சுவாமிநாதன் கமிட்டி என்ன சொல்கிறது?

சுவாமிநாதன் வேளாண் விஞ்ஞானி. அகில இந்திய வேளாண்மைத் திட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு என்ன விலை வைப்பது என்பது பற்றி அவர் தலைமையில் அமைந்த கமிட்டி அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தார். அதாவது ஒரு விவசாயி ஒரு பயிர் செய்து விளைச்சலை எடுப்பதற்கு என்னென்ன செலவுகள்: உரம், பூச்சி மருந்து, களையெடுப்பு, உழவு, தண்ணீர் கட்டுதல், அறுவடை செலவு என அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு அதற்கு மேல் 50 சதவீதம் கூட்டி விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றார். அதாவது செலவு 100 ரூபாய் என்றால் அதற்கு மேல் 50 ரூபாய் வைத்து விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்றார். இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.
வேளாண் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. வேளாண் கல்லூரிகள் இருக்கின்றன. அரசாங்க வேளாண்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களிடம் நிலத்தை ஒப்படைத்து வேளாண்மையைச் செய்து காட்டச் சொல்லவேண்டும். அவர்கள் செலவழித்து, விளைவித்து அறுவடை செய்யும் வரை உள்ள செலவுகளைக் கணக்கிட்டு ஒவ்வொரு பொருளுக்கும் விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்.அப்போதுதான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்களும் அவஸ்தைகளும் அதிகாரிகளுக்குப் புரியும். அரசாங்கம் நடத்தியவிவசாயப்பண்ணைகளையெல்லாம் மூடியாகிவிட்டது. ஏன் மூடினார்கள்?
அதிகாரிகள் பேப்பர் என்ற நிலத்தில் பேனா என்ற ஏர் பூட்டி விளைவித்து அறுவடை செய்து விளைச்சல் இவ்வளவு என அறிக்கை தருவதில் வல்லவர்களாக உள்ளனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு வியாபாரிதான் விலை நிர்ணயம் செய்கிறார். தான் லாபம் அடைவதற்குத்தான் அவர் பாடுபடுவார். விவசாயிகள் நன்றாக இருக்கவேண்டும் என்று வியாபாரிகள் நினைப்பதில்லை. விலை மிகவும் மோசமாக கீழே போய்விடாமல் தடுப்பதற்த்தான் குறைந்தபட்ச ஆதாரவிலை Minimum Support Price அரசால் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த விலைக்குக் கீழே வியாபாரி கேட்க முடியாது, விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை.
ஒவ்வொருவரும் தாங்கள் உண்ணும்போது இந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்ய விவசாயி என்ன சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.