கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்
ஒரு காலத்தில் இந்திய – இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம் வகுத்த விதிகளின்படி கடல் எல்லை ஆளுமைகள் கட்டுப்பாடுகள் முறைபடுத்தப்பட்டன. கச்சத்தீவு அருகேதான் பெருமளவில் மீன்கள் கிடைக்கின்றன. நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சகணக்கான மீனவர்கள் அச்சமின்றி நாட்டுப்படகு, விசைப் படகுகளைக் கொண்டு தங்கள் தொழிலை நடத்தினர். 1976க்கு பின் அவசர நிலை காலத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் கீழ் பிரச்சினை தலைத் தூக்கின. 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழப் பிரச்சினையால் மீன் பிடி தொழிலே கேள்விக் குறியாகிவிட்டது. குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கும், பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத் எல்லைக்கும் வந்து மீன் பிடிக்கிறார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கடல் எல்லையில் மீன் பிடி தொழிலில் எந்தவித மோதலும் ஏற்பட்டது இல்லை. ஆனால் இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்திய கடலோர பாதுகாப்புப் படையும் தமிழக மீனவர்களுக்கு துணையாக இருப்பதில்லை. இலங்கை மீனவர்கள் நம்மிடம் பிடிப்பட்டால் உடனே அனுப்பி விடுகிறோம். ஆனால், நமது மீனவர்கள் இலங்கைக் கடல் படையிடம் பிடிப்பட்டால் எளிதில் மீண்டு வந்ததில்லை. இதுவரை பல உயிர்கள் பறிக்கப்பட்டும், பல முறை கைதுகள், மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளை இலங்கை இராணுவம் நாசம் செய்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். நமது கடல் பகுதியில் சீனாவின் ஊடுறுவல் இலங்கை அரசின் ஆதரவோடு நடைபெறுகிறது.
கச்சத்தீவு என்பது, இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவு அருகில் 285.2 ஏக்கர் அளவும், பரப்பளவில் சுமார் 4 மைல் கொண்ட அமைதியான தீவு. கள்ளி, கத்தாழை, கருவேல மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் படர்ந்த எந்த சலசலப்பும் இல்லாத நிர்சலமான பகுதியாக ஒரு காலத்தில் இத்தீவு இருந்தது. சங்குகளும், முத்துக்களும் இங்கே கிடைக்கின்றன. கால்சியம் கார்பனேட் கற்கள் இங்கு மிகுதி. பசுமை நிறம் வளத்தைக் கொண்டதால் பச்சைத் தீவு என்று வழங்கப்பட்டு, கச்சன் – கச்சம் என்ற ஆமைகள் அதிகமாக இத்தீவில் இருந்த காரணத்தினால் ‘கச்சத்தீவு’ என்று பெயர் பெற்றது. இத்தீவில் எண்ணெய் வளமும் உள்ளதாக ரஷ்ய ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில் உள்ள இந்த தீவில் பறவைகளின் ஒலி, கடலலைகளின் ஒசை, மரங்கள் அசையும்போது எழும் சத்தம் போன்றவை தவிர வேறெந்த ஓசையும் இல்லாமல் அமைதி தீவாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக துப்பாக்கி சத்தம் கேட்கும் அமைதியற்ற நிலை அங்கு ஏற்பட்டது.
கடல் எல்லை நடுவே இருக்கின்ற கற்பனை எல்லைக் கோட்டை தமிழக மீனவர்களால் கண்டறிய இயலாது. அவ்வாறு உள்ள எல்லை கோட்டை தாண்டும்போது இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தண்டிக்கிறது. இதில் துல்லியமான கடல் எல்லையை காண முடியாது என்பதை இலங்கை இராணுவம் கண்டு கொள்ளாதது வேதனையை தருகின்றது. 1921இல் சென்னை மாகாண அரசுக்கும் – இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை, 1974இல் கச்சத்தீவு குறித்த உடன்படிக்கை, 19662இல் ஏற்பட்ட சிரிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கை போன்றவற்றை மனதில் கொள்ளாத இலங்கை அரசிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இந்த உடன்படிக்கைகளில் இந்தியாவின் உரிமைகளை இலங்கை அரசு திட்டமிட்டு மறுத்துள்ளது. 1950லிருந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், 1983க்குப் பிறகு இது அதிகமாக; அத்துமீறி நடந்து கொள்வது போன்ற செயல்களில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. எவ்வளவுதான் இந்திய அரசு எச்சரித்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு கதையாகவே உள்ளது.
1974இல் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 5,6இன் படி மீன்பிடி உரிமை, வலைகள் காய வைப்பது, அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்ல உரிமை ஆகியவை தமிழக மீனவர்களுக்கு இருந்தும், மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் விவாதித்து முறையாக ஆதரவு பெறவில்லை. எனவே அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது இந்த ஒப்பந்தம். 1974இல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட பின், அவசர நிலை காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது ஒப்பந்தத்தில் தான், தமிழக மீனவர்களின் நலன் காவு கொடுக்கப்பட்டது.
உலக அளவிலும் மீனவர்கள் பன்னாட்டு எல்லைகளைக் கடந்து தான் மீன்கள் பிடிக்கின்றனர். இதுதான் எல்லைப் பகுதி என்று மீனவர்கள் தெரிந்து கொள்ள இயலாத நிலையில் உலக அளவில் இது பிரச்சினையாக இருக்கின்றது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடல் வளத்திற்கு ஏற்ப தனது மீன்பிடி படகுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. ஒவ்வொரு நாடும் மீன் பிடிக்கின்ற அளவை நிர்ணயித்துவிட்டன. பிரிட்டனுக்கும் ஐஸ்லாந்துக்கும் காட் மீனைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பிரிட்டன், பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஐஸ்லாந்து போன்ற நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அம்மாதிரியான ஒப்பந்த அடிப்படைகளை மனதில் கொண்டு தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை அணுக வேண்டும்.
கடல் ஒரு வேட்டைக்காடு. வலை போடும் ஒரு மீனவன் வேட்டைக்காரன். வேட்டையாடுபவனுக்கு எல்லைகள் ஏது என்று கூறுகிறார் பிரபல படைப்பாளி ஜோ.டி.குரூஸ். தற்போது 50மீ ஆழத்திற்குக் குறைவான பகுதிகளில் மீன்வளம் குறைந்துவிட்டது. எனவே, மீனவர்கள் ஆழ்க்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளாலும் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எண்ணூர், வாலிநோக்கம், குளச்சல், முட்டம் போன்ற மீன்பிடி துறைமுகங்களிலும் மீனவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது லூர்தம்மாள் சைமன் மீன்வள அமைச்சராக இருந்தார். அப்பொழுது ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட திலோப்பியா என்ற மீன் வகையை வளர்க்கத் திட்டமிட்டனர். அச்சமயத்தில் ஏரி, குளம், குட்டைகளிலும் மீன் உற்பத்திக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் இன்றைக்கு குமரி மாவட்டத்தில் திலோப்பியா என்ற மீன் வகை மற்றைய இன மீன்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று மீனவர்கள் கருதுகின்றனர்.
சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற, சோனியா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மக்கள் திரள் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்; இது உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல; உயிர் பிரச்சினை என்று பேசியதற்கு பின், சோனியா அவர்களும் இதுகுறித்து கவனிக்கப்படும் என்று கூறியது ஒரு நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலைக்கு வந்துள்ளது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இப்பிரச்சினை குறித்து கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கப்பட்டது. பழ.நெடுமாறன் அப்போது சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, எம்.ஜி.ஆர். ஆட்சியை விமர்சித்தார். கிறித்துவர்களும் எவ்வளவோ போராடியும் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் காதுகளுக்கு அது எட்டவில்லை. ஜெயலலிதா கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசும் பொழுதும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும் கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்றார். ஜெயலலிதாவால் மீட்க முடியவில்லை. குறைந்தபட்சம் அந்தோணியார் கோவிலுக்கு செல்வதற்கு வழி வகையும் அவர் ஆட்சியில் செய்யவில்லை. கலைஞர் ஆட்சியில்தான் இதற்கொரு வழி பிறந்தது. இந்த வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜுன் 29, 1974 அன்று, சென்னை கோட்டையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அதில், பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து, ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன், அப்துல் வகாப் (முஸ்லீம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி, ஜி.சாமிநாதன் (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள், சக்திமோகன் (பார்வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்யூனிஸ்டு), ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், “இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்று முதல்வர் கலைஞர் முன்மொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுத்துவிட்டது.
1974 ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 23.7.1974 அன்று இந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண்சிங் தாக்கல் செய்தபோது, தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என அன்றைய கழக உறுப்பினர் இரா.செழியன் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் மூக்கையாத் தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு ஏற்கனவே தொல்லைக் கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் போர் ஏதாவது மூளுமானால், மற்ற நாடுகள் இந்தியாவை எதிர்ப்பதற்கு வசதியாக, இலங்கையை தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது” என்றார். இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே, ரகசிய பேரம் நடத்தி, கச்சத்தீவை தானமாக வழங்கியுள்ளது என வாஜ்பாய் அன்று பேசினார்.
மாநிலங்களவையிலும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பலர் பேசினர். தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோத போக்காகும் என கழக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.மாரிசாமி குறிப்பிட்டார். சோசலிஸ்டு உறுப்பினர் ராஜ்நாராயணன், ஒப்பந்தத்தை இறுதி செய்யும்பொழுது தமிழக மக்களின் இசைவை பெற்றிருக்க வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்தார். இதே கருத்தை முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமதும் தெரிவித்தார். ஜன சங்க உறுப்பினர் கச்வாய் இந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிந்தார்.
இதற்கெல்லாம் மாறாக இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கை எடுத்தனர். அக்கட்சியின் உறுப்பினர் பூபேஷ்குப்தா, மத்திய அரசின் ராஜதந்திரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த ஒப்பந்தம் என கூறினார். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர்த்து மற்றவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழக இந்திரா காங்கிரசில் அன்று இரு வேறுபட்ட கருத்துகள் நிலவின. அக்கட்சியின் தமிழகத் தலைவர் இராமையா, முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம் போன்றோர் மத்திய அரசின் நிலையை ஆதரித்தனர். ஆனால் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.மாரிமுத்து, அக்கட்சியின் மேலவை உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழ்நாடு ஜனசங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
சுமார் 35 லட்சம் வருடங்களில் கடல் மட்டம் 25 மீ உயர்ந்து தற்போது பூமிப் பரப்பில் 78 சதவீம் கடல் பகுதி உள்ளது. இன்றைக்கு புவி வெப்ப மாற்றத்தினால் கடல் மட்டம் மேலும் உயர்ந்துவிடுமோ என்ற அபாயக் குரல் கேட்க ஆரம்பித்துள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது மீனவர் சமுதாயமே என்ற கவலை நமக்கு ஏற்படுகின்றது.
இராமேஸ்வரம் மீனவர்களை, ஏன் எல்லை தாண்டிப் போகிறீர்கள் என்று கேட்டால், நம் கடல் தண்ணீரில் மீன் இல்லை. தலைமுறை தலைமுறையாக இப்படித்தான் மீன் பிடிக்கின்றோம். பரந்து கிடக்கும் கடலில் தான் நம் வலைகளை வீச முடியும். எல்லை தாண்டும்போது மீனவர்களை விசாரித்து விடுவிப்பதுதான் உலக வழக்கமும், மரபும். ஆனால் இந்த மரபுகளையெல்லாம் மீறி இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் வேதனையான செய்தியாகும். இதில் கிறிஸ்துவ மீனவர்களும் உள்ளனர். இவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இப்பிரச்சினை மேலை நாட்டுக் கிறிஸ்துவத் தலைமைகளின் காதுகளுக்கு எட்டவில்லையா என்ற கிறிஸ்துவ மீனவர்களுடைய வருத்தமான புலம்பல்கள் எழுகின்றன. எவ்வாறு இருந்தாலும் கல்வாரி மலையிலிருந்து கருணையோடு கர்த்தர் சொன்ன வார்த்தைகள் எங்களைக் காக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கின்றனர். தமிழகத்தில் பாரம்பரிய மீனவர்கள், தொழிலுக்கு மீன் பிடிப்பவர்கள் என இரு வகையினர் உண்டு. முப்பத்தைந்து லட்சம் மீனவர்கள் பாரம்பரிய மீனவர்கள் ஆவார்கள். இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இயற்கை வழிகாட்டும் என்ற நம்பிக்கையில் இவர்கள் காலம் தள்ளுகின்றனர்.
1982ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் உள்ள ஜமைக்கா தீவின் தலைநகர் மோன்டிகோபேயில் நடைபெற்ற மாநாட்டில் கடல் விதிகள் ஏற்கப்பட்டன. இதன்படி, ஒவ்வொரு நாட்டின் கடல் எல்லை 3 கடல் மைல் (5 கி.மீ.) மேலும் 12 மைல் (20 கி.மீ.) வரை கடலை கண்காணிக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. கடலில் நாட்டின் கொடி பறக்க விடுவது, சுங்கம் வசூலிப்பது போன்ற உரிமைகள் உண்டு. 1973ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. மன்றம் கடல் சட்டங்களை பற்றி விவாதிக்க நியூயார்க்கில் கூடி பின் 1982ஆம் ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி, 20 கி.மீ. வரை கடல் பகுதிகள் அந்த கரையோர அரசுகளின் ஆளுமைக்கு உட்பட்டது என தீர்மானிக்கப்பட்டது.
நமது மீனவர்களின் வாழ்க்கை கேள்விகுறியாக உள்ள நிலையில், எம்.ஜி.ஆர். ‘படகோட்டி’ திரைப்படத்தில் பாடும் பாட்டான ‘தரைமேல் பிறக்க வைத்தான்; எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றது.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்