ஈழத் தமிழரின் பிரச்சினையில் தொடரும் அவலங்கள்
ராஜபக்சே அரசு நடத்தும் காமன் வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அங்கே அம்மாநாடு நடக்க இருக்கின்றது. அம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், 13வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு உருக்குலைத்து விட்டது என்று தலைவர் கலைஞர் தொடர்ந்து கூறி வருகின்றார்.
ராஜபக்சே அரசு நடத்தும் காமன் வெல்த் மாநாடு கொழும்புவில் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து வற்புறுத்தியும் அங்கே அம்மாநாடு நடக்க இருக்கின்றது. அம்மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், 13வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு உருக்குலைத்து விட்டது என்று தலைவர் கலைஞர் தொடர்ந்து கூறி வருகின்றார். டெசோவும் தி.மு.க.வும் — இலங்கையில் ஈழ தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக தனி ஈழமா? தனி நாடா? சுயநிர்ணய உரிமையா? என்பதை முடிவு செய்ய வடக்கு, கிழக்கு மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்துவதுதான் டெசோவின் நிலைப்பாடு. இடைக்கால நிவாரணமாக 13வது சட்டத் திருத்தத்தினால் தமிழர்களுக்கு நிம்மதி கிடைக்குமா என்றால் இல்லை என்பதுதான் பதில். இச்சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2,650 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழ் ஈழ அரசு நடந்தது என்ற ஒரு நெடிய வரலாறு உண்டு. கி.மு.590ல் தமிழ் ஈழ அரசுகளுக்கிடையே நடைபெற்ற போரின் காரணமாக புத்தர் நேரில் சென்று அமைதி ஏற்படுத்தினார் என்று சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிட்டுள்ளார். மகா வம்சத்திலும் இதற்கான செய்திகள் காணப்படுகின்றன. இவ்வாறு நீண்ட வரலாறுக்கு சொந்தமான தமிழினம் தம் பூர்வீக மண்ணில் நசுக்கப்பட்டு வருகிறது. எவ்வளவோ பொறுத்து பார்த்தும் பொறுக்க இயலாத நிலையில் அங்கே தமிழினம் வீறுகொண்டு எழுந்தது. 1980களில் ஆயுதம் தாங்க வேண்டிய நிலை தமிழினத்திற்கு ஏற்பட்டது.
1948 பிப்ரவரி 4ஆம் நாள் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போதிலிருந்தே தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பிரதமராக இருந்த டட்லி சேனநாயகா, 1954ல் பிரதமர் கொத்தலவலை, அதன்பின் 1957ல் பண்டாரநாயகா – செல்வநாயகம் ஒப்பந்தம், 1965ல் டட்லி — செல்வநாயகா உடன்பாடு, 1987ல் ராஜிவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் என்று தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்துமே சிங்கள அரசால் காற்றில் பறக்க விடப்பட்டது. சிங்கள அரசு தமிழர்களுடைய உரிமைகள் தொடர்ந்து மறுத்தது மட்டுமல்லாமல், தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கியது. இதுதான் கடந்தகால வரலாறு.
கடைசியாக, கடந்த மார்ச் மாதம் ஜெனிவா, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நமக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. இருப்பினும் வடக்கு — கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், சிங்கள இராணுவத்தை அங்கிருந்து திரும்ப பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தலை வரவேற்று ஐ.நா. மன்ற தீர்மானத்தில் இந்தியா தனது கருத்தை சேர்த்தது. இந்த தீர்மானம் கடந்த மார்ச் மாதமே நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று வரை இலங்கை அரசு தமிழர் பகுதியிலிருந்து இராணுவத்தை திரும்ப பெறவில்லை. தமிழர்கள் வாழும் பகுதியில் பீதி ஏற்படும் வகையில் 10 தமிழர்களுக்கு ஒரு சிங்கள இராணுவ வீரர் என்ற ரீதியில் உலா வருகின்றனர். தமிழர்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகளை மீறி சிங்கள வீரர்களின் செயல்பாடு உள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் சிங்கள இராணுவத்தால் தாக்குதலுக்கும் பாதிப்புக்கும் உள்ளான தமிழர்கள் பகுதிளை பார்வையிட சென்றுள்ளார். நாசமாக்கப்பட்ட தமிழர்களின் அடையாளமான யாழ்ப்பாண நூலகம், திரும்பவும் புனரமைக்கப்பட்டது. அது தற்போது எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்கு நவநீதம் பிள்ளை அங்கு சென்றபோது அவரை பின்வாசல் வழியாக சிங்கள அரசு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். முன் வாசலில் நூற்றுகணக்கில் தங்கள் குறைகளை சொல்வதற்காக காத்திருந்த தமிழர்களை நவநீதம் பிள்ளை சந்திக்காத வண்ணம் அதிகாரிகள் கவனமாக இருந்துள்ளனர். அன்றே யாழ்பாணம் நல்லூர் சாலையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் குறிப்பிட்ட 15 தமிழர்களைதான் மட்டுமே அவர் சந்தித்துள்ளார். அதிலும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று நிமிட கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் என்றால் அனைத்தும் சிங்கள அதிகார வர்க்கத்தால் மறுக்கப்படுகின்ற நிலைதான் அங்கு இன்றும் தொடர்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012இல் அமெரிக்கா கொண்டு வந்த முதல் தீர்மானத்தின்படி எல்.எல்.ஆர்.சி. குழுவின் பரிந்துரைகள்கூட நிறைவேற்றவில்லை. இவ்வாறு ராஜபக்சே அரசு, ஐ.நா.மன்றம், இந்தியா மற்றும் உலக நாடுகளை ஏமாற்றி கொண்டு வருகிறது.
வடக்கு மாகாண தேர்தல் மிகவும் பதட்டமான நிலையிலும், இராணுவத்தின் ஆக்கிரமிப்போடும் நடைபெறுவதற்கான முஸ்தீபுகள் நடக்கின்றன. இராணுவ தளபதிகளான ஹதுருசிங்கே, ஜி.ஏ.சந்துருசிறி ஆகிய இருவரும் ஆளும் கூட்டணிக்காக ராஜபக்சே ஆதரவு பெற்ற 20 வேட்பாளர்களை சிங்கள அரசின் சார்பில் தேர்வு செய்துள்ளனர். புலிகள் இயக்கத்திலிருந்து தயா மாஸ்டர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் கூட்டணி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி விக்னேஸ்வரன் போட்டியிடுகின்றார். தேர்தல் துவக்கப் பணிகளும், அதன் போக்குகளும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் போக்கை இந்திய அரசு கண்காணித்து நேர்மையான முறையில் தேர்தலை இலங்கையில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு நில நிர்வாகம், காவல் போன்றவற்றை வைத்துக் கொண்டு மாகாண தேர்தல் நடத்தினால், அது வரதராஜ பெருமாள் காலத்து பொம்மை அரசாகவே அமையும். உப்பு சப்புமில்லாத 13வது சட்ட திருத்தத்தையே இலங்கையில் அமலாக்க சிங்கள வகுப்புவாதிகள் விரும்பவில்லை. இந்த 13வது சட்ட திருத்தம் அமல்படுத்தப் பட்டால் அங்கு ரத்த ஆறு ஓடும் என்பது மட்டுமல்லாமல், வடக்கு மாகாண தேர்தலும் நடக்காது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினரும், ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான சம்மிக்க ரணவக்க கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல், ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே சிங்கள இனவாதிகளை தூண்டி விடுகின்றார்.
இலங்கையில் நடக்கும் மாகாண தேர்தல் குறித்தும், 13வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்தும் பலவித வினாக்களும், எதிர் வினைகளும் வந்த வண்ணம் உள்ளன. ஒன்றுமில்லாத 13வது சட்ட திருத்தத்தையே அமல்படுத்தக் கூடாது என்று சொல்லும் சிங்கள மக்களிடம் புத்தரின் போதனைகளில் ஒன்றான சகோதரத்துவத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? கடந்த கால நிகழ்வுகளை பின்னோக்கி பார்த்தால் சிங்கள ஆட்சியாளர்களிடம் தமிழர்கள் எவ்வித நலன்களையும் எதிர்பார்க்க முடியாத நிலைதான் இருந்துள்ளது.
முதன் முதலாக 1973ல், தந்தை செல்வா காலத்தின் போது, மல்லாகத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சி மாநாட்டில் தமிழர்களுக்காக தனி அரசு அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து 1975இல் காங்கேசன்துறை இடைத் தேர்தலில் தமிழர்களுக்கென்று தனி அரசு அமையும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழரசு கட்சி வெற்றி பெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தில், 14 தமிழ் உறுப்பினர்கள் தனி ஈழ அரசு அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்.
இரண்டாவது முறையாக 1976 மே 14ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில், சக வாழ்வு கூடாது, இனி தனி வாழ்வுதான் என்ற வகையில் தனி ஈழ நாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழ தமிழர்களின் பேராதரவோடு 1977 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தந்தை செல்வா தலைமையில் அமைந்த தமிழர் கூட்டணிக்கு பெருவாரியான வெற்றியை தமிழர்கள் வாரி கொடுத்தனர். அதன்பின் 1977ஆம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டு தமிழர் வாழும் குடியிருப்புகள் நாசப்படுத்தப்பட்டன. இதனை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் 24.8.1977 அன்று தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற்றது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரையில் இலங்கை அரசை எச்சரித்தார்.
இலங்கையில் நடைபெறுகின்ற இனக்கலவரத்தைப் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கடுமையாக பேசினார். அப்போது, அன்றைய இலங்கை பிரதமர் ஜெயவர்தனே போர் என்றால் போர் என்று அமிர்தலிங்கத்திடம் கொக்கரித்தார். போர் என்றால் வெளி நாட்டவர்கள்தான் தொடுப்பார்கள். ஆனால் உள்நாட்டில் அரசு எப்படி போர் தொடுக்க முடியும். இதைவிட தமிழ் இன அழிப்புக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
அதன்பின், 1981-83 இனக்கலவரத்தை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது. இந்திய பிரதமர் இந்திரா காந்தி இன அழிப்பு என்று அதனை குறிப்பிட்டார். 1983 ஆகஸ்ட்டில் – பிரதமர் இந்திரா காந்தி – ஜி.பார்த்தசாரதியை கொழும்புவுக்கு அனுப்பினார். அங்கே அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய முன்னணியினர் அளித்த அறிக்கையை கொண்டு, ஜெயவர்தனாவுடன் ஐந்து சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்குள்ள தமிழர்களின் மனபோக்கு என்ன என்று அறிந்து ஒரு விரிவான அறிக்கையை ஜெயவர்கனேவிடம் ஜி. பார்த்தசாரதி வழங்கினார். அந்த அறிக்கையில்,
இந்தியாவில் இருப்பதை போன்று மத்திய – மாநில அரசுகள் அமைந்து சமஷ்டி அமைப்பை இலங்கையில் கொண்டு வரவேண்டும். தமிழர் பகுதியில் அமையும் மாநில அரசுகளுக்கு ஸ்திரமான பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
அதிகார பகிர்வு குறித்து துறைகளுக்கான மத்திய அரசு பட்டியல், மாநில அரசு பட்டியல், பொது பட்டியல் என வரையறுக்க வேண்டும். மாநில அரசுக்கான அதிகாரங்கள் உட்பட்ட சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு.
தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாநில அரசாக அமைய வேண்டும். அங்கு தமிழ்தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் வாழும் அம்பாறையை ஒரு தனி மாநிலமாக அமைக்கலாம்.
மாநிலங்களுக்கான நிதி பங்கீடுகள் குறித்து ஆராய்ந்து அதற்கான பரிந்துரைகளை அளித்து, நிதியை முறையாக பகிர்ந்தளிப்பதற்காக தனியாக ஒரு நிதி கமிஷனை அமைக்க வேண்டும்.
இலங்கை இராணுவத்தில் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை மக்கள் தொகைக்கேற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்க உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் துறையில் தமிழர்களை நியமிக்க வேண்டும்.
நீதித்துறையை பொறுத்த வரையில், இந்தியாவில் உள்ளது போன்று உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், கீழாண்மை நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு, சமுக – பொருளாதாரம், நில நிர்வாகம், நீதித்துறை போன்ற முக்கிய துறைகளின் கொள்கையை வகுப்பதில் மாநில அரசுகளின் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஜி.பார்த்தசாரதி இலங்கை அதிபர் ஜெயவர்தனேவிடம் கொடுத்து நான்கு மாதங்கள் கழிந்தபின் இலங்கை அரசு இதை கிடப்பில் போட்டது. ஒப்புக்காக இந்தியாவுடன் ஜெயவர்தனே பேச்சுவார்த்தை நடத்தினார். இதையெல்லாம் கவலையுடன் கவனித்த இந்திரா காந்தி 30.11.1983இல் டில்லியில் ஜெயவர்தனாவை சந்தித்தபோது கடுமையாக எச்சரித்தார். அதன்விளைவாக, ஜி.பார்த்தசாரதி மூலமாக வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சொன்ன ஜெயவர்தனா, இலங்கைக்கு சென்றவுடன் தமது உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டார்.
1984 டிசம்பரில் நடந்த இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் இறுதியாக பேசிய ஜெயவர்தனே, ஜி.பார்த்தசாரதியிடமும், இந்திரா காந்தியிடமும் ஒப்புக்கொண்ட அனைத்து உறுதி மொழிகளையும் மறுத்தார். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஜி.பார்த்தசாரதி மூலமாக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தபோதும், இலங்கை அரசாங்கம் இராணுவத்தை கொண்டு தமிழர்களை கொன்று குவித்தது.
இதை அறிந்த இந்திரா காந்தி அவர்கள் ஆயுத குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தார். இதன் விளைவாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை இந்திய அரசின் உதவியோடு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சகாக்களை, நானும் உடன் சென்று அழைத்து வந்தோம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இந்திய டுடே இதுகுறித்து விரிவான செய்திகளை வெளியிட்டது.
இந்திராகாந்தி மறைவுக்கு பின் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழர் ஐக்கிய கூட்டணி மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், மற்ற போராளி இயக்கங்கள் இணைந்து இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. தலைவர் கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி என்ற நூலிலிருந்து குறிப்புகளை எடுத்து, திம்புவிக்கு சென்ற குழுவினரிடம் கொடுத்து அனுப்பினேன். இந்த குறிப்புகளை வைத்துதான் தமிழர் ஐக்கிய கூட்டணியும், விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை நடத்தின. திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து இந்திய அரசின் ஒப்புதலோடு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அவ்வறிக்கையில்,
1. இலங்கையில் தமிழர்களை ஒரே தேசிய இனமாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டும்.
2. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து தமிழர்களுடைய பூர்வீக பகுதியாக உறுதிபடுத்த வேண்டும்.
3. தமிழ் ஈழ மண்ணில் சுய நிர்ணய உரிமையை முறையாக அங்கீகரிகக்க வேண்டும்.
4. இலங்கையை தங்களது சொந்த நாடாக கருதும் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் அடிப்படை ஜனநாயக உரிமைகளாக அங்கீகரித்து உறுதிபடுத்த வேண்டும்.
5. இறுதியாக ஈழம் என்ற தீர்வை முன்னெடுத்து சென்றாலும் அமைதி என்ற நிலையில் மேற்குறிப்பிட்ட நான்கு அம்சங்களையும் பரிசீலிப்வோம் என்று குறிப்பிடப்பட்டது.
இதன்பின், இந்திய வெளியுறவு செயலாளர் இரமேஷ் பண்டாரி இலங்கைக்கு சென்று பேசினார். காலம் கடந்ததுதான் மிச்சம். இரமேஷ் பண்டாரிக்கு ஜெயவர்தனே வைரநெக்லஸ் பரிசு கொடுத்தார் என அப்போது இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஜே.எஸ்.தீட்சித், நட்வர்சிங் ஆகிய இந்திய பிரதிநிதிகள் ஜெயவர்தனாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. 1986 மே மாதத்தில் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு சென்றது. இதன்விளைவாக ஜெயவர்தனே பேச்சுவார்த்தைக்கு வந்து இரண்டு மாதங்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டவில்லை. அதே ஆண்டு நவம்பர் மாதம் பெங்களுரில் நடைபெற்ற ராஜிவ் – ஜெயவர்தனே பேச்சு வார்த்தையில் கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாக பிரித்துவிடலாம் என்று எடுக்கப்பட்ட முடிவை தமிழர்கள் எதிர்த்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதை விட்டுவிட்டு தமிழர்களை துண்டாடும் நிலையை இலங்கை அரசு பரிந்துரைத்தது. இதனை தமிழர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாறு ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசு நடந்து கொண்டது.
1987ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கை அரசு யாழ்பாணத்தின் மீது — சொந்த நாட்டிலேயே ஒரு பகுதியின் மீது – பொருளாதார தடை விதித்தது. 1987 ஜூலையில் ராஜிவ் – ஜெயவர்தனேவால் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம்தான் 13வது சட்ட திருத்தத்தின் ரிஷிமூலம்.
இதன் விளைவாக ஈ.பி.ஆர்.எல்.எப். குழுவைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் முதல்வரானார். பின்னர் இவர் இந்தியாவில் தஞ்சமானார். துக்ளக் தர்பார் போன்று இலங்கை அரசு நடந்து கொண்டது. கிழக்கு மாகான முதல்வர் பிள்ளையானும் இன்று எந்தவித அதிகாரமும் இல்லாத பொம்மையாகவே இருக்கிறார். அப்படியென்றால் இலங்கை சொல்லும் 13வது சட்ட திருத்தத்தில் என்னதான் உள்ளது,
1. சிங்கள அரசின் 13வது அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் இலங்கை குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநருக்கே மாகாண சபையின் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாகாண அரசு எந்த சட்ட திருத்தமும் கொண்டு வரமுடியாது.
2. முதலமைச்சர் தலைமையில் இயங்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு அப்பாற்பட்டு ஆளுநர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த முடிவையும் எடுக்கலாம்.
3. ஆளுநரின் முடிவுகளிலும் நடவடிக்கைகளிலும் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது.
4. ஆளுநரின் முடிவுகள் அனைத்துமே இலங்கை குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலின்படிதான் நடைபெற வேண்டும். குடியரசுத் தலைவரின் முதல்வராக ஆளுநர் விளங்குவார்.
5. மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரமும், மாகாண சபை கூட்டங்களை தள்ளி வைக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு.
6. மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமும், சட்ட முன் வடிவும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றே நடைமுறைக்கு வரும்
7. நில நிர்வாக அதிகாரங்கள், தமிழர் பகுதியில் சிங்களர்கள் குடியேற்றம், நில அபகரிப்பு போன்றவற்றிற்கான எந்த பரிகாரமும் 13ஆவது சட்டத் திருத்தத்தில் இல்லை. நிலப் பிரச்சினைகள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
8. காவல் துறை மத்திய அரசின் கண்காணிப்பில், குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். மாகாண அரசு இதில் தலையிட முடியாது.
9. மாகாணத் துறைகளுக்கான அனைத்தும் மத்திய அரசின் பொது பட்டியலில் இருக்கும். இதனால் மாகாண அரசு சுயமாக இயங்க முடியாது.
இவ்வாறு 13வது அரசியல் சட்ட திருத்தம் உருக்குலைத்து ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமைந்தால் தமிழர்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதுதான் கேள்வி.
ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் கையொப்பமிட்டபின் தமிழர் ஐக்கிய முன்னணி பொதுச் செயலாளர் அ.அமிர்தலிங்கம், தலைவர் சிவ. சிதம்பரம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகியோர் 28.10.1987 அன்று அன்றைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கு, 13ஆவது சட்ட திருத்தத்தில் எவ்வாறான பிரச்சினைகள் எல்லாம் வரும் என்று விரிவாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண தேர்தல் இலங்கை அரசின் பார்வையில் நடைபெற உள்ளது. 13ஆவது சட்ட திருத்தமும் தமிழர்களின் அபிலாஷைகளை ஒதுக்குவதோடு, தலைவர் கலைஞர் கூறியதுபோல் உருக்குலைத்து விட்டது. காமன் வெல்த் மாநாட்டின் மூலம், தான் செய்த அக்கிரமங்கள் அனைத்தையும் மூடி மறைக்க நினைக்கிறார் ராஜபக்சே.
தலைவர் கலைஞர் அவர்களின் யோசனைப்படி காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தமிழர்கள் விரும்பும் தீர்வுக்வாக வடக்கு – கிழக்கு தமிழர்கள் மட்டுமல்லாது புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்த ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து வேண்டும். இதனால் இலங்கை தமிழர்களுக்கு விடுதலையும் நிம்மதியும் கிடைக்கும். இதுதான் இந்த பிரச்சினையில் தீர்வை நோக்கி செல்லும் வழியாகும். ஈழ தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து தவறுகள், நெருக்கடிகள், அவலங்கள் என்ற நிலை மாற வேண்டும்.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்