ஆண்ட இனம் அழியலாமா?
ஈழத்தில் பூர்வ குடிகளாகத் திகழ்ந்த ஆண்ட தமிழினம் இன்று சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்படுகிறது. வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது என்றும், எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் அறியப்படுகிறது. இலங்கையின் வரலாறு கி.மு.300இல் துவங்கியது என்று குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் அங்கிருந்த தமிழர்களின் சிறப்புகளையும், தமிழ் அரசர்களின் பெயர்களையும், அவர்கள் அந்தத் தீவை ஆண்டதைக் குறித்த பாக்கள் அந்த நூலில் உள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம், நந்திக் கொடி கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தின.
கலிங்கப் போருக்குப்பின் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகேந்திரன் தலைமையில் பௌத்த குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அனுராதபுரத்தில் திஸா என்ற மன்னன் ஆட்சியில் மகேந்திரன் குழு அங்கு பௌத்த போதனைகளைப் போதித்தபின் பௌத்த மதம் அங்கு வந்தது.
சேன, குந்தக என்ற இரு தமிழ் மன்னர்களின் ஆட்சி இங்கு நடைபெற்றது. அதன்பின் வீரத்தில் சிறப்புப் பெற்ற மாவீரன் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஆட்சி அங்கு பரந்து விரிந்து இருந்தது. இப்படியெல்லாம் ஆண்ட தமிழினம் இன்று அழிவில் உள்ளது. இதற்கு காரணம் என்ன? இனப் பாகுபாடு.
போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர் ஆட்சிகள் முடிவுக்கு வந்து இலங்கையில் சிங்களவருடைய ஆதிக்கம் ஆட்சிக்கு வந்தபின் தமிழர்களின் பூர்வகுடியின் அடையாளங்களைத் திட்டமிட்டு ஒதுக்கி சிங்கள ஆட்சிகள் தமிழினி அழிப்பு வேலைகளில் இறங்கின.
1944இல் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். 1949இல் அவர் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர் பிரஜா உரிமைப் பிரச்சினையில் சிங்கள அரசோடு ஒத்துப் போனார்.இதனால் அவரோடு இருந்த எஸ்.வி.செல்வநாயகம் அவரை விட்டு விலகி, தமிழர் நலன் பறிபோவதை எதிர்த்து 3.12.1949இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் துவக்கிப் பல்வேறு போராட்டங்களைக் காந்திய வழியில் நடத்தி அலுத்து, இனி வேறு வழியில்லை என்ற நிலையில் தமிழருக்குத் தனிநாடு என்ற முடிவுக்கு வந்தனர். சாத்வீகப் போராட்டங்கள் எடுபடவில்லை என்ற நிலையில் இளைஞர்கள் போராளிகளாகத் தோன்றினர். 1970களில் இது ஆயுதம் தாங்கிய போராட்டமாகி விட்டது.
இலங்கையில் 1948இல் ஆங்கிலேயர் வெளியேறியபின் 1949இல் குடியுரிமைச் சட்டம், 1956இல் தனிச் சிங்களர் சட்டம், 1972இல் அரச மதவாதச் சட்டம் எனக் கொடியச் சட்டங்களைக் கொண்டு வந்து சிங்கள அரசு தமிழர்க்கு எதிராக நடந்து கொண்டது. தமிழர்கள், சிங்கள அரசுக்கு எதிராகப் போரடினர். அப்போது தனிப்பட்ட சிங்களவரை எதிர்த்து தமிழர்கள் போராடவில்லை. ஆனால், சிங்களர் தமிழர்களை விரோதியாகக் கருதினர். “வடக்கில் தமிழர்களும், தெற்கில் இந்து மாக்கடல் உள்ளதால் என்னால் கால் நீட்டிப் படுக்க முடியவில்லை” என்று சிங்கள வெறியன் துட்டகைமுனு தமிழர்களுக்கு எதிராக துவேஷத்தை விதைத்த பொழுதும்கூட ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் பொறுமையோடு இருந்தனர். மற்றொரு தமிழ் விரோதி கே.எம்.பி.இராஜரத்தினா ஒருபடி மேலே சென்று “தமிழனின் முதுகுத் தோலை உரித்து செருப்புத் தைத்து அதைப் போட்டு சிங்கள மக்கள் நடமாட வேண்டும்” என்று மிருகத்தனமாகப் பேசினான். 1993-94இல் குடியரசுத் தலைவராக இருந்த டி.பி.விஜயதுங்கே சிங்கள மக்கள் ஒரு விருட்சம் என்றும், தமிழ்ச் சிறுபான்மை அந்த விருட்சத்தில் படரும் கொடி என்றும் கிண்டலாக பேசினார். சேனாபதி பொன்சேகா “ஈழத் தமிழர்கள் அந்த நாட்டின் பிரஜைகளே இல்லை” என்று பேசி வந்தார். அங்கே ஆள வந்தவர்கள் தமிழர்களை ஒரு கடைச் சரக்கு போன்று நடத்தியது அங்குள்ள தமிழர்களுக்கு வேதனையைத் தந்தது. முசோலினி, ஹிட்லர் போன்று ஒப்புக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று வைத்துக் கொண்டு இலங்கை ஆட்சியாளர்கள் அங்குள்ள தமிழர்க்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
“இனிமேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் சகவாழ்வி சாத்தியம் இல்லை. தனி வாழ்வுதான்” என்ற முடிவுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். தனி ஈழம்தான் தீர்வு என்ற முடிவுக்குக் காரணமே சிங்கள ஆட்சிதான்.
இனம், நிறம்,மொழி, மதம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய் மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொருவருக்கும் உண்டு என்று ஐ.நா. மன்றத்தின் பிரகடனம் 1948இல் நடைமுறைக்கு வந்தது. அந்நிலையில் ஈழத்தில் வாழும் தமிழர்கள் ஓர் இனம். அந்த இனம் அங்கு அழிக்கப்படுகின்றது. ஈழத் தமிழ் இனத்திற்கு மூல வளமும், பண்பாடும், வரலாறும், தாய் மண் பூர்வீகமும் எனப் பல தகுதிகள் இருப்பதால் அவர்கள் இலங்கையில் வாழ்கின்ற ஒரு தேசிய இனமாகும். மற்ற தேசிய இனங்களோடு கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழவும், சுற்றும் சூழலும் சரியில்லை என்றால் பிரிந்து வாழவும் ஒரு தேசிய இனத்துக்கு உரிமைகள் உண்டு. உண்மையான தேசிய இனங்கள் இறைமை குணம் படைத்தவை ஆகும். அந்த வகையில் தத்தம் உரிமைகளை நிலைநாட்டப் போராடித் தங்களின் தனித் தன்மையும், விடுதலையும் தங்களுக்கான இறையாண்மையையும் அமைத்துக்கொள்ள குறிப்பிட்ட தேசிய இனங்களுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.
1990ஆம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இரஷ்யா, காக்கேசியாவை கைப்பற்றியதும், போலந்தை வீழ்த்தியபோதும் அது ஒரு தலையீடு என்று கொள்ளாமல் ஐரோப்பிய சமுதாயம் ஏற்றுக் கொண்டது. தன்னாட்சி சுய உரிமை உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775இல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன. இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டவையாகும். சர்வாதிகாரம் மேலே எழும்போது பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுவது உலகளவில் நடந்த வரலாற்றுச் செய்திகள் ஆகும். இந்த உரிமையை ஐ.நா. மன்றமும் 1960இல் ஏற்றுக் கொண்டது. பிரிவினை இயக்கங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்வது தன்னாட்சி உரிமையைத் தடுப்பதற்கு ஒப்பாகும். இந்த உரிமையை லெனின், மார்க்ஸ்கூட அங்கீகரித்துள்ளனர். அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த உட்ரோ வில்சனும் இதை ஆதரித்தார். 16ஆம் நூற்றாண்டில் காலனி ஆதிக்கம் என்ற பூகோளம் காரணமாக சுய நிர்ணய உரிமை என்ற சிந்தனை வந்தது. 5,250 ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக அரசு என்ற வடிவம் தோன்றியது. ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமை பார்க்கும்போது புரட்சி, சுயநிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது. இதில் அக சுய நிர்ணயம் (Internal Self Determination), புற சுய நிர்ணயம் (External Self Determination) என்று இரு பிரிவுகள் உண்டு.
இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், இரஷ்யாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவிடனிலிருந்து நார்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை மார்க்ஸூம், லெனினும் ஆதரித்தனர். நார்வே விடுதலை பெறும்பொழுது ரோசாலக்ஸம்பர்க் எதிர்த்தார். ஆனால், லெனின் அதைக் கண்டித்து “ஸ்வீடனின் சர்வாதிகாரப் போக்கைத் தாங்க முடியாமல் நார்வே மக்கள் விடுதலையைப் பெறுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.
ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும்பொழுது அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும். தேசிய இனப் போராட்டத்தில் மக்கள் ஆட்சிப் பண்பு உள்ளது என்று லெனின் வாதிடுகிறார். இரஷ்யாவால் ஆளப்பட்ட பின்லாந்து, எஸ்தோனியா, லித்வேனியா போன்றவை தங்கள் தேசியத்துக்காகப் போராடி தனி நாடுகளாக அமைத்துக் கொண்டன. இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிய முடியாது என்று பலர் குறிப்பிட்டது தவறாகி தனி நாடானது. இதே கருத்தை காரல் மார்க்ஸூம் கொண்டிருந்தார். பிற்காலத்தில் சோவியத் யூனியன் பல நாடுகளாகச் சிதறுண்டது.
உலகளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. வங்கதேசம், செக்கோஸ்லேவேகியாவிலிருந்து செக், ஸ்லேவியா என இரு நாடுகளும், யூகோஸ்லேவியாவிலிருந்து போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, செர்பியா, குரோஷியா, மாண்டெனெக்ரோ, மாசிடோனியா, சுலவேனியா என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்சினைகளைக் கொண்டு சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டின. அதேபோல கொசாவா போராட்டம் 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. கிழக்கு தைமூரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டியது. பாலஸ்தீனப் போராட்டம் இன்றும் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் தன் மக்களின் உரிமைகளுக்காகப் பேராடிய நெல்சன் மண்டேலா சிறையில் வாடினார்.
இவ்வாறு உலகின் பல இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்ள போராடி வெற்றி கண்டுள்ளன. தற்போது சில நாடுகளில் இதுபோன்ற நியாயமான போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் நியாயத்தையும், தன்மையையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த கால துன்பியல் பிரச்சினைகளைக் கொண்டு தொடர்ந்து ஈழப் பிரச்சினை தீண்டப்படாத பிரச்சினை என நினைப்பது மனித நாகரிகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும். இந்திரா காந்தி அவர்கள் இன்று ஆட்சியில் இருந்திருந்தால் அங்கு தமிழர்களுக்குத் தனி நாடான தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இன்றைக்கு என்ன நிலைமை? இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலே இந்திய அரசு கமுக்கமாக தமிழர்களைக் கொல்ல அனைத்து உதவிகளைச் செய்வது மட்டுமல்லாமல் நாம் கொடுக்கும் வரிப் பணத்திலிருந்து பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் வாங்க கடன் கொடுப்பதில் என்ன நியாயம் உள்ளது? இந்திய இராணுவ அதிகாரிகள் சிந்தாமணி ரவுத்தும், ஏ.கே.தாகூரும் இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள சிங்கள இராணுவத்துக்ழுப் பயிற்சி அளித்ததும் பட்டவர்த்தனமாக வெளியே தெரிந்து விட்டது. அங்கே ஆளும் இராஜபக்சே மைனாரிட்டியாக இருந்து 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவி அரசாங்கத்தை அமைத்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு இந்திய அரசு ஆதரவு, 225 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 112 பேர் அமைச்சர்கள். இப்பஐ துக்ளக் தர்பார் இலங்கையில் நடக்கிறது. இராஜபக்சே அமைத்துள்ள குழுவில் தமிழ் எம்.பி.ககள் யாரும் இடம் பெறவில்லை. இந்தக் கொடிய அரசை எதிர்த்து அங்குள்ள தமிழர்கள் போராடுகின்றனர். சிங்கள அரசுக்கு இந்திய அரசு முட்டுக் கொடுக்கிறது.
இதற்கிடையில் இலங்கை இராணுவ தளபதி கனடா நாட்டின் ஏட்டிற்குத் தன்னிச்சையாக இலங்கை நாடு சிங்களவருக்கே சொந்தம் என்று பேட்டி அளித்துள்ளார். இப்படி ஒரு மூத்த அதிகாரி இந்தியாவில் இருந்தால் பேட்டி அளிக்க முடியுமா? இராஜபக்சே அரசில்தான் இதுபோன்ற கோளாறுகள் நடந்து வருகின்றன. தன் குடும்ப ஆதிக்கத்தை அங்கே நிலைநிறுத்தி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இராஜபக்சே அரசுக்கு இந்திய அரசு ஆதரவுக் கரம் நீட்டலாமா? இலங்கையில் தமிழ்க் கலாச்சார சுவடுகளையே இராஜபக்சே அரசு அகற்றி வருகிறது. இந்திய – இலங்கைத் தொடர்பு, அங்குள்ள தமிழர் நாகரிகத்தைப் பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள், செப்பேடுகள், பெருவழுதியின் சங்ககால நாணயங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. காரை நகர், கந்தரோடை, அனுராதபுரம் என்று பரவலாக இலங்கையில் உள்ள 26 இடங்களில் தமிழ்க் கலாச்சார நாகரிகம் புழங்கிய அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், தமிழன் அங்கு பூர்வீகக் குடிமகன் என்று சொல்லக் கூடாது; அதற்கான அடையாளங்கள் கண்ணில் படக்கூடாது என்று இராஜபக்சே அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. அங்கு நடந்த தேர்தலில் பன்னாட்டுப் பார்வையாளர்கள் சென்றபோது சிங்கள அரசு அனுமதி மறுத்தது. இதுபோல் கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்காவிலும், போர்ச்சுக்கலிலும் நடந்த அத்துமீறல்களையும், அராஜகங்களையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், பண்டித ஜவகர்லால் நேருவும் எதிர்த்தனர். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் இந்திய அரசு இலங்கைக்கு உதவுவதும், 225 இராணுவ அதிகாரிகளை அங்கே இந்தியா அனுப்பியது. நவீன ராடார்களும், ரூ.400 கோடி கடனும் கொடுத்தது யாரைக் கொல்ல? இதுவரை சிங்கள இராணுவத்தினர் 65,390 பேருக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது. அங்கே என்ன வேறு நாடுகளின் படையெடுப்பு நடக்கின்றதா? அங்கு ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகின்றது. சிங்களப் பேரின வாதம் இனப் படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது. அதைக் கண்டிக்காமல் தமிழ் நாட்டிலிருந்து வரி வசூலைச் செய்து கொண்டு டெல்லி பாதுஷாக்கள் இலங்ககைக்கு உதவுவது கொடுமையிலும் கொடுமை. இதில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொன்னால் தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்று ஒரு தவறான வாதம். இதில் என்ன வேடிக்கை என்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்ககையில் தடை செய்யவில்லை, ஆனால், இந்தியாவில் தடை. சீனா, ஜப்பான், இத்தாலி, நார்வே போன்ற நாடுகள் இந்த இயக்கத்தோடு தொடர்பில் உள்ளன. இவ்வாறு உண்மைகள் இருக்க இந்திய அரசு இதைப் பரிசீலிக்கக் கூட மனதில்லை.
1948இல் இலங்கை விடுதலை பெறும்போது அங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். சகவாழ்வு விரும்பிய தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள், இராண்டந்தரக் குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்னர். சேனநாயகா பதவிக்கு வந்ததும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் உழைப்பை உதாசீனம் செய்து அகதிகளாக மாற்றினார். இதற்கும் ஹிட்லர் நடவடிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இருப்பினும் அங்குள்ள தமிழர்கள் செல்வா தலைமையில் காந்திய வழியில் அறப்போராட்டத்தை நடத்தினர். ஒரு லட்சம் தமிழர்களை பலிகொண்டு 10 இலட்சத்திற்கும் மேலான தமிழர்களை அகதிகளாக உலவ விட்டதற்கு யார் பொறுப்பு?
இந்நிலையில்தான் தங்களுடைய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினர். ஆயுதம் ஏந்துவதும் ஒரு நாட்டுப் பிரச்சினையில் நியாயமாகத் தலையிடுவதும் ஐ.நா. மன்றம் வழங்கிய உரிமைகள் ஆகும். இனப் படுகொலைகள் நடக்கும்போது தட்டிக் கேட்கலாம்; தடுக்கலாம்; தலையிடலாம். இனப் படுகொலை செய்பவர் மீது தாக்குதல் நடத்தலாம் என்பது சர்வதேச சட்டங்கள் ஏற்றுக் கொண்ட நடைமுறையாகும். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க தலையிட்டது எப்படி? அதில் என்ன நியாயம் இருந்தது? கீஞுச்ண்ணிணச்ஞடூஞு ச்ஞ்ஞ்ணூஞுண்ண்டிணிண என்பது பன்னாட்டுச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இதில் எல்லாம் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் இந்திய பாதுகாப்பு நலன் கருதி இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். 1970இல் இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது சிறிமாவோ பண்டார நாயகா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார். வங்கதேசம் கூடாது என்று இலங்கை கூறியது. அந்த சமயத்தில் சிவில் உடையில் பாகிஸ்தான் போர் வீரர்களை அங்கே பண்டார நாயகா அனுமதித்தார். சேனநாயகாவின் ஐக்கிய தேசிய கட்சி சிறிமாவேவின் சுதந்திரா கட்சி, ஜே.வி.பி. என்ற மூன்று கட்சிகளும் இந்தியாவைத் தொடர்ந்து சாடி வருகின்றனர். அவர்கள்தான் ஆட்சிக் களத்திலும் பங்கேற்கின்றனர். இந்த விரோதத் தம்மையைக் கொண்டவர்களிடம் இந்தியா அனுசரணையாக உள்ளது. ஜி.பார்த்தசாரதி தமிழர்க்கு சாதகமாக இருப்பார் என்று கூறியதன் விளைவு, 1985இல் தூதுக்குழுவில் இருந்தவரை இராஜீவ் காந்தி மாற்றம் செய்தார். அதேபோல் ஏ.பி.வெங்கடேஸ்வரன் நிலைமையும் ஆனது. அதன்பிறகு வந்த ரமேஷ் பண்டாரி இலங்கைக்குச் சென்றார்; பரிசாக ஜெயவர்த்தனேவிடம் விலையுயர்ந்த நெக்லஸைப் பெற்றார் என்று பிரபல டெல்லி ஆங்கில தினசரி குற்றம் சாட்டியது. இராஜீவ் பரிவாரங்களாக இருந்த தீட்சித்திலிருந்து துவங்கி இன்றைய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் வரை நமக்கு விரோதமாக இருப்பவர்களுக்குப் பால் வார்க்கின்ற வேலையைத்தான் செய்கின்றார்கள்.
2300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வரும் தமிழ் இனம் அழிக்கப்படுகிறது. இலங்கைத் தீவைவிடி இந்தியத் துணைக் கண்டம் 69 மடங்கு பெரியது. இந்நிலையில் ஏன் இலங்ககைக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்? என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழர்க்கு மத்தளத்தின் இரண்டு பக்கம் போன்று சிங்க்ள அரசு இவர்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும், இந்திய அரசோ இவர்களைப் பாராமுகமாக வைத்து இவர்கள் பாதிக்கப்படட்டும் என்ற நிலைதான்.
ஜே.வி.பி. 1971இல் ஈழத் தமிழர்கள் இலங்கையை இந்தியாவின் விரிவாக்கமாக வைத்து விடுவார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். அதேபோல டி.ஏ. சேனநாயகா வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவுடன் போய்விடும் என்று குறிப்பிட்டார். சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள் அல்ல. பயங்கரவாதம் என்று பொய்யான பிரச்சாரத்தைக் காட்டி அங்குள்ள தமிழர்களை ஒடுக்க தந்திரம் செய்து இந்தியாவின் உதவியைப் பெறுகின்றனர். இந்தியா ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் இடம் பெற போகின்றோம்; வல்லரசாகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான். அந்தத் தன்மை, தகுதி அடிப்படையில் ஈழத் தமிழருடைய நிலையைப் பார்க்க வேண்டும். கண்ணைக் கட்டிக் கொண்டு காரணம் இல்லாமல் அங்குள்ள தமிழர்களை அழிக்க சிங்களவருக்குத் துணை போவதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.
தெற்காசியப் பிராந்தியத்தில் அனைவரும் இந்தியாவுக்கு எதிராக இருக்கின்றனர். அங்குள்ள தமிழர்கள் விடுதலை பெற்றால் இந்தியாவை நேசிப்பவர்களாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்குத் துணையாகவும் இருப்பார்கள் என்று நாம் உணர வேண்டும். எப்படி வங்கதேசம் தன்னுடைய உரிமைகளைப் பெற தனிநாடு கண்டதோ அதேபோன்று ஈழத் தமிழர்கள் தங்களது பூர்விக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டப் போராடுகின்றனர். கருவுற்ற தாய் தனது பிள்ளையைப் பெற முடியாமல் தவித்து ரண வேதனையில் துடிப்பதைப் போன்று தமிழர்கள் இருக்கின்ற நிலையில் அந்தத் தாயை மேலும் வாட்டுகின்ற செயலில் ஒருவர் ஈடுபடுவது போன்று சிங்கள அரசாங்கம் அந்தத் தாயை வாட்டுகின்றது. அதற்கு இந்தியா துணை போகலாமா? இதை தேசப் பிதா காந்தியின் ஆவி கூட மன்னிக்காது.
– தினமணி, 13.01.2009