இலங்கை தேர்தல், இனி என்ன?

0
Dinamani 17-08-2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர் ராஜபக்சே அமைத்துள்ளார். இலங்கையில் 2 கோடியே 17 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடெனினும் இந்தியப் பெருங்கடல் புவியரசியலில் முக்கிய கேந்திரமாகவும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளடங்கிய புவியமைப்பாகும். இலங்கையில் 74.9% சிங்களர்கள் தமிழர்களுடைய மக்கள் தொகை படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11.2% ஆக உள்ளது. முஸ்லீம்கள் 9.7%, இந்திய வம்சாவளி மலையக மக்கள் 4.2% ஆகும். மொத்த வாக்காளர் எண்ணிக்கை இலங்கையில் 1,62,63,885 ஆகும். நடந்து முடிந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் இதில் 71% வாக்களித்தனர். இந்த தேர்தலில் 46 கட்சிகளின் சார்பில் 3,652 வேட்பாளர்கள் 225 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டனர். மொத்ததில் சுயேட்சைள் 3,800 பேர் தேர்தல் போட்டியில் இறங்கி மொத்த வேட்பாளர்கள் 7,452 என தேர்தல் களத்தில் இருந்தனர்.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா, ஐக்கிய தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவையே முக்கியமானதாகும்.

இலங்கையில் 2020ம் ஆண்டிற்கான நாடளுமன்ற தேர்தல் 05.08.2020 நடைபெற்றது. இந்த நிலையில் 196 இடங்கள் வாக்கெடுப்பு மூலமும் 29 இடங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.
கட்சிகள் வெற்றிப் பெற்ற இடங்கள்:

  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 (59.9%)
  • ஐக்கிய மக்கள் சக்தி – 47 (23.9%)
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு – 9+1 (2.82%)
  • தேசிய மக்கள் சக்தி – 2 (3.84%)
  • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2
  • தேசிய காங்கிரஸ் – 1
  • ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1
  • முஸ்லிம் தேசிய கூட்டணி – 1


இலங்கை 2020 வடக்கு கிழக்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

யாழ் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

வன்னி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைக்கலநாதன் – 18,563 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26,382

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43,759
இம்ரான் மஹ்ரூப் – 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல – 30,056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர். சம்பந்தன் – 21,422

அம்பாறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விமலவீர திஸ்ஸநாயக்க 63,594
டி வீரசிங்கே 56,006
திலக் ராஜபக்ச 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
மொகமட் ஹரிஸ் 36,850
மொகமட் பைசல் 29,423

தேசிய காங்கிரஸ்
அத்தா உல்லா 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
முஸரப் 18,389

இதுபோக கட்சித் தலைமைகள் தங்கள் விருப்பு வேட்பாளர்களை பட்டியலில் சேர்த்து இலங்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழர் தேசியக் கூட்டணியில் மாவை. சேனாதி ராஜா தலைமையிலான தமிழரசுக் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழர் விடுதலைக் கழகம், த. சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியவை உள்ளன.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என முக்கிய கட்சிகளாக இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இருந்து பிரிந்து ராஜபக்சே தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சி தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் ராஜபக்சேவுக்கு தான் எதிர்பார்த்ததைவிட அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. பழைய ஐக்கிய மக்கள் கட்சி வலுவிழந்து இரண்டு இடங்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்கும் இதே நிலைமை தான். ஒரே ஒரு இடத்தில் தான் அது வெற்றிப் பெற்றுள்ளது. அதன் சார்பில் அங்கஜன் ராமநாதன் யாழ்ப்பாணத்தில் வெற்றிப் பெற்றார்.

யாழ்ப்பாண பகுதியில் தமிழரசு கட்சியை உள்ளடக்கிய தமிழர் கூட்டமைப்பு கடந்த முறை 16 இடங்களில் வெற்றி பெற்றாலும் இந்த முறை 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுபோக விருப்பப் பட்டியல் மூலமாக ஒரு இடம் கிடைக்கும்.
தந்தை செல்வா காலத்திலிருந்து அந்தக் கட்சியின் நிர்வாகிகளாக இருந்த ஆர். சம்மந்த்ன், மாவை. சேனாதிராஜா என ஒரு சிலரே இன்றும் இருக்கின்றனர். இதில் ஆர். சம்பந்தன் திரிகோணமலை மாவட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

நண்பர் சேனாதிராஜா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். எஞ்சியிருக்கின்ற விருப்புப் பட்டியலில் சேனாதிராஜா பெயர் சேர்க்கப்பட வேண்டும் அவர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அவர் மூத்த நிர்வாகி. பல்வேறு தியாகங்களை செய்து 50 ஆண்டுகளாக தமிழர் போராட்டக் களத்தில் இருப்பவர் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செல்வா தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய காலங்களில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தவரை ஏன் கடந்த தேர்தல்வரை கூட தமிழர்களுடைய வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தமிழ் தேசிய போக்கில் இருந்தது. தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை உருவாக்கின் தமிழர் பகுதியில் சிங்கள கட்சிகளுக்கு வாய்ப்பில்லாமல் பிரபாகரன் கூட்டமைப்பு என்ற முறை வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளெல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தது. சம்பந்தன் இதற்காகவே பலமுறை பிரபாகரனை சந்தித்து அதன் அடிப்படையிலே தமிழ் ஒருங்கிணைந்த வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இருந்தனர். எளிதாக தமிழர்கள் வெற்றியையும் பெற்றனர்.
2009 இறுதிப் போருக்கு பிறகு நடந்த தேர்தலில் இவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என்றாலும் புலிகள் இயக்கத்தின் தமிழர்களின் ஒருமித்த தேர்தல் பார்வை இருந்தது.

இந்த முயற்சியில் ஆர். சம்பந்தன் அவர்கள் பிரபாகரனையும் மற்ற தமிழ்த் தலைவர்களையும் சந்தித்து ஆலோசித்து தேர்தல் களம் கண்டனர். இதனால் தமிழர்களுடைய ஒட்டுமொத்த குரலாக 16 இடங்களுக்கு மேலாக வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது, மூன்றாவது பெரிய கட்சிகளாக தமிழர் தேசிய கூட்டமைப்பு திகழ்ந்தது.

இன்றைக்கு நிலைமை வேதனை அளிக்கின்றது. தமிழர் கூட்டமைப்பு 10 இடங்கள் (9+1) விக்னேசுவரன் (1), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (1+1), செல்வம் அடைக்கலநாதன்,
த. சித்தார்த்தன் என 13 பேர் தான் தமிழ் தேசிய பரப்பின் வெற்றியை ஈட்டியுள்ளனர். இதுபோக 5 இடங்கள் தமிழர் பகுதியில் சிங்கள அரசியல் கட்சிகளின் தோழமைக் கட்சிகளே வெற்றிப் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ச. வியாழேந்திரன், ராஜபக்சே கட்சியின் பூ மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். தமிழர் பகுதியில் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன 5 இடங்களிலும், சஜித் பிரேமதாசாவின் சமகிஜனபலவேகிய 4 இடங்களிலும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு தமிழர் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார் என்ற வழக்கில் கிழக்கு மாகாண பிள்ளையான் மீது குற்றஞ்சாட்டப்பட்டு சிறை சென்றார். அவர் 54,000 வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றுள்ளார். ஏனென்று கேட்டால் அவர் தமிழர்களை முஸ்லீம் மக்களிடமிருந்து பாதுகாத்தார் என்ற கருத்தினை வெளிப்படுத்துகின்றனர்.

புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்துச் சென்ற கருணா (அகில இலங்கை தமிழர் மகாசபை) திகமதுல்ல (மட்டக்களப்பு) தொகுதியில் 29,379 வாக்குகள் பெற்றதும் கே. பத்மநாதனும் களத்தில் இருந்ததும் தமிழ்த் தேசிய வேட்பாளரின் வெற்றியை பாழ்ப்படுத்தியது.

மொத்தத்தில் அங்குள்ள தமிழ் பரப்பிலும், இந்திய வம்சாவளி மலையகத்திலும் சேர்த்து மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ் தேசிய லட்சியப் பொதுவெளியில் 13 பேர் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளனர்.

இப்படியான எதிர்பாராத தேர்தல் முடிவுகளினால் பல சூழல்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ளன. 45 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்த ரணில் விக்ரமசிங்கே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செல்வா காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்குப் பிறகு சிங்கள ஆளும் கட்சிகள் தமிழர் பகுதியில் எளிதாக வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கையில் விகிதாசார வாக்குமுறை இருந்தாலும் இரண்டு விதமாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வது, மற்றொன்று கட்சிகளுக்கு வாக்களித்து விகிதாச்சார முறையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் மொத்தம் 29 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கட்சி தலைமையின் நியமனத்தால் தேர்வாகின்றனர். மொத்தம் 3 ஓட்டுகளில் ஒன்று நேரடியாக வேட்பாளருக்கு, மற்றொன்று கட்சிக்கு, மூன்றாவது விருப்பு வேட்பாளர்கள் என வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.

இவையெல்லாம் கடந்து இன்றைக்கு தேர்தல் முடிவுகள் தமிழர்களே எதிர்பார்க்காத அளவில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.கடந்த தேர்தலில் தோற்ற ராஜபக்சே மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டார்.

இனி என்ன?

  1. இலங்கையில் தொடர்ந்து தமிழர் மீது நடத்தி வந்த இன அழிப்பு 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை நடந்தேறியது. அது குறித்தான சர்வதேச பொறிமுறையில் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்ற தீர்மானங்கள் 30/1ல் துவங்கி 40 வரை தாக்கல் செய்யப்பட்டது. பத்து ஆண்டுகளாக எந்த தீர்வுக்கும் வராமல் கடந்த வருடம் ராஜபக்சே பிரதமர் ஆனவுடன் 40வது தீர்மானத்தில் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாது திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் என்று முடிவுகளை மேற்கொண்டார். பத்தாண்டுகளாக தீர்வு கிடைக்கும் என்று தமிழ் சமுதாயம் போராடிய இந்த தீர்மானங்களுடைய முடிவுகள் என்னாகும் என்று தெரியவில்லை.
  2. இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையும், எந்த அளவில் நடைமுறைக்கு வரும் என்று சொல்லவும் முடியவில்லை.
    இந்த இரண்டு விடயங்கள் சர்வதேச சமுதாயம் முன்னெடுக்க வேண்டுமென்று முனைப்பு காட்டப்பட்டது.
  3. வடக்கு கிழக்கு மாநிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுடைய விவசாய நிலங்கள் திரும்பக் கொடுக்க வேண்டுமென்று பத்தாண்டுகளாக நீதிமன்றம் மூலமாக போராடியும் இந்தக் கோரிக்கை சரியாக செயல்படாமல் ஆமை வேகத்தில் நகர்ந்தது. இனி இந்த பிரச்சினையில் என்ன தீர்வு ஏற்படுமோ?
  4. தமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றமும் மற்றும் தமிழ்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றம் என கடந்த பத்தாண்டுகளில் நடந்தது இனி வேகமாக நடைபெறும் என்று ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சமேற்பட்டுள்ளது.
  5. வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வழிபடும் கோயில்கள் இடிக்கப்படுகின்றது. திரிகோணமலை என்ற ஈஸ்வர ஸ்தலத்திற்கு ஆபத்தென்று ஈழத்தமிழர்கள் வேதனையோடு கடந்த பத்தாண்டுகளாக கூறி வருகின்றனர். இந்துக் கோவில்களின் பாதுகாப்புக்கு ராஜபக்சே என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.
  6. கடந்த பத்தாண்டுகளாக முள்ளிவாய்க்கால் போரில் கைதானவர்களை விடுதலை செய்யப்படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
  7. இறுதிப் போரின்போது காணாமல் போனவர்களுடைய விபரங்களையும் அவர்களை தேடித்தரவும் சிங்கள ஆட்சியாளர்கள் பாராமுகத்துடன் இருந்தனர்.
  8. விதவைகள் மறுவாழ்வுக்கு தமிழர் பகுதியில் இந்த ராஜபக்சே அரசு என்ன செய்யப் போகின்றதோ?
  9. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்களும் மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?
  10. அங்குள்ள ஒற்றை ஆட்சி முறையை ஒழித்து கூட்டாட்சி முறையை சரியாக நடைமுறைப்படுத்த மைத்ரிபால சிரிசேனா, ரணில் விக்ரமசிங்கே புதிய அரசியல் சாசனத்தை வடிவமைக்க முயற்சிகள் எடுத்தும் எந்த முன்னெடுப்பும் இல்லாமல் அந்த அரசியல் சாசன வரைவு மசோதாவை சட்ட வடிவமாக்காமல் நிறுத்திவிட்டனர். ராஜபக்சே சமஷ்டி அமைப்பு முறையில் புதிய அரசியல் சாசனத்தை தமிழ் மக்கள் நலன் கருதி நடைமுறைக்கு கொண்டுவருவாரா என்பது சந்தேகம் தான். மாகாண கவுன்சிலின் முதல்வருடைய அதிகாரங்கள் என்பது எதுவும் சொல்லக்கூடிய அளவில் இல்லை.

இந்த பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவோடு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு உறவுகள் நீடிப்பதாகவும் அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சேவும் டெல்லி வந்து மோடியை சந்தித்த பிறகு நிதியுதவி மட்டுமல்லாமல் கடனாகவும் இருமுறை நிதிகள் வழங்கப்பட்டன. சீனாவோடு சிங்கள ஆட்சியாளர்கள் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்தியாவும் கொழும்பு துறைமுகம், சம்பூர் மின்னுற்பத்தி போன்ற பல திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்துமகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம், திரிகோணமலை துறைமுக கேந்திரப் பகுதி பிரச்சினை, தமிழக மீனவர்கள் பாதிப்பு என பல விடயங்கள் உள்ளன. அது எந்த அளவு சுமூகமான தீர்வுக்கு வருமென்பது தெரியவில்லை.

இப்படியாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு சோதனையான காலம். இதையும் அவர்கள் கடக்க வேண்டும். இலங்கையில் விடுதலைப் பெற்ற 70 ஆண்டுகளாக அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடுமையான நிலைமகளையெல்லாம் கடந்தும் தீர்வு எட்டப்படவில்லை, அவர்களுடைய ரணங்களுக்கும் கண்ணீருக்கும் முடிவு எப்போதோ தெரியவில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

17.08.2020

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons