காவிரி : பின்னணி
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
காமர்மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி..
வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவேரி, அகன்ற காவிரி என்று வணங்கப்பட்ட காவிரித் தாய்க்கு ஒரு நெடிய வரலாறு உண்டு.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காவிரி பகுதியில்தான் நீர் மேலாண்மை அமைந்து இருந்தது. கரிகாலச் சோழன் கல்லணை கட்டியது, இரண்டாவது ராஜராஜ சோழன் காவிரி நீரை தமிழகத்துக்கு மீட்டு வந்தது வரலாற்றுச் செய்தியாகும். 17ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர் கட்டிய அணையில் சரிநிகர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களும், ராணி மங்கம்மாள் படைகளும் மீட்கச் சென்றது இன்றைக்கும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றது. மைசூரை ஆண்ட திப்புசுல்தான் 1794இல் காவிரியின் குறுக்கே அணை கட்ட அடிக்கல் நாட்டினார். பிரிட்டிஷ் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்டதால் இந்த முயற்சி நிறைவேறவில்லை.
மூதறிஞர் இராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது குறுவைப் பயிருக்குத் தண்ணீர் இல்லாமல் தமிழகம் வாடியபோது, காவிரி தண்ணீர் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தை அனுப்பி அணையைத் திறப்பேன் என்று அன்றைக்கு மைசூர் திவானாக இருந்த தன் சீடரான அனுமந்தப்பாவிடம் கோரிக்கை வைத்தார். உடனே அலறி அடித்து அணையைத் திறந்தார் அனுமந்தப்பா.
கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடி மட்டத்தில் சிற்றோடையாக தலைக்காவிரி என்ற இடத்தில் இருந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், பிரம்ம கிரி மலையில் காவிரி உற்பத்தி ஆகிறது. பின் ஹேமாவதி, ஹேரங்கி, இலட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி ஆகிய துணை நதிகள் அங்கு காவிரியில் கலந்தபின் சிம்சா, அர்ககவதி ஆகிய துணை நதிகள் அதன் இடப்பக்கத்தில் சேர்கின்றன. தமிழகத்தை நோக்கி வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் புகையுள்ள பாறை என்றழைக்கப்படும் ஒக்கனேக்கலில் 100 அடி உயரத்திலிருந்து பெரும் அருவியாக தமிழகத்தில் பிரவேசிக்கின்றது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகளும் தமிழ் மண்ணில் காவிரியுடன் சேர்கின்றன. இங்குதான் அகன்ற காவிரி ஆகின்றது. திருச்சியில் உள்ள அமலணையில் 2 கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்தும், அகலமாகவும் காவிரித் தாய் காணப்படுகின்றாள்.
கல்லணைப் பகுதியில் காவிரியில் இருந்து பெண்ணாறு பிரிகிறது. மொத்தம் 36 கிளை நதிகளாக காவிரி பரவிச் செல்கிறது. இறுதியாக பூம்புகாரில் கடலில் கலக்கின்றது. இதுதான் நடந்தாய் வாழி காவேரி. மொத்தம் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரியில் 320 கிலோ மீட்டர் கர்நாடகத்திலும், 416 கிலோ மீட்டர் தமிழகத்திலும், 64 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியிலும் ஓடுகின்றன.
1892இல் மைசூர் மற்றும் சென்னை மாகாண அரசுகளுக்கு ஒரு ஒப்பந்தம் காவிரி சிக்கலில் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி காவிரியின் துணை நதிகளில் அணை கட்டும்போது சென்னை மாகாணத்தினுடைய இசைவைப் பெற வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் நீர்த்தேக்கம் கட்டி 11 டி.எம்.சி. கொள்ளளவு உரயமும், 41 டி.எம்.சி. நீரைத் தேக்குவதற்கான உயரத்திற்கேற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்ளலாம் எனக் கூறியது. இதனடிப்படையில் சென்னை மாகாணமும் அனுமதி அளித்து 1911இல் அணை கட்டுமானப் பணி தொடங்கி, இறுதியாக மைசூர் அரசு இந்த ஒப்பந்தத்தை மீறியதாக சென்னை மாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு பிரிட்டிஷ் அரசு விசாரணை செய்து 1913ஆம் ஆண்டு நீதிபதி ஹென்றி கிரிஃப் நியமித்து மைசூர் அரசு அணை கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. சென்னை மத்திய அரசுக்கு மேல் முறையீடு செய்து அந்தத் தீர்ப்பும் மைசூருக்கு சாதகமானது. அதன் பின்னர் இங்கிலாந்தில் உள்ள இந்திய அரசிற்கான செயலாளருக்குத் திரும்பவும் மேல்முறையீடு செய்து சென்னை மாகாணம் தனக்கு ஏற்றத் தீர்ப்பை பெற்று மைசூர் அணை கட்டும் திட்டத்தை ரத்து செய்தது. இப்பிரச்சினையில் தொடங்கி பேச்சுவார்த்தைகள் இரண்டு அரசுகளும் பேசி இறுதியாக 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் நாள் தற்போது பிரச்சினைக்குள்ளான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.