கச்சத்தீவில் கூடி, கலைந்தனர்!
இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவே கச்சத்தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. கச்சத்தீவு என்பது பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, கச்சன் – கச்சம் என்ற ஆமைகள் அதிகமாக இத்தீவில் இருந்த காரணத்தினால் ‘கச்சத்தீவு’ என்று பெயர் பெற்றது. இத்தீவில் எண்ணெய் வளமும் உள்ளதாக ரஷ்ய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள இந்த தீவில் பறவைகளின் ஒலி, கடலலைகளின் ஒசை, மரங்கள் அசையும்போது எழும் சத்தம் போன்றவை தவிர வேறெந்த ஓசையும் இல்லாமல் அமைதி தீவாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக துப்பாக்கி சத்தம் கேட்கும் அமைதியற்ற நிலை அங்கு ஏற்பட்டது.
சமீபத்தில், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில், தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சார்ந்தவர்களும், இலங்கையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,910 பேர்கள் 71 விசைப் படகு மற்றும் 40 நாட்டுப் படகுகளில் சென்றனர்; இலங்கையிலிருந்து 800 பேர்கள்; அனைவரும் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் கச்சத்தீவில் கூடினர். அங்கு இலங்கை நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், தேவாலயத்தில் கொடியேற்றினார். இலங்கை நெடுந்தீவு அரசு அதிகாரி திரிலிங்கநாதன், இலங்கை கடற்படை கமாண்டர் வீரசேகரா, இராணுவ மகேந்திர மதுரசிங்கே, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சித் தலைவர் கணேசன் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்து அந்த மண்ணை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்தனர். நற்செய்தி கூட்டமும், திருப்பலியும் அங்கு நடந்தேறியது. தமிழகத்தின் சார்பில் சிவகங்கை மறைவாட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜ் மற்றும் அமல்ராஜ், பாதிரிமார்கள் மைக்கேல் ராஜ், ஜேம்ஸ், வின்சென்ட் அமல்ராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.
பிப்ரவரி 28 அன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தேறின. அப்பூஜையில் இரு நாட்டு உறவுகள் வலுக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்கள் சிறக்கவும் ஜெபிக்கப்பட்டது. காலை பூஜை நடந்ததற்கு பின், ஒன்றரை மணி நேரத்திற்குள் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் வெளியேறவேண்டும் என இலங்கை கடற்படையினர் கடுமையாக எச்சரித்திருந்தனர். இதனால் இராண்டவது பூஜையில் இராமேஸ்வரத்திலிருந்து சென்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. பின் 8.30 மணிக்கு கொடி இறக்கப்பட்டது. திருப்பலி பூஜைகள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் இறுக்கமான சூழலே அங்கு நிலவியது. மக்களிடம் ஏதோ இழந்துவிட்ட மன அழுத்தம் இருந்ததாக அங்கிருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர். அங்கு சென்றவர்கள், இரண்டு நாட்களும் இரண்டு நாட்டு தமிழ் உள்ளங்களும் நேசமுடன் பழகினர் என்றனர்.
அந்தோணியாரை வணங்கினால் தங்கள் வாழ்வில் வசந்தமும், வணிகமும் பெருகும் என்று நம்பும் மீனவர்கள், இங்கு வந்து மெழுகு திரியை ஏற்றும் வழக்கம் இருந்தது. அங்குள்ள சூசையப்பருக்கும் பூஜைகள் செய்வதும் உண்டு. இடைக்காலத்தில் அந்த வேண்டுதல் நீண்டகாலம் நடக்காமல் போய்விட்டது. இரண்டு நாட்டு பாதிரிமார்கள், கன்னியாஸ்திரிகளும் மக்களிடையே சமாதானம் தழைக்க வேண்டுமென்பதற்காக தங்களுடைய பாணியில் பூஜைகளை, 28 ஆண்டுகளுக்குப் பின் நடத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது.
இவ்வளவு காலத்திற்குப் பின் அந்தோணியார் கோவிலுக்கு எவ்வித தடையும், தடங்கலும் இன்றி செல்லக் கூடிய பெரும்பேறு கிட்டியது என்ற மகிழ்ச்சியும் இருந்தது. அங்கு வந்த கடற்படை இராணுவத்தினர் நோ என்ட்ரி என்ற பகுதிக்குள் இலங்கையிலிருந்து வந்தவர்களை மட்டும் அனுமதித்தனர். தமிழகப் பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குறையையும் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்குக் கூட இந்த தீவை பார்வையிட இப்போதுதான் அனுமதி கிடைத்தது. நெடுந்தீவை தவிர யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் குறைவாக இருந்தனர். இந்த தீவில் எங்கு பார்த்தாலும் சீன எழுத்துகள் எழுதிய படுதாக்களை கொண்டு குடில்கள் அமைத்திருந்தார்கள். இம்மாதிரி 30க்கும் மேற்பட்ட குடில்கள் இருந்தன. அதில் ஆட்கள் தங்கிய சுவடுகள் தென்பட்டன. ஏற்கனவே இந்தியாவை நோக்கி சீனாவின் கண்காணிப்பு கோபுரம் அங்கு இருந்ததாக குற்றச்சாட்டு கடந்த காலங்களில் எழுந்தது. எங்கும் சிங்கள கொடிகள் பறந்தன. இதுகுறித்து தமிழக பயணிகளின் மனதில் ஆயிரம் உரிமைக் கேள்விகள் எழுந்தன.
அந்தோணியார் கோவிலை 1930இல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார். அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டிலிருந்து கொண்டு வந்த ஓடுகளை 1951இல் வேய்ந்தனர். இந்த தேவாலயத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியே முன்பு திருப்பலிகளை நடத்துவார். இராமநாதபுரத்தைப் பற்றி 1964இல் சோமலே எழுதிய நூலில்கூட, இந்தியா வசம் இருந்த கச்சத்தீவுக்கு அந்தோணியார் திருவிழாவின்போது இலங்கை இராணுவம் மோட்டார் படகில் வந்து ரோந்து சுற்றுவார்கள் என்றும், இந்திய இராணுவம் அப்போது அங்கு செல்வது கிடையாது. அந்த வகையில் எப்போதும் இலங்கையின் பார்வை கச்சத்தீவின் மீது இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்தில், இராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தெற்கே உள்ள ஆத்தங்கரை, பாம்பன், வேதாளை, மண்டபம், பெரியபட்டினம், கீழக்கரை, சேத்துப்பாறை மீனவர்களுடன், குமரி, ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட வேம்பாறு, தருவைக்குளம், தூத்துக்குடியிலிருந்து மணப்பாடு, உவரி, மதுரை நகர் கே.புதூரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ரோமன் கத்தோலிக்க பர்வதர்களும் அந்தோணியார் திருவிழாவுக்குச் சென்றனர். தூரத்தில் இருந்து வரும் பயணிகள், இராமேஸ்வரத்தில் இருக்கும் தங்களுடைய உறவினர்களிடம் திருவிழாவுக்கு வருகிறோம் என முன்கூட்டியே சொல்லி, அவர்களின் உதவியோடு படகுகளில் செல்வது உண்டு. அப்போது சமையலுக்கான பொருள்கள், ஆடுகள் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்வர். கொடியேற்றும் நாளுக்கு முன்னாடியே சென்று விடுவார்கள். தார் பாய்களை கொண்டு குடில்கள் போட்டு திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் தங்குவர். இரு நாட்டு மக்களும் ஒன்றாக சமைத்து, உண்டு, உறங்கி தங்கள் உறவுகளை புதுப்பித்தும், நேசமாக ஆர்பரித்து இருக்கும் காட்சியை காண கண் கொள்ளாது. கச்சத்தீவில் குடிதண்ணீர் கிடைப்பது அரிது. அதனால் தனுஷ்கோடியிலிருந்து குடிநீர் கொண்டு போவார்கள். அரை அணாவிற்கும், 1960களில் ஐந்து பைசாவுக்கும் தண்ணீர் விற்பனை ஆனது. கடலில் குளிப்பது, உண்பது இவை மட்டுமே பணியாக திருவிழா நாட்களை கழிப்பர்.
திருவிழாவின்போது சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள், இரு நாட்டு பெண்கள் அளவாவது, மீனவர்களின் நாட்டுப்புற தரவுகள், பாடல்கள் இனிமையாகக் கேட்க முடிந்தது. கிராமப்புற மீனவர்களின் பண்பாடுகளும் இத்திருவிழாவில் சிறப்புற விளங்கும். இவர்கள் படகுகளில் செல்லும்பொழுது கீழ்வரும் பாடலை பாடிக் கொண்டு செல்வர்.
“கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும
ஒத்தக் கொட்டரையாம் ஓயா விசாரமாம்
வால் மொளைச்ச கொசுக்கள் ஏராளமாம்
சிறைக்குள் மூட்டைப் பூச்சிகளுடன் போராட்டமாம்
காஞ்ச களிக்கிம் தீஞ்ச ரொட்டிக்கிம்
கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
கைதிகள் கையேந்தி நிக்கிறோம் போதாமையால்
அச்சடிச்ச சோறுக்கும் அவுன்சு கொழம்புக்கும்
ஆலாப் பறக்குறோம் போதாமையால்
நாங்க ஆலாப் பறக்குறோம் போதாமையால்
கொடும கொடும இது மதுர ஜெயிலு கொடும”
இந்த மகிழ்ச்சியான சந்திப்பின்போது, இலங்கையிலிருந்து வந்திருந்தவர்களுக்கும், இந்தியாவிலிருந்து போனவர்களுக்கும் இடையில் பண்ட மாற்றங்கள் நடைபெற்றது. சங்கு மார்க் லுங்கிகள், பிளாஸ்டிக் வாலிகள், பட்டுச் சேலைகள், சொக்கலால் பீடி, சினிமா பிலிம்கள், அவற்றைப் பார்க்கின்ற லென்ஸ், பாய்கள், கை கடிகாரங்கள், டிரான்சிஸ்டர், ஹேர் பேண்ட், தோடுகள், செயின்கள், ஷாம்பு, மாசி மற்றும் சில கருவாடு வகைகள், மிளகாய் வத்தல் போன்ற பொருட்களை இராமேஸ்வரம் கரையிலிருந்து சென்றவர்கள் கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்து, இலங்கையிலிருந்து வருகின்ற ராணி சோப், தேங்காய் எண்ணெய், சீட்டித் துணி, பிஸ்கெட், துப்புக்கட்டை, ரப்பர் செருப்பு, கிராம்பு, ஏலக்காய், பாக்கு, தேயிலைத் தூள் குறிப்பாக ஈஸ்டன் டீ, ஜப்பானில் செய்யப்பட்ட பேனா போன்ற பொருட்கள், முகத்திற்கு போடும் பவுடர், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், டெர்லின் சட்டை, ஹார்லிக்ஸ் மற்றும் இலங்கை பெண்கள் உடுத்தும் துணிகள் போன்றவற்றை தமிழகத்தைச் சார்ந்தவர்கள் வாங்குவர். இவ்வாறு பொருட்களை வாங்கி வருவதை காண்பதற்கு களிப்பாக இருக்கும். இது எல்லாம் மலரும் நினைவுகளாக இன்றளவும் உள்ளன. ஆனால் இந்த வருடம் அந்த மாதிரியான பண்டமாற்று வியாபாரம் நடைபெறவில்லை. போதை வஸ்துகள், மதுபானம் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது.
இப்படி நீண்டகாலமாக போராடி, அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக, இலங்கை பயணிகள் கூடினர். நெகிழ்வு, பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திப்பு சங்கமம் என்ற மகிழ்ச்சி இப்படியாக கச்சத்தீவில் 20 மணி நேரம் உறவாடி, கூடி கலைந்துள்ளனர். ஆனால் துப்பாக்கி ரவைகளின் சத்தம் கேட்ட இடத்தில் அமைதியும், பரவசமுமாக இருந்தது ஒரு மன ஆறுதல். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பல துயரங்களுக்கு தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாக்கப்பட்டனர். இப்போது அந்த தீவில் அமைதியும், சமாதானமும் அந்தோணியார் திருவிழா மூலம் ஏற்பட்டது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, இந்தியாவில் அவசர நிலை காலத்திற்கு பின் இலங்கை அரசு கச்சத்தீவை தம் வசமாக்கிக் கொண்டது. அப்போது யாருடைய கவனத்திற்கும் கொண்டு வராமல் கமுக்கமாக கைமாறியது என்பது ஒரு கவலையான செய்தி. நாடாளுமன்றத்தில் அன்றைய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுவரண்சிங், தமிழகத்திலிருந்து எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் இந்தத் தீவை தாரை வார்க்க வாதங்களை எடுத்து வைத்தார். அதனால் 1976க்குப் பிறகு பல சிக்கல்கள். நெருக்கடி காலத்தில் எவரும் இதுகுறித்து பேச இயலவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழக மீனவர்கள் அங்கு போகவும், வலை உளர்த்தவும், அந்தோணியார் கோவிலுக்கு செல்லும் உரிமை போன்றவைகள் கிட்டத்தட்ட 1980இலிருந்து மறுக்கப்பட்டு வருகின்றன.
1974இல் இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கக் கூடாது என்று இன்றைய முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அன்றைய மத்திய அரசு நிர்வாகம், மாநில அரசை முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்ற நிலைப்பாடு இருந்தது. அன்றைய தி.மு.க. அரசின் எதிர்ப்பையும் மீறி வழங்கப்பட்டதாக முதல்வர் 18.6.2009 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இன்று, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குத் சொந்தமானது. இத்தீவில் மருத்துவத்திற்கு தேவைப்படும் பல்வேறு மூலிகைகளும், உமிரி, சாய வேர் என்ற பச்சிலைகளும் இருந்தன. இதைப் பெற ஜனாப்முகமது காதர் மரக்காயர், முத்துசாமி பிள்ளை என்ற வணிகர்களுக்கு அரசர் சேதுபதி அய்ந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கி இருந்தார். (ஆவணம்: இராமநாதபுரம் துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570 தேதி:2.7.1980) ஆண்டாண்டு காலமாக, இத்தீவு இராமநாதபுரம் அரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அதற்குப் பிறகு, 1947இல் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது.
கடந்த காலங்களில் ஆங்கிலேய கப்பல் படையினர் இத்தீவை வெடிகுண்டு சோதனை செய்யவும், தங்களுடைய பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாகவும் தெரிவு செய்து வைத்து இருந்தனர். 1955ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவில் தன் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு எடுத்த முயற்சியை இந்திய நாடாளுமன்றம் கண்டித்தது. அன்று முதல் இப்பிரச்சினை தெரியலாயிற்று. கச்சத்தீவை பற்றி பண்டித நேரு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாவது: “போதிய செய்திகள் இந்த விவகாரம் பற்றி இந்திய அரசிற்கு இல்லை. கச்சத்தீவு பற்றிய குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சிறு தீவு பற்றி இரு நாடுகளும் போராட வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவின் தன்மானம் இந்தப் பிரச்சினையில் கலக்கவில்லை. அதுவும் குறிப்பாக நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” பண்டித நேரு பன்னாட்டு அரசியலில் அணிசேராக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்றத்தில் பல சமயம் இந்த பிரச்சனை எழுந்த பொழுதும் இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை.
இத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கான சான்றுகள்:
1. இராமநாதபுர அரசரின் ஆட்சிச் செயலாளர் (Administrative Secretary) 20.4.1950இல் எஸ்டேட் மேலாளருக்கு எழுதிய மடலில் 1929-1945ஆம் ஆண்டுகளில் மீன் பிடித் துறைகளைப் பற்றிய கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத்தீவைப் பற்றியது ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடியில் இருந்த முத்து, மீன் வளத் துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு.ஆர்.கணேசன் என்பவர் தயாரித்த நிலப்படத்தில் கச்சத்தீவு குறிக்கப்பட்டுள்ளது.
3. 1913ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குமான 15 ஆண்டுகளுக்குச் சங்கு, சிப்பி, மீன் வளத்துறைக்கான ஆங்கில அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. 1936இல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்ட போதும், கச்சத்தீவு அந்தக் குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.
4. 19.2.1922இல் இராமநாதபுரத்தின் திவானாக இருந்த திரு.ஆர்.சுப்பையா நாயுடு என்பவர், ஆர்.இராஜசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த விளக்கங்களில், கச்சத்தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது. இந்த ஆவணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்: 27.2.1922.
5. இராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 4.2.1985ஆம் நாளன்று, கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது. (ஆவண எண்.134/85)
6. 1.7.1947இலிருந்து 30.6.1949 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது. குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள் 26.7.1947. இராமநாதபுரம் சார் பதிவாளர் அலுவலக எண்.278/48.
7. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்று இலங்கை அமைச்சர் செயலாளர் கூறுகின்றார். ஆங்கிலேய அரசு, அரசி விக்டோரியா காலத்தில் எல்லை பற்றிய அறிவிப்பில் கச்சத்தீவு குறிப்பிடப்படவில்லை. இத்தீவு இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது என்று அமைச்சரின் செயலாளர் பி.பி.பியரிஸ் கூறுகிறார்.
இப்படி இன்னும் பல ஆதாரங்கள்.
இலங்கையில் வெளி ஆதிக்க சக்திகள் தலையீட்டால் இந்தியாவுக்கு நேரக்கூடிய பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க இது ஒரு பாதுகாப்பு அரணாக; சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த; அணு ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாக; இந்தியக் கப்பல் படையினருக்கு பயிற்சிக் களமாக; போர் விமானங்கள் இறங்க ஒரு திட்டாக; செய்தித் தொடர்பு, கடல் எச்சரிக்கைப் போன்ற தொடர்பு சாதனங்கள் பயன்படுத்த; மீன் மற்றும் கடல் செல்வங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம் என பலவகையில் இத்தீவு இந்தியாவுக்கு பயன்பாடாக இருக்கும்.
இந்திய பெருங்கடலில் டீ-கோகார்ஸியாவில் அமெரிக்க ஆதிக்கம் கால் வைத்ததை இந்தியா வன்மையாக கண்டித்தது. அப்படிப்பட்ட அமெரிக்கா, சீனா போன்ற ஆதிக்கச் சக்திகள் இலங்கையின் தயவால் கச்சத்தீவை நெருங்க முடியும். அதனால், இந்தியாவினுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் பிற்காலத்தில் ஆபத்து ஏற்படக்கூடும்.
மத்திய அரசும் இந்தப் பிரச்சினை குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. இந்திய – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் வலைகளை உளர்த்தவும், அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் முழு உரிமை உண்டு என மத்திய அமைச்சர் சசி தரூர் நாடாளுமன்றத்தில் 17.7.2009 அன்று தெரிவித்தார்.
பன்னாட்டு அளவில் இப்படிப்பட்ட சிக்கல்கள் பல காலங்களில் எழுந்து, பல தீவுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அமெரிக்க நாட்டிற்கும் – நெதர்லாந்து நாட்டிற்கும் பால்மஸ் தீவு பிரச்சனையிலும், டென்மார்க் நாட்டிற்கும் – நார்வே நாட்டிற்கும் இடையிலான கிழக்கு கிரின்லேண்ட் பிரச்சனையிலும், பிரிட்டன் நாட்டிற்கும் – பிரான்சுக்கும் இடையிலான மின் கொயர்ஸ்-எக்ரோ என்ற தீவு பிரச்சனையிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்சனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட முடிவின்படி கச்சத்தீவும் இந்தியாவிற்குச் சொந்தம் என்று நிச்சயமாக நிரூபித்தும், சட்டத்தின் மூலமாகவும், பன்னாட்டுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மரபுகள் மற்றும் உடன்படிக்கையின் அடிப்படையிலும் திரும்ப பெறலாம். அதற்கான காலம் வரும் என்ற நம்பிக்கையில் கடமை ஆற்றுவோம்!
இங்கே பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ஒன்றைச் சொன்னார்கள். இந்தத் தாரை வார்ப்பது என்பது தி.மு.க. கடைப்பிடிக்கக் கூடிய ஒன்றல்ல. தாரை வார்ப்பது என்பது கடந்த காலத்தில் கல்யாணங்களில் மாப்பிள்ளைகள் கையில் பெண்களை ஒப்படைத்து தாரை வார்த்துக் கொடுப்பார்கள். தாரை வார்ப்பது என்பது தமிழ் சொல் அல்ல. அது வடமொழிச் சொல். அப்படி தாரை வார்த்த எந்தச் சம்பமும் 1972ஆம் ஆண்டில் நடைபெறவில்லை. அந்த ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்குத் தருவதென்ற முடிவை மத்திய அரசு எடுத்தபோது, அன்றைய தமிழகத்திலே இருந்த மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அதற்கு பெரும் எதிர்ப்பைத் தெவித்தது. இருந்தபோதிலும், சில காரணங்களைச் சொல்லி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு விட்டது. அப்படி வழங்கப்பட்ட நேரத்திலேகூட, கச்சத்தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளை காய வைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து அதிலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தமிழக தி.மு.க. அரசு வலியுறுத்தியதின் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில் இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழ்நிலை. தமிழகத்திலே கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில், அந்த ஷரத்துக்கள் எப்படி அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கப்பட்டது என்றே தெரியாத அளவிற்கு அந்த ஷரத்துகள் பறி போய்விட்டன. அதற்குப் பிறகு அந்த ஷரத்துக்களைச் சேர்க்க வேண்டுமென்று நாம் மத்திய அரசோடு வாதிட்டுக் கொண்டிருக்கிறோம்.
*****
கச்சத்தீவை தாரை வார்க்க தி.மு.க. ஒப்புக் கொள்ளவும் இல்லை. தாரை வார்க்க உடன்படவும் இல்லை. இங்கே பேசிய நண்பர்கள் குறிப்பிட்டதைப் போல – ரவிக்குமார் குறிப்பிட்டதைப் போல – பாராளுமன்றத்திலேயே இந்தத் தீர்மானம் வந்தபோது வெளிநடப்பு செய்திருக்கிறது தி.மு.க. என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தி.மு.கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு.கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியது இல்லை. கச்சத்தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை.
*****
கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜுன் 29, 1974 அன்று, சென்னை கோட்டையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டினார். அதில், பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து, ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன், அப்துல் வகாப் (முஸ்லீம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி, ஜி.சாமிநாதன் (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள், சக்திமோகன் (பார்வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு), ம.பொ.சிவஞானம் (தமிழரசு), ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், “இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*****
இப்பிரச்சினைக் குறித்து தமிழக முதல்வர், பிரதமருக்கு 24.7.2009 அன்று ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை உண்டு. குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி மீனவர்கள் அப்பகுதியில் தங்களது மீன்பிடி தொழிலை செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களது உயிர்களை பாதுகாப்பதோடு, பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலை தொடர வேண்டுமாயின், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
ஆதம் பாலம் – பாக் ஜலசந்தி இடையே கடல் எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்ய இலங்கை – இந்திய அரசுகளுக்கு இடையே 1974, ஜுன் 26ம் தேதி ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தம் கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை அங்கீகரித்தது.
மன்னார்குடா எல்லை பிரச்சினை பற்றி பேசி 1976, மார்ச் 23ம் தேதி மீண்டும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்திலும் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளை காயப் போடலாம் என்று அறிவித்தது. ஆனால் திடீரென்று தடைவிதிக்கப்பட்டது. இது அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்ததுதான். மற்றபடி மேற்கண்ட இரு ஒப்பந்தத்திலும் இப்படி ஒரு விதி இல்லை. அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் தமிழக மீனவர்கள் பலவாறாக தாக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்படும் நிலைமை ஏற்பட்டது.
தமிழக மீனவர்கள் மீது தடையின்றி நடந்து வரும் இத்தகைய தாக்குதல்களை கண்டு தமிழக மக்கள் மட்டுமல்லாது தமிழக அரசும் மிகவும் வேதனை அடைகிறது. எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் இந்திய அரசு, இலங்கை அரசை கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
*****
கச்சத்தீவுப் பிரச்சினையில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 1974ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 23.7.1974 அன்று இந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண்சிங் தாக்கல் செய்தார்.
தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தி.மு.கழக உறுப்பினர் இரா.செழியன் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் மூக்கையாத் தேவர்: எனது தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு ஏற்கனவே தொல்லைக் கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் ஏதாவது மூளுமானால், மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதற்கு வசதியாக, இலங்கையை தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றார்.
இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே, ரகசிய பேரம் நடத்தி, கச்சத்தீவை தானமாக வழங்கியுள்ளது என ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் பேசினார்.
மாநிலங்களவையிலும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பல உறுப்பினர்கள் பேசினார்கள். தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோத போக்காகும் என தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ்.மாரிசாமி குறிப்பிட்டார்.
சோசலிஸ்டு உறுப்பினர் ராஜ்நாராயணன், ஒப்பந்தத்தை இறுதி செய்யும்பொழுது தமிழக மக்களின் இசைவை பெற்றிருக்க வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்தார். இதே கருத்தை முஸ்லீம் லீக் உறுப்பினர் அப்துல் சமதும் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் மாறாக கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கை எடுத்தனர். அக்கட்சியின் உறுப்பினர் பூபேஷ்குப்தா, பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த ஒப்பந்தம் என கூறினார்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழக இந்திரா காங்கிரசில் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவின. அக்கட்சியின் தலைவர் ராமையா மத்திய அரசின் நிலையை ஆதரித்தார். ஆனால் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.மாரிமுத்து, தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இப்பிரச்சினையைக் கண்டித்து, தி.மு.கழகத்தின் சார்பில் ஜூலை 24ஆம் தேதி நாடு தழுவிய கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் தஞ்சாவூர், பாபநாசம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் முதல்வர் கலைஞர் பங்கேற்று உரையாற்றினார்.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்