ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும்!
ஈழ மண்ணில் திரும்பவும் போர்கள் தொடங்கியுள்ளன. அங்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. கிளிநொச்சியில் மழைக்காலமான தற்பொழுது அங்குள்ள மக்களைக் கொடுமையாக வட்டும் வகையில் சிங்கள அரசு நடந்து கொள்கிறது. இதற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளையும், கடன்களையும் வழங்குகின்றது என்பதில் என்ன நியாயம் உள்ளது? இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பு 65 ஆயிரத்து 525 சதுர கிலோ மீட்டர். இதில் 29 சதவீதம் தமிழ் மரபுவழித் தாயகமாகும். இன்றைக்கு சிங்களக் குடியேற்றத்தினால் கிழக்குப் பகுதியில் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டரும், வடக்குப் பகுதியில் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டரும் பரப்பளவு உள்ள தமிழர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சிங்களர் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பண்டித நேரு, தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி போன்ற தலைவர்கள் அனைவரும் 1950-60களில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களைக் குறித்து சிலாகித்துள்ளனர். மூதறிஞர் இராஜாஜி தொடக்கத்தில் இலங்கைத் தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள் இல்லை என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு பூர்வீக மைந்தர்கள் என்று திருத்திக் கொண்டேன் என்பதை 1963ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ‘மெயில்’ ஏட்டில் குறிப்பிட்டுள்ளார். சிரிமாவோ – சாஸ்திரி, இந்திரா காந்தி காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் தவறானவை. இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இலங்கை அரசுக்கு நாம் எது சொன்னாலும் இந்தியா கேட்கும் என்ற தைரியம் ஏற்பட்டது. அதிலிருந்து ஈழத் தமிழர்கள் மீது சிங்களவர்களுக்கு ஓர் அசட்டுத்தனமான பார்வை ஏற்பட்டு அவர்களை இலங்கையின் பூர்வீக மண்ணின் மைந்தர்கள் என்று கருதாமல் பிரச்சினைகளைச் சிக்கலுக்கு மேல் சிக்கலாக்கியது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் பூர்வக் குடியாக விளங்குகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 1948இல் இலங்கை விடுதலை பெற்றதில் இருந்து தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். தந்தை செல்வா இதை எதிர்த்து 1949இல் தமிழ் அரசு கட்சியைத் தொடங்கினார்.
1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டனர். 1956இல் திரிகோணமலையில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சி மாநாட்டில் – தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம உரிமை, தமிழர் அனைவருக்கும் குடி உரிமை, தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியமத்துவதைத் தடுப்பது போன்ற கோரிக்கைகள் தீர்மானிக்கப்பட்டு மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக 1957இல் செல்வாவும், பண்டார நாயகாவும் இதுகுறித்து ஓர் ஒப்பந்தத்தைச் செய்த பின்பும் சிங்கள அரசு அதைக் கிடப்பில் போட்டது.
1958இல் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தமிழில் எழுத முடியாமல் தவித்தனர். 1960இல் நீதிமன்றம் சிங்களத்தை மட்டும் பயன்படுத்தியது. 1965இல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்குப் பெரும்பான்மை இடன் கிடைக்காமல், செல்வா தலைமையில் தமிழ் அரசு கட்சியின் ஆதரவோடு டட்லி சேனநாயகா பிரதமரானார். தமிழர்களுக்கு மாவட்ட மன்றங்கள், தமிழ் நிர்வாக மொழி என்று உறுதிமொழி அளித்ததும் குப்பையில் போடப்பட்டது.
1970இல் சிங்கள மாணவர்களைவிட தமிழ் மாணவர்கள் உயர்கல்விக்குச் சேர வேண்டும் என்றால் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும், 1974இல் தமிழர் மாநாட்டில் சிங்களவர் திட்டமிட்டுக் கலவரம் செய்தனர்.
1972ஆம் ஆண்டு வரை தமிழர்கள் அதிகாரங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பையே வலியுறுத்தினர். இந்நிலையில் தமிழர்களைக் கலந்தாலோசிக்காமல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி தமிழர்களுக்கு விரோதமாக ஒற்றை ஆட்சி முறை நிறுவப்பட்டது. 24 ஆண்டுகள் இவ்வாறு தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் வேறு வழியில்லாமல் 1976இல் தமிழ் அரசுக் கட்சியும், மலையகத் தமிழர்களும் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி – அதன்பின் இக்கோரிக்கையை முன்வைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது. எனவே, அங்குள்ள தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைக்குத் தேர்தல் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.
1974இல் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சிங்களவர் திட்டமிட்டு கலவரம் செய்தனர். ‘தனித் தமிழ் தேசம்தான்’ இது தந்தை செல்வாவின் கருத்து. 78.4 விழுக்காடு மக்கள் தந்தை செல்வாவிற்கு வாக்கு அளித்தார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் 74.4 சதவிகித மக்கள் ஓட்டுப்போட்ட கிழக்குத் தைமூர் தனிநாடாக ஆயிற்று. அவர் நாடாளுமன்றம் சென்றார். தன்னோடு சேர்த்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ‘ஈழத் தமிழர்களுக்குத் தனி அரசு வேண்டும். இறைமை உள்ள மதச்சார்பற்ற, சமதர்ம ஈழத் தமிழ் குடியரசு. அதுதான் எங்கள் இலட்சியம். காங்கேசன் துறை வெற்றியின் மூலமாக இதை நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்று பதிவு செய்துவிட்டு வெளியே வந்தார்.
இந்தக் கொடுமைகள் எல்லாம் ஓர் எல்லைக்கு மேல் தாண்டிவிட்டதால் தம்பி பிரபாகரன் “The New Tigers’ ‘புதிய புலிகள்’ என்ற அமைப்பினைத் தொடங்கினார். அங்குள்ள இளைஞர்கள் துயரமான சூழ்நிலையைச் சகிக்க முடியாமல் சிங்கள அரசை எதிர்த்துப் போராடினர்.
1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. 96,000 அரிய புத்தகங்கள் தீயில் பொசுக்கப்பட்டன. புறநானூறும், கலித்தொகையும், கலிங்கத்துப் பரணியும், வீரத்தைப் பறைசாற்றும் பனுவல்களும் அனைத்தும் தீயிடப்பட்டதே எதற்காக? லண்டனில் இருந்து வெளிவருகிற ஈச்டிடூதூ கூஞுடூஞுஞ்ணூச்ணீட நாளிதழ் எழுதியது. அலெக்சாண்டிரியாவிலே காலிகூலாவினுடைய படைகள் அன்றைக்குப் புகழ்பெற்ற நூலகத்தை கொளுத்தியதுபோல, சிங்களக் காவல் துறையினரும், இராணுவத்தினரும் யாழ்ப்பாணத்தின் பழம்பெருமை வாய்ந்த தமிழர் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டனர் என்று அந்த ஏடு எழுதியது.
1983இல் நடந்த கொடுமையான இனப்படுகொலை, கொடிய அரசு பயங்கரவாதம் என உலகமே கண்டித்து கண்ணீர் வடித்தது. தாய்த் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே ஈழத் தமிழர்களுக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்தது. அன்றைக்கு ஈழ மண் இரத்தத்தில் மிதந்தது. குங்குமமிட்டுப் பெண்கள் செல்ல இயலாத நிலையில் இருந்தனர். பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் இந்தியப் பெண்மணி போல் இல்லாமல் இலங்கைப் பெண்மணி போல் ஈழ மண்ணில் சென்று பிரச்சினைகளை அறிந்து வேதனையோடு வெளிப்படுத்தினார்.
இந்திரா காந்தி காலத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கின்ற ஒரு அணுகுமுறையை, அத நேரத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையும் பாதுகாத்துக் கொள்கின்ற தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஒரு அணுகுமுளையை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வகுத்தார். அதன்பின்பு ‘திம்பு’ பேச்சுவார்த்தைகள், ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்படிக்கை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
ஈழத் தமிழர் பிரச்சினையில் நடந்த கசப்பான சம்பவங்களைக் கொண்டே பிரச்சினையைப் புறந்தள்ள முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கவலைகள், துன்பங்கள் இருந்தாலும் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் பஞ்சாப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட்டு தீர்வு ஏற்பட அக்கறை செலுத்தியது போலவே ஈழப் பிரச்சினையிலும் கடந்த கால துன்பியல் சூழலை மட்டும் மனதில் கொள்ளாமல் ஈழத் தமிழரைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுதும், இந்திரா காந்தி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கின்ற ஒரு அணுகுமுறை இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களையும் பாதுகாத்துக் கொள்கின்ற தொலைநோக்குச் சிந்தனை கொண்ட ஒரு அணுகுமுறையை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அவர்கள் வகுத்தார்கள். பாகிஸ்தான் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை நடத்த ஆக்ரா வந்த முஷாரப் கோபமாகவும், சற்றும் பொருட்படுத்தாமலும் பாகிஸ்தான் திரும்பியதை சுயமரியாதை என்று கருதாமல் இந்தியா பேச்சுவார்த்தையை மனப்பூர்வமான மீண்டும் தொடங்கியது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவில் பாதுகாப்புப் பிரச்சினையும் அடங்கியுள்ளது. 1970களில் இந்திய மகா சமுத்திரத்தில் அமெரிக்கா ஆயுதத் தளம் டீகோக்சியா அமைந்தபொழுது இந்தியாவும், சோவியத் யூனியனும் கண்டனக் குரல் எழுப்பியபோது, இலங்கை அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது. ஒரு காலத்தில் திரிகோணமலை துறைமுகத்தை வியாபார ஆதிக்க சக்திகள் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வியாபார ரீதியாக இந்தியாவை மனதில் கொண்டு அப்பகுதியைக் குத்தகைக்குக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டன. அதனால் இந்திய பாதுகாப்புக்குப் பிரச்சினை ஏற்படும் என்று ஈழத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியது மறுக்க முடியாது. சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கச்சத்தீவுக்கு நமது மீனவர்கள் செல்ல முடியவில்லை. மீனவர்கள் தொடர்ந்து 150 முறைக்கு மேல் 18 ஆண்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு பலர் மாண்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இதையெல்லாம் மனதில் கொண்டும் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு கடமையாற்ற வேண்டும். தமிழ் ஈழம் அமைந்தால் இந்தியாவில் ஆதரவு நாடாக விளங்கும். பாகிஸ்தான், சீனா நமக்கு எதிரிகள். மியான்மரில் (பர்மா) நிலைமைகள் சரியில்லை. இலங்கையில் அணுகுமுளை எப்போதும் இந்தியாவுக்கு விரோதமாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவைத் தங்களின் மூத்த சகோதர நாடாக எண்ணிக் கொண்டாடுவார்கள் என்பதை இந்தியா ஏன் உணரத் தவறியது என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயமாகும்.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டை மட்டுமில்லாமல் இந்தியாவையும் நேசிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவோடு சீனா, பாகிஸ்தான் போர் தொடுத்தபோது நிதி அளித்தது மட்டுமல்லாமல் சகோதர பாசத்தோடு இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது வரலாற்றுச் செய்திகள். அன்றைக்கு ஈழத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் சீனாவையும், பாகிஸ்தானையும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசினார். போர்க்காலத்தில் இந்தியாவுக்கு நிதி சேர்த்து அங்குள்ள தமிழர்கள் நேரு பிரதரைõக இருந்தபோது அனுப்பியதெல்லாம் நாம் உணர வேண்டும். ஆனால், சிங்கள அரசோ சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக மௌனம் சாதித்தது. இன்றைக்கும் தமிழ் ஈழப் பகுதிகளில் உத்தமர் காந்தியையும், நேதாஜி போஸையும் தமிழர்கள் நேசிக்கின்றனர். இந்திரா காந்தி மறைந்த அன்று ஈழத்தில் உள்ள தமிழ்ச் சகோதரர்கள் தங்களுடைய தலைவர் ஒருவரை இழந்து விட்டதுபோல் வேதனைப்பட்டனர். தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன. சிங்களவர்கள் இன்றைக்குக் கோவில்களையும், தேவாலயங்களையும் கூட தாக்குகின்றனர்.
ஜெயவர்த்தனே, பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா ஆகியோரைப் போன்றே ராஜபக்சேயும் இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழ்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்று முரண்டு பிடிக்கின்றார். சிங்களவர்கள் நார்வே சமாதான தூதுக் குழுவிடம் பட்டும் படாமலும் கடந்த காலங்களில் நடந்து கொண்டனர். ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு இல்லை. பேச்சுவார்த்தையின் போதே தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். சமாதான முயற்சிகள் என்று சொல்லிக் கொண்டு பயங்கரவாதத்தை சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. இவ்வளவு கேடுகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் விரும்கிய அமைதியையும் சமாதானத்தையும் சிங்கள அரசு காலில் போட்டு மிதித்தது.
1987 ஜூலை 29இல் இராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையினால் ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்றபோது, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த ரோகனா விஜய் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியும், 1990ஆம் ஆண்டு அக்கொடியவனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட செய்தி, இலங்கை ஒருமைப்பாட்டை கவலை கொள்ளும் இந்திய அரசுக்குத் தெரியுமா?
நார்வே தூதுக் குழுவின் முயற்சியில் நடந்த பேச்சுவார்த்தை முறிந்தபின் நடைபெற்ற தாக்குதல்களில் தமிழ் ஈழ சகோதர, சகோரிகள் 100 பேருக்கு மேல் மாண்டனர். சமாதானக் காலங்களில் இராணுவத் தளவாடங்களைச் சரிசெய்து, தமிழ் மக்கள் மீது போரை சிங்கள அரசு தொடர்ந்து தொடுத்து விட்டது. அகதிகள் தாய்த் தமிழகத்துக்கு வருகின்றனர். இப்பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினை மட்டுமில்லாமல், இன உறவு என்ற நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஈழத் தமிழர் பின் நிற்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவாக – ஆறுதலாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
புத்தர் ஞானம் பெற்றதாகச் சொல்லப்படும் கயாவிலுள்ள போதி மரத்தில் கிளை வெட்டப்பட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டு பீகாரிலுள்ள புத்த கயாவுக்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சிங்கள நாடாளுமன்ள உறுப்பினர்கள், புத்த பிக்குகள் அலறியடித்து ஓடி வந்தனர். ஆனால், அதே சமயத்தில் 63க்கும் மேலான பச்சிளம் குழந்தைகளைச் செஞ்சோலையில் மூர்க்கத்தமனாகக் கொடிய முறையில் சாகடித்துவிடடு புத்த கயாவுக்கு வருவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
இலங்கையில் ஓடுகின்ற நீளமான நதி, மகாவலி என்று கங்கையின் கிளை நதியாகக் போற்றப்படும் நதி மாவிலாறு. அப்பகுதியில் தமிழர்களை அழித்துவிட்டு சிங்களரைக் குடியமர்த்தி, தமிழரின் நிலங்களைப் பறித்து சிங்களவர்கள் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதைக் கண்டித்துத் தமிழர்கள் திரண்டு போர்க்குரல் எழுப்புவதற்கு விடுதலைப் புலிகள் ஆதரவு அளித்தனர். இந்த நீர்ப் பிரச்சினையின் காரணமாக 1992ஆம் ஆண்டு புலகிளுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் இடையே பலமுறை சண்டைகள் நடந்து தமிழரின் கட்கடுப்பாட்டில் புலிகளின் ஆதரவோடு மாவிலாறு அணை இருந்தது. வன்மமாக சிங்களர்கள் விடாப்பிடியாக இருந்ததால் விடுதலைப் புலிகள் அணையின் மடையைத் திறக்க மறுத்தனர். உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப் புலிகள் மடைகளைத் திறந்து தண்ணீரை விடுவித்தனர். உலக நாடுகளின் வார்த்தைக்குப் பலமுறை செவிமடுத்த விடுதலைப் புலிகள் மீது தேவையற்ற முறையில் பொய்யான குற்றச்சாட்டுகள், மனிதாபிமானமற்ற கேள்விகள், இதையெல்லாம் இதயசுத்தியோடு சிந்திக்க சில மனிதர்கள் தயங்குவது ஏன் என்பதுதான் புரியவில்லை.
இலங்கைக்கான பாகிஸ்தானில் தூதராகச் செயல்படும் பசீது வாலி முகமது முயற்சியால் பாகிஸ்தானிலிருந்து இரண்டு கப்பல் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அக்கப்பல் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு 14இல் இலங்கைத் துறைமுகத்திற்கு வந்தது. இந்த பசீது வாலி வேறு யாருமில்லை. இந்தியாவில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் ஊக்குவித்த ஐ.எஸ்.ஐ.ன் முன்னாள் தலைவர் என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? இன்றைக்கு இந்த பசீது வாலி இலங்கை அரசுக்கு உண்மைத் தோழனாக – உற்ற நண்பனாக இருக்கிறார். இது மத்திய அரசுக்கத் தெரியுமா?
இதில் சற்றும் வேறு விதமாக இந்தியா சிந்திக்காமல் மனித உரிமைகள், தமிழ் இன உணர்வு என்பது மட்டுமல்லாமல் ஐ.நா. மன்றத்தில் இந்தியா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கின்ற நிலையில் இந்தியாவுக்குத் தார்மீகக் கடமைகள் இருக்கின்றன. உலக அரங்கில் இந்தியா தலைநிமிர, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் காட்டி அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுதான் சரியான முடிவாக இருக்கும்.
தமிழகத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு வாரத்தில் இந்திய அரசு இப்பிரச்சினையில் தலையிடத் தவறினால் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று முடிவெடுத்தது தாமதம் மட்டுமில்லாமல், இரண்டு வாரங்கள் என்று தவணை நீட்டித்துக் கொடுத்தது ஏனென்று தெரியவில்லை.
இலங்கையின் ஒருமைப்பாடு என்று சொல்லிக் கொண்டே இந்தியா இருக்காமல் யதார்த்த நிலை அறிந்து கடமையாற்ற வேண்டும். இலங்கைக்கு வழங்கிய ராடார்கள் திரும்பப் பெற வேண்டும். அங்கு அனுப்பப்பட்ட இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும். இந்தியா கடன் கொடுப்பதாகக் சொன்ன உத்தரவாதத்தை ரத்து செய்ய வேண்டும். இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஏற்றுக் கொண்ட தகவல் பரிமாற்றத்தை நிறுத்த வேண்டும். இந்தியாவில் ஒருபொழுதும் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் துவக்குவதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பகுதியில் உண்மை நிலவரங்களை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை இந்தியா அனுப்ப வேண்டும். சிங்களத் தலைவர்கள் – இந்தியத் தலைவர்களை அடிக்கடி சந்திப்பதைப் போன்று ஈழத் தமிழர் தலைவர்களும் இந்திய அரசாங்கத்தையும், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை விவாதிக்க வாய்ப்புத் தரவேண்டும்.
பாலஸ்தீனத்திற்கும், வங்க தேசத்திற்கும், கிழக்குத் தைமூருக்கும், ருவாண்டா பட்டினிப் பிரச்சினையிலும், ஈரான், ஈராக், நேபாளம் போன்ற சர்வதேச பிரச்சினைகளில் கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்று அருகாமையில் உள்ள இலங்கயில் பிரச்சினைத் தீர்க்கவும் இந்தியா முன்வர வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் மீது அக்கறை உள்ளவர்களின் கோரிக்கை வேண்டுகோள் எல்லாமே!
– தினமணி, 18.10.2008