இலங்கைக்குக் கச்சத்தீவு தானம்

0

தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் 1974ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி கையெழுத்திட்டனர்.

இராமேஸ்வரம் அருகே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. இராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு இந்தத் தீவு, இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா கடந்த ஜனவரி மாதம் டெல்லி வந்திருந்தபோது பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.

எதிர்ப்பு

‘கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்குத் தரக்கூடாது’ என்று தமிழக அரசு வற்புறுத்தி வந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தபோது இதை வலியுறுத்தினார்.

தானம்

இருந்தபோதிலும் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பது என்று இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. 28.6.1974 அன்று, கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை இலங்கையில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி ஜெயசிங்கே டெல்லிக்கு விமானத்தில் கொண்டு வந்தார். அதில் இந்திரா கையெழுத்திட்டார். அதேபோல, டெல்லியில் இருந்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல் சிங் கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கைக்குக் கொண்டு போனார். அதில் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகா கையெழுத்திட்டார். இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்து போடுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

280 ஏக்கர்

கச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகில் செல்வார்கள். இரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்குச் சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு குடிதண்ணீர் இல்லையாதலால், மக்கள் நிரந்தரமாக வசிக்கவில்லை.

கருணாநிதி

முதல் அமைச்சர் கருணாநிதியை நிருபர்கள் பேட்டி கண்டு, “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதற்கு முன்னால் மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டதா?” என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: “இரண்டு வாரங்களுக்கு முன்னால் வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல் சிங் இங்கு வந்தபோது என்னிடம் அதுபற்றி சில விபரங்களை விவாதித்தார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழ் மக்களுடைய உணர்ச்சியை நான் அவரிடத்தில் விளக்கி இருக்கிறேன்” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கண்ணீர்

இராமநாதபுரம் ராஜா ராமநாத சேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசின் முடிவு வருத்தத்தைத் தருகிறது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை” என்றார்.

ஒப்பந்த விவரம்

கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றிய அறிக்கை ஒன்றைப் பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண் சிங் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

“தமிழ்நாட்டில் இருந்து 12.5 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 10.5 தூரத்திலும் இருக்கும் கச்சத்தீவில் இலங்கையைச் சேர்ந்தவர்களோ, இந்தியாவைச் சேர்ந்தவர்களோ எப்பொழுதும் நிரந்தரமாக குடியிருந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமா? அல்லது இலங்கைக்குச் சொந்தமா? என்ற பிரச்சினை இருந்தது. அதன்பிறகு ஒரு தீர்மானமான முடிவு ஏற்படும் வரை கச்சத்தீவை இரண்டு நாடுகளும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது.

நேரடிப் பேச்சு

இரண்டு நாடுகளும் ஒரு பிரச்சினையைப் பேசி தீர்க்க முடியாவிட்டால் வேறு யாராவது மூன்றாவது நபர் தலையிட்டுச் சமரசம் செய்து வைக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அண்டை நாடு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் மூன்றாவது நபர் தலையீடு இல்லாமல் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறது. கச்சத்தீவு பற்றி தமிழ்நாடு, கோவா, பம்பாயிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய தஸ்தாவேஜுகளின் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இந்த ஆதாரங்கள் பற்றி இரண்டு நாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சு நடத்தி வந்தனர்.

நியாயம்

கச்சத்தீவு அமைந்து இருக்கும் பாக். ஜலசந்தி பற்றி இரண்டு நாடுகளுக்கும் எல்லைத் தகராறு வரக்கூடாது என்பதற்காக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. இதுவரை கிடைத்தத ஆதாரங்களை வைத்து கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது நியாயமாக இருக்கும் என்று கருதுகிறேன்.” மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஒப்பந்த விவரம்

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகள் இடையே கச்சத்தீவு பற்றி ஏற்பட்ட ஒப்பந்தம் விவரம் வருமாறு:

“ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தம் என்றாலும் அந்தத் தீவுக்கு இந்திய மக்கள் போவதற்கு ‘பாஸ்போர்ட்’ (அனுமதி) வாங்க வேண்டியது இல்லை. கச்சத்தீவு அமைந்து இருக்கும் கடல் பகுதியில் (பாக். ஜலசந்தி) இரண்டு நாட்டு மீனவர்களும் முன்போல மீன் பிடிக்கலாம். இரண்டு நாடுகளின் படகுகளும் அந்தப் பகுதியில் வழக்கம் போல தடை இல்லாமல் போய் வரலாம்.

எண்ணெய்க் கிணறு

பாக். ஜலசந்தியில் புதிதாக எல்லை பிரிக்கப்பட்டு இருக்கும் பகுதியை மீறி இந்தியாவோ, இலங்கையோ எண்ணெய்க் கிணறு தோண்ட விரும்பினால், இரண்டு நாடுகளும் கலந்து பேசி கூட்டு முயற்சியுடன் எண்ணெய் வளம் பெருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” மேற்கண்டவாறு கூறப்பட்டிருந்தது.

கச்சத்தீவு குறித்து இந்திராவுக்கு கருணாநிதி கடிதம்

“கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்” என்று ஆதாரங்களுடன் பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதினார். கச்சத்தீவு பற்றி இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் பேச்சு நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்திலேயே கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே உரியது என்பதை வலியுறுத்தி, இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். கடித விவரம் வருமாறு:

ஆதாரங்கள்

“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா காரியதரிசி கேவல் சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை என்று நிரூபிப்பதற்குத் தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14.2.1776 அன்று ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17.3.1762 அன்று ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு – போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் ஆகிய எல்லாக் குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதைக் காட்டவில்லை. 1974ம் ஆண்டு வெளியான இலங்கை வரைபடத்திலும் (‘மேப்’) கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாகக் குறிக்கப்படவில்லை.

முத்துக்குளிப்பு

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ்நாட்டுக் கடற்கரை பகுதியில் முத்துக் குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்ளிட்ட தென் இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன. கச்சத்தீவு செல்லும் பாதையிலும் கச்சத்தீவின் மேற்கு பகுதி கரை ஓரத்திலும், சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம் கட்டியது இல்லை.

நிரூபிக்க முடியும்

இப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக் கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னைச் சட்டக் கல்லூரியின் ஆராய்ச்சிப் பிரிவு கருத்து தெரிவித்திருக்கிறது.

எனவே, இலங்கைப் பிரதமர் இந்தியாவுருக்கு வரும்பொழுது, இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி, “கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமல்ல” என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதத்துக்குப் பதில் ஏதும் வரவில்லை. கச்சத்தீவு தானம் குறித்து இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அனைத்துக் கட்சி கூட்டம்

கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை, சென்னை கோட்டையில் முதல் அமைச்சர் கருணாநிதி கூட்டினார். இந்தக் கூட்டம் 1974 ஜூன் 29ந் தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் வருமாறு:

பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர். மாரிமுத்து (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி (சுதந்திரா), ஈ.எஸ். தியாகராசன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர். பெருமாள் (பார்வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு)

மேல் சபை

ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ஜி. சாமிநாதன் (சுதந்திரா), அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்), ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்), சக்தி மோகன் (பா.பிளாக்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி)

தீர்மானம்

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்துத் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.” மேற்கண்டவாறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

பிரதமருக்கு

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம் பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது: “கூட்டத்துக்கு வந்திருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. பிரதிநிதி தீர்மானத்தில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக் கொள்ளப் படாததால், வெளியேறினார். இ.காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்தத் தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது.” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

சட்டசபை தீர்மானம்

நிருபர் கேள்வி: கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்றால் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுபற்றி ஐகோர்ட்டிலும் வழக்குத் தொடர வேண்டும் என்று ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் கருத்துத் தெரிவித்து இருக்கிறாரே?

கருணாநிதி பதில்: கோர்ட்டுக்கு போவது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. சட்டசபையைக் கூட்டுவது பற்றி யோசிக்கலாம்.

அதிகாரி

கேள்வி: மத்திய அரசு வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல் சிங் உங்களைச் சந்தித்த போதே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கப் போவதாக சொன்னாரா?

கருணாநிதி: அப்போது அகதிகள் பிரச்சினை பற்றித்தான் பேச வந்திருந்தார். இது முக்கியமாகப் பேசப்படவில்லை. அப்போதே தமிழர்கள் இப்படி ஓர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் கூறி இருக்கிறேன்.

திருத்தம்

கேள்வி: ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதே, இனிமேல் எதுவும் திருத்தம் செய்ய முடியுமா?

கருணாநிதி: மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. செய்யலாம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்திலோ அல்லது முந்தின நாளோ தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ டெல்லிக்கு அழைத்துப் பேசி இருக்கலாம். இந்த மாநில அரசைக் கலந்து கொள்ளாவிட்டாலும், மிக முக்கியமான பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பிரதம மந்திரி, சர்வ கட்சி கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளை அறிந்து இருக்கலாம். அப்படிச் செய்யாதது வருந்தத்தக்கது.

ராஜினாமா

கேள்வி: கச்சத்தீவு பிரச்சினைக்õகத் தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கூறுகிறார்களே?

கருணாநிதி: கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்ட இந்தியாவை ராஜினாமா செய்யும்படி சொல்ல தைரியம் இல்லாதவர்கள், எங்களைப் பார்த்து ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்.” இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கச்சத்தீவு தானம் பாராளுமன்றத்தில் அமளி

கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தானம் செய்ததற்கு பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனசங்க உறுப்பினர் ஆவேசத்துடன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டுக்கு அருகே உள்ளதும், முன்பு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததுமான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி கையெழுத்திட்டார்.

விவாதம்

இந்த ஒப்பந்தத்தின் நகலை, பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண் சிங் தாக்கல் செய்தார். அப்போது அதன் மீது காரசாரமான விவாதம் நடந்தது.

இரா. செழியன் (தி.மு.க.) பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது சட்ட விரோதமானது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்” என்றார்.

மூக்கையா தேவர்

மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) பேசியதாவது: “என்னுடைய ராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியது கச்சத்தீவு. அதை இலங்கைக்குக் கொடுத்தது தவறானது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஏற்கனவே கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு தொல்லைக் கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் மூண்டால் இந்தத் தீவை இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.” இவ்வாறு மூக்கையா தேவர் கூறினார்.

வாஜ்பாய்

ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், “இலங்கைக்குக் கச்சத்தீவை தானம் செய்யும் பேரம் ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவைத் தூக்கிக் கொடுப்பது கேவலம்” என்று கூறினார்.

மதுலிமாயி (சோசலிஸ்டு), பி.கே. தேவ் (சுதந்திரா), முகமது செரிப் (முஸ்லிம் லீக்), நாஞ்சில் மனோகரன் (அ.தி.மு.க.) ஆகியோரும் ஒப்பந்தத்தைக் கண்டித்துப் பேசினர்.

மந்திரி பதில்

வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண் சிங் பதில் அளிக்கையில், “இந்தியா – இலங்கை நட்பு வளர, இந்த ஒப்பந்தம் உதவும். இரு தேசங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது” என்று கூறினார்.

வெளிநடப்பு

ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.கழகம், சுதந்திரா, பழைய காங்கிரஸ், சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், ஐனசங்கம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளில் வலது கம்யூனிஸ்டு, இடது கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும் வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஒப்பந்தம் கிழிப்பு

சபையை விட்டு வெளியேறும்போது கச்வாய் என்ற ஜனசங்க உறுப்பினர், கச்சத்தீவு ஒப்பந்த நகலைக் கிழித்து சபையில் வீசினார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேல் சபை

டெல்லி மேல் சபையிலும், கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதத்தின்போது எஸ்.எஸ்.மாரிசாமி (தி.மு.க.) பேசுகையில், “கச்சத்தீவு பற்றி தமிழக முதல் அமைச்சருடன் கலந்து பேசாமலேயே ஒப்பந்தத்தில் டெல்லி சர்க்கார் கையெழுத்திட்டு இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கு” என்று கூறினார்.

ராஜநாராயணன் (சோசலிஸ்டு) பேசுகையில், “ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு முன் தமிழ் மக்களின் கருத்தை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார். “ஒப்பந்தத்தைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது” என்று அப்துல் சமது (முஸ்லிம் லீக்) கூறினார்.

கம்யூனிஸ்டு ஆதரவு

கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

“இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தியின் சிறந்த ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்று பூபேஷ் குப்தா (வ.கம்) கூறினார். முடிவில் வ.கம்யூனிஸ்டு, இ.கம்யூனிஸ்டு கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையில் மகிழ்ச்சி

இலங்கை பாராளுமன்றம் கூடியது. கச்சத்தீவை இலங்கைக்குப் பெற்றுத் தந்ததற்காக பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகாவை உறுப்பினர்கள் பாராட்டினார்கள். சிறிமாவோ பண்டார நாயகா பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினைக்குத் தீர்வு கண்டதற்காக இந்திரா காந்தியைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். சமரசம் ஏற்பட இந்திய வெளிநாட்டு இலாகா மந்திரி சுவரண் சிங் மிகவும் உதவியதாக அவர் சொன்னார்.

காங்கிரசில் பிளவு

கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கலாமா, கூடாதா என்பது குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. “இலங்கைக்குக் கச்சத்தீவை இந்தியா கொடுத்தது சரி. அதை ஆதரிக்கிறோம்” என்று தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் ராமையா நிருபர்களிடம் கூறினார். கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என்று கூறுவது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று அவர் சொன்னார். இ.காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரான பழைய முதல் மந்திரி பக்தவச்சலம் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

மாரிமுத்து

ஆனால், சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர். மாரிமுத்து முதல் அமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது” என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல மேல் சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.

எதிர்ப்பு

இப்படி அவர்கள் கையெழுத்துப் போட்டதற்கு ராமையா எதிர்ப்பு தெரிவித்தார். “அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மாரிமுத்துவும், ஆறுமுகசாமியும் கலந்து கொண்டது தவறு. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதற்கு எதிரான தீர்மானத்தில் அவர்கள் கையெழுத்திட்டது தவறு” என்று அவர் சொன்னார். சட்டசபை இ.காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த அனந்தநாயகியும் ராமையாவின் கருத்தை ஆதரித்தார்.

ஆறுமுகசாமி பதில்

ராமையாவுக்கு மேல் சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமி பதில் அளித்தார். அவர் கூறியதாவது: “முதல் அமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நானும், மாரிமுத்துவும் கலந்து கொண்டது சரிதான். மக்களின் உணர்ச்சிகளை எதிரொலிப்பது சட்டசபை உறுப்பினர்களின் கடமை. நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு இ.காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்றுதான் நினைப்பார்கள்.

எதிரானது அல்ல

அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. மிக முக்கியமான இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஓடி ஒளிய விரும்பவில்லை. அதனால் நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.” மேற்கண்டவாறு ஆறுமுகச்சாமி கூறினார்.

கண்டன கூட்டங்கள்

கச்சத்தீவு தானத்தைக் கண்டித்து, ஜூலை 14ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மூ.க. சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் அமைச்சர் கருணாநிதி தஞ்சை, பாபநாசம் ஆகிய நகரங்களில் நடந்த கூட்டங்களில் பேசினார்.

கோர்ட்டில் வழக்கு

கச்சத்தீவைத் தானம் செய்வது சட்ட விரோதம் என்றும், இந்திரா காந்தியும், சிறிமாவோ பண்டார நாயகாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு ஜனசங்கத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்தார். விசாரணைக்குப் பிறகு வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது

நிறைவேற்றம்

பலத்த எதிர்ப்பு இருந்தாலும், கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons