கோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்
பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது. ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் அமைய இருக்கும் புதிய சட்டமன்றத்தில் இனிமேல் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை வளாகத்திற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. 1640இல் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ராபர்ட் கிளைவினுடைய திருமணம் நடைபெற்ற புனித மேரி தேவாலயம் 1678இல் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஆளுநராக இருந்த யேல் அவர்களின் முயற்சியினால், ஆசியாவிலேயே உயரமாக அமைக்கப்பட்ட கோட்டை கொத்தளம்தான் இன்றைக்கும் கொடிமரமாக காட்சி தருகின்றது. இந்த கொடிமரம், 1687ஆம் ஆண்டு வீசிய புயலில் சிக்கி தரை ஒதுங்கிய லாயல் அட்வென்சர் என்ற கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே நிறுவப்பட்டது.
பல்லாவரம் தூண்கள் என்று சொல்லப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க இந்த கறுப்புத் தூண்களை மோர்ட்டன் பிட் என்பவர் 1732இல் நிறுவினார். இவருக்கு விலை உயர்ந்த பொருள்களின் மீது எப்போதுமே ஒரு பிடிப்பு இருந்தது. அதன் காரணமாக இந்த விலை உயர்ந்த 32 கிராணைட் தூண்களை இங்கே நிறுவி அழகு செய்தார். ஆனால் பின்னர் 1746ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது பிரெஞ்சுகாரர்கள் இந்த தூண்களை புதுச்சேரிக் கொண்டு சென்று விட்டனர். பின்னர் நடைபெற்ற போர்களில் பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட பிறகு அங்கிருந்த இந்த தூண்கள் மீண்டும் இங்கே கொண்டு வரப்பட்டு கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டது. அப்போது இம்மண்டபம் விருந்தினர் மண்டபமாக இருந்தது. பின்னர் எட்வர்ட் கிளைவ் பதவி காலத்தில் புதிதாக ஒரு விருந்தினர் மண்டபம் உருவாக்கப்பட்டதால் இம்மண்டபம் ஆவண காப்பகமாக மாறியது. அதற்கு பிறகு 1910இல் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டபோது இத்தூண்கள் அங்கே அமைக்கப்பட்டன. இப்பொழுதும் இவை கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.
ஆரம்ப காலத்தில் சட்டமன்றம், மதராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. இதில் 127 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களின் பதவி காலம் மூன்றாண்டுகளாக இருந்தது. 1922ஆம் ஆண்டில் இந்த கவுன்சில் தனித்து இயங்கும் அமைப்பாக உருவானது. அன்று சென்னை ராஜதானி எனபட்டது வடக்கே ஒரிசா எல்லையையும், வடமேற்கே தெற்கு கர்நாடகம், மேற்கே கேரளம் போன்றவற்றை எல்லைகளாக கொண்டிருந்தது. அந்த சட்டப் பேரவையில் சஞ்சீவ ரெட்டி, ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாடு, நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் 1920இல் நடைபெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல்வர் பொறுப்பேற்றார். அப்போது முதலமைச்சரை ‘பிரிமீயர்’ என அழைப்பர். இந்த சட்டமன்றத்தை 1921இல் கன்னாட் கோமகன் துவக்கி வைத்தார். 6.3.1922இல், ஆளுநராக இருந்த வெலிங்டன் அவர்கள் இங்கு வந்தபொழுதுதான் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இருக்கை பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டு, அந்த இருக்கையே இன்று வரையும் பேரவைத் தலைவரின் இருக்கையாக உள்ளது. அப்போது உரையாற்றிய வெலிங்டன் பிரபு, தனது பாட்டனார் இங்கிலாந்திலுள்ள ஹவுஸ் ஆஃப் காமனில் பேரவைத் தலைவராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகாலம் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இதில் பனகல் அரசர், பி.சுப்பராயன், பி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், பி.டி.ராஜன் போன்றோர் முதல்வராக இருந்துள்ளனர். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் தான், முதல் கம்யூனல் ஜி.ஓ., பெண்களுக்கான வாக்குரிமை போன்ற சரித்திர சாதனைகள் படைக்கப்பட்டன.
1937 நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இருப்பினும் அமைச்சரவை அமைக்க காங்கிரஸ் முயலவில்லை. இதனால் கே.வி.ரெட்டி இடைக்கால முதல்வரானார். பின்னர் 14.7.1937 அன்று காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. மூதறிஞர் இராஜாஜி முதல்வர் பொறுப்பேற்றார். அன்றைய காலகட்டத்தில் சட்டப் பேரவை சென்னைப் பல்கலைக் கழக செனட் ஹாலில் நடைபெற்றது. பின்னர் கிட்டத்தட்ட 20 மாதங்கள் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி மண்டபத்தில் சட்டப்பேரவை நடைபெற்றது.
1946இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தற்பொழுது சட்டப்பேரவை நடைபெற்று வரும் புனித ஜார்ஜ் கோட்டையின் மண்டபத்தில்தான், ஆந்திரகேசரி டி.பிரகாசம் முதல்வராக பொறுப்பேற்றார். டி.பிரகாசம் அமைச்சரவை பதவி விலகியபின், ஓமந்தூர் ரெட்டியார் முதல்வரானார். இவரது ஆட்சியின்போதுதான், 15.8.1947இல் இந்தியா விடுதலை பெற்றது. தமிழகத்தில் முதல் சுதந்திர நாளை கொண்டாடிய பெருமை ஓமந்தூர் ரெட்டியாரையே சாரும். இதை நினைவு கூறும் வகையில், ‘கவர்ன்மெண்ட் எஸ்டேட்’ என்று இருந்த பகுதிக்கு ‘ஓமந்தூரார் வளாகம்’ என பெயர் சூட்டப்பட்டது.
1950இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. 1952இல் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அப்பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 375ஆக இருந்தது. இடப்பற்றாக் குறையின் காரணமாக, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடமான பாலர் அரங்கத்தில் கூட்டப்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சி காலத்தில் கலைவாணர் அரங்கம் என பெயர் மாற்றப்பட்டது.
1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின்பு தொடர்ந்து 53 ஆண்டுகாலமாக புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 20.4.1959 – 30.4.1959 வரை உதகையில் உள்ள அரண்மூர் மாளிகையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துள்ளது. ஓமந்தூர் ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மையார், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்வர் இருக்கையை அலங்கரித்துள்ளனர்.
இந்த சட்டமன்றத்தில் புகழ்பெற்ற பல சட்டங்கள், தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டன. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் – 1.4.1921; பஞ்சமர், பறையர் என ஒடுக்கப்பட்டவர்களை அழைப்பது தவிர்க்க எடுக்கப்பட்ட தீர்மானம் – 20.1.1922; கோவில்களில் நுழைவதற்கான சட்டம்; கைத்தறி துணிகளுக்காக ஒரு சில ரகங்களை ஒதுக்கும் தீர்மானம் – 3.11.1952 போன்றவை குறிப்பிடத்தக்கதாகும்.
1928ஆம் ஆண்டில், மகாகவி பாரதியின் பாடல்கள் அடங்கிய நூல்களை சென்னை நகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து சட்டப்பேரவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றை சத்தியமூர்த்தி ஐயர் கொண்டுவந்தார். பாரதியார் பாடல்கள் பற்றிய சர்ச்சை நீதிமன்றத்தில் இருப்பதால் இதற்கு பேரவைத் தலைவர் மறுப்புத் தெரிவித்தார். விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது சத்தியமூர்த்தி அவர்கள் பாரதியாரின் பாடல்களை பேரவையில் பாடியதோடு மட்டுமல்லாமல், பாரதியாரின் நூல்களை பறிமுதல் செய்வது தவறு என்று பேசினார்.
29.7.1953 அன்று முதல்வராக இருந்த இராஜாஜி அவர்கள் குலக்கல்வி முறையை அமல்படுத்தும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதனை எதிர்த்து ஒரு திருத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக 1954ஆம் ஆண்டில் இத்திட்டத்தை ராஜாஜி திரும்பப் பெற்றார்.
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் ஆகியோர் இந்த சட்டப்பேரவையில் நிகழ்த்திய விவாதங்களை கண்டு ஆங்கிலேயர்களே வியந்தனர். அவர்களின் ஆங்கிலப் புலமையை கண்டு மிகுந்த ஆச்சரியமுற்றனர். இதில் ஒரு ஆங்கிலேயர் இராமசாமி முதலியாரிடம் ‘நீங்கள் பேசும் ஆங்கிலம் மிக நன்றாக உள்ளது. எங்களை காட்டிலும் அற்புதமாக பேசுகிறீர்களே’ என்று ஆச்சரியப்பட்டு கேட்டார். அதற்கு இராமசாமி முதலியார் அவர்கள் ‘நீங்கள் ஆங்கிலத்தை இலவசமாக பெற்றுள்ளீர்கள். நாங்களோ அதனை காசு கொடுத்து அல்லவா கற்று கொண்டிருக்கிறோம்’ என்று நகைச்சுவை உணர்வோடு கூறினார்.
அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் பேரவையில் அண்ணாவும், உறுப்பினர்களும் விலைவாசி கடந்த காலத்தைவிட தற்பொழுது குறைந்துள்ளது என கூறினர். இதனை கேட்ட ஒரு உறுப்பினர், “புளியின் விலை குறைந்துள்ளதே, அது யாருடைய சாதனை?” என கேள்வி கேட்டார். அதற்கு முதல்வராக இருந்த அண்ணா அவர்கள் “அது புளியமரத்தின் சாதனை” என்று சமயோசிதமாக கூறினார்.
