அண்ணாவுக்கு கலைஞர் (தம்பி) எடுக்கும் நூற்றாண்டு விழா
ஏடா தம்பி எட்டு பேனா…!
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு
கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்!
மரக்கிளையினிலே பிணம்
வெந்த புண்ணிலே வேல்
மறந்திடப் போமோ மணங்கவர் வாசகம்!
சாலை யோரத்திலே வேலையற்றதுகள்
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்
வேந்தே! அதுதான் காலக்குறி
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை? அறிவுநடை?
கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது
தமிழகம் மறவா தலையங்கமன்றோ!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
– தலைவர் கலைஞர்
இந்த உணர்வு இயற்கையாக, மானசீகமாக அண்ணாவின் மீது அவருடைய அன்புத் தம்பியாகிய கலைஞருக்கு ஏற்பட்டது. நமது தலைவருக்கு பிரவாகமாக அமைந்த அந்த உறவால் அண்ணாவின் கொள்கைகளை தலைவர் சீதனமாகப் பெற்றார். இன்று வரை அந்தக் கொள்கைகளைப் பாதுகாத்து வருகின்றார். கன்னித் தமிழைப் பாதுகாக்கவும், பொதுவுடைமை தத்துவங்களை செயல்முறைப் படுத்தவும், மாநில சுயாட்சியை பார் போற்றும் வகையில் பறைசாற்றவும், அடித்தளத்திலுள்ள மக்களை உயர்த்துதல் போன்ற அண்ணா விட்டுச் சென்ற மாபெரும் பணிகளை நிறைவேற்றியப் பெருமையும் கீர்த்தியும் நம் தலைவர் கலைஞருக்கு உண்டு.
அண்ணா அவர்கள் எளிய குடும்பத்தில் பிறந்து பலரும் போற்றும் வண்ணம் எழுத்தாற்றல், பேச்சாற்றல், தலைமைப் பண்பு போன்றவற்றைப் பெற்று உலகத் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றார். அவ்வாறே அவருடைய அன்புத் தம்பி தலைவர் கலைஞர் அவர்களும் அவரைப் போலவே இந்த அருங்குணங்களையும் பெற்று இன்றைக்கு தமிழ் இனத்தின் பாதுகாவலராக விளங்குகிறார். கலைஞர் அவர்களை அண்ணாவின் அடிச்சுவட்டில் பயணிக்க செய்து அரசியல் சதுரங்கத்தில் மாபெரும் வெற்றிகளையும் பெற வைத்தது. அண்ணாவுக்குப் பின் 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் அவருடைய கொள்கைகளை காத்து கழகத்தையும் நிமிர வைத்துள்ளார். அண்ணாவின் முக்கியக் கொள்கையான மாநில சுயாட்சியை இந்தியா முழுவதும் எடுத்துச் சென்ற பெருமை நம் கலைஞைரையே சாரும். இது அகில இந்திய அரசியலில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
மொழி வாரி மாநிலங்கள் அமைந்தபின் மாநிலங்களின் அபிலாஷைகளும், நியாயங்களும் படிப்படியாக வெளிப்பட ஆரம்பித்தன. மாநில சுயாட்சிக் கருத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் முழக்கம் செய்தார். 1967இல் நடைபெற்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சிக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
1915இல் கோகலே தனது அரசியல் ஏற்பாடு எனும் நூலில் இந்தியாவுக்கு மாகாண சுயாட்சி வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். 1916இல் மதன்மோகன் மாளவியா, முகமது அலி, சாப்ரூ, ஜின்னா, வி.எஸ். சீனிவாசன் ஆகியோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று வலியுறுத்தியது இன்றைக்கும் லக்னோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. மோதிலால் நேரு அவர்கள் அளித்த அறிக்கையில் மாநில தன்னாட்சி வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் 23.11.1946இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் திரு.வி.க. அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதை தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் ஆதரித்தனர். மாநிலத் தன்னாட்சி என்று 1883இல் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய அய்யர் எழுதிய உபயோகமான அறிவைப் பரவச் செய்யும் சபையின் சார்பில் வெளியிட்ட சுய அரசாட்சி வினா – விடை என்ற தலைப்பில் சிறு பிரசுரம் இலவசமாக வழங்கப்பட்டது.
மாநில உரிமைகள் பாதுகாக்க அண்ணா மாநில சுயாட்சி வேண்டும் என்று வலுவான கோரிக்கையை எழுப்பினார். இதுகுறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசியபோது,
“மத்திய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றிய மறு சிந்தனை தேவை என்பதனை இப்பேரவை அறியும். இன்றுள்ள உறவு உள்ளத்துக்கு நிறைவு தருவதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தை அனைவரும் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இதுவரை வரி பங்கீடு, அதிகார வரம்பு, திட்ட நிதி ஒதுக்கீடு ஆகியவற்றிலே கிடைத்துள்ள அனுபவம், கசப்பு நிரம்பியதாக இருப்பதை எவரும் மறுத்திட இயலாது. இந்தக் கசப்பு நீங்கிடவும், கனிவு கிடைத்திடவுமான முறையில் தொடர்புகள் அமைந்திட வழி காண்பது உடனடிப் பிரச்சனையாகி விட்டிருக்கிறது. அதுகுறித்து அச்சமோ அய்யப்பாடோ அல்ல, தெளிவான சிந்தனையே தேவை. ஒருவருக்கொருவர் உள்ள நல்லெண்ணத்தினாலும், நன்கறிவதாயின் தோழமைத் தொடர்பு மகிழ்ச்சியும், பயனும் மிக்கதாக ஆக்கப்பட வேண்டும் என்பதே என் அவாவாகும்” எனக் குறிப்பிட்டார்.
அண்ணாவின் உயில் என்று கருப்படுகின்ற ஆவணத்தில்.. ..
“ … மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது என்பதில் எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் கட்சி சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆரதவு காட்டுகின்றனர்.”
அரசினுடைய இறையாண்மை (Sovereignty) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது (Political Sovereignty) பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறையாண்மை (Legal Sovereignty) கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்கு பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?
…. நாம் ஒரு கூட்டாட்சியை (Federal Form) ஏற்றியிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக் கூடாது; கூட்டாட்சியமைப்பு முறைதான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில், அரசியல் தத்துவ ஞானிகள் பலர் சுட்டிக்காட்டியுள்ளபடி இந்தியா மிகப் பரந்து கிடக்கிறது.
உண்மையில் அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது. எஃகால் செய்த வரைச் சட்டத்தைப்போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பலதரப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது.”
“….சென்ற பதிமூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதென்பதே எனது குற்றச்சாட்டு. மாநிலங்கள், சுங்கத் தொகை வசூலிக்கக் கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன. அவை இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்று இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும்.”
“.. .. எனவே. நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை ஆட்சித் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spearhead) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? அதனை உயர்மட்ட அரசு மன்றத்திற்குக் கொண்டு வருவீர். அதனை (அச்சிக்கலை) தங்கு தடையின்றி நடமாட அனுமதிப்பீர். (தற்போதைய) கூட்டாட்சியை ஒரு மெய்யானக் கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழிவகை செய்திடுவீர்…”
விடியற் காலையே வாழ்க (Hail the Dawn) என்று மகுடமிட்டு, 1969ஆம் ஆண்டில் ஹோம் ரூல் (Home Rule) வார இதழில் தம்பிக்கு எழுதிய தன் இறுதி முடங்கலில்,
“அன்புத் தம்பி! பதவிப் பித்துப் பிடித்து திரிபவனல்லன் நான். வெற்றுத் தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சலூட்டி டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான உயர்திரு நம்பூதிரிபாடு கூறுவதையும் நான் விரும்பவில்லை. அதனைச் சரியான கால கட்டத்தில் தீர்மானிக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதது. அப்படித் தீர்மானிக்கும் முன்னர் கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தர வேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியுமெனில் உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்.”
அன்று மாநில சுயாட்சிக்கு அண்ணா எழுப்பிய குரலை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அண்ணா மறைவுக்குப் பின் மாநில சுயாட்சி என்ற சுடரை கையிலேந்தி விழிப்புணர்வை நம் தலைவர் கொண்டு வந்தார். அதற்கு உறுதுணையாக கழக உடன்பிறப்புகளின் நெஞ்சங்களில் இன்றும் இருக்கின்ற மறைந்த அண்ணன் முரசொலி மாறன் இருந்தார்.
இப்பிரச்சினையில் உடனே ராஜமன்னார் குழுவை அமைத்து தெளிவான அறிக்கைப் பெற்று அதன்மீது தமிழக சட்டப்பேரவையில் விவாதம் நடத்தி 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் “மாநிலங்களில் முழுமையான சுயாட்சியுடன், உண்மையான கூட்டாட்சி அமைந்திட நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் தமிழக அரசின் கருத்துக்களையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். இதற்காக உடனடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து 5 நாட்கள் பேரவையில் விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர் அவர்கள் “இந்தியாவிலே தோன்ற இருக்கின்ற சனநாயகப் புரட்சியினுடைய தோற்றுவாயாக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற நாள் இருக்கும். மாநில அரசுகள் மத்திய அரசுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் கிடையாது. எப்படி மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைகின்றனவோ அதைப் போல்தான் மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைகிறது. நாடாளுமன்றமும் அவர்கள் கையில் இருக்கும் காரணத்தால் டில்லியில் அவர்கள் வீற்றிருக்கும் காரணத்தால் மத்திய அரசு என்பது எஜமானர் நிலையிலும் மாநில அரசுகள் என்பது அடிமைகள் நிலையிலும் இருந்திடல் வேண்டுமென்று யாருடைய தலையிலும் எழுதி வைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார். வைஸ்ராய் மாயோ இதே தீர்மானத்தை கொண்டு வந்ததும் வரலாற்று செய்தியாகும். இப்படி அண்ணாவின் ஒவ்வொரு கனவையும் அருமை தலைவர் கலைஞர் நிறைவேற்றியதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
சேது சமுத்திர திட்டம், தூத்துக்குடி துறைமுகம், சேலம் இரும்பாலை போன்றவற்றிற்காக அண்ணா எழுச்சி நாள் நடத்தினார். அந்த திட்டங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நனவாக்கியுள்ளார். இடஒதுக்கீடு பிரச்சினையிலும் அண்ணாவின் பார்வைக்கு வடிவம் கொடுத்தார். அதனுடைய தாக்கமே அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன், சச்சார் கமிஷன் போன்றவை. இவற்றால் பிற்பட்டோர், இஸ்லாம் மதத்தினர் ஆகியோருக்கு பலன் கிடைத்தது. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது. தமிழ் மக்களின் நலன்களில் எவ்வளவோ திட்டங்கள். அவையாவும் அண்ணாவின் விருப்பங்கள். அந்த விருப்பங்களை அண்ணாவின் உண்மைத் தம்பி கலைஞர் நிறைவேற்றியுள்ளார்.
இப்படி எல்லா பெருமையும் தகுதியும் கொண்ட தலைவர் அவர்கள் தன் அண்ணனுக்கு நூற்றாண்டு விழா எடுக்கின்றார். அண்ணா பிறந்த செப்டம்பர் 15இல் தமிழக அரசு சார்பில் மாபெரும் விழா. 26இல் கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்த காஞ்சியில் அவர் தம்பி கலைஞர் எடுக்கும் நூற்றாண்டு விழா. இந்த பொருத்தமான விழா நாளைய வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்று பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களின் பெருமைகளை பறைசாற்றும்..
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்