கோளாறில் – கோலார் தங்க வயல்!
கோலார் தங்கச் சுரங்கத்தை 188ல் ஓர் ஆங்கிலேய நிறுவனம் தொடங்கியது. ஜான் டெய்லர் தொடங்கிய இந்த தங்கச் சுரங்கம், பாரத் தங்கச் சுரங்க லிமிடெட் என அழைக்கப்பட்டது. மைசூர் மைன்ஸ், சாம்பியன் ரீஃப், நந்திதுர்கம் மைன்ஸ் என்ற முக்கிய மூன்று சுரங்கங்கள் இங்கு உள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் அச்சமயம் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர்.
நாட்டின் விடுதலைக்குப் பின் 1956இல் இந்திய அரசு இந்தத் தங்க வயலை எடுத்துக் கொண்டது. ஒரு டன் மணலிலிருந்து 100 கிராம் தங்கம் கிடைத்தது. நாளடைவில் தங்கத்தின் அளவு குறைந்து, ஒன்ளரை கிராம் என்ற நிலைக்கு சரிந்து விட்டது. இதனால் நஷ்டம் என்று அரசு கூறுகிறது. இதின் இன்னோர் உண்மை என்னவெனில் ஆங்கில கம்பெனியிடமிருந்து இந்த சுரங்கத்தை அரசு ஏற்கும்பொழுது லண்டன் தங்கமார்கெட் நிலவரப்படிதான் தங்கத்தை அரசு வாங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இதனால், தங்கம் விலை அதிகமாக இருந்தபொழுதும் சரி பாதி விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்தது. இதனால் நஷ்டம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி 2001 மார்ச் 1ஆம் தேதி தங்க வயல் மூடப்பட்டது. தற்பொழுது தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். கோலாகலமாக இருந்த கோலார் மயான பூமி போல் காட்சியளித்தது.
கோலாரில் தொடர்ந்து தமிழர்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அவர்களுக்காகக் குதல் கொடுத்தன. அண்ணா, பி.இராமமூர்த்தி போன்ற மூத்தத் தலைவர்கள் இதுகுறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர். 1941இல் கோவிந்தன், வாசன் என்ற தொழிலாளர்கள் போராடி உரிமைகளை நிலைநாட்டினர். 1946இல் 70 நாள் நடந்த போராட்டத்தில் 32,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஏ.கே.கோபாலன், பி.இராமமூர்த்தி போன்றவர்கள் இந்தப் போராட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் உறுதுணையாக நின்றனர். துப்பாக்கிச் சூட்டில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தமிழக சட்டமன்றத்திலும் கோலார் தமிழர்களின் உரிமைக்காக பலர் வாதிட்டுள்ளனர். 1980களின் தொடக்கத்தில் கோலார் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது, அங்கு பழ.நெடுமாறன் சென்று வந்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தார். கோலார் தங்க வயலுக்கு உழைக்கச் சென்ற தமிழ் மக்களின் வேதனைக் குரல் ஒரு நூற்றான்டாக ஒலிப்பது தொடர்கதையாக இருக்கிறது.
இன்றைக்கு அங்கு நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. தொழிலாளர்க்கு மத்திய அரசு அளித்த உறுதியின்படி 100 சதவீதம் இழப்பீடு, குடியிருக்க வீடு மற்றும் சுரங்கத்திற்கு சொந்தமான 12,000 ஏக்கர் நிலத்தைத் தொழிலாளர்களுக்கு தங்கள் ஜீவனத்திற்காகப் பிரித்து தருமாறு கோரிக்கைகளை வைத்துப் போராடி வருகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தீபங்கள் முகர்ஜி தலைமையில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலாவைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இச்சுரங்கத்தில் உள்ள 12,000 ஏக்கர் நிலத்தையும், ரூ.15,000 கோடி மதிப்புள்ள தங்கத்தையும் சுமார் 200 கோடிக்கு ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. தற்பொழுது இருக்கின்ற 33 மில்லியன் டன் மணலில் தங்கத்தை எடுக்க இந்த ஆஸ்திரேலிய நிறுவனம் முழு முனைப்பாக இருக்கின்றது. இன்றைக்கு கோலாரில் தமிழர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்துத் தொழிலாளர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையான 100 சதவீத விருப்ப ஓய்வு கொடுப்பது அல்லது வேலை வேண்டுவோருக்கு தொழிலாளர்கள் வாங்கிய அதே ஊதிய விகிதத்தில் பணியமர்த்துவது என்ற கோரிக்கையை தொழிலாளர் அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
தில்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, சுரங்கத்துறை அமைச்சர் சிஸ்ரா மோலா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஜே.டி.யூ.எப்., குளோபல் கோல்டு மைன் ஆகியவை சுரங்கத்தை நடத்தத் தயாராக உள்ளது குறித்து தெரிவித்தன. இதுகுறித்து திட்ட அறிக்கையும் மத்திய அரசுக்கு அளித்துள்ளன. ஆனால் இந்த இரு அமைப்புகளில் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை ஒரு வார காலத்துக்குள் தெரிக்க வேண்டும். பின்னர் சுரங்கத்தை தொடர்ந்து நடத்த யாருக்கு அனுமதிப்பது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தாகத் தெரிகிறது. இதனால் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று நிரூபிப்பதற்காக போட்டிகள் நடக்கின்றன.
சுரங்கத்தைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்குவது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தால் மட்டுமே சட்ட ரீதியாக செல்லும் என்று கருதப்படுவதால் மத்திய அமைச்சயவையைக் கூட்டி இப்பிரச்சினைக்கு முடிவெடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். தங்களது ஆசையை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் தொழிலாளர்கள்.
கோலாறில் உள்ள (பிரச்சினையில் உள்ள) கோளாறிற்கு என்றைக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு அங்கு வாழும் தமிழர்களுக்குத்தான்.
அண்டைய மாநிலங்களுக்குத் தமிழகம் செய்கின்ற உதவிகளை அந்த மாநில நிர்வாகங்கள் சற்றும் சிந்திப்பது இல்லை. கர்நாடகத்திற்கு மின்சாரத்தை அளிக்கின்றோம். குடகுமலை காபி தோட்டங்களிலும், பெங்களூர் போன்ற இடங்களிலும் தமிழர்கள் தங்கள் உழைப்பைக் கொடுத்து அப்பகுதிகளை வளப்படுத்தினாலும் காவிரி பிரச்சினையிலும், கோலார் தங்க வயல் பிரச்சினையிலும் கர்நாடகம் போதிய அக்கறை எடுக்கவில்லை என்பது வேதனை தருகின்ற செய்தியாகும். அதுபோலவே கேரளத்திற்கு மின்சாரம், அரிசி, மாட்டுத் தீவமம் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் தமிழகத்திலிருந்து சென்றாலும் கேரளத்தில் மேற்கு நோக்கி பாயும் நதி நீர் பிரச்சினையிலும், அச்சன்கோவில், பம்பை – வைப்பாறு பிரச்சினையிலும், ஆழியாறு பரம்பிக்குளம், முல்லைப் பெரியாறு மற்றும் கம்பம் பகுதியில் உள்ள கண்ணகி கோவில் பிரச்சினையிலும் கேரள அரசு நடந்து கொள்வதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கோலாரில் இருக்கும் கோளாறைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவசர அவசியமாக மேற்கொள்ள கர்நாடக அரசும் மத்திய அரசும் முனைப்புக் காட்ட வேண்டும்.
– தினமணி, 11.05.2005