அப்துல் லத்தீப் அவர்கள் “கூவம் ஆற்றில் அசுத்தம் குறைக்கப்பட்டு, அங்கே முதலலைகளை விட அரசு முயற்சிகள் எடுக்குமா?” என்று கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர் அவர்கள் “ஏற்கனவே கூவத்தில் ஏகப்பட்ட ‘முதலை’ போட்டுள்ளோம்” என்றார். அந்த காலகட்டத்தில் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி படகு போக்குவரத்து ஆரம்பிக்க தமிழக அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்தது. அதனை குறிப்பால் உணர்த்தவே முதல்வர் அவர்கள் முதலை போட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
“குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முதல்வரின் கடைக்கண் பார்வை குமரி பக்கம் திரும்புமா” என நூர்முகமது அவர்கள் வினா ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர் அவர்கள் “குமரி மீது கடைக்கண் வீசும் வயது எனக்கு இல்லை” என்று நகைச்சுவையாக கூறினார்.
இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் விவாதங்கள் நகைச்சுவையாகவும், விவேகமாகவும் இந்த சட்டமன்றக் கட்டடத்தில் நடைபெற்றுள்ளன.
தமிழ்நாடு பெயர் மாற்றம், மாநில சுயாட்சி, நிலச் சீர்திருத்த திட்டங்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் என, இன்றைக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வரை எண்ணிலடங்கா திட்டங்கள் இச்சட்டப் பேரவை மண்டபத்தில் தீட்டப்பட்டன. அவையாவும் தமிழகத்தை நல்வழிபடுத்த பயன்படுத்தப்பட்டன. இந்த சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பல திட்டங்கள் இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டியாக இருந்துள்ளது. குறிப்பாக மாநில சுயாட்சிக்காக தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் பரவியது. இந்த தீர்மானத்தை கலைஞர் முன் மொழிந்தார். பேரறிஞர் அண்ணாவின் கனவான மாநில சுயாட்சி பற்றிய தீர்மானம் இந்த சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது ஒரு பொற்கால நிகழ்ச்சியாகும். தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்க பல நேரங்களில் இதே அவையில் விவாதங்கள் நடைபெற்றன.
தமிழக சட்டப் பேரவையின் அவைத் தலைவராக முதன் முதலாக பொறுப்பேற்றவர் புளுசு இராமமூர்த்தி ஆவார். இவருக்கு பின்பு பேரவைத் தலைவராக பொறுப்பேற்றவர்கள் சட்ட மன்றத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் பாதுகாத்து வந்தனர். இவர்களுள் சிலர் பேரவைத் தலைவரின் மாண்புகளை விட்டு கொடுத்தனர். ஆனால் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் போன்றவர்கள் பேரவைத் தலைவரின் மாண்பையும், சட்டமன்றத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்தையும் பாதுகாத்தனர். இதோடு மட்டுமல்லால் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது என கறாராகவும், கண்டிப்பாகவும் இருந்தனர். ஒரு சில பேரவைத் தலைவர்கள் சட்டமன்றத்தின் மரபுகளை மழுங்கடிக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அதையெல்லாம் குறிப்பிட்டு பேசுவது சட்டமன்றத்தின் வரலாற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.
பேரவையில் ஒவ்வொரு நாளும் பேரவைத் தலைவர், திருக்குறள் ஒன்றினைப் படித்த பின்னர்தான் அவையின் அலுவல்கள் துவங்கப்பட வேண்டும் என்ற முறை, சி.பா.ஆதித்தனார் காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது.
சட்டப்பேரவையின் மேலவையை கலைத்தது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. சட்டமன்றமும், மேலவையும் கப் அண்டு சாஸர் என்று கூறும் வகையில் இருந்தது. இந்த மேலவையில் அறிவுஜீவிகள், அற்புத ஆலோசனைகளை கூறும் சான்றோர்கள் போன்றோர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த மேலவையை எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் கலைத்தார். இந்த சூழலில் சட்டமன்றத்தின் மாண்பை காக்க வேண்டிய முக்கிய புள்ளிகள் பலரும், பலவிதமான பிரச்சினைகளை கொண்டு வந்த செய்திகளும் உண்டு. வளைவு அதிகாரம், சட்டமன்ற – உயர்நீதிமன்ற மோதல் என பல நிகழ்வுகள் நடந்தேறின.
தற்பொழுது, புதிதாக கட்டப்படுகின்ற சட்டமன்றத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஆறு தளங்கள் சட்டமன்றத்திற்கும், ஏழு தளங்கள் தலைமை செயலகத்திற்கும் என பிரமாண்டமாக, ஜெர்மன் தொழில் நுட்பத்தில், சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வருகிறது புதிய சட்டமன்றம். பல்வேறு நவீன வசதிகளுடன் அரங்குகள், நூலகம், அலுவலகம் போன்றவை கொண்டு அமைய உள்ளது.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்