ஈழத் தமிழர் சிக்கலில் 1833ல் இருந்து வரலாற்று ரீதியாக இதுவரை நடந்த நிகழ்வுகளின் தரவுகள்

0
eelam

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு பிணை வாங்கிய பிரச்சினையில் திரு. நெடுமாறனும் நானும் முனைப்பு காட்டியதை கவனத்தில் கொள்ளாமல் தவறான செய்திகளை சிலர் முன்வைத்தனர். அந்த சமயத்தில் அதற்கான தரவுகளையும் விளக்கங்களையும் கொடுத்து பதிலளித்தேன்.

அத்தோடு ஈழப் பிரச்சினையினுடைய சிக்கல் வரலாற்று ரீதியாக தொடக்கம் முதல் என்ன நடந்தது என்று ஆண்டு வாரியாக கடந்த ஒன்றரை மாத காலமாக திரட்டி இலங்கையில் துவக்கத்தில் நடந்தது என்ன? என்று 1833ல் இருந்து 1980 வரை இலங்கையில் நடந்த சம்பவங்களை திரட்டி கொடுத்துள்ளேன். இது தான் ஈழச் சிக்கலில் அதிகாரப்பூர்வமாகவும் வரலாற்று ரீதியாகவும் நடந்தவை. இது முதல் தொகுப்பு. இந்தியாவிலும் தமிழகத்திலும் ஈழப் பிரச்சினை குறித்தான நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்த இரண்டாவது தொகுப்பு செப்டம்பர் மாத துவக்கத்தில் பதிவு செய்யவுள்ளேன்.

நடுநிலையோடு வரலாற்றுப் பார்வையோடு சுருக்கமாக தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ளவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு நடந்த ஆண்டுகளையும் தவறாக எழுதிவிடக் கூடாது என்பதற்காக தான் பல சிரமங்கள் எடுத்து இந்த இரண்டு தொகுப்பினையும் பதிவு செய்துள்ளேன் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

1833-1921 பிரித்தானியாவிற்குக் கீழான ஆட்சியில் இலங்கையரும் பங்கு பெறுவதற்கான அரசியலமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்ட காலம்.

1833 கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்

இச்சீர்திருத்தமானது காலனித்துவ அரசியல்‌, நிர்வாக வலைப்பின்னலுக்குள்‌ இலங்கையையும்‌ இணைக்கும்‌ முயற்சியாகும்‌. இலங்கையின்‌ பன்முக சமூகத்‌ தன்மை, அதன்‌ அடையாளம்‌ என்பவற்றை இது கவனத்தில்‌ எடுக்கவில்லை. சமூகங்களின்‌ விருப்பங்களைக்‌ கேளாமல்‌ ஒற்றை அதிகார கட்டமைப்பின்‌ கீழ்‌ அனைத்து சமூகங்களையும்‌ கொண்டு வருகின்றது. எனினும்‌ சட்ட சபைக்கான பிரதிநிதித்துவ முறையில்‌ சமூகங்களின்‌ ஜனநாயகத்தைப்‌ பேணும்‌ வகையில்‌ இனவாரிப்‌ பிரதிநிதித்துவ முறையினை அமுல்படுத்துகின்றது. பிரதிநிதித்துவ முறையில்‌ ஆரம்பகாலங்களில்‌ முஸ்லிம்களையும்‌ தமிழர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்‌.

அக்காலத்தில்‌ முஸ்லிம்‌ மக்கள்‌, கரையோரச்‌ சோனகர்கள்‌  இலங்கைச்‌ சோனர்கள்‌, மலேயர்கள்‌ எனப் பொதுவாக மூன்று வகையாகப்‌  பிரிக்கப்பட்டனர்‌ இவர்களுள்‌ கொழும்பு, கண்டி போன்ற நகரங்களை நிலைகொண்டு செல்வாக்குள்ளவர்களாக இருந்தவர்கள்‌ மலேயர்கள்‌ ஆவார்கள்‌.  மலேயர்களின்‌ தலைவர்கள்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ குரலாக ஒலித்தனர்.‌  அந்தப்‌ பின்னணியில்‌ அவர்கள்‌ முஸ்லிம்கள்‌ தமிழ்மக்கள்‌ அல்லர்‌ என்னும்‌ வாதத்தை முன்வைத்தனர்.  இதன்‌ பயனாக 1889ஆம்‌ ஆண்டு சுதேசிகளின்‌ பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கும்‌ அவர்களுடன்‌ சேர்த்து கண்டியச்‌ சிங்களவர்களுக்கும்‌ ஒவ்வொரு பிரதிநிதித்துவம்‌ வழங்கப்பட்டது.  சுதேசிகள்‌ அரசியல்‌ சக்திகளாக உருவாகின்ற போக்கு ஆரம்பிக்கின்றது. 

1800௧ள்‌-பெருந்தோட்டத்துறை அறிமுகம்‌

இந்தியத்‌ தொழிலாளர்‌ வருகை, இந்திய முஸ்லிம்‌ வியாபாரிகள்‌ வருகை, மலையாளத் தொழிலாளிகள்‌ வருகை  கொழும்பு தலைநகர

மாக்கப்பட்டதூல்‌ நாட்டின்‌ அனைத்துப்‌ பகுதிகளும்‌ கொழும்பு நிர்வாகத்துடன்‌ இணைக்கப்படுகின்றது.

1800களின்‌ கடைசிப்‌ பகுதிகள்‌ – சிங்கள பெளத்த தேசியவாத உருவாக்கம்‌

காலனியத்துவவாதிகளுக்கு எதிராக எழுந்த போராட்டம்‌ கிறிஸ்தவர்களுக்கெதிரான போராட்டமாக உருவெடுக்கின்றது  இது தனியே கலாச்சாரச்‌ சீரழிவு, பெளத்த மதத்தின்‌ மறுமலர்ச்சி,மது பாவனைக்கெதிரான எழுச்சி போன்றவற்றையே அடங்கியதாக இருந்தது  அநகாரிக தர்மபாலவின்‌ வருகையும்‌ இயக்கமும்‌ இந்தக்‌காலகட்டத்தில்‌ நிகழ்கின்றது. முஸ்லிம்‌ வியாபாரிகளுடனான வியாபாரப்‌ போட்டிகள்‌ முஸ்லிம்‌ இனத்திற்கெதிரான உணர்வாக சிங்கள மக்களிடையே உருவெடுத்தது. லக்மின, தினமின, சிங்கள ஜாதிய, சிங்கள, பெளத்தய போன்ற பத்திரிகைகள்‌ முஸ்லிம்‌ இனத்தவர்களுக்கும்‌, மலையாள இனத்தவர்‌களுக்கும்‌ எதிரான கீழ்த்தரமான வாசகங்களைப்‌ பிரசுரிக்கின்றன.

மொத்தத்தில்‌, பெளத்த சிங்கள தேசியவாதம்‌ ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டமாக இல்லாது நாட்டிலுள்ள ஏனைய  இனங்களுக்கு எதிரான கிளர்ச்சிகளாக உருவம்‌ எடுக்கின்றது.

1915 – சிங்கள முஸ்லிம்‌ கலவரம்‌

350 முஸ்லிம்‌ கடைகள்‌ எரிக்கப்படுகின்றன. 40-75 முஸ்லிம்‌ கடைகள்‌ கொள்ளையடிக்கப்‌பட்டன. 189 பேர்‌ காயமுற, 25 முஸ்லிம்கள்‌ இறக்கின்றனர்‌. 103 பள்ளிவாசல்கள்‌ அழிக்கப்‌படுகின்றன. தமிழர் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தனர்‌. இதே வேளை கலவரங்களைத்‌ தூண்டிய காரணத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட சிங்களத்‌ தலைவர்களை விடுதலை செய்விக்கும்‌ கோரிக்கையுடன்‌ சேர்‌. பொன்‌. இராமநாதன்‌ இலண்டன்‌ பயணமாகின்றார்‌. விடுவித்துக்‌ கொண்டு திரும்பி வந்தபோது சிங்களத்‌ தலைவர்களால்‌ வெகுவாக கெளரவிக்கப்படுகின்றார்‌. இது முஸ்லிம்‌ மக்களுக்கு அதிருப்தியை விளைவிக்கின்றது.

1919 – இலங்கைத்‌ தேசிய காங்கிரஸ்‌ உருவாக்கம்‌

1915 கலவரத்தின்‌ தாக்கத்தினால்‌, சகல இனமக்களும்‌ ஒரு தேசிய இயக்கத்தினை வேண்டி நிற்கின்றனர்‌. இதற்காக இலங்கை அரசியல்‌ சீர்திருத்தக்‌ கழகம்‌ என்ற அமைப்பு சேர்‌. பொன்‌. அருணாசலம்‌ தலைமையில்‌ 1917ஆம்‌ ஆண்டு உருவாக்கப்பட்டு நாடு முழுவதும்‌ பிரச்சாரம்‌ செய்யப்படுகின்றது. பல அமைப்புக்களுடன்‌ உடன்பாடு பெறப்பட்டு இலங்கைத்‌ தேசிய காங்கிரஸ்‌ உருவாக்கப்படுகின்றது. முதல்‌ தலைவராக சேர்‌. பொன்‌. அருணாசலம்‌ எல்லோராலும்‌ தெரிவு செய்யப்படுகின்றார்‌. இந்த அமைப்பு சுயாட்சியையும்‌, பிரதிநிதித்துவ முறையில்‌ பெரும்பான்மை எண்ணிக்கை ஜனநாயகத்தினையும்‌ கோரிக்கைகளாக முன்‌ வைத்தது.

1921 முஸ்லிம்கள்‌ தம்மை தனியான இனமாக பிரகடனம்‌ செய்தல்‌

முஸ்லிம்கள்‌ சமூக அரசியல்‌ தளங்களில்‌ தாமும்‌ ஒரு சக்தியாக உருவாக முனைகின்றனர்‌. தமிழ்த்‌ தலைவர்கள்‌ அவர்களின்‌ வரலாற்றை அசட்டை செய்து அவர்கள்‌ செய்யும்‌ தொழிலையும்‌ இழிவாக நோக்கியதும்‌ இதற்கு ஒரு காரணமாயிற்று. தம்மைத்‌ தமிழர்‌ என்கின்ற இனத்துக்குள்‌ அடக்க வேண்டாமென்றும்‌, இலங்கை முஸ்லிம்கள்‌இந்திய முஸ்லிம்கள்‌ என்ற பதப்பிரயோகங்களைத்‌ தவிர்த்து அனைவரையும்‌ இலங்கை முஸ்லிம்கள்‌ என அழைக்குமாறும்‌ முஸ்லிம்‌ தலைவர்கள்‌ கோருகின்றனர்‌.

1921 – மானிங்‌ அரசியல்‌ சீர்த்திருத்தம்‌

இதுவரை படித்த பிரஜைகள்தான்‌ வாக்களிக்கலாம்‌ என்னும்‌ விதிமுறை நடைமுறையிலிருந்தது. இதன்கீழ்‌ ஒவ்வொரு பிரதேசத்திலும்‌ உள்ள சனத்தொகையும்‌ வாக்காளர்களின்‌ எண்ணிக்கையும்‌ பின்வருமாறு இருந்தது.

“படித்தவர்களுக்கு வாக்கு” என்கின்ற அடிப்படையில்‌ தமிழர்களுக்கு மிக அதிகமான வாக்குகள்‌ இருந்ததால்‌ பிரதேசவாரிப்‌ பிரதிநிதித் துவத்தை ஏற்படுத்துமாறு சிங்களத்‌ தலைவர்கள்‌ கோரினர்‌. இதன்‌ பயனாக இனச்‌ சமூகங்கள்‌ தம்மைப்‌ பிரதிநிதித்துவப்படுத்தும்‌ ஜனநாயகம்‌ நிராகரிக்கப்‌பட்டு பெரும்பான்மை எண்ணிக்கை ஜனநாயகம் முதன்மைப்படுத்தப்படும்‌ வகையில்‌ பிரதேசவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஆயினும்‌ இந்திய வம்சாவழியினருக்கு விசேடமாக பிரதிநிதித்துவம்‌ வழங்கப்படுகின்றது. நிர்வாகக்‌ குழுவில்‌ மட்டும்‌ சுதேசிகளுக்கு இன அடிப்படையில்‌ இடம்‌ வழங்கப்படுகின்றது.

நாட்டின்‌ அரசியல்‌ கட்டமைப்பின்‌ பிரதான சபைகளில்‌ இனச்‌ சமூகங்களின்‌ பிரதிநிதித்துவம்‌ நிராகரிக்கப்பட்டமையால்‌ இன அரசியலை நோக்கி தமிழர்கள்‌ நகர ஆரம்பிக்கின்றனர். இதுவரை காலமும் தமிழர் என்கின்ற அடையாளத்தைப் பண்பாட்டுத் தளத்திலும் இலங்கையர் என்கின்ற அடையாளத்தை அரசியல் தளத்திலும் பேணியவர்கள், அதை கைவிட்டு இரண்டு தளங்களிலும் தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இலங்கையில் சிங்களவர்கள்தாம் பெரும்பான்மையினர் என்னும் உண்மையை ஏற்றுக்கொண்டு சிங்கள மக்களுக்குரிய சலுகைகளுக்கான பல விட்டுக் கொடுப்புகளைச் செய்ய தமிழர் முன்வரவேண்டும் என்று சிங்களத் தலமைத்துவம் எதிர்பார்க்கின்றது. தமிழர் சேர். பொன். அருணாசலம் தலைமையில் இலங்கைத் தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறி தமிழர் மகாஜன சபை  என்ற அமைப்பினை 1921 ஆகஸ்டில் உருவாக்குகின்றனர்.

1921 – 1949 தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ தனித்துவமாக உருவாகிய காலம்‌

1922 – ஏ.ஈ. குணசிங்கவின்‌ தொழிற்சங்க அரசியல்‌

சேர்‌.பொன்‌. அருணாசலத்தின்‌ அடி தொட்டு தொழிலாளர்களின்‌ உரிமைகளுக்காகக்‌ குரல்கொடுத்தவர்‌ குணசிங்க. இவருடைய தொழிற்‌சங்கத்தில்‌ உபதலைவராக இருந்தவர்‌ இந்தியத்‌தோட்டத்‌ தொழிலாளிகளின்‌ பிரதிநிதியான நடேசைய்யர்‌. .

ஆனால்‌, காலஞ்‌ செல்லச்‌ செல்ல குணசிர்‌க அநகாரிக தர்மபாலாவின்‌ இனவாதத்தைத் தழுவிக்‌ கொள்கின்றார்‌. முதலில்‌ முஸ்‌லிம்களுக்கெதிராக இனவாதத்தைக் கக்கிய இவர், பின்பு மலையாளித் தொழிலாளிகளுக்கெதிராகத் திரும்புகின்றார்‌. நடேசைய்யர்‌ கருத்து வேற்றுமையினால்‌ வெளியேறுகின்றார்‌. தொழிலாளர்‌ இயக்கம்‌ இனரீதியாகப்‌ பிளவுபடுகின்றது.

1924. – யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்‌ தோற்றம்

இதன்‌ தோற்றத்துடன்‌ தமிழ்‌ அரசியலில்‌ இரு அணிகள்‌ உருவாகின்றன. யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்‌ ஐக்கிய இலங்கையைக்‌ குறித்து முழுநாடும்‌ ஆங்கிலேயரின்‌ காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும்‌ என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. இந்த முறையில் அது இந்தியத்‌ தேசிய காங்கிரஸைப்‌ பின்பற்றுகின்றது. தமிழர் மகாஜன சபையோ தமிழ் மக்களின்‌ பிரதிநிதித்துவம்‌ பற்றிப்‌ பேசுகின்றது.

இது இந்திய வம்சாவழியினர்‌ ஐரோப்பியர்‌, பறங்கியர்‌ ஆகியோருடன்‌ இணைந்து சிறுபான்மையினராகத்‌ தம்மை விவரித்து இனச்‌ சமூகங்கள்‌ பிரதிநிதித்துவப்படுத்தப்படும்‌ ஜனநாயகக்‌ கோரிக்கைகளை முன்‌ வைக்கின்றது.

இதனால்‌ மானிங்டிவன்சயர்‌ சீர்த்திருத்தம்‌ ஆங்கிலேய ஆட்சியினால்‌ கொண்டு வரப்படுகின்றது. இதன்‌ முக்கிய அம்சங்களான, மேல்‌ மாகாணத்‌ தமிழர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம்‌ வழங்கப்படுதல்‌, நிதிக்குழுவில்‌ சுதேசிகளுக்கு இடம்‌ வழங்குதல்‌, பிரதேசவாரிப்‌ பிரதிநிதித்துவம்‌ விஸ்தரிக்கப்படுதல்‌ என்பனவாகும்‌. இச்சீர்திருத்தத்தின்‌ விளைவாக சிறுபான்மையோரின்‌ ஐக்கிய முன்னணி சிதைவடைகின்றது. கரையோரச்‌ சிங்களவர்களின்‌ பொருளாதார ஆதிக்கத்தினால்‌ கண்டிச்‌ சிங்களவர்களும்‌ தனியான அரசியலை நோக்கி நகருகின்றனர்‌.

1925 – கண்டித்‌ தேசிய மாநாடு

கண்டிச்‌ சிங்களவர்‌ முதன்முதலாக சமஷ்டி ஆட்சி தங்களுக்கு வேண்டும்‌ என்கின்ற கோரிக்கையினை முன்‌ வைக்கின்றனர்‌. S.W.R.D. பண்டார நாயக்கா இக்கோரிக்கையினை ஆதரித்து கண்டி, கரையோரம்‌, வடகிழக் என இலங்கை மூன்று பிரதேச சமஷ்டி அரசுகளாகப்‌ பிரிக்கப்படவேண்டும்‌ எனக்‌ கோருகின்றார்‌.

அவர்‌ யாழ்ப்பாண வாலிப காங்கிரஸின்‌ உதவியுடன்‌ யாழ்ப்பாணத்திலும்‌ சமஷ்டி ஆட்சிக்கான பிரசாரத்தை முன்னெடுக்க முயல்கின்றார்‌. தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிக் கோரிக்கையினை நிராகரித்து ஒற்றையாட்சி அமைப்பிற்குள் இனச் சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு அவற்றுக்கு சகல துறைகளிலும்‌ சம வாய்ப்புக்கள்‌ தரப்படவேண்டும்‌ என்கின்ற கோரிக்கையினைத்‌ தொடர்ந்தும்‌ முன்‌ வைக்கின்றனர்‌.

யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்‌ பூரண சுயாட்சிவேண்டும்‌ என்ற பிரச்சாரத்தோடு சாதி ஒழிப்பு, நடவடிக்கைகளிலும்‌ ஈடுபடுகின்றது.

மகாத்மா காந்தி யாழ்ப்பாணம்‌ உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு வந்து மக்களைச்‌ சந்திக்கின்றார்‌.

1931 – டொனமூர்‌ அரசியல்‌ திட்டம்‌

டொனமூர்‌ பிரபுவிடம்‌ கரையோரச்‌ சிங்களவர்‌ உள்ளூர்‌ சுயாட்சியையும்‌. கண்டிச்‌ சிங்களவர்கள்‌ சமஷ்டிக்‌ கோரிக்கையையும்‌, தமிழர்கள்‌ ஒற்றையாட்சிக்குள்‌ இனச்‌ சமூகப்‌ பிரதிநிதித்துவக்‌ கோரிக்கையையும்‌ முன்வைக்கின்றனர்‌. இந்த அரசியல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. பிரதேசவாரிப்‌ பிரதிநிதித்துவக்‌ கட்டமைப்பு மேலும்‌ விஸ்தரிக்கட்பட்டது. இதன்கீழ்‌ எண்ணிக்கையில்‌ குறைந்த இனங்கள்‌ பாதிக்கப்படலாம்‌ என்பதற்காக இனங்களைப்‌ பாதுகாக்கும்‌ வகையில்‌ மறுப்பாணை அதிகாரம்‌ தேசாதிபதியிடம்‌ கொடுக்கப்பட்டது. ஆனால்‌ இலங்கையருக்கு சுயாட்சி அரைவாசி தான்‌ கொடுக்கப்பட்டது.

இனச்‌ சமூகங்கள்‌ பிரதிநிதித்துவம்‌ பின்பற்றப்‌படவில்லை என்பதற்காகத்‌ தமிழர்‌ மகாஜன சபை டொனமூர்‌ சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது. யாழ்ப்பாண வாலிப காங்கிரஸோ பூரண சுயாட்சி வழங்கப்படவில்லை என்பதற்காக எதிர்த்தது. டொனமூர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்ற முதலாவது பொதுத்‌ தேர்தலை யாழ்குடா நாடு பகிஷ்கரிக்கின்றது. தென் இலங்கைத் தலைவர்கள் முதலில்‌ பகிஷ்கரிப்பதாகக்‌ கூறிப்‌ பின்னர்‌ அதனைக்‌ கைவிட்டுத்‌ தேர்தலில்‌ பங்கெடுக்கின்றார்கள்‌.

டொனமூர் சீர்திருத்தத்தின் விளைவாக பேரினவாதச் செயற்பாடுகள் அரச அதிகாரக் கட்டமைப்பினூடாக முன்னெடுக்கப்பட ஆரம்பித்தன. குறிப்பாக, இந்திய வம்சா வழியினருக்கு எதிரான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உதாரணமாக,  நெற்காணிச்‌ சட்டம், மீன்பிடிச் சட்டம்‌, போக்குவரத்து அனுமதிச் சட்டம் போன்றவற்றைக் காட்டலாம்‌. இச்சட்டங்கள் இந்திய வம்சாவழி மக்களுக்கு நெற்காணிகள்‌ சொந்தம்‌ கொள்வதையும்‌, மீன்பிடி அனுமதிப் பத்திரத்தையும், பொதுப் போக்குவரத்துச்‌ சேவைகளை நடத்துவதற்கான நிராகரிக்கின்றன. இலகுவில்‌ இத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடிய வேலை நீக்கச்‌ சட்டமும்‌ கொண்டுவரப்படுகின்றது.

பேரினவாத அரசியல்‌, அரச கட்டமைப்பினூடு முன்னெடுக்கப்பட்‌பட்டதால்‌ யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ்‌ முன்வைத்த தேசிய ஒன்றிணைப்பு அரசியல்‌ பின்னுக்குத்‌ தள்ளப்பட்டு தமிழ்‌ இனத்தை பிரதானப்படுத்திய அரசியல்‌ முன்னேறுகின்றது. இதனால்‌ 1934ஆம்‌ ஆண்டு யாழ்ப்பாணத்தில்‌ நடைபெற்ற இடைத்தேர்தலில்‌ இன அரசியலை முன்னெடுத்த தலைவர்கள்‌ வெற்றியடைகின்றனர்‌. ஜீ.ஜீ. பொன்னம்பலம்‌ அரசியலில்‌ பிரவேசிக்கின்றார்‌.

1936ஆம்‌ ஆண்டு தனிச்‌ சிங்கள மந்திரிசபையும்‌ அமைக்கப்படுகின்றது. இதைக்‌ கண்ட தமிழ்மக்கள் நடைமுறையில் இருக்கும் அதிகாரக் கட்டமைப்பில் நம்பிக்கை இழக்கின்றனர்.

1939 – இலங்கை இந்தியக்‌ காங்கிரஸ்‌ தோற்றம்‌

திடீரென அரசாங்கம்‌ இந்திய வம்சாவழித்‌ தொழிலாளர்‌ தலைவர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதைக்‌ கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, இலங்கையின்‌ ஆட்சியாளர்களுடன்‌ பேச்சுவார்த்‌தைகள்‌ நடத்துவதற்கு ஜவஹர்லால்‌ நேருவை  அனுப்புகின்றார்‌. நேரு பேச்சுவார்த்தை நடத்தியும்கூட ஆட்சியாளர்கள்‌ வேலை நீக்கத்தினை வாபஸ்‌ வாங்க மறுக்கின்றனர்‌. இதனால்‌ நேரு இந்திய வம்சாவழியினருக்‌கெனத்‌ தனியான அமைப்பினை உருவாக்குமாறு ஆலோசனை வழங்குகிறார். நேருவின் ஆலோசனையின் பேரில் இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. தொண்டமான் 1944இல்‌ இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவராகின்றார்‌. 1950களில் இந்த அமைப்பு இலங்கைத்‌ தொழிலாளர்‌ காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம்‌ செய்யப்பட்டது.

1944 – அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி தோற்றம்‌

இனச்‌ சமூகங்களின்‌ பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை வலியுறுத்தும்‌ வகையில் முன்வைத்து ஜீஜீ. பொன்னம்பலம் தலைமையில்‌ அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்(அ.இ.த.கா) உருவாகின்றது.

1947 – சோல்பரி அரசியல்‌ திட்டம்

சோல்பரி பிரபுக்கு ஒவ்வொரு கட்சியினரும் தங்கள்‌ கோரிக்கைகளை முன்‌ வைத்தனர்.‌ அ.இ.த.கா. 50:50 கோரிக்கை அடங்கிய திட்டத்தினை முன்‌ வைத்தது. கண்டியச்‌ சிங்களவர் சமஷ்டிக்‌ கோரிக்கையினை முன்‌ வைத்தனர். கரையோரச்‌ சிங்களவர்‌ ஒற்றையாட்சி அடிப்படையிலான உள்ளூர்ச்‌ சுயாட்சியுடன்‌ கூடிய மந்திரி சபை மசோதாவை முன்வைத்தனர்‌. கடைசியில்‌ சோல்பரி அரசியல்‌ சீர்திருத்தம்‌ இனங்களுக்கு மத்தியிலான அதிகாரப்‌ பங்கீடு இல்லாத ஒற்றையாட்சி அரசியல்‌ யாப்பைக் கொண்டு வருகின்றது. ஆனால்‌, சிறுபான்மை மக்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாப்பதற்கான ஏற்பாடாக 29ஆவது பிரிவு இந்த யாப்பில்‌ உள்ளடக்கப்படுகின்றது. இந்தப்‌ பிரிவுச்‌ சட்டத்தின்படி, சிறுபான்மையினர்‌ நலன்களுக்கு எதிராக ஏதேனும்‌ சட்டம்‌ கொண்டு வரப்படுமாயின்‌ அதனைத்‌ தடுக்கும்‌ அதிகாரம்‌ அவர்களுடைய பிரதிநிதிகளுக்குக்‌ கொடுக்கப்பட்டது. அ.இ.த.கா. கடுமையாக யாப்பினை‌ எதிர்க்கின்றது. பெரும்பான்மைவாத ஜனநாயகத்தின்‌ அடிப்படையில்  உருவாகும்‌ அரசு தமிழ்‌ மக்களின்‌ நலன்களைப் பேண‌ உதவமாட்டாது என வலியுறுத்துகின்றது.

ஜீ.ஜீ. பொன்னம்பலம்‌ தனது எதிர்ப்பினைத் தெரிவிக்க இலண்டன்‌ பயணமாகின்றார்‌. டி.எஸ்‌. சேனநாயக்கா சில தமிழர்களின்‌ ஆதரவுடன்‌ பெரும்பான்மை வாக்குகளைப்‌ பெற்று யாப்பினை அரசாங்க சபையில்‌ நிறைவேற்றுகின்றார்‌. 1947 தேர்தல்களில்‌ யாழ்ப்பாணத்திலும்‌ திருகோணமலையிலும்‌ சோல்பரி சீர்திருத்தத்திற்கு எதிராகத்‌ தமிழர்கள்‌ வாக்களிக்கின்றனர்‌. தேர்தல்‌ முடிந்தவுடன்‌ ஒற்றையாட்சியில்‌ சமூகங்களின்‌ ஜனநாயகம்‌ பேணப்படவில்லையாயின்‌ பிரிந்துசெல்லும்‌ உரிமையுடன்‌ கூடிய இணைப்பாட்சியைத்‌ தாம்‌ கோரப்‌ போவதாக அ.இ.த.கா. அங்கத்தவர்களில்‌ ஒருவரான எஸ்‌.ஜே.வி. செல்வநாயகம்‌ கூறுகின்றார்‌.

1948 – இலங்கை சுதந்திரமடைதல்‌

தமிழ்‌ மக்களுக்கான சமூக ஜனநாயகம்‌ பேணப்படாததினால்‌ சுதந்திரக்‌ கோரிக்கையினை அ.இத.கா. நிராகரித்தது. டி.எஸ்‌. சேன நாயக்கா சில தமிழரை அமைச்சர்களாக்கி அவர்கள்‌ ஆதரவுடன்‌ சுதந்திரக்‌ கோரிக்கையினை வென்றெடுத்தார்‌. சுதந்திர தினத்தில்‌ ஏற்றப்பட்ட சிங்கக்‌ கொடியையும்‌, அது பெளத்த சிங்கள மக்களது சின்னம்‌ மட்டுமே என்ற காரணத்தினால்‌ அ.இ.த.கா. நிராகரிக்கின்றது. செல்வநாயகம்‌ சங்கிலியனின்‌ நந்திக்‌ கொடியினைத்‌ தனது வாகனத்தில்‌ ஏற்றுகின்றார்‌. இந்தத்‌ தேசியக்‌ கொடி விவகாரம்‌ 1950௧ள்‌ முழுவதும்‌ தமிழ்‌ மீக்களின்‌ போராட்டங்கள்‌ பலவற்றுக்கான காரணமாகின்றது. சிங்களத் தலைவர்களோ, இந்திய தேசியக் கொடியில்‌ ஒரு பெளத்த அரசனின்‌ சின்னமான அசோக சக்கரம்‌ மட்டும்‌ பொறிக்கப்படலாம்‌ என்றால்‌, ஏன்‌ இலங்கைக்‌ கொடியில்‌ சிங்கம்‌ இருக்கக்‌ கூடாது என்று வாதாடுகின்றனர்‌.

1948 யூலையில்‌ எதிர்க்கட்சியில்‌ இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம்‌ கைத்தொழில்‌ மீன்பிடி அமைச்சராகி அரசாங்கத்தில்‌ சேருகின்றார்‌.

இவரது காலத்தில்தான்‌ பரந்தன்‌ தொழிற்சாலை, காங்கேசன்‌ துறை சீமந்துத்‌ தொழிற்சாலை, காகித ஆலை ஆகியன தாபிக்கப்படுகின்றன. அதற்குப்‌ பின்பு இன்றுவரை வட கிழக்கில்‌ எந்தவிதத்‌  தொழிற்றுறையும்‌ அபிவிருத்தி செய்யப்படவில்லை.

1948 டிசம்பர்‌ 10 – பிரஜாவுரிமைச்‌ சட்டம்‌

1948க்கு முன்னர்‌ இலங்கை. இந்தியா போன்ற சகல நாடுகளிலும்‌ வசித்த மக்கள்‌ பிரித்தானியப்‌ பிரஜைகளாவர்‌. எனவே சுதந்திரம்‌ பெற்றபோது இலங்கை அரசாங்கம்‌ தனது பிரஜாவரிமைக்கான வரைவிலக்கணத்தைக்‌ கொடுக்க வேண்டியிருந்தது. மலையகத்‌ தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ தமிழ்நாட்டுடனான தங்கள்‌ தொடர்புகளைப்‌ பேணிவந்ததாம்‌. அங்கு அடிக்கடிச்‌ சென்று வந்ததாலும்‌

இந்தியா அவர்கள்‌ எல்லோரையும்‌ ஏற்றுக்‌ கொள்ளத்‌ தயாராக இருந்ததாலும்‌, இந்திய வம்சாவழியினரின்‌ பிரஜாவுரிமையைப்‌ பறிக்கும்‌

வகையில்‌ பிரஜாவுரிமைச்‌ சட்டத்தினை சுதந்திர இலங்கையின்‌ முதலாவது அரசாங்கம்‌ கொண்டு வருகின்றது. இந்தத்‌ தொழிலாளர்கள்‌ மத்தியில்‌ இடதுசாரி அரசியல்‌ வேரூன்றியதும்‌, அவ்வாறான கொள்கையுடைய இந்தியத்‌ தமிழ்த்‌தலைவர்கள்‌ அவர்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதும்‌ இச்சட்டம்‌ கொண்டு வருவதற்கான வேறு காரணங்களாகும்‌.

ஜீ.ஜீ. பொன்னம்பலமும்‌, எஸ்‌.ஜே.வி. செல்வநாயகமும்‌ மட்டுமே இதற்கு எதிர்த்து வாக்களிக்கின்றனர்‌. சுயேச்சை தமிழ்‌ உறுப்பினர்கள்‌ சிலர்‌ இச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர்‌.

பின்பு இச்சட்டத்துக்கு நிவர்த்தியாக இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்‌ சட்டம்‌ உடனடியாகக்‌ கொண்டு வரப்பட்டது. இதன்‌ மூலம்‌ 1949ஆம்‌ ஆண்டு ஓரளவிற்கு பிரஜாவுரிமை வழங்கும்‌ ஏற்பாடு கொண்டு வரப்பட்டது. இதன்படி, இலங்கைப்‌ பிரஜாவுரிமை கோரும்‌ இந்திய வம்சாவழியினர்‌ திருமணமாகியவர்கள்‌ எனில்‌ 7 வருடங்கள்‌ இலங்கையில்‌ தொடர்ச்சியாக வாழ்ந்தார்‌ என்பதை நிரூபிக்கவேண்டும்‌. திருமணமாகாதவர்கள்‌ எனில்‌ 10 வருடங்கள்‌ இந்நாட்டில்‌ தொடர்ச்சியாக வாழ்ந்தார்‌ என்பதை நிரூபிக்கவேண்டும்‌. இதன்‌ கீழ்ப்‌ போடப்பட்ட நடைமுறை ஏற்பாடுகள்‌ சாதாரணமாக எவரும்‌ பிரஜாவுரிமையைப்‌ பெற முடியாத அளவிற்குக்‌ கடுமையாக இருந்தது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இதற்கான எதிர்ப்பு போராட்டத்தினை நடத்தி பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களுக்குக் கூறுகின்றது. பாராளுமன்றத்தில்‌ இச்சட்ட மூலம்‌ வாக்களிப்பிற்கு விடப்பட்டபோது ஜீ.ஜீ.பொன்னம்பலம்‌ உட்பட அ.இ.த.கா. ஆதரவாக வாக்களிக்க செல்வநாயகம்‌ உட்பட மூவர்‌ எதிர்த்து வாக்களித்தனர். சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது. இதன்‌ பின்னர்த்‌ தேர்தல்‌ திருத்தச்‌ சட்டமும்‌ கொண்டுவரப்பட்டது. இவையெல்லாவற்றின்‌ ஊடாகவும்‌ மலையக மக்களின்‌ வாக்குரிமை முழுமையாகப்‌ பறிக்கப்படுகின்றது.

1949 – 1968 தமிழர்‌ மத்தியில்‌ பிரிவினைவாத அரசியல்‌ வளர்ச்சி பெற்ற காலகட்டம்‌

1949 – தமிழரசுக்‌ கட்சி தோற்றம்‌ பெறல்‌

செல்வநாயகம்‌ தலைமையில்‌ அ.இ.த.கா.இலிருந்து வெளிநடப்புச் செய்த குழுவினர் பல ஆலோசனைகளின் முடிவில் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியினை உருவாக்கின்றனர். இதன்‌ பிரதான கொள்கை வடகிழக்கு அடங்கிய தமிழர்‌ தாயகத்திற்கு அதிகாரம்‌ பங்களிக்கப்படும்‌ வகையில்‌ சமஷ்டிக்‌ கோரிக்கையாக இருந்தது. கட்சியின்‌ பொருளாதார கொள்கையாக சோஷலிச கொள்கை ஏற்றுக்‌ கொள்ளப்பட்டது. அதன்‌ அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும்‌ இது நிராகரித்தது. தொடர்‌ மக்கள்‌ போராட்டங்களாகத்‌ தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கத்‌ தீர்மானிக்கின்றது.

1940௧ள்‌ – தமிழ்ப்‌ பிரதேசங்களில்‌ சிங்களக்‌ குடியேற்றங்கள்‌

தமிழ்‌ மக்களின்‌ பாராளுமன்ற மற்றும்‌ அரசியல்‌ பிரதிநிதித்துவத்தைக்‌ குறைக்கும்‌ முகமாக சிங்களக்‌ குடியேற்றங்கள்‌ தமிழ்‌ மக்கள்‌ வகித்த பிரதேசங்களில்‌ அரசாங்கத்தினால்‌ ஊக்குவிக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப்‌ பகுதியில்‌ (இன்றைய அம்பாறை மாவட்டம்) கல்லோயா திட்டம் என்ற நீர்ப்பாசனத்‌ திட்டம்‌ உருவாக்கப்பட்டு மாத்தறை, அம்பாந் தோட்டைப் பகுதிகளிலிருந்து சிங்கள மக்கள் அரசாங்கத்தினால் அங்குக் குடியேற்றப்படுகின்றனர். இதன் கீழ் குடியேற்றக் கிராமங்கள் மட்டும்‌ தமிழ்‌ பேசும்‌ மக்களுக்குப் பகிர்ந்தளிக்கட்பட்டது. தமிழ்க்‌ கிராமங்கள்‌ நீர்வசதி குறைந்த அல்லது நீரோட்டத்தின்‌ எல்லையில் இருந்த கிராமங்களாகவே இருந்தன. 1959இல் பின்பு இக்குடியேற்றங்களை மையமாக வைத்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்படுகின்றது.

இதைப்போலத்‌ திருகோணமலை மாவட்டத்‌தில் மீனவர்‌ குடியேற்றங்கள்‌, வியாபாரக் குடியேற்றங்கள்‌,  கைத்தொழில்‌ குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைகளுக்கான குடியேற்றங்களின் முக்கிய நோக்கங்கள் முன்பு குறிப்பிடப்பட்டது. போலத் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தை மாற்றி அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும்‌ தமிழ்‌ மக்களின்‌ தாயகக் கோரிக்கையை நிராகரிக்குமுகமாக வடக்கு கிழக்கைத்‌ துண்டாடுவதும்‌ ஆகும்‌. இதன்படி திருகோணமலைப்‌ பிரதேசத்தை வளைத்து ஒரு வில்‌ வடிவத்தில்‌ குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேல்‌ குறிப்பிட இந்த வில்‌, திருகோண மலையை வடக்கிலிருந்து துண்டாடியது. இதே போல திருகோணமலை மாவட்டதிற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையேயுள்ள நிலத்‌ தொடர்ச்சியும் துண்டாடப்பட்டது. மேலும்‌ இக்குடியேற்றப்‌ பிரதேசங்களை மையமாக வைத்துப்‌ புதிய தேர்தல்‌ தொகுதிகளும் சிங்களப்‌ பெரும்பான்மைப்‌ பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டன.

1956 – ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சியின்‌ ஆட்சியும் தனிச்‌ சிங்களச்‌ சட்டமும்‌

ஐக்கிய தேசியக்‌ கட்சியைத்‌ தோற்கடித்‌து ஆட்சியில்‌ அமருவதற்காக 24மணி நேரத்தில் தனிச்‌ சிங்களம்‌ என்கின்ற வாக்குறுதியுடன் எஸ்‌.டபிள்யூ, ஆர்.டீ. பண்டார நாயகா தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சியின்‌ தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்‌ வைக்கின்றார்‌. இதன் அடிப்படையில்‌ அமோக ஆதரவினைப் பெற்று ஆட்சியமைக்கின்றார்‌. தனிச்சிங்களச்‌ சட்டத்தையும்‌ கொண்டு வருகின்றார்‌. 2,500 வருடங்களாக சிங்களமே பூர்வ மொழியாக இருந்தது எனவும்‌, காலனித்துவ ஆட்சியாளர்களே இதனை மாற்றினர்‌ எனவும்‌ சிங்களத்‌ தலைவர்கள்‌ அறைகூவினர்‌.

இச்சட்டம்‌ பாராளுமன்றத்தில்‌ அங்கீகரிக்கப்‌படப்போகும்‌ தினத்தில்‌ தமிழ்க்‌ கட்சிகள்‌ சத்தியாக்கிரகப்‌ போராட்டங்களை ஏற்பாடு செய்தன. இதனால்‌ முதல்‌ இரவே பாராளுமன்றத்தைச்‌ சுற்றி முள்ளு வேலிகள்‌ அமைக்கப்பட்டு ஆயுதம்‌ தாங்கிய பொலிஸார்‌ சுற்றி வளைத்தனர்‌. ஆனாலும்‌, தமிழரசுக்‌ கட்சி போராட்டத்தைக்‌ கைவிடாமல்‌ பாராளுமன்றத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில்‌ தமது தொண்டர்‌களுடன்‌ கூடுகின்றனர்‌. தங்கள்‌ போராட்டத்தை விளக்கி சிங்களத்தில்‌ எழுதிய துண்டுப்‌பிரசுரங்களைக்‌ கொடுக்கச்‌ சென்றவர்கள்‌ காடையர்களினால்‌ தாக்கப்படுகின்றனர்‌. பொலிஸார்‌ பார்த்துக்‌ கொண்டு நிற்கவே தடிகளாலும்‌, கற்களாலும்‌ அவர்கள்‌ தாக்கப்பட்டனர்‌. கொழும்பிலும்‌ பல இடங்களில்‌ தமிழ்மக்கள்‌ தாக்கப்படுகின்றனர்‌. பல பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ காயமுற்று வைத்தியசாலையில்‌ சேர்க்கப்பட்டனர்‌. சத்தியாக்கிரக போராட்டம் ஆயுத முனையில்‌ கலைக்கப்படுகின்றது. இதன்‌ தொடர்ச்சியாக முதல்‌ முறையாகத்‌ தமிழ்‌ மக்கள்‌ மீதான இனக்கலவரங்கள்‌ கல்லோயா பிரதேசத்தில்‌ ஆரம்பித்தன.

இதைத்‌ தொடர்ந்து தமிழரசுக்‌ கட்சி வடக்கு கிழக்கு எங்கும்‌ மாநாடுகள்‌, யாத்திரைகள்‌ என்று போராட்டங்களை முடுக்கி விடுகின்றது. இதன்‌ முஸ்லிம்‌ உறுப்பினர்களின்‌ வேண்டுகோளின்‌ பேரில்‌ ஒரு சுயாட்சித்‌ தமிழரசு என்கின்ற கட்சியின் நோக்கத்தை மாற்றி, சுயாட்சித் தமிழரகம் சுயாட்சித்‌ தமிழரசும்‌, சுயாட்சி முஸ்லிம்‌ அரசும்‌ என்று தனது நோக்கங்களை வரையறுக்கின்றது.

1957 – “ஸ்ரீ” எதிர்ப்புப்‌ போராட்டம்‌

அரசாங்கம்‌ மோட்டார்‌ வாகனங்களில்‌ எண்‌ தகடுகளில்‌ ‘ஸ்ரீ என்கின்ற சிங்கள எழுத்தைப்‌ போடும்‌ சட்ட விதியைக்‌ கொண்டு வருகின்றது. இந்நிலையில்‌ வடக்குகிழக்கு முழுக்க மோட்டார்‌ வாகனத்‌ தகடுகளில்‌ சிங்கள எழுத்தை அழித்துத்‌ தமிழ்‌ எழுத்தைப்‌ பொறிக்கும்‌ போராட்டங்கள்‌ ஆரம்பிக்கின்றன. இப்போராட்டங்களில்‌ திருகோண மலையில்‌ கறுப்புக்கொடி கட்ட கம்பத்தில்‌ ஏறிய நடராசன்‌ என்பவர்‌ சிங்களவர்‌ ஒருவரினால்‌  சுட்டுக்கொல்லப்படுகின்றார்‌.

1957 – பண்டா – செல்வா ஒப்பந்தம்‌

தமிழ்‌ மக்களின்‌ போராட்டங்களைக்‌ கண்டு பண்டாரநாயகா ஒரு சமரசத்துக்கு வர முயற்சிக்கின்றார்‌. பல இரவுகள்‌ தமிழரசுக்‌ கட்சியுடன்‌ பேச்சுவார்த்தைகள்‌ நடத்திய பின்னர்‌ யூலை 26ஆம்‌ திகதி பண்டா செல்வா ஒப்பந்தம்‌ கைச்‌ சாத்திடப்படுகின்றது. இதன்படிப்‌ பிராந்திய சபைகளை தாபிப்பதாக முடிவாகின்றது. இவற்றின்‌ மூலம்‌,

1. வடக்குகிழக்கு மாகாணங்களில்‌ அரசாங்க உதவியுடன்‌ நடைபெற்றுவரும்‌ சிங்களக்‌ குடியேற்றங்கள்‌ உடனடியாக நிறுத்தப்படும்‌.

2. சிறுபான்மை தேசியத்தின்‌ மொழியாகிய தமிழ்‌. உத்தியோக மொழியாக அங்கீகாரம்‌ பெறும்‌.

3. தமிழே வடக்குகிழக்கின்‌ மாகாண மொழியாக இருக்கும்.

4. நாட்டின்‌ எப்பாகத்திலும்‌ தமிழ்‌ மக்கள்‌ தம்‌ கருமங்களை அரசாங்கத்தோடு தமிழில்‌ ஆற்றவும்‌, தம்‌ பிள்ளைகளுக்குத்‌ தமிழ்‌மொழியில்‌ கல்வி எஊட்டித்‌ தமிழ்ப்‌ பண்பாட்டில்‌ வளர்ப்பதற்குமான உரிமை பாதுகாக்கப்படும்‌.

5. பிரதேச சபைச் சட்டத்தின் மூலம் பெருமளவு பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும்.

தமிழரசுக்‌ கட்சியின்‌ சிறப்பு மாநாட்டில்‌ இந்த உடன்படிக்கை ஆராயப்பட்டு இது இறுதித்‌ தீர்வலல என்றும்‌ இடைக்காலத்‌ தீர்வு மட்டுமே என்றும்‌ வலியுறுத்தப்பட்டது. இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரியான சுயாட்சித்‌ தமிழ்‌ அரசையும்‌, நாடு முழுவதிலும்‌ சிங்களத்திற்கும்‌ குடியுரிமை வழங்குவதையும்‌ வலியறுத்திக்‌ கட்சி தொடர்ந்தும்‌ போராடும்‌ என்றும்‌ முடிவாகியது.

ஐக்கிய தேசியக்‌ கட்சி இந்த ஒப்பந்தத்தைத்‌ காரசாரமாக எதிர்த்தது. பண்டாரநாயகா வடக்கு கிழக்கைத்‌ தமிழர்களுக்கு விற்றுவிட்டார்‌ என்று ஆர்ப்பாட்டம்‌ எடுத்து. ஜே.ஆர்‌. ஜெயவர்தனா கண்டி யாத்திரையைத்‌ தொடருகின்றார்‌. இந்த யாத்திரை ஆளும்‌ கட்சியினால்‌ இம்புல்கொடையில்‌ முறியடிக்கப்பட்டது. பாதயாத்திரையை அரசுவெற்றிகண்டது. ஆர்ப்பாட்டங்களின்‌ பின்னர்‌ அரசாங்கம்‌ தொடர்ந்த எட்டு மாதங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்த நடவடிக்கையையும்‌ எடுக்கவில்லை. பெளத்த மகா சங்கமும்‌ பிராந்திய சபைகளை எதிர்த்தது. காணி அதிகாரங்கள்‌ சபைகளுக்குப்‌ பகிரப்படக்‌ கூடாதென்பதும்‌ ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகள்‌ ஒன்றாகச்‌ சேர முடியும்‌ என்பதால்‌ இது தனிநாட்டுக்கு இட்டுச்‌ செல்லலாம்‌ என்பதும்‌ அவர்கள்‌ கருத்தாக இருந்தது.

1958 – சிங்கள தமிழ்‌ – கலவரம்‌

ஏப்ரல்‌ மாதம்‌ பிக்கு எக்ஸத்‌ பொமுனவின்‌ சார்பில்‌ பெளத்த பிக்குகள்‌ பண்டா செல்வா ஒப்பந்தத்தைக்‌ கிழித்தெறியுமாறு பண்டார நாயகாவின்‌ வீட்டிற்கு முன்‌ சக்தியாக்கிரகம்‌ செய்தனர்‌. பண்டாரநாயகா ஒப்பந்தத்தை அவர்களின்‌ முன்னால்‌ கிழித்தெறிகின்றார்‌. ஒப்பந்தம்‌ கிழித்தெறியப்பட்டதாக அரசாங்கம்‌ அன்றே பாராளுமன்றத்தில்‌ அறிவிக்கின்றது. இதேவேளை நாட்டில்‌ அங்கங்குத்‌ தமிழ்‌ எழுத்துக்களைத்‌ தார்‌ பூசி அழிக்கும்‌ நடவடிக்கைகள்‌ செயற்படுத்தப்படுகின்றன.

மலையகத்தில்‌ தொழிலாளர்கள் இதனை எதிர்த்துப் போராட்டத்தில்‌ பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது,பிரான்ஸிஸ் ஐயாவு என்கின்ற இரு தொழிலாளிகள்‌ சொல்லப்படுகின்றனர். இவர்களது மரணத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வடக்குகிழக்கு எங்கும்‌ பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஸ்ரீ எதிர்ப்புப்‌ போராட்டத்தினால் தான் ஒப்பந்தம்‌ கிழித்தெறியப்பட்டது என்று சிங்களத்தலைவர்கள்‌, தலைவர்‌ செல்வநாயகத்தைச்‌ சாடுகின்றனர்‌. ஆயினும்‌ ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்‌ எங்கும்‌ தொடருகின்றது. இதில் ஈடுபட்ட பல தொண்டர்கள்‌ அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்றனர்‌.

நாடெங்கிலும்‌ சிங்களதமிழ்‌ இனக்கலவரம் மூளுகின்றது. அரசாங்கத்தில்‌ பதவி வகித்த ஒரு சில அமைச்சர்களும்‌ சிங்களக்‌ காடையூருக்கு தலைமை வகிக்கின்றனர்‌. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்‌ பாதுகாப்புடன் தமிழ் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகன்றனர்.

தமிழ்ப்‌ பிரதேசங்களில்‌ வாழ்ந்த சிங்கள தமிழ்‌ மக்களினால்‌ தாக்கப்படுகின்றனர்‌.  தமிழ் மக்களுக்கு உயிர்ச்‌ சேதமும்‌ உடைமைச் சேதங்களும்‌ ஏற்பட்ட பின்னரே காலம்‌ கடந்‌து அரசாங்கம்‌ அவசரகாலச்‌ சட்டத்தைப்‌ பிரகடனம் செய்து இராணுவத்தை அழைத்துக்‌ கலவரங்களை நிறுத்துகின்றது.

தமிழரசுக்‌ கட்சி தடை செய்யப்பட்டு அதன் பல தலைவர்கள்‌ வீட்டுக்‌ காவலில்‌ மாதக்‌ கணக்காய்‌ வைக்கப்படுகின்றனர்‌. அதன்‌ பின்‌னர் விடுதலையாக்கப்பட்ட தலைவர்கள்‌ தொடர்ந்தும்‌ தங்கள்‌ சாத்வீகப்‌ போராட்டத்தை முன்னெடுப்பதாக முடிவு செய்கின்றனர்‌.

1959 – பண்டார நாயகாவின்‌ மரணம்‌

பிரதம மந்திரி பண்டாரநாயகா தனது தேர்தல்‌ வாக்குறுதிகளின்படித்‌ தீவிர சிங்களவாதக்‌ கொள்கைகளை அமுல்படுத்தாத காரணத்தினால் பெளத்த பிக்கு ஒருவரால்‌ சுட்டுக்கொல்லப்‌படுகின்றார்‌. நாட்டில்‌ அமைதியின்மையம்‌ பொதுத் தேர்தலுக்கான அறிகுறியும்‌ ஏற்படுகின்றன.

இதேவேளை, தமிழரசுக் கட்சி யாழ் நகரிலுள்ள தேனீர்க்‌ கடைகளில்‌ சாதி அடிப்படையில்‌ பாரபட்சம்‌ காட்டி வித்தியாசமான கோப்பைகளில்‌ தேனீர்‌ வழங்கும்‌ நடவடிக்கையைக்‌ கண்டித்துத்‌ தீண்டாமை எதிர்ப்புப்‌ போராட்டம்‌ ஒன்றினை ஆரம்பிக்கின்றது. இத்துடன் உயர் கல்விக்கு வசதியற்ற மலையகப்‌ பிள்ளைகளைப்‌ புலமைப்பரிசில்‌ கொடுத்து இலவசமாகப்‌ படிப்பதற்கு யாழ்ப்பாண பிரபல கல்லூரிகளில்‌ சேர்த்து கிழக்குத்‌ தமிழ்‌ மக்களின்‌ எண்ணக்‌ கருவினைத்‌ தெரிவித்தது.

1960 – பொதுத்‌ தேர்தல்கள்‌

இந்த வருடம்‌ இலங்கை இரண்டு பொதுத்‌ தேர்தல்களைச்‌ சந்தித்தது. முதல்‌ தேர்தலில்‌ போட்டியிட்டு 15 தொகுதிகளில்‌ வெற்றி. இரு

சுயேச்சை வேட்பாளர்கள்‌ நிந்தாவூர்‌, பொத்துவில்‌ தொகுதிகளில்‌ வெற்றி பெற்றார்கள்‌. ஐக்கிய தேசியக்‌ கட்சி, சுதந்திரக்‌ கட்சியைவிட நான்கு தொகுதிகளே அதிகமாகப்‌ பெற்றிருந்ததனால்‌ ஏனைய கட்சிகளின்‌ ஆதரவை நாடியது. தமிழரசுக்‌ கட்சி தனது ஆதரவைக்‌ கொடுப்பதற்கு நான்கு அம்சக்‌ கோரிக்கைகளை முன்‌ வைத்தது.

  • பண்டா செல்வா ஒப்பந்தம்‌ செயற்படுத்தப்‌பட வேண்டும்.
  • அதற்கிடையில்‌ தமிழ்‌ பிரதேசங்களில்‌ சிங்களக்‌ குடியேற்றங்கள்‌ நிறுத்தப்படவேண்டும்‌.
  • இலங்கைப்‌ பிரஜாவுரிமைச்‌ சட்டத்தில்‌ குறிப்பிட்ட காலக்கெடு திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில்‌ பிறந்தோர்‌ அனைவருக்கும்‌ குடியுரிமை வழங்குவதன்‌ மூலம்‌ “நாடற்ற தமிழர்‌” என்ற நிலை நாளடைவில்‌ மாற வேண்டும்.
  • குடியுரிமைப்‌ பிரச்சினை தீரும்வரை பாராளுமன்றத்தின்‌ நியமனப்‌ பிரதிநிதிகள்‌ ஆறு பேரில்‌ நான்கு பேர்‌ மலையக மக்களின்‌ பிரதிநிதிகளாக இருக்கவேண்டும்‌.

ஐக்கிய தேசியக்‌ கட்சி இதை நிராகரிக்க, சுதந்திரக்‌ கட்சி ஆதரிக்க முன்வருகின்றது. இந்த ஒப்பந்தத்தின்‌ அடிப்படையில்‌ ஐக்கிய தேசியக்‌ கட்சி அதற்கு எதிராக வாக்களித்து அந்த அரசாங்கத்தைக்‌ தோற்கடிக்கின்றது.  ஆட்சி நிலையற்றதால்‌ யூலை மாதம்‌ இன்னுமொரு பொதுத்‌ தேர்தல்‌ நடக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சி பெரும்பான்மை வாக்குகளைப்‌ பெற்று ஆட்சி அமைக்கின்றது.

ஆனால்‌, தமிழரசுக்‌ கட்சியுடன்‌ முன்பு செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுகின்றது. நாடு முழுவதும்‌ நீதி மன்றங்களில்‌ சிங்கள மொழியையே வழங்கு மொழியாக்கும்‌ சட்டத்தைக்‌ கொண்டு வருகின்றது. தனியார்‌ பாடசாலைகளையெல்லாம்‌ சுவீகரித்து அரசப்‌ பாடசாலைகளாக்குவதன்‌ மூலம்‌, கல்வியையும்‌ சிங்களமயப்படுத்தும்‌ முயற்சியில்‌ ஈடுபடுகின்றது. திரும்பவும்‌ அரசாங்கம்‌ தனது வாக்குறுதிகளை மீறியதால்‌ 1961 ஜனவரி முதலாந்திகதியிலிருந்து வடக்கு கிழக்கெங்கிலும்‌ ஒத்துழையாமைப்‌ போராட்டத்தை முன்னெடுப்பதென்று தமிழரசுக்‌ கட்சி தீர்மானிக்கின்றது.

அனைத்து இலங்கை இஸ்லாமிய அமைப்பு இவ்வாண்டு தோற்றம்‌ பெறுகின்றது. முஸ்லிம்‌ மக்கள்‌ தங்கள்‌ இனத்தின்‌ பாதுகாப்புக்‌ கருதி அடையாளத்தை நிலைநாட்டுகின்றனர்‌. தமிழ்‌ தங்களுடைய இயற்கையான மொழி அல்லவென்றும்‌, அது பிற இனத்திலிருந்து நடைமுறை கருதி கடன்‌ பெற்ற மொழியே என்றும்‌ வரைவிலக்கணம்‌ தருகின்றனர்‌. இந்த வகையில்‌ அரபிப்‌ பாஷையைத்‌ தங்கள்‌ இயல்‌ மொழியாகக்‌ கொள்ளுகின்றனர்‌.

இதனைத்‌ தொடர்ந்து அறுபதுகளில்‌ கிழக்கைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ மக்கள்‌ தமது பொருளாதார, பண்பாட்டு விருத்தியைக்‌ காண்கின்றனர்‌. இதன்‌ அடிப்படையில்‌ தாம்‌ ஒரு தனித்துவமான சக்தியாக உருவெடுக்க ஆரம்பிக்கின்றனர்‌.

1961 – சத்தியாக்கிரகம்‌

வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும்‌ அரசாங்க நிர்வாகம்‌ ஸ்தம்பிதம்‌ என்று கூறப்படும்‌ அளவுக்கு அரச ஊழியர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ அனைவரும்‌ சத்தியாக்கிரகத்தில்‌ பங்கு கொள்கின்றனர்‌. பொலிஸார்‌ தாக்குதலை மேற்கொண்டு சத்தியாக்‌கிரகத்தை முறியடிக்கப் பார்க்கின்றனர். இத்தாகுதலில் மூதூர்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் படுகாயமுற்று இறக்கின்றார். இவ்வாறு 50 நாட்கள்‌ சத்தியாக்கிரகம்‌ தொடர்ந்துநடைபெற்றதால்‌ யாழ்‌ மாவட்ட அரச நிர்வாகம்‌ முழுமையாக ஸ்தம்பிதம்‌ அடைகின்றது. இப்போராட்டம் மட்டக்களப்பு, மன்னர், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் தொடர்கின்றது.

அரசின்‌ சார்பில்‌ நீதி அமைச்சர்‌ பி.எல்‌.பெர்னாண்டோ சத்தியாக்கிரகத்தை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றினாலும்‌, மொழியுரிமை தொடர்பாக மிகக்‌ குறைந்த கோரிக்கையில்கூட உடன்பாடு ஏற்படாததால்‌ போராட்டத்தைத்‌ தொடருவது எனத்‌ தீர்மானிக்கப்படுகின்றது.

1961 – தமிழ்‌ அரசின்‌ தபால்‌ சேவை ஆரம்பிக்கப்படுதல்‌

போராட்டத்தின்‌ தீவிரத்திற்கு முகம்‌ கொடுக்க முடியாமல்‌, அரசாங்கம்‌ பங்கீட்டு உணவு (இலவச அரிசி) வழங்குவதை நிறுத்தி வடக்குகிழக்கு மக்களைப்‌ பணியவைக்க முற்படுகின்றது. இந்நிலையில் போராட்டத்தை வேறு துறைகளிலும் விரிவாக்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்‌ அரசியல் தலைவர்கள் அரச தபால்‌ சேவைச்‌ சட்டத்தை ‌மீறித்‌ தனியாகத்‌ தமிழரசு தபால்‌ சேவையொன்றை ஆரம்பிக்கின்றனர்‌.

ஏப்ரல்‌ 14ஆம்‌ திகதி பகல் 12 மணிக்குச்‌ செல்வநாயகம்‌ இதனை ஆரம்பித்து வைக்க 10,000 பேர்‌ வரிசையில்‌ நின்று தமிழரசு தபால்‌ தலைகளைப்‌ பெற்றனர்‌. தமிழரசு தபால்‌ சேவையின்‌ தபால்‌ மா அதிபராக செனட்டர்‌ நடராசா நியமிக்கப்படுகின்றார்‌. தமிழரசுத்‌ தபால்‌ பெட்டிகள்‌ பல இடங்களில்‌ வைக்கப்படுகின்றன. 1961 ஏப்ரல்‌ 17ஆம்‌ திகதி 12 மணிக்கு அவசரக்காலச்‌ சட்டமும்‌, 48 மணி நேர ஊரடங்குச்‌ சட்டமும்‌ பிறப்பிக்கப்படுகின்றன. கச்சேரியின்‌ முன்‌ அமைதியாக இருந்த சத்தியாக்கிரகிகள்‌ இராணுவத்தினரால்‌ தாக்கப்படுகின்றனர்‌. வடக்கு கிழக்‌கு இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்‌படுகிறது.‌ திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உட்படத் தலைவர்களும்‌ பிரதான தொண்டர்களுமாக 74பேர்‌ விமானம் மூலம் பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர்‌. தமிழரசுக்‌ கட்சி சுதந்திரன் பத்திரிகை என்பன தடை செய்யட்ட்டதோடு சுதந்திரன்‌ அலுவலகம்‌ சீல்‌ வைக்கப்படுகின்றது. பத்திரிகைத்‌ தணிக்கை அமூலுக்கு கொண்டு வரப்படுகின்றது. சத்தியாக்கிரகம்‌ நடைபெற்ற போது தொண்டமான்‌ நேரடியாக வடக்கிற்குச்‌ சென்று சத்தியாக்கிரகிகளை உற்சாகப்படுத்துகின்றார். இதனால்‌ இ.தொ.கா. பிரதிநிதிகளும்‌ கைது செய்யப்படுகின்றனர்‌. தோட்டத்‌ தொழிலை அத்தியாவச சேவையாக்கும்‌ சட்ட விதிகளை‌ அரசாங்கம்‌ பிரகடனம்‌ செய்கின்றது. எனிலும்‌ இதற்கு அஞ்சாமல்‌ ஏப்ரல்‌ 25ஆம்‌ திகதி 5 இலட்சம்‌ தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ வேலை நிறுத்தத்தில்‌ இறங்குகின்றனர்‌. தோட்டப்‌ பகுதிக்கு இராணுவம்‌ அனுப்பப்படுகின்றது. 6 மாதங்களிள்‌ பின்னர்‌, கைதாகியிருந்த தமிழ்த்‌ தலைவர்கள்‌ விடுதலை செய்யப்படுகின்றனர்‌. தமிழரசுக்‌ கட்சியின்‌ தடை நீங்க மேலும்‌ சில மாதங்கள்‌ செல்கின்றன. அதுவரை போராட்டங்கள்‌ ‌ தொடர்கின்றன. பொலிஸாரின்‌ தாக்குதலினால்‌ சில தொண்டர்களும்‌ மேலுமொரு பாராளுமன்ற உறுப்பினரான வி.ஏ. கந்தையாவும்‌ உயிர்‌ இழக்கின்றனர்‌.

1963 – “எல்லாம்‌ தமிழ்‌ இயக்கம்‌” உருவாதல்

சிங்களத்‌ திணிப்பை எதிர்ப்பதற்கும்‌, தமிழ்‌மக்களை அரசுடனான தம்‌ கருமங்களைத்‌ தமிழில் ‌ஆற்றத்‌ தூண்டுவதற்குமான எல்லாம்‌ தமிழ்‌ இயக்கத்தைத்‌ தமிழரசுக்‌ கட்சி உருவாக்குகின்றது.

இதன்படித்‌ தமிழ்ப்‌ பிரதேசங்களில்‌ உள்ள தபால்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ அரசாங்க அலுவலகங்கள்‌ ஆகியவற்றில்‌ விண்‌ணப்பங்கள், தங்கள் முகவரிகள்‌ என்பவற்றைத்‌ தமிழில்‌ எழுதுமாறு தூண்டப்படுகின்றார்கள்‌. இதற்கு எதிர்ப்பாக 1964ஆம்‌ ஆண்‌டு ஜனவரி முதல்‌ தனிச்சிங்கள சட்டத்தை வடக்கு கிழக்கில் அமுல்படுத்தப்‌ போவதாக அரசாங்கம்‌ அறிவிக்கின்றது. சிங்கள அரசாங்க. ஊழியர்‌களையும் அதேவேளை தமிழ்ப்‌ பாடசாலைகளில்‌ சிங்களத்தைத்‌ திணிக்கும்‌ நோக்கில்‌ 2000 சிங்கள ஆசிரியர்களையும்‌. வடகிழக்கிற்கு அனுப்பத்‌ தீர்மானிக்கின்றது. தமிழரசுக்‌. கட்சி அரசாங்கத்தின்‌ இந்தப்‌ போக்கினைப்‌ பகிஷ்கரிப்பது என்றும்‌ இப்போராட்டத்தில்‌ மாணவர்கள்‌ பெற்றோர்‌களையும்‌ இணைப்பது என்றும்‌ தீர்மானித்தது. தமிழரசுக்‌ கட்சியின்‌ போராட்டத்தைப்‌ பற்றிய அச்சத்தினால்‌ சிங்கள ஊழியர்களும்‌ ஆசிரியர்களும்‌ வடகிழக்கிற்குச்‌ செல்ல மறுக்கின்றனர்‌. ஜனவரி முதலாம்‌ தேதி அன்று மாபெரும்‌ கண்டன ஊர்வலங்கள்‌ யாழ்ப்பாணம்‌, மட்டக்களப்பு, மன்னார்‌. வவுனியா ஆகிய இடங்களில்‌ நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டக்‌ கச்சேரிகளுக்கும்‌ முன்னால்‌ தனிச்சிங்களச்‌ சட்டப்‌ பிரதிகள்‌ எரிக்கட்படுகின்றன.

1964 – பாதயாத்திரை

சாதிபேதத்தை ஒழிக்கவும்‌ கட்சியின்‌ இலட்சியங்களை மக்கள்‌ முன்‌ பிரச்சாரம்‌ செய்யவும்‌ பாதயாத்திரையைத்‌ தமிழரசுக்‌ கட்சி நடத்துகின்றது. செல்வநாயகம்‌ தலைமையில்‌ காங்கேசன்‌ துறைத்‌ தொகுதியிலிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகி வடக்குகிழக்கு எங்கும்‌ செல்கின்றது.

1964 – சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்‌

இலங்கை யாழ்‌ இந்திய வம்சாவழியினரைத்‌ திரும்ப இந்தியாவுக்கு அனுப்பும்‌ ஒப்பந்தத்தை சிறிமாவும்‌ இந்தியப்‌ பிரதமர்‌ சாஸ்திரியும்‌ மேற்கொள்ளுகின்றனர்‌. இதுபற்றிப்‌ பாராளுமன்ற நியமன உறுப்பினர்‌ தொண்டமானுடன்‌ கூடக்‌ கலந்தாலோசிக்கவில்லை. தமிழரசுக்‌ கட்சி இதனைக்‌ காரசாரமாக எதிர்த்தது.

1965 – டட்லி – செல்வா ஒப்பந்தம்‌

மாவட்ட சபைகள்‌ கட்டமைப்பு வழங்கப்பட்டது. இதில்‌ காணி அதிகாரங்கள்‌ இச்சபைகளுக்கு வழங்கப்பட்டு, குடியேற்றங்கள்‌ நடைபெறும்பொழுது முதலில்‌ அம்மாவட்டங்களில்‌ உள்ள காணியில்லா மக்களுக்கு முன்னுரிமை வழங்கிப்‌ பின்பே மிகுதியிருந்தால்‌, வெளிமாவட்டங்களிலிருந்து குடியேற்றவாசிகள்‌ கொண்டு வரப்படவேண்டும்‌ என்றும்‌ ஒத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துடன்‌ தமிழரசுக்‌ கட்சி தனது போராட்டங்களை முடிவுக்குக்‌ கொண்டு வந்து அரசாங்கத்தில்‌ சேருகின்றது. தமிழரசுக்‌ கட்சி அரசில்‌ சேர்ந்ததனால்‌ பழைய தமிழ்‌ அரச ஊழியர்களுக்கு சிங்களத் தேர்ச்சியின்றி சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படுகின்றது. புதிய ஊழியரின்‌ சிங்களத்‌ தேர்ச்சி எட்டாந்தரமாக்கப்‌படுகின்றது. ஆனால்‌, திறைசேரி அதிகாரிகள்‌ ஒன்பதாந்தரச்‌ சிங்களச்‌ சோதனையை எட்டாந்தரம்‌ எனக்கூறி தமிழ்‌ அதிகாரிகளுக்கு நடத்தினார்கள்‌. இந்த நடவடிக்கை கொடுக்கப்பட்ட சலுகைளை முறியடித்தது.

1966 – தமிழ்‌ மொழி உபயோகச்‌ சட்ட விதிகள்‌ மசோதா

1958இல்‌ பண்டாரநாயகாவினால்‌ கொண்டு வரப்பட்ட தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின்கீழ் அதன்‌ இயங்கு விதிகள்‌ தொடர்பான முன்னேற்றச்‌ சட்டமூலம்‌ தமிழரசுக்‌ கட்சியில்‌ நிர்ப்பந்தத்தின்‌ பேரில்‌ பாராளுமன்றநத்திற்குக்‌ கொண்டுவரப்படுகின்றது. இதன்படி வடக்குகிழக்கு மாகாணங்களில்‌ தமிழையும்‌, நிர்வாக மொழியாகவும்‌ நாடு முழுவதிலும்‌ தமிழ்ப்பேசும்‌ மக்கள்‌ தமிழ்‌ மொழியில்‌ அரசாங்கத்தோடு கருமமாற்றவும்‌, ஒழுங்கு செய்யப்படுகின்றது. இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்‌ கட்சி, இடதுசாரிக்‌ கட்சிகள்‌ உட்பட சிங்களக்‌ கட்சிகள்‌ யாவும்‌ காரசாரமாக எதிர்க்கின்றன. இச்சட்டவிதிகள்‌ மூலம்‌ சட்டத்தின்‌ எல்லையை மீறியுள்ளன என அவை வலியுறுத்தின. இது தொடர்பாக அரச தொழிற்சங்கங்கள்‌ வேலை நிறுத்தத்தில்‌ ஈடுபட்டதோடு, எதிர்க்கட்சிகள்‌ விகாரமாதேவி பூங்காவில்‌ இருந்து ஆர்ப்டாட்ட ஊர்வலத்தை நடத்தின. ஊர்வலம்‌ கட்டுக்‌ கடங்காமல்‌ சென்றதால்‌ பொலிஸார்‌ துப்பாக்கிப்‌

பிரயோகம்‌ செய்ததன்‌ விளைவாக இரத்தினசாரதேரோ என்ற பெளத்த பிக்கு சுடப்பட்டு மரணமடைந்தார்‌. இருப்பினும்‌ அரசாங்கம்‌ சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால்‌ இது நடைமுறையில்‌ பெரிதாகச்‌ செயற்படவில்லை.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons