கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டங்கள்

0

“நீரின்றி அமையாது உலகு”, “சிறுதுளி பெரு வெள்ளம்”, “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள். தம்மை நாடி வந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை யென்றாலும், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது…

“நீரின்றி அமையாது உலகு”, “சிறுதுளி பெரு வெள்ளம்”, “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள். தம்மை நாடி வந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையென்றாலும், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது வாடிக்கையும், பெருந்தமையும் ஆகும். அது அன்பின் அடையாளம். இந்த வாடிக்கை எதிர்காலத்தில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், மனிதநேயம் இல்லாதவர்களை தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மாட்டான் என்றும் பேசுவதுண்டு. ஆனால் தண்ணீருக்கே இப்போது பற்றாக்குறை. இன்றைக்கு தண்ணீரை விலைக்கு வாங்குகின்ற சூழல். 80-90களில், இம்மாதிரி தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினையில் எப்படியெல்லாம் நிலைமைகள் மாறும் என்று சொல்ல முடியவில்லை. அந்த அளவு தண்ணீர் பிரச்சினை வருங்காலங்களில் இருக்கும் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை பாதுகாக்க வேண்டும், நதிகளில் ஓடும் தண்ணீரை வீணாக்காமல் பயன்பாட்டுக்கு செலவிட வேண்டும் என்ற சிந்தனை இன்றைக்கு வளர்ந்துள்ளது.

‘வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்’

என்று பாரதி பாடியுள்ளார். இந்த சிந்தனையில் தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், சட்டப் பேரவை பணியில் பொன் விழா கண்ட தலைவர் கலைஞர் அவர்களுக்கு தீவுத்திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி போன்றோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள், என்னுடைய சட்டமன்ற பணி பொன் விழாவையொட்டி நதி நீர் இணைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு வைக்கின்றேன். அதனை பிரதமரும், சோனியாவும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

2011 சட்டப் பேரவை தேர்தலில், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் “மாநிலங்களுக்கிடையிலான நதிகளை தேசியமயமாக்குவது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாக அரசமைப்புச் சட்டம், மத்தியப் பட்டியலில் 56ஆவது பதிவில் காணப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே நீண்டகாலத் தீர்வாக அமையும் என்பதால், அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

முதற்கட்டமாக, வருகின்ற 12ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தென்னக நதிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவோம். இவ்வகையான பாசனத் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களாக ஏற்று முழு நிதியுதவிகளை மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டுமெனக் கோருவோம்” என்று தெளிவாக அறிவித்துள்ளது.

கடந்த 2006 – 2011 தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குத் திட்டமாக, ரூ.369 கோடி மதிப்பீட்டில் நெல்லை சீமையில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டு பணிகள் இரண்டு ஆண்டு காலமாக சிறப்பாக நடந்தேறி வருகிறது. அதுபோன்று தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ரூ.180 கோடி மதிப்பீட்டில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டமும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களாகும். இதை வெற்றிகரமாக தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.

இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்ற வகையில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம், ரூ.369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது. தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்படும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008இல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்கு குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகின்றது. இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாக பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்கு பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டத்தை இதயசுத்தியான அக்கறையோடு, தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் தீவிர அறுவை சிகிச்சையின்போது மருத்துவமனை படுக்கையிலிருந்து துவக்கி வைத்தார் என்றால், அதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும்.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கின்றது. பாபநாசம் அணையில் துவங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகின்றது. இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்த பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி; விவசாயமும் அங்குள்ள மக்களுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். தலைவர் கலைஞர் அவர்களின் இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தை வளம் பெற செய்யும். இதுபோன்றே காவிரி – குண்டாறு நதி நீர் திட்டம், வீணாகும் நதி நீரை பாடுபடும் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் தீட்டப்பட்ட திட்டமாகும். கங்கையும் – காவிரியும் குமரியை தொட வேண்டும் என்ற நிலைக்கு தமிழகத்தில் நடைபெறும் இந்த இரண்டு நதி நீர் இணைப்பு திட்டங்களும் முன்னோடியாக விளங்குகிறது. தேசிய நதி நீர் அனைத்தும் இணைத்து இந்தியாவை வளப்படுத்த தி.மு.க. என்றைக்கும் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது.

கங்கை – காவிரி இணைப்பு 1834இல் சர். ஆர்தர் காட்டன் காலத்தில் பேசப்பட்டு தொடர்ந்து விவாதமாக இருப்பது நடைமுறைக்கு வரவேண்டும். தமிழ்நாட்டில் மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீர் கிட்டத்தட்ட 35 சதவீதம் வீணாக கடலில் கலக்கின்றது.அதை பயன் உள்ள வகையில் பயன்படுத்தவே தலைவர் கலைஞர் அவர்களின் நதி நீர் திட்டங்களாகும். ஐ.நா. மன்றம் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் 40 சதவீத நிலத்தடி நீரும் வற்றி விடும் என்று உலக வங்கி கடந்த 12.3.2010இல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில் 615 பாதைகள் நீரோட்டம் குறைந்தும், 108 பாதைகளில் நீர் வற்றி விடும் என உலக வங்கியின் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அபாயகரமான நிலையைப் போக்க தலைவர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையான இந்த நதி நீர் இணைப்புகள் அவசிய திட்டங்கள் ஆகும் என்று எதிர்கால வரலாறு பறைசாற்றும்.

– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons