இரண்டாம் தலைநகராக மதுரை…
மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக உருவாக வேண்டும் என்று ஒருபுறம் விவாதங்கள் நடக்கின்றன. இதைக் குறித்து சற்று பின்நோக்கி பார்த்தால், 1981ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதற்கு முன் அந்த மாநாட்டின் மலருக்கு பழ. நெடுமாறனிடம் அவசியம் கட்டுரை வாங்குங்கள். அவர் மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்லி எம்.ஜி.ஆர் பணித்தார். மதுரையைக் குறித்தான தரவுகளோடு ஒரு சிறப்பான கட்டுரையினை மலர் குழுவினருக்கு அனுப்பிவிட்டு எம்.ஜி.ஆர் பார்வைக்கு அனுப்பிய போது மதுரையை அரசு நிர்வாக ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினார். இந்த இடைப்பட்ட காலத்தில் விவசாயிகள் போராட்டம், துப்பாக்கிச்சூடு, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் சுப்பிரமணியம் பிள்ளையின் கொலை, வேல் திருட்டு, அதையொட்டி மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை நெடும்பயணம், ஒவ்வொருவரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொன்ன கருத்து என்பதையெல்லாம் எம்.ஜி.ஆர் சந்தித்த நிலையில்1983-ல் மாநிலத்தின் மையப்பகுதி திருச்சி, அங்கு தமிழகத்தின் தலைநகரை மாற்றும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள அண்ணா நகர் நாவல்பட்டில் தலைமைச் செயலகம் அமைய அதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவுமிட்டார். மேலும் தான் தங்குவதற்கு உறையூர் கோனக்கரையில் பெரிய வீட்டையும் விலைக்கு வாங்கினார். இதைக் குறித்தான விவாதங்கள் தமிழகம் முழுவதும் அந்தக் காலக்கட்டத்தில் நடந்தேறியது.
இன்றைய தமிழ்நாடு அன்றைக்கு சென்னை மாநிலம் 1956-ல் அமைந்த போது ஆந்திரர்கள் ’மதராஸ் மனதே’ என்று பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த பொழுது என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர். இதை ம.பொ.சி., ராஜாஜி போன்றவர்கள் எதிர்த்து சென்னை தமிழகத்திற்கே சொந்தம் என்ற பிடிவாதத்தால் நமக்கு சென்னை கிடைத்தது. அன்றைக்கு ஆந்திர முதல்வராக இருந்த சஞ்சீவ ரெட்டி நேருவிடம் இதைக் குறித்து போராடியும் பார்த்தார். அன்றைக்கு கேபினட் அமைச்சராக இருந்த வி.வி.கிரி இதைக் குறித்து பட்டும் படாமலும் இருந்தார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவருடைய திருத்தணி ஆந்திராவில் இருந்தாலும் சென்னை தமிழ்நாட்டுடன் தான் சேர வேண்டும் என்பதையும் நேருவிடம் சொல்லிவிட்டார். அப்போது ஒருக்கால் தலைநகர் நமக்கு சரியாக வரவில்லையென்றால் என்ன செய்ய என்று காமராஜர் போன்ற தலைவர்களெல்லாம் மதுரை திருச்சியில் தான் அமையும் என்று பட்டும் படாமலும் அமைதியோடு சிந்தித்ததுண்டு.
இந்நிலையில் சென்னை தலைநகர் கோரிக்கையை குறித்த கூட்டம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் 1956ல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடியது. அதில் அறிஞர் அண்ணா, ம.பொ.சி, நாவலர். இரா.நெடுஞ்செழியன், சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம், என்.வி.நடராசன், ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா, பாவேந்தர் பாரதிதாசன், பி.டி.ராஜன், கே.விநாயகம், பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன் ஆகியொர் கலந்துக் கொண்டனர். இப்படிப் போராடிப் பெற்ற தலைநகர் தான் சென்னை. இன்றைக்கு சென்னையில் மக்கள் தொகை பெருக்கமும், தொழிலிலிருந்து எல்லா வளர்ச்சிகளும் சென்னையிலேயே மையம் கொள்கின்றன. போக்குவரத்து நெருக்கடி, சென்னை நகர் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு, 200 வார்டுகள் சென்னை மாநகரில் இருந்தாலும் முறையான குடிநீர் கழிவுநீர் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்த முடியவில்லை. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, வீராணம் கிருஷ்ணா நதி நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை, இப்படியே போனால் சென்னையினுடைய எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்விக்குறி இருக்கும் நிலையில் தான் இரண்டாம் தலைநகர் என்ற கோரிக்கைகள் ஏற்பட்டுள்ளன.
காஷ்மீரில் குளிர் காலத்தில் ஜம்முவை தலைநகராகவும் கோடை காலத்தில் ஸ்ரீநகரை தலைநகராகவும் கொண்டுள்ளார்கள். உத்தர்கண்டிலும் சமீபத்தில் கோடைகால தலைநகராக கெயிர்சைன், குளிர்கால நிரந்தரத் தலைநகராக டேராடூன் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதுபோல சண்டிகர் பஞ்சாபுக்கும் அரியானாவுக்கும் இரண்டு மாநில தலைநகராகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1864-ல் சிம்லா இந்தியாவின் கோடை காலத் தலைநகராக இருந்தது. அதே போல் மத்திய பிரதேசத்தில் இந்தூரிலும், மகாராஷ்டிரத்தில் நாக்பூரிலும் முகாம் சட்டமன்றங்கள் மட்டும் நடத்தப்பட்டன. எப்படி அன்றைய சென்னை மாநிலத்தில் 1950களில் கோடை காலத்தில் உதகமணடலத்தில் சட்டமன்றம் நடந்ததோ, ஆந்திரத்தில் இன்றைக்கு அமராவதியில் சட்டமன்றமும், விசாகபட்டினம் தலைமை செயலகம், கர்னூலில் உயர்நீதிமன்றம் நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆந்திரா உதயமான போது கர்னூலில்தான் செயல்பட்டது. கேரளத்தில் மாநில தலைநகரம் திருவனந்தபுரத்திலும், உயர்நீதிமன்றம் கொச்சியிலும் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் இப்படியான நிலை உள்ளது.
இப்படியான நடைமுறைகள் இருந்தாலும் கூட ஒரு மாநிலத்திற்கு தலைமை செயலகம் அமைந்த பகுதியே தலைநகராக இருக்க முடியும். இரண்டாம் தலைநகர் என்று சொல்ல முடியாது. ஜம்மு காஷ்மீரில் தலைமைச் செயலகமும் தலைநகரும் ஒன்று தான், முகாம் தான் மாற்றப்படுகிறது. இதில் தலைநகர் மையப்பகுதிக்கு மாற்றப் பட வேண்டுமா இல்லையெனில் ஆந்திராவைப் போல் தலைமைச் செயலகம் ஒரு இடம், சட்டமன்றம் ஒரு இடம், உயர்நீதிமன்றம் ஒரு இடம் என்று மாற்ற வேண்டுமா? என்பதை கவனமாக கவனிக்க வேண்டும்,
இரண்டாவது தலைநகர் என்றால் நிர்வாக ரீதியாக தலைமைச் செயலாளரும், உள்துறைப் போன்ற துறைச் செயலாளர்கள் எங்கிருந்து செயல்படுவது என்பதும் தெளிவாகவேண்டும். இப்படியான நடைமுறைச் சிக்கல்களும் உண்டு. பொத்தாம் பொதுவாக இரண்டாம் தலைநகர் என்று சொல்லிவிட முடியாது. மாநிலத்தின் முக்கியமான நிலநிர்வாகம் (பழைய Board of Revenue), மதுவிலக்கு போன்ற துறைகள் இன்றைக்கும் எழிலகத்திலும் ஒரு சில துறைகள் குரளகத்திலும் இயங்குகிறது. அதை எப்படி இரண்டாக பிரிப்பது என்பதெல்லாம் சிக்கல்கள் உள்ளன.எப்படி துறைகள் பிரிக்கப்படும் என்று தெளிவான நோக்கத்தோடு கண்டறியவும் வேண்டும். பின் தான் இந்த அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும்; பிழையாகிவிடக் கூடாது. கர்நாடகத்தில், வட கர்நாடகா பெல்காமிற்கு சில துறைகளை மாற்றியும் சரியாக முறைப்படுத்தவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்றும் சொல்கின்றனர்.
ஆனால் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரை கலாச்சார ரீதியாக நமது பாரம்பரியமிக்க வரலாற்று நகரம் ஆகும்.
இரவு பகலும் அல்லங்காடி, நாளங்காடிகள் செயல்பட்டது, மதுரைக் காஞ்சியில் சொல்லப்பட்டுள்ளது. மதுரை இன்றும், தூங்கா நகரமாகவே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நகரஅமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, தாமரைப்பூவிற்கு இணையாக மதுரை அமைக்கப்பட்டதாக, பரிபாடல் விளக்குகிறது. மதுரையைச் சுற்றி சமணம், பவுத்தம், சைவம், வைணவம் என்ற நால்வகை மதங்களின் கோவில்கள் அதிகம் உள்ளன. இவை, சமய ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன. இங்கு, ஐநூற்றுவர், திசையாயிரத்தை நூற்றுவர், மணி கிராமத்தார், வளஞ்சியர், நானாதேசி என்னும் உள்நாட்டு வணிகர்கள் மட்டுமின்றி, அஞ்சி வர்ணம் என்ற, இஸ்லாமிய வணிகர்களும் தங்கி வணிகம் செய்துள்ளனர். தமிழ் மொழியின் மிகத் தொன்மையான பிராமி கல்வெட்டுகளில், 60 சதவீதம் இப்பகுதிகளில் தான் கிடைக்கின்றன.
மூதூர் மதுரை என்றால் மீனாட்சி சொக்கர்
ஊற்றால் உலகூட்டும் வைகையாறு அழகர்
ஆயிரங்கால் மண்டபத்தின் நெடியதூண்கள்
நெடிதுயர்ந்த திருமலைநாயக்கர் மஹால்
தூய வெண்ணிறக் கண்ணிகளில் மல்லிகைமலர்கள்
ஆனைகட்டி நெல்லுதிர்த்த முல்லைப்பாசனங்கள்
வீணை தனம்மாக்களின் எம்.எஸ்சின் குயிலோசைக்குலங்கள்.
இவைமட்டுமா பாண்டிநாட்டு ஆலவாயின்
நிலைபெற்ற பொற்றாமரை நெடுவாசல்கள்?
சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த புலவர் பேரவை
சங்கரன் நக்கீரன் முதல்
பாண்டித்துரைத் தேவர்வரை ஆய்வு செய்த
இயல்இசை நாடக வளர்இன்பம்
தேயாமல் மேலும் செழுமையுற வந்தவர்கள்
பல்லோருள் தலைஞாயிறு பரிதிமாற்கலைஞர்
எல்லோருள்ளும் பூரணமாய் நிறைந்துள்ள
சூரிய நாராயண சாஸ்திரி தம்மால்
கூர்மை பெற்றுள்ள தமிழ் அழகே!
மேலும் வளர்ந்து ஒங்கி அன்னை நீ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திடுக!
மையத்துள் வைத்துன்னை வணங்கும்
எம் இதயம்.
(புதுவை ஆரோவில் இதழில் வெளியானது, சில மாற்றங்களோடு)
கிரேக்க ஏதன்ஸ், இத்தாலி ரோம், துருக்கி இஸ்தான்புல், தச்சசீலம், உஜ்ஜையினி, நாளந்தா, பாடலிபுத்திரம் போன்ற நகரங்கள் காலத்திற்கு திட்டமிட்டு உருவான நமது வரலாற்றின் அருட்கொடையாகும். இதற்கு கீழடி அகழாராய்ச்சியே சாட்சியாக தெரிகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, நெல்லை, உறையூர், தஞ்சை, செஞ்சி, காஞ்சிபுரம், கொற்கை, முசிறி, பூம்புகார் என்பது நமது பழங்கால நாகரீகமுள்ள நகரங்களாகும். இந்த அளவில் மதுரையில் விமான நிலையம், ரயில்-சாலை போக்குவரத்து, அருகே தூத்துக்குடி துறைமுகம், ஆட்சி நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய கட்டிடங்களுக்கு பொருத்தமான இடங்கள் எல்லாமுண்டு. இவை எப்படி மலேசியாவில் புத்திரஜெயா எப்படி உருவானதோ அப்படி மதுரையை உருவாக்கலாம்.
கடந்த 1980-களில் சென்னை உயர்நீதிமன்றக் கிளையை மதுரைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983 ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.
அதற்கு பிறகு 28 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது.
தொழிலுக்கான ஒரு நகரம், நிர்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று உருவாக்கலாம். கேரளத்தில் உயர்நீதிமன்றம் எர்ணாகுளத்தில் இருக்கிறது. தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லாம். கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பட்டும் படமல் விவாதம் நடந்துவருகிறது. இப்போது மீண்டும் அதே குரல். இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும். இரண்டு தலைநகரங்களை உருவாக்கமுடியாது. அதில் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படலாம்.
இப்படியெல்லாம் கோரிக்கை வர காரணம் என்று யோசித்தால் கடந்த 70 ஆண்டுகளில் முக்கியமான திட்டங்களை எல்லாம் சென்னையிலேயே வைத்துக் கொண்டோம் அதை பரவலாக்கவில்லை.
தென்மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக தென்கோடி எல்லை குமரி மாவட்டத்திலிருந்து வடகோடி எல்லையான சென்னைக்கு 700 கிலோமீட்டர் பயணம் செய்து தங்களுடைய பணிநிமித்தமாக வரவேண்டியுள்ளது.
இப்போது கூட கரானா உச்சத்தில் இருந்தபோது தென்மாவட்டம் மேற்கு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு உளவியல் ரீதியாக எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதை அறிவோம். மதுரை தலைநகருக்கு ஏற்ற நகரம் தான். இன்றைக்கு அங்கே அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கூட இன்னமும் துவங்கப்படாமல் உள்ளது. சென்னை நகரில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் விரிவாக்கம் இல்லாமல் பெருகிக் கொண்டு வருகின்றது. பரந்து விரிவடையக் கூடிய நிலையில் இனி எதிர்காலத்தில் முடியாது. இப்படியான பல விடயங்கள் சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் நம்முடைய விருப்பம் கூட.
ஒரு கட்டத்தில் மாநில தலைநகராகக் மதுரையை கொண்டு தென் தமிழகம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது வேறு விஷயம். இருபது ஆண்டுகளுக்கு முன் அங்கங்கு அமைதியான குரல்கள் எழுந்தன. அந்த கோரிக்கை காலப்போக்கில் என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லை. இன்றைக்கும் சிலர் ஒரே மொழி பேசுகின்ற ஆந்திரா தெலுங்கானா என்று பிரியவில்லையா, ஜார்கண்ட் பிரியவில்லையா என்று சொல்கின்றனர்.
மதுரை இரண்டாம் தலைநகர் என்பது ஜம்மு காஷ்மீர் மாதிரி நினைக்க முடியாது, இரண்டாம் தலைநகராக மதுரையை நிரந்தரமாக்குவது என்பது இந்தியாவிலேயே முதல் தடவையாக ஏற்பட்டுள்ள கோரிக்கையாகும். ஜம்மு-காஷ்மீர், கர்நாடகத்தில் பெல்காம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது வேறு விடயம்.
