில்தான் சீன உதவி அமைச்சரின் பயணம் இடம் பெற்றுள்ளது,

இந்தியாவை உளவு பார்ப்பதற்கான ஒரு தளமாக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகிறது. விசாகப்பட்டினம் கிழக்குக் கடற்படைத் தலைமையகமும், கிழக்கு கடலோரப் பகுதிகளிலுள்ள ராக்கெட் ஏவுதளங்களும் சீனாவின் கவனத்துக்குரிய முக்கிய இலக்குகளாகும்.இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரதான விசாகப்பட்டினமே உள்ளது. இங்கிருந்து இந்தியக் கடற்படைக்கான ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

அதேவேளை ஒரிசாவின் வீலர் தீவு, சண்டிப்பூர் ஆகியன இந்தியாவின் முக்கியமான ஏவுகணைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் ஏவுதளங்களாக உள்ளன. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி ஏவுகணைகள் அனைத்தும் ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே ஏவப்படுகின்றன. இவையெல்லாம் சீனாவால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் இலக்குகளாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் தீவுகளுக்கு அருகே மீன்பிடிப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீனாவின் உளவுக் கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை துரத்திச் சென்றபோது, அது கொழும்பு துறைமுகத்தில் அடைக்கலம் தேடிக் கொண்டதாக செய்திகள் வெளியானது. கடலின் தன்மையையும் இந்தியாவின் கிழக்குக் கடள்பகுதியிலுள்ள ஏவுகணை தளங்களையும் கண்காணிக்கும் பணியில் அந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டதாகவே கருதப்பட்டது. இந்தியாவை உளவு பார்க்க இலங்கையை மட்டுமின்றி நேபாளத்தையும் கூட சீனா பயன்படுத்திக் கொள்கிறது.

நேபாள எல்லையில் பதினோரு புலனாய்வு தகவல் நிலையங்களை சீனா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் பொறுப்பாக இருப்பது சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சுதான். இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை இந்தப் பிரிவு பல்வேறு வழிகளில் பெற்றுக் கொள்கிறது. மரபு சார்ந்த வழிமுறைகளை மட்டுமின்றி, இணைய வழி சைபர் தாக்குதல்கள் மூலமும் இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு, கட்டமைப்புகளிலும் ஊடுருவியும் பெருமளவு ரகசியங்களையும் சீ உளவுப் பிரிவு களவாடியுள்ளது.

அண்மையில் இஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் ஏவுகணைகளை வடிவமைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் ரகசியங்கள்கூட திருடப்பட்டன. பெருமளவு பாதுகாப்பு ரகசியங்களை சீனா திருடியுள்ளதாக அண்மையில் இந்தியா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கும் கூட சீனாவின் இத்தகை நெருக்கடிகள் இருக்கின்றன.

இவை அனைத்துமே சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் கிளை அமைப்புகளால்தான் வழி நடத்தப்படுகின்றன. இத்தகைய வலுவான அமைப்பு ஒன்றின் இரண்டாவது பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் இலங்கைப் பயணத்தை இந்தியாவோ, அமெரிக்காவோ ஏன் ஜப்பானோகூட இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இலங்கை – சீன நெருக்கம் இந்திய – அமெரிக்க நாடுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், அதை இலங்கை திரும்பத் திரும்பச் செய்து வருவதுதான் ஆச்சரியம்.

– தினமணி, 02.09.2013

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons