காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகாமல் இருந்ததுதான்.
1924ஆம் ஆண்டில் இந்தப் பிரச்சினை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே எழுந்தது. இந்தப் பிரச்சினையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என கடந்த காலங்களில் தில்லிக்கும், சென்னைக்கும், பெங்களூருக்கும் போவதும் வருவதுமாக இருந்தார்களே ஒழிய, இதில் வேறு எந்த முடிவும் யாரும் எடுக்கவில்லை.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் துணை நதிகளான ஹேமாவதி, கபினி ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டின. இதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு மட்டும் தெரிவித்துவிட்டு இருந்துவிட்டது. மத்திய அரசு இதில் பாராமுகமாக இருந்தது. அதைப் போல, மேக்நாட் அணையைக் கட்டும்போது அதை எதிர்த்து தமிழக அரசும் மத்திய அரசும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால், ஒப்பந்தப்படி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டும்பொழுது, தமிழக அரசு கர்நாடக அரசுக்கும் சம்மதம் தெரிவித்த பின்புதான் அணைகளைக் கட்ட வேண்டும். இந்த அணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்துக்கு வரவேண்டிய நீர் தடுக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு தமிழக, கர்நாடக முதலமைச்சர்களை அழைத்துப் பேசிய பின், காவிரிப் பிரச்சினை பற்றிய விவரங்களை திரட்ட மத்திய நீர்ப்பாசன அமைச்சர் கே.எல்.ராவ் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் தமிழக, கர்நாடக முதலமைச்சர்களை அழைத்துப் பேசினார். அந்த அறிக்கையில் காவிரி துணை நதிகளில் நீர் இல்லை என்றுதான் சொல்லப்பட்டது. தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீர் பற்றி அந்தச் சந்தர்ப்பத்தில் முடிவு எடுக்கவில்லை. கர்நாடக அரசு பின்பு காவிரியில் பல அணைகளைக் கட்ட ஆரம்பித்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு எதிராக அணைகள் கட்ட இடைக்காலத் தடை வழங்க வேண்டுமென்று கேட்டபொழுது, கர்நாடக அரசு அணைகளைக் கட்டிப் பூர்த்தி செய்துவிட்டது. அதனால் இந்த வழக்கு அவசியமற்றதாகி விட்டதென்று கருதப்பட்டது. கர்நாடக அரசு காவிரிப் பிரச்சினையில் தொடர்ந்து தவறு செய்தபோது தமிழக அரசு நடவடிக்கைகளில் ஈடுபடத் தவறிவிட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அமைச்சர் ஜெகஜீவன் ராம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. வழக்கைத் திரும்பப் பெறாமல் அவகாசம் கோரியிருந்தால் காவிரிப் பிரச்சினையில் டிரிப்பியூனல் அன்றைக்கே அமைக்கப்பட்டு இருக்கும். மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஓர் ஈடுபாட்டோடு நடந்து கொள்ள முன்வரவில்லை. ஏனென்றால், அன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு இந்தப் பிரச்சினையில் அதிக நாட்டம் செலுத்தாமல் இருந்தது.
மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் மௌனம் சாதிப்பதை தன்னுடைய கொள்கையாக ஆக்கிக் கொண்டுவிட்டது. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மத்திய அரசு அரசியல் நெருக்கடிகளுக்கு மட்டும் பணிந்து வந்தது. தேசிய முன்னணி, மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பொழுதுதான் காவிரி டிரிப்பியூனல் அமைக்கப்பட்டது.
நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், மத்திய அரசு சரியாக செயல்படுத்தாத காரணத்தினால் தான் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீருக்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. தமிழக முதல்வர் உண்ணாவிரதம் வெறும் வீண் போராட்டமாகி விட்டது. அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை.
ஆனால், இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதை எதிர்த்து அன்றைக்கு இருந்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால், இறுதியில் கர்நாடக அரசு அந்த வழக்கில் தோற்றுவிட்டது. நடுவர் மன்றத்தில் தமிழக அரசு இடைக்கால நிவாரணமாகத் தண்ணீர் வழங்க வேண்டுமென்று கேட்டபோது, அதற்குக் கர்நாடக அரசு நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தன்னுடைய எதிர்ப்பைத் தெவிரித்தது. இதனால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. நடுவர் மன்றத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க அதிகாரம் உண்டு என்று உச்சசீநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த அடிப்படையில் நடுவர் மன்றம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. காவிரி ஆற்றில் இனிமேல் புதிய ஆயக்கட்டுகள் எதுவும் கட்டக் கூடாது என்றும் நடுவர் மன்றம் ஆணையிட்டது. மத்திய அரசும் பல நடுவர் மன்றங்களை அமைத்து இருந்தாலும், அதில் அந்த நடுவர் மன்றங்கள் எதுவும் இடைக்கால நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. ஆனால் காவிரி நடுவர் மன்றம் மட்டும் இடைக்கால நிவாரணம் வழங்கியது. அந்த இடைக்கால நிவாரணம் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஓர் அரசே மதிக்கவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்.
மத்திய அரசு தாராளமாக இந்திய அரசியல் சட்டத்தின் 356வது பிரிவின்படி அந்த மாநில அரசைக் கலைக்கலாம். ஆனால், மத்திய அரசு தன்னுடைய கட்சி, கர்நாடக அரசில் இருப்பதால் எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. இன்றைக்குள்ள அ.தி.மு.க. அரசும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லையென்று அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அவ்வாறு செய்யவில்லை.
காவிரிப் பிரச்சினையை அரசியல் இலாப அடிப்படையில் மத்திய அரசுத் தலைவர்கள் பார்க்கிறார்களே ஒழிய, உண்மையில் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று செயல்படவில்லை என்பது புலனாகிறது.
எனவே, கீழ்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
1.1924ஆம் ஆண்டு உடன்படிக்கை இன்னும் செல்லத்தக்கது என அறிவிக்க வேண்டும்.
2. சாதாரண வருடங்களில் 28.2 இலட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனத்திற்கு முழுப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.
3. 1974ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்த யோசனைப்படி தமிழகத்தில் 205 டி.எம்.சி. நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது தமிழ்நாட்டின் நலனுக்குப் பாதகமானது. தமிழ்நாட்டில் காவிரிப் பாசன விவசாயிகளின் நியாயமான உரிமைகளை இது பெரும் அளவுக்கு பாதிக்கும். எனவே இதை ஏற்கக் கூடாது.
4. மேட்டூருக்கு வரும் நீர் குறைக்கப்படுவதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை மத்திய அரசு ஈடுகட்டித் தர வேண்டும்.
5. 1972ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த காவிரி உண்மை அறியும் குழு கூறிய பரிந்துரையான பற்றாக்குறை ஆண்டுகளில் புதிய பாசனத்தைவிட, பழைய பாசனத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வறட்சி ஆண்டுகளில் புதிய பாசனம் மேற்கொள்ளக் கூடாது என்பதோடு, கிடைக்கும் நீரை காவிரிப் படுகை மாநிலங்களுக்கிடையே அவற்றின் பாசனத் தேவைகளுக்கேற்ப பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நடைமுறை படுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
6. காவிரிப் பிரச்சினை தீருகிறவரை, புதிய அணைகளையோ, பாசனக் கால்வாய்களோ அமைக்கக் கூடாது. மேலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகள் கட்டப்பட மாட்டாது என்று கர்நாடக அரசிடம் மத்திய அரசு உறுதி மொழி வாங்க வேண்டும்.
7. காவிரி மற்றும் துணை நதிகளின் அணைகளில் உள்ள நீரின் அளவை, உடனடியாகக் கண்டறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே முகமாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இந்தப் பிரச்சினையில் அரசியல் கட்சிகள் வேறுபட்டு தங்களுடைய அரசியல் இலாபத்திற்கு காவிரிப் பிரச்சினையைப் பயன்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் 1990ஆம் ஆண்டு தி.மு.க. அரசு நடைபெற்றபோது அன்றைய பிரதமர் வி.பி. சிங்கை சந்திக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியிலுள்ள ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் அளித்த மனுவில் கையெழுத்திட்டனர். காவிரிப் பிரச்சினையில் அனைத்து கட்சிகளையும் சார்ந்த தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரைச் சந்தித்துப் பிரச்சினைக்கு வலுவூட்ட தவறினர் என்பதே உண்மை.
– தினமணி, 10.12.1992