இது காட்சிப் பிழைதானோ?
ஏடுகளில் பதட்டமும், கவலையும் அடையச் செய்யும் ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. ஆந்திராவுடன் கிருஷ்ணகிரியை ராயலசீமா பகுதியில் இணைக்க வேண்டுமென்று சில தெலுங்கு அமைப்புகள், கிருஷ்ணகிரி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் போராட்டம் செய்துள்ளது சிறுபிள்ளைத்தனமானது. சற்றும் சிந்தனையில்லாமல் தான்தோன்றித்தனமான இம்மாதிரியான நடவடிக்கைகளை எக்காலத்திலும் அனுமதிக்கக் கூடாது.
தெலுங்கானா பிரச்சினைக்குப் பின் இந்தியா முழுவதும் ஆங்காங்கு தனி மாநிலம் வேண்டுமென்று கோரப்பட்டாலும், தமிழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு எவ்வித காரணமும் காரியமும் அற்றதாகும். தெலுங்கானா மாநில பிரிவினைக்குக்கூட ஆந்திராவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தெலுங்கு தேசமும், காங்கிரசில் உள்ளவர்களும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆந்திரத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 3.2 கோடி மக்கள் தொகை கொண்ட பகுதியே தெலுங்கானா ஆகும். இங்கு நிலக்கரி, சுண்ணாம்பு போன்ற இருப்புகள் நிலத்தில் காணப்படுகின்றன. கணினி தொழில் நுட்பமும் முக்கிய சேவைகளாக உள்ளன. இங்கு ஆற்றுப் பாசனம் இல்லாததால், ஆந்திரத்தில் உள்ள அய்தராபாத் உட்பட மேடக், நலகுண்டா, கம்மம், அதிலாபாத், நிசாமாபாத், வாரங்கல், கரீம் நகர், மகபூப் நகர், ரெங்கா ரெட்டி போன்ற மாவட்டங்கள் அடங்கிய பகுதியே தெலுங்கானா ஆகும். ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களில் உள்ள செழிப்பு தங்களுக்கு இல்லையே என்ற குறைபாட்டை அவ்வப்போது தெலுங்கானா பகுதியை சார்ந்தவர்கள் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதேபோல, உத்திரப்பிரதேசத்தில் புத்தேல்கண்ட், மகாராஷ்டிராவில் விதர்பா, குஜராத்தில் சௌராஷ்டிரா, அசாமில் போடோலாந்து, ஒரிசாவில் மகாகோஷால், கர்நாடகாவில் குடகு, மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து, பீகாரில் போஜ்பூர், மத்தியப் பிரதேசத்தில் கோன்ட்வாளா என்று ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த கோரிக்கைகளின் பின்னால் உள்ள பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஆனால், தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் தேவைதானா என்பது மனதை உலுக்கக் கூடிய கேள்வியாகும்.
தமிழகம் ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை ஏற்கனவே இழந்துள்ளது. இன்றைக்கும் இப்பகுதிகளில் தமிழர்கள் அங்குள்ள ஆந்திர சகோதரர்களோடு இணைந்து வாழ்கின்றனர். இம்மாதிரியான கோரிக்கைகள் அங்கு எழுந்தால் பல விபரீதங்கள் ஏற்பட்டு மனிதநேயமற்ற வகையில் நிகழ்வுகள் எழக்கூடும். தமிழகம் கர்நாடகத்தில் கோலார் மற்றும் இன்றைய பெங்களுரு ஒரு காலத்தில் வெங்காலூர் என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்ததை இழந்துள்ளது. கேரளத்தில் திருவனந்தபுரம், நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம் – பீர்மேடு, பாலக்காட்டில் சில பகுதிகளை நாம் இழந்துள்ளோம். தமிழகத்தோடு குமரியையும், செங்கோட்டையையும் இணைப்பதற்காக தமிழகம் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்கா. இப்பகுதிகளை தமிழகம் விட்டுக் கொடுத்ததால் பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி, பழவேற்காடு ஏரி, பொன்னியாறு, நெய்யாறு, அச்சன்கோவில் பம்பை – வைப்பாறு இணைப்பு, ஆழியாறு – பரம்பிக்குளம் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் அண்டை மாநிலங்கள் வம்பு செய்கின்றன.
கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கு முன்னால் இழந்த இப்பகுதிகளால் தமிழகத்திற்கு பல சேதாரங்கள் ஏற்பட்டன. இதையெல்லாம் தமிழகம் பெரிதுபடுத்தாமல் வாஞ்சையோடு தெலுங்கு பேசுபவர்களையும், மலையாளம் பேசுபவர்களையும், கன்னடம் பேசுபவர்களையும் சகோதர பாசத்தோடு அணுகுகிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதிக்கு அரசு விடுமுறை, வரலாற்றில் இடம்பெற்ற கட்டபொம்மன், திருமலை நாயக்கர் போன்ற ஆளுமைககளை இன்றைக்கும் தமிழகம் கௌரவப்படுத்தி வருகிறது. ஆந்திரத்திற்காக உயிர் நீத்த பொட்டி ஸ்ரீராமுலுவுக்கும் சென்னையில் சிலை மற்றும் நினைவகம். இப்படி தெலுங்கு பேசும் சகோதரர்களுக்கு பாரபட்சமில்லாத போக்கு தமிழகத்தில் உள்ளது.
விசுவநாத நாயக்கர் காலத்திற்கு முன்பே ராயலசீமாவின் கடப்பா, அனந்தப்பூர், நெல்லூர், சித்தூர், கானாகிரி மற்றும் கடலோர ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த இம்மக்களுக்கு ஒரு வரலாறு உண்டு. செஞ்சி, தஞ்சை, உறையூர், மதுரை அதன் தெற்கே களக்காடு வரை எல்லைகளாகக் கொண்டு நாயக்கர் மக்கள் ஆண்ட காலங்களில்கூட மன்னர்களும், மக்களும் தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் நேசித்தனர். இதனாலேயே கிருஷ்ணதேவராயர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவையை தெலுங்கில் மொழி பெயர்த்தார். தமிழ் மண்ணின் மக்களாகவே தங்களை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல் பல துறைகளிலும் பணிகளை ஆற்றி வரலாற்றில் இடம் பெற்றனர். இந்த மண்ணுக்கு உழைக்க வேண்டும் என்று நினைக்கும் நெஞ்சங்களில் இந்த கிருஷ்ணகிரி போராட்டடம் வேல் தாக்கியது போல் உள்ளது.
தமிழகத்தில் ஏறக்குறைய 23 சதவிதம் உள்ள, தெலுங்கு பேசுபவர்கள் 24 பிரிவினருக்கு மேல் உள்ளனர். அவர்களில் பலருக்கு தெலுங்கு வாசனையேத் தெரியாது. தமிழை தாய் மொழியாகக் கொண்டுள்ள இவர்களின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களாக சலுகைகளையும் பெறுகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் காட்டு நாயக்கர், தர்மபுரி மற்றும் தூத்துக்குடி மாவட்டடங்களில் கொண்டா ரெட்டி என்ற பிரிவு பழங்குடி பட்டியலில் உள்ளது. தற்போதைய தி.மு.க. அரசு, தமிழக முதல்வர் அவர்கள் அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டையும் சமீபத்தில் வழங்கியுள்ளார். இவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் எந்தவித பாரபட்சமும் இன்றி வழங்கப்படுகின்றது.
ஆந்திர மண்வாசனையே தெரியாத இம்மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற தமிழகம் பல நன்மைகளை செய்துள்ளது. இவர்கள், அரசியல், தொழில், குறிப்பாக கோவை போன்ற இடங்களில் நூற்பாலைகள், விவசாயம், கல்வித் துறை, நீதித்துறை போன்ற சகல துறைகளிலும் கோலோச்சுகின்ற வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பதை மறந்துவிட முடியாது. இவர்களுக்கு குறையொன்றும் இல்லாத நிலையில் தேவையற்ற வகையில் போராட்டத்தை கிருஷ்ணகிரியில் நடத்துவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. தமிழகமெங்கும் பரவியுள்ள இம்மக்களின் எதிர்காலத்தை போராடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
தமிழகத்தில் இம்மக்களுக்குக் கிடைக்கின்ற வசதி, வாய்ப்புகளை மும்பை, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் வாழ்கின்ற தமிழர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளனவா என்பதை போராட்டத்தை நடத்தியவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தமிழ் மண்ணை நேசிக்காமல், இம்மாதிரியான அர்த்தமற்ற போராட்டங்களை நடத்துவதை கைவிடுவது போராட்டக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் நல்லது. இதையறியாமல் கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டம் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழகத்தில், கேரளாவைச் சார்ந்தவர்கள் தேநீர் கடைகள் மற்றும் பல தொழில்களை நடத்துவதும், கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் உடுப்பி ஓட்டல்கள் போன்ற பல உணவு விடுதிகளை நடத்து வருவதும், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் பல தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருவதும் அனைவரும் அறிந்ததே. அதோடு மட்டுமல்லாமல் இம்மூன்று மாநிலத்தைச் சேர்ந்த ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழகத்தில் இன்றும் தமிழர்களோடு எந்தவித அச்சமும் பதற்றமும் இன்றி சகோதர பாசத்தோடு, எவ்வித மொழி வேறுபாடுமின்றி இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுகளால் இவர்களுக்கு அச்சம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும்.
மேலும், ஆந்திர எல்லையில் திருவள்ளுர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பீமலவாரி பாளையம் எல்லைப் பிரச்சினை, குமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் உள்ள அணைமுகம் கிராமப் பிரச்சினை, கர்நாடகாவில் ஒக்கனேக்கல் பிரச்சினையிலும் தேவையில்லாமல் அந்தந்த மாநிலங்கள் நியாயமற்ற வகையில் தமிழக எல்லையோர கிராமங்களில் தலையிட்ட செய்திகளும் அண்மைக் காலங்களில் வெளிவந்துள்ளன.
1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் மொழிவாரி மாநிலத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948இன் துவக்கத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட தார் கமிஷன் 13.9.1948 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழரசுக் கழகம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துக்களை இக்குழுவிடம் தெரிவித்தன. அக்குழுவில் தமிழரான டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ண ராஜும் உறுப்பினர்களாக இருந்தனர்.
தமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு இப்போதைக்கு மொழிவழி மாநிலம் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களை மொழிவழியில் பிரிப்பதாயின் அவற்றுக்கு இடையே மலை அல்லது ஆறு இருந்தால் அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வேங்கட மலையும், குடகு மலையும் கிடைத்து இருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை.
1954இல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு இரண்டாவது எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தது. 1954இல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல் அலி எனும் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம். பணிக்கர் என்ற கேரளாவைச் சேர்ந்தவர், எஸ்.என். குன்ஸ்ரு என்ற இந்திக்காரரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது.
பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகள் யாவும் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்றைக்கு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம் பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்திற்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956இல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. அன்றைக்கு ஏற்றுக் கொள்ளாமல் சரியாக எல்லைகள் வரையறை செய்திருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது.
தொல்காப்பியம்,
“வடவேங்கடத் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து” என்று குறிப்பிட்டதும்
“வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று” என்று புலவர் காக்கைபாடினியார் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த உண்மைகள், நியாயங்களை மனதில் கொண்டு கிருஷ்ணகிரி பகுதியை ஆந்திரத்துடன் சேர்க்க வேண்டுமென்ற தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் இருப்பது அனைவருக்கும் நல்லது. இவையாவும் பாரதியாரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இதுவும் காட்சிப் பிழைதானோ? இந்த உணர்வுகளும், இந்தமாதிரியான விபரீதங்களும் கூடவும் கூடாது. தமிழகம் இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலமாகும். பழைய, பண்டைய ஆட்சிகளில் இருந்து இன்றைக்கு வரை அரசியல் நாகரீகத்தையும், பிறருடன் நட்பு பாராட்டும் பாங்கையும் கொண்டுள்ள தமிழகத்தில், இம்மாதிரி சிந்திக்கத் தோன்றினால் அதை அடக்கக்கூடிய போர்க் குணமும் தமிழினத்திற்கு உண்டு.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்