தமிழக எல்லைகளின் சிக்கல்கள்

0

கடந்த 10 நாட்களில் தமிழக – ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. இந்த கிராமத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள கிராமம். இந்த கிராமம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. இங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச டி.வி.யும் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த கிராமத்துக்கு அடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள எண்களை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதுபோலவே ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பீமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. ஒகேனகல் பிரச்சனையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனகல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.

தொல்காப்பியம்,

வடவேங்கடத் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து

என்றும்,

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று

– புலவர் காக்கைபாடினியார்

அந்நான்கு எல்லை என்றும் பண்டையத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தின் எல்லைகள் ஆதியில் இருந்தபொழுது ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரி பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் இருக்கின்றன. ம.பொ.சி.யின் தீவிர போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில் திருத்தணியும் இன்றைக்கு ஆந்திரத்திடம் இருந்திருக்கும். கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, அதுமட்டுமல்லாமல் பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கர்நாடகத்திடம் வெங்காலூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரி மீதும், ஒகேனகல்லில் நமது ஆதிபத்தியங்கள் அவ்வப்போது கேள்விக்குறியாகி விடுகின்றன. கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லை பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு – பரம்பிக்குளம், அடவிநய்யனார், மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் போன்ற பல நதி நீர் பிரச்சனைகளும், கம்பம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டப் பிரச்சனையிலும் இன்றைக்கும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.

பாலக்காடு பகுதியில் உள்ள சாம்பாறை, மூங்கில் மடை, வண்ணாமடை போன்ற 100 கிராமங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு இங்கு விடுமுறை தருவதுபோல தைப் பொங்கலுக்கு அங்கு விடுமுறை இல்லை என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்கள் பயிர் செய்கின்ற காய்கறிகள் யாவும் கொச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்குள்ள ரப்பர் தோட்ட தமிழ் விவசாயிகளுக்குக்கூட சலுகைககள் மறுக்கப்படுகின்றன என்ற செய்திகள் வருகின்றன.

பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகள் யாவும் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்றைக்கு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம் பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்திற்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956இல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. அன்றைக்கு ஏற்றுக் கொள்ளாமல் சரியாக எல்லைகள் வரையறை செய்திருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது. இன்றைக்கும் கர்நாடகமும் மராட்டியமும் எல்லைப் பிரச்சனையில் பெல்காம் மாவட்டத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன. வரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு.

இன்று, திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வட வேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்கடவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரம், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடி உள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும். இதுபோல், திருப்பதி கோவிலைப் பற்றித் தெலுங்கில் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழகத்தின் வட எல்லை கிருஷ்ணா நதி என்று சிற்ப சாத்திரம் கூறுகிறது என உ.வே.சா. கூறுகின்றார்.

பெங்களூர்; பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி.997ஆம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டது. பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்! பெங்களூர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோவில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும், தமிழ்க் கங்கர்களாலும் கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537ஆம் ஆண்டில் பெங்களூர்ப் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.

தென்குமரி ; சங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின்கீழ் நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை குமரி சேர்ப்பன் என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரன், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழக – கேரளத் தொடர்புகள்; சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள், குலசேகர ஆழ்வார் போன்றோர் கேரளாவில் பிறந்து தமிழுக்குப் பணி செய்தனர். கி.பி.3ஆம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் சென்றார். 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான விறல் மிண்டன் நாயனார் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள செங்களூரில் பிறந்தவர். சைவ நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேர குலத்துக்கு நெருங்கியவராக இருந்தார். கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான். இதனால் கேரளாவில் பகவதி வழிபாடு என்ற பெயரில் கண்ணகி வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும், வெற்றிவேற்செழியனும் வந்து இருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி. 175 ஆகும்.

கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நம்பூதிரி பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து சேர நாட்டில் குடியேறினர். சேர மன்னர்கள் சத்திரியர்களாக மாறி சூரிய வம்சத்தினர் என அழைத்துக் கொண்டனர். கி.பி.1534க்கு முன்பே திருவடி ராஜ்யம் என வழங்கப்பட்ட திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்டவர்மன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். ஸ்ரீ வல்லப பாண்டியன், விஜயநகர வேந்தனான அச்சுதராயரிடம் உதவி கேட்டான். விஜயநகரப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூர் படைகளைத் தோற்கடித்து பாண்டியன் இழந்த பகுதிகளை மீட்டான்.

கி.பி.18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ்நாட்டு அரசர்களுக்கு உரிமை உடையதாகவே நாஞ்சில் நாட்டுப் பகுதி இருந்தது. திருவிதாங்கூர் அரசு 1941ஆம் ஆண்டு வெளியிட்ட கூணிணீணிஞ்ணூச்ணீடடிஞிச்டூ ஃடிண்t ணிஞூ ஐணண்ஞிணூடிணீtடிணிண இன்படி இந்தப் பகுதியில் உள்ள 1100 கல்வெட்டுக்களின் தமிழ்க் கல்வெட்டுக்கள் மட்டும் 828 உள்ளன. கல்குளம், முன்சிறை போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 900 ஆண்டைச் சார்ந்தவை. அவை தமிழிலேயே உள்ளன. திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் காணப்படும் கி.பி. 16, 17, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஞ்சில் நாடு தொடர்பான ஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.

1920ஆம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திர மாநிலம் கோரி ஆந்திரர்கள் போராடத் தொடங்கினார்கள். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக ஆந்திரர்கள் பலர் பொறுப்பு வகித்தனர். இருப்பினும் தெலுங்கர்கள் விசால ஆந்திரா என தனி மாநிலம் கேட்டுக் குரல் கொடுக்கத் துவங்கினர். இதற்காகவே ஆந்திர மகா சபை அமைக்கப்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஐக்கிய கேரள மாநிலம் அமைத்திட வேண்டும் என்று மலையாளிகள் குரல் கொடுத்தனர். இதற்கென கேரள சமாஜம் என்ற ஓர் அமைப்பின்கீழ் ஒன்றுபட்டனர். சம்யுக்த கர்நாடகம் என கர்நாடகத்தினர் கேட்டனர்.

நெல்லூர் ஜில்லாவின் தென் கோடியும், சித்தூர், வட ஆற்காடு, செங்கற்பட்டு, தென் ஆற்காடு, தஞ்சாவூர். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி என்னும் ஜில்லாக