கலைஞரின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

0

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளது. தமிழறிஞர்களின் ஆராய்ச்சி உரை வீச்சுகளும், முத்தமிழையும் கொண்டாடுகின்ற வகையில் இம்மாநாடு நடக்கும்.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளது. தமிழறிஞர்களின் ஆராய்ச்சி உரை வீச்சுகளும், முத்தமிழையும் கொண்டாடுகின்ற வகையில் இம்மாநாடு நடக்கும். இம்மாநாட்டில் ஒவ்வொரு தமிழனும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டியது கடமையாகும். தலைவர் கலைஞர் அனைத்துக் கட்சியினரையும் பெருந்தன்மையாக அழைத்தும், ஒரு சிலர் மாநாட்டில் பங்கேற்காமல் வேண்டுமென்றே பத்திரிகைளில் அறிக்கைப் போர்களை நடத்துகின்றனர். சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நடக்காமலா போகும்?

ஈழத் தமிழரை காரணம் காட்டி மாநாட்டை நடத்தக் கூடாது என சில வல்லூறுகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தமிழர்களிடம் எடுபடாது. 1995இல் ஜெயலலிதா தன்னுடைய கட் அவுட்களை வைத்து உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் ஒப்புக்கு தஞ்சையில் நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈழத் தமிழறிஞர்களை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா, தற்போது நடைபெற உள்ள மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விடுகிறார். ஈழத்து அறிஞர் சிவத்தம்பியை அவமானப்படுத்தியதும் இதே ஜெயலலிதா தான், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். அன்புத் தங்கச்சி பாணியில் அண்ணன் வைகோவுக்கும் அறிக்கை விடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று அவரும் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.

எந்த அரும்பணிகளை தலைவர் கலைஞர் செய்தாலும் தேவையற்ற வக்கணைகளை பேசுவது இவர்களது வாடிக்கையாகும். அவர்களின் புலம்பல்களைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்றாலும், தாங்கள் புலம்பிக் கொண்டிருந்தால்தான் தங்களின் இருப்பு வெளியே தெரியும் என்பதற்காக ஞானசூனியங்கள் பொது வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றனர்.

எம்.ஜி.ஆர். உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது தமிழகத்தில் மறைந்த நாராயணசாமி நாயுடு நடத்திய விவசாய சங்கப் போராட்டத்தில் பலர் இறந்தனர். அப்போது, அன்றைய வை.கோபால்சாமி எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்ட கேள்வியை இப்போது நினைத்துப் பார்ப்பாரா என்பதுதான் நமது கேள்வி. அன்று எம்.ஜி.ஆரை பார்த்து கூட்டங்களின் மூலமாக விவசாயிகளை சாகடித்துவிட்டு ஒரு மாநாடா? இதில் ஜெயலலிதா நடத்திய நாட்டிய நிகழ்ச்சியை நையாண்டி செய்தார் அன்றைய வை.கோபால்சாமி. அன்றைக்கு அவருக்கு சூன்யக்காரி; இன்றைக்கு புரட்சித் தலைவி.

மதுரையில் எம்.ஜி.ஆர். நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் நாட்டியமாட வந்த ஜெயலலிதா, மீனாட்சியம்மன் கோவில் நகைகளை அணியக் கேட்டதாகவும், அதற்கு கோவில் நிர்வாகம், நகைகளும் கடவுளுடைய விக்கிரகத்தின் ஒரு அங்கம்தான். அதனால் தரமுடியாது என்று கூறியபோது ஜெயலலிதா கோபப்பட்டதாக செய்திகள் வந்தன. அன்றைக்கு பழ.நெடுமாறன் அந்த மாநாட்டுக் குழு உறுப்பினராகவும், மதுரை (மத்திய தொகுதி) சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். அவரும் இந்த நடவடிக்கையை அப்போது கண்டித்தது உண்டு.

நாடு விடுதலைக்கு முன் பிரிட்டிஷ் அரசர் கூட மீனாட்சி அம்மன் கோவில் நகைகளை கேட்டபோது, அதைத் தொடக் கூடாது என்று அன்றைய கோவில் பொறுப்பாளர்கள் கூறியதை கேட்டு, எந்த கோபதாபமும் கொள்ளாமல், உலகையே ஆண்ட பிரிட்டிஷ் அரச குடும்பம் ஏற்றுக் கொண்டது. ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆத்திரமும் கோபமும் வந்ததிலிருந்தே அந்த அம்மையாரின் சுயரூபம் வெளிப்பட்டதாக அன்றைக்கு பலரும் குறைபட்டனர்.

உலகத் தமிழ் மாநாடுகளுக்கு ஒரு வரலாறு உண்டு. 1784இல் இந்திய ஆசியவியல் கழகம் கல்கத்தாவில் துவக்கப்பட்டது. அதன் தலைவராக வில்லியம் ஜோன்ஸ் இருந்தார். 1933இல் அகில இந்திய கீழ்த்திசை மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் வழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன. மூத்த மொழியான தமிழுக்கும் திராவிட கலாச்சாரத்திற்கும் எவ்விதமான பணியையும் ஆசியவியல் கழகம் மேற்கொள்ளவில்லை. திராவிடவியல் அறிஞர்களிடையே இச்செயல் கவலையைத் தந்தது.

எல்லிஸ், கால்டுவெல் ஆகியோர் திராவிடவியல் குறித்து ஆய்வுகள் நடத்தினர். அவை யாவும் நூல்களாக வெளிவந்துள்ளன. திராவிட மொழிகளுள் தொன்மை வாய்ந்த, பண்பட்ட, உயர்தனிச் செம்மொழியாக இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் தமிழ் மொழியினைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ் மக்களின் ஆற்றலினையும், சிறப்பினையும் வியந்து பாராட்டும் டாக்டர் கால்டுவெல் இம்மக்களை நாகரிக மேம்பாட்டின் உச்ச நிலையில், உலகிற்கு அறிவூட்டும் பேரொளியாக விளங்கிய கிரேக்க நாட்டு மக்களோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார். மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்க வழக்கங்களும் குறைந்தவர்கள் தமிழ் மக்களே என்பது டாக்டர் கால்டு வெல்லின் மதிப்பீடு. பல்வேறு நாட்டு மக்களோடு தொன்றுதொட்டே கலாச்சார, பண்பாட்டு, வணிகத் தொடர்புகள் கொண்டு வாழ்வின் முறையிலும், மொழியிலும், கொள்வன கொண்டு, கொடுப்பது கொடுத்து மொழியையும் வாழ்வையும் வளஞ்செய்து வாழுமியல்பு தமிழ் மக்களின் பறந்த மனப்பான்மைக்கும், அறிவு வேட்கையும் விசாலமானது என்று அவர் சொல்கிறார்.

தக்காண பீடபூமியில், தாய் மொழியான தமிழ் பெற்றெடுத்த சேய்களாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உருவானது என ஆராய்ச்சிகள் சொல்லியது. தமிழ் தொன்மை வாய்ந்த உலக மொழிகளில் ஒன்று என்ற குறியீடுகளும், ஆதாரங்களும் வெளிவந்தன.

தமிழ் மொழியின் தொன்மையை கண்டும் காணாமலும் இருந்த நேரத்தில் சென்னை மற்றும் அண்ணமலைப் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டன. தமிழில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. உ.வே.சா. போன்றோர் முயற்சியால் சங்க இலக்கியங்கள் யாவும் மறுமலர்ச்சி அடைந்து அச்சில் வெளிவந்தன. தொல்காப்பியமும் திருக்குறளும் தமிழர்களின் கவனத்திற்கு வந்தன. 1938இல் சென்னைப் பல்கலைக் கழகம் அறிஞர் வையாபுரி பிள்ளை உருவாக்கிய சென்னைப் பல்கலைக் கழக அகராதியை வெளியிட்டது.

திராவிட இயக்கம் தமிழை காக்க போர்குணத்தோடு வீறுகொண்டு எழுந்தது. அதன் தாக்கமே தமிழுக்குக் கீர்த்தியும் மேன்மையும் கிடைக்கப் பெற்றது. நல்லத் தமிழ் சொற்கள் நடைமுறைக்கு வந்தன. அதுவரை சமஸ்கிருதம், இந்தி கலந்த மொழி வழக்கம் இருந்தது. திராவிட இயக்கக் கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகளாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களைப் பரப்பக்கூடிய மேடைகளாகவும் அமைந்தது. 1964இல் மைனோ பரோ தொகுத்த திராவிட மொழியின் வேர்ச் சொல் அகராதி வெளியிடப்பட்டது.

1964இல் டில்லியில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்த யோசனைகள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 1966இல் கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. தனிநாயக அடிகள், வ.ஐ.சுப்பிரமணியம் ஆகியோர் உலகத் தமிழ் மாநாடு நடைபெற அப்போது முயற்சிகளை மேற்கொண்டனர். பேரறிஞர் அண்ணா இதைப் பாராட்டி வாழ்த்தினார்.
1968இல் அண்ணா காலத்தில், கழக ஆட்சியில், தலைவர் கலைஞர் அவர்களுடைய மேற்பார்வையில் சென்னையே குலுங்குகின்ற வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பன்னாட்டு தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். 1968, ஜனவரி மாதம் 3ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற இம்மாநாடு தமிழ் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். சென்னை கடற்கரை சாலையில் கம்பீரமாக இருக்கும் தமிழ் அறிஞர்களுடைய சிலைகள் நமது தலைவர் கலைஞர் அவர்களுடைய மேற்பார்வையில் பல்வேறு பெருந்தகைகளின் அன்பளிப்பால் திறந்து வைக்கப்பட்டது. (அன்று பொதுப் பணித் துறை அமைச்சர் என்ற வகையில் மாநாட்டுப் பணிகள் யாவும் தலைவர் கலைஞர் பொறுப்பில் இருந்தது.) அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மாநாட்டை துவக்கி வைத்தார். அன்றைய ஆளுநர் உஜ்ஜல் சிங் மாநாட்டு மலரை வெளியிட்டார்.

இம்மாநாட்டில் பி.டி.ராசன், ம.பொ.சி., நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், மேலவைத் தலைவர் மாணிக்கவேலர், ஏ.ராமசாமி முதலியார், ஏ.எல்.முதலியார், ஆர்ச்பிஷப் அருளப்பா என பல்வேறு பெருந்தகைகள் பங்கேற்றனர்.

பொதுச் செயலாளர் இனமானப் பேராசியர், அன்றைய அமைச்சர்கள் நாவலர், சி.பா.ஆதித்தனார், மதியழகன், என்.வி.நடராசன், ஏ.ஜி.கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, சாதிக்பாட்சா, நாஞ்சிலார், செ.மாதவன், பாவலர் முத்துசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனந்த நாராயணன் போன்ற பெருமக்கள் வாஞ்சையோடு மாநாட்டில் பங்கேற்பது தங்களது கடமை என்ற நோக்கில் பங்கேற்றனர். இவர்கள் மட்டுமா? காயிதே மில்லத், குன்றக்குடி அடிகளார், பழைய காங்கிரசைச் சார்ந்த கோவை கம்பன் என அன்போடு அழைக்கப்பட்ட பி.ஜி.கருத்திருமன் போன்ற பல பெருமக்களும் மாநாட்டில் பங்கேற்பது தங்களது பொறுப்பு என கருதி பங்கேற்றனர். இம்மாநாட்டில் தமிழகத்தைச் சார்ந்த அனைவரும் மனமாச்சரியங்களை கடந்து கலந்து கொண்டனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எஸ்.எம்.வாசன், ஏ.வி.எம்.செட்டியார், ஏ.எல்.சீனிவாசன், நாகிரெட்டி, ஏ.பி.நாகராஜன் போன்ற திரை உலகத்தினர் பங்கு கொண்டனர்.
அம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் அது தங்களது குடும்பத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி என்ற வகையில் தமிழகத்தின் நாலாபுறத்திலிருந்தும் சாரை சாரையாக ‘சாலைகள் அனைத்தும் ரோம் நகரை நோக்கி’ என்பது போல சென்னையில் கூடிய நிகழ்ச்சி நம் கண்முன் நிற்கின்றது. சென்னை நகரமே அன்றைக்கு புதுப்பொலிவு பெற்றது. இம்மாதிரி மாநாடு அதற்குப் பிறகு அமையவும் இல்லை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்களுடைய தமிழ் செம்மொழி மாநாடு, அண்ணா நடத்திய மாநாடு போன்று நிச்சயமாக அமையும். மாநாட்டில் தமிழின் தொன்மை, தமிழ் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள், மொழி சார்ந்த ஆய்வுகள், தமிழர் சமூக அமைப்பு முறை ஆய்வுகள், பதிவுகள், தரவுகள் என்ற போக்கில் இந்த ஆராய்ச்சிகள் அமையும். உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்கள் குறித்த ஆய்வுகள் இருக்கும்.

1981,95 என்ற மாநாடுகள் தமிழகத்தில் நடந்தன. இந்த மாநாடுகளில் படிக்கப்பட்ட தமிழ் ஆராய்ச்சி உரைகள், 1966, 68, 70, 81 ஆகியவற்றின் தொகுதிகள் வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணம் (1974), கோலாலம்பூர் (1987), மொரிசீயஸ் (1989), தஞ்சாவூர் (1995) ஆகிய மாநாட்டுக் கட்டுரைகள் அச்சு வடிவில் வெளியாகவில்லை. இன்றைக்கு வெட்டி கூப்பாடு போடும் ஜெயலலிதா 1995 ஆண்டில் ஆட்சியில் இருந்தார். ஆனாலும், அப்போது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டு உரைகள் வெளிவர எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

1974 யாழ்ப்பாண மாநாட்டில் பலர் தாக்கப்பட்டு பலியானார்கள். அந்தத் துயரம் இலங்கையில் தொடர்ந்தது. இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் தமிழர்களுக்கான பிரச்சினைகளில்கூட நாம் கூட்டும் மாநாட்டின் மூலம் நமது ஒற்றுமையால் இலங்கை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். இதுகூட புரியாத சிலர் ஈழத் தமிழர்களின் துயரத்தின்போது மாநாடா என்று விதண்டா வாதங்களை செய்கின்றனர்.

இம்மாநாடு தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடாகும். பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) காலத்திலிருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கை இன்றைக்கு தமிழ் செம்மொழி என்ற வடிவத்தைப் பெற்றுள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தனர். தமிழகம் மற்றும் ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத ஆய்வுகள் நடைபெறுவது போல தமிழியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. 1950க்குப் பின்னும், 1968இல் தொடங்கி நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாடுகளின் காரணமாக மேற்குறிப்பிட்ட நாடுகளில் தமிழியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதனால் தமிழியல் ஆய்வாளர்கள் என்று ஐரோப்பியர் தங்களை கூறிக் கொள்ளவும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.

“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே – வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது
எங்குங் காணோம்”

என்று பாரதி பாடியுள்ளார்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”

மண்ணோடும், விண்ணோடும், உடுக்குலங்களோடும், தண் மதியோடும், ஞாயிற்றோடும் இணைந்து தமிழ் மொழி பிறந்ததாக பாரதிதாசன் பாடினார்.

இதுபோன்ற உயிருக்கு நேரான தமிழுக்கு கோவையில் மாநாடு. தலைவர் கலைஞர் நடத்தும் இம்மாநாட்டில் பங்கேற்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும். வையகம் அளந்த தமிழ் மேலும் வளம் பெற அனைத்துத் தமிழர்களும் ஒன்றுகூட வேண்டும். தமிழர்களின் உரிமை, தமிழர்களின் கலாச்சாரம், மரபுகள், தரவுகளை பாதுகாக்கவும், நமது அடையாளங்களை மேலும் வலுவூட்டுவோம். தலைவர் கலைஞர் தலைமையில் கூடுவோம் கோவையில். அனைவரும் வாரீர்.

– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons