அமெரிக்காவின் இராஜதந்திரம் இந்தியாவை விழுங்கப்பார்க்கிறது!
சமீபத்தில் அமெரிக்க அரசு துறையில் தெற்காசிய பிரச்சினைகளை கவனிக்கும் உதவி செயலாளர் செல்வி. ராபின் ராபேல் என்ற அம்மையார் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தார். மரபு வழி வரவேற்புரைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இவருக்கு பெரிய வெளிநாட்டு அதிபருக்குத் தரும் வரவேற்புகளும், உபசரிப்புகளும் நடந்தன. இவர் இந்தியாவிற்கு எதிராக கடந்த காலங்களில் தவறான கருத்துகளையும் வாதங்களையும் வெளியிட்டவர். இதை இந்திய அரசு மறுத்தும் ஏற்றுக்கொள்ளாத அவருக்கு மாபெரும் வரவேற்புகளும் பாராட்டுகளும் டில்லியில் நடந்தன.
டில்லி விமான நிலையத்தில் இவர் வந்தவுடன் இவரை சந்திக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவரை முதலில் இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பூரி தான் சந்தித்து பேசுவார் என்று அரசு தரப்பில் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெளியுறவு செயலாளர் திரு. சீனிவாசனை அவர் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்திய அரசு மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சவாண் அவர்களையும், உள்துறை இணையமைச்சர் ராஜேஷ் பைலட் அவர்களையும், மத்திய வெறியுறவு துணை அமைச்சர் ஆர்.எல்.பாட்டியா அவர்களையும் சந்தித்துள்ளார். அவரை பல்வேறு நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் சந்தித்துள்ளனர். திரு. அனுமந்தையா எம்.பி. தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேனீர் விருந்தும் அளித்தனர். இது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முதலில் அரசு அறிவிப்பு ராபேல்லை துணை செயலாளர் சந்திப்பார் என அறிவித்து, அதன்பின்பு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் சந்திப்பார் என தன் நிலையை மாற்றிக் கொண்டது. ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ராபேல் உள்துறை எஸ்.பி.சவாண், உள்துறை இணை அமைச்சர் ராஜேஷ் பைலட், வெளியுறவு துறை துணை அமைச்சர் ஆகியோர் சந்தித்து முக்கியமான பிரச்சினைகள் பற்றி பேசி முடிவு எடுத்துள்ளனர். ஆனால் இந்த அம்மையாரை சந்திக்க இத்தனை அமைச்சர்கள் தேவையில்லை. இதிலிருந்து மக்களை ஏமாளி என நினைத்து இந்திய அரசு வேண்டுமென்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராபேல் அவர்களுக்கு டெல்லியில் முதலில் கறுப்பு கொடி காட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஜேந்திர ஜூத் சிங் பிட்டா முயற்சி செய்தபோது முதலில் அனுமதிக்கப்பட்டு பின்பு மறுக்கப்பட்டது. ஒரு பக்கம் காங்கிரஸ் உறுப்பினர் முரளி தியோரா இந்த அம்மையாரை வரவேற்க அனுமதி வழங்கப்பட்டதாம். அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் இந்த அம்மையாருடைய பயணத்தைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தீவிர இயக்கமான ஹூரியத் மாநாடு இயக்கத் தலைவர்கள் அப்துல்கனி லோனி, சையத் அலிசா ஆகிய இருவரை டெல்லி திகார் சிறையிலிருந்து ஜம்மு சிறைக்கு மாற்றி ராபெலிடம் நற்சான்றிதழ்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் ராபேல் அம்மையார் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்றார். காஷ்மீர் சமஸ்தானம் 1947இல் இந்தியாவுடன் இணைந்தது தவறு என்றும், காஷ்மீர் பகுதி பிரச்சினைக்குரிய பகுதி என்றும், இந்தியாவிற்கு எதிராக தீவிரமான கருத்துகளை பன்னாட்டு அளவில் பரப்பியவர். ஏற்கனவே காஷ்மீர் தீவிரவாத தலைவர் குலாம் நபிக்கு அமெரிக்க அதிபர் கிளிண்டன் ஆதரவு அளித்து கடிதமம் எழுதியுள்ளார். அவ்வாறு இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் பிரச்சினையில் செய்திகளை பரப்பிவிடும் சக்திகளை தலைவணங்கி வரவேற்பது இந்தியாவின் தன்மானத்தை காற்றில் பறக்கவிடுவதாகும். பிற்காலத்தில் இந்தியாவை காலனி நாடாக்க நடக்கும் ஒத்திகையே இது! இந்தியாவிற்கு எதிராக பல்வேறு ஊ16 போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. கடந்த காலங்களிலும் வங்கதேசப் போரிலிருந்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் உறவுநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நேருவின் அணி சேரா கொள்கையையும், பஞ்சசீல கொள்கையையும் கிடப்பில் போடக் கூடிய சூழ்நிலையில் இந்திய அரசு பல்வேறு மரபுகளை மீறி ராபேலை வரவேற்க ரத்தின கம்பளம் விரித்துள்ளது வேதனைக்குரிய செயலாகும். இதற்குக் காரணம் என்னவெனில் ராபேல் முகம் கோணாமல் வரவேற்றால் தான் நரசிம்மராவுடன் கிளிண்டன் நேரில் பேசுவார் என்ற ஒரு நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு இந்தியா இன்றைக்கு தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுத்து மாபெரும் உபசரிப்பை செய்துள்ளது.
ராபேல் ஐ விட்னஸ்சுக்கு பேட்டியளிக்கும்போது கூட தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளாமல் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீர் சம்பந்தமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ராபேல் சுற்றுப்பயணத்தை எதிர்த்து டில்லியில் பானூன் காஷ்மீர் அமைப்புகளைச் சார்ந்த பண்டிட்களும் மற்றும் வலதுசாரிக் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் செய்துள்ளன. இது விபரமாக தேசிய முன்னணி முன்னாள் வெளியுறவு அமைச்சர் திரு. அய்.கே.குஜ்ரால் அவர்கள் மரபுகளை மீறி இந்தியாவினுடைய தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டு ராபேலை வணங்கி வரவேற்பது கண்டனத்துக்குரியதாகும் என்று கண்டித்துள்ளார். ஜனநாயக மற்றும் வலதுசாரி இயக்கங்கள் அனைத்துமே ராபேலுக்கு அரசு அளித்த அங்கீகாரத்தைக் கண்டித்துக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. ஒரு உதவி செயலாளரை அனைத்து மரபுகளையும் மீறி இவ்வாறு வரவேற்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
ராபேல் இந்திய அரசு காட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதையும் வரவேற்றுள்ளார். ஏற்கனவே டங்கல் திட்டம் ஏற்பு புதிய பொருளாதாரக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவினுடைய இறையாண்மையையும் பொருளாதார தன்மையும் கேள்விக்குறியதாக இருக்கின்றது. இவ்வாறு தவறான அணுகுமுறையினால் இந்தியா எங்கே செல்லுகிறது என்ற ஐயப்பாடு இருக்கின்ற நேரத்தில் இந்தியாவை பன்னாட்டு அளவில் தலைகுனிய வைக்கக்கூடிய நிலையில் அமைந்துள்ளது ராபேல் அவர்களுடைய இந்திய பயணம்.
அமெரிக்காவின் இராஜதந்திரம் இந்தியாவை விழுங்கப் பார்க்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– இலட்சியப் பாதை, 08.04.1994