தற்போது திருச்சியையும் பரிசீலிக்க வேண்டும் என்று ஒருபக்கம் குரல்கள் கேட்கின்றன. பேராசிரியர் நண்பர் ஜெயராமன் தங்கை மீனாட்சியையும் (மதுரை) அண்ணன் அரங்கனையும் (திருவரங்கம், திருச்சி) மோத விடாதீர்கள் என்று இந்த விடயத்தைக் குறித்து வேடிக்கையாக என்னிடம் விவாதித்தார்.
தற்போது மும்பையை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் தொழில் நகரமாக கருதப்படுகின்றது. அதுமட்டுமல்ல துறைமுக வர்த்தக நகரம், பாலிவுட் என்ற சினிமா நகரம், ரிசர்வ் வங்கி, பங்கு சந்தைகளை முடிவு செய்கின்ற கேந்திர நகரமாக இருக்கின்றது. சென்னையிலும் சினிமா, வர்த்தகம் மற்றும் துறைமுகம், தொழில், மாநில நிர்வாகம் உள்ளடக்கிய நெருக்கடியான நகரம் தான். இந்நிலையில் எதிர்காலத்தின் நலனை மனதில் கொண்டு சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
இல்லையென்றால் சென்னை நகரினுடைய பெருக்கம் வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளாமல் பல சிக்கல்களுக்கும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். கொல்கத்தாவின் நிலையும் சென்னையைப் போன்றே தான். எனவே தான் அங்கு கூர்காலாந்து என்ற தனிமாநில கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி நெருக்கடி பல மக்களின் தவிப்பால் பத்துக்கு மேலான புது மாநில கோரிக்கைகள் எழுந்துள்ளன. மொழிவாரி மாநில எல்லை வரையறுத்தல் குழு இரண்டு அமைக்கப்பட்டு இறுதியாக 1956-ல் பிரிக்கப்பட்டன. இன்றைக்கு இந்தி பேசும் உத்திர பிரதேசம் மூன்றாக பிரிந்து விட்டது. தெலுங்கு பேசும் ஆந்திரம் இரண்டாக பிரிந்து விட்டது என்ற நிலை.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னால் வந்து படித்து வேலையோ தொழிலோ செய்யும் நண்பர்கள் ஏதோ ஒரு உளவியல் ரீதியாக பாதிப்புகளும் அடைந்ததுண்டு. திருவல்லிக்கேணி முருகேச நாயக்கர் மேன்சன் போன்ற விடுதியில் தங்கியிருந்த தென்மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் எப்போது சொந்த ஊரை நோக்கி பாயலாம் என்று பேசிக் கொள்வதுண்டு. காலப்போக்கில் ஐடி நிறுவனங்கள் வருகை, வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். வீட்டு வாடகை, அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவில் இல்லாத வருவாய் இல்லாத தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்காக கட்டுப்பட்டு சென்னையில் அடைந்துள்ளனர். சென்னை சுற்றுச்சூழல் பாதிப்பால் கடற்கரை பகுதியெல்லாம் இன்னும் 20-30 ஆண்டுகளில் கடலுக்குள் சென்று விடும் என்று அறிக்கைகளும் தாக்கீதுகளும் சொல்கின்றன.
இப்படிப் பல காரண காரியங்களால் சென்னையிலிருக்கும் இந்த இறுக்கமான நெருக்கடியைத் தவிர்க்க மாற்றங்கள் தேவை என்ற நிலைதான் தலைநகர மாற்றம், இரண்டாம் தலைநகர் என்ற விவாதங்கள் இயற்கையாகவே வருகின்றன. இதை கவனிக்க வேண்டும். எப்படி முறைப்படுத்துவதோ என்று தீர்க்கமான முடிவுகள் தேவை. தென்மாவட்ட மக்களின் சிரமங்கள் சென்னை கோட்டையிலுள்ள அதிகார வர்க்கங்களுக்கு இது ஒரு முக்கியமான நீண்ட காலப் பிரச்சினையாகவும் பரிசீலித்து தீர்க்க வேண்டியது அவசியமும் அவசரமுமானது.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.08.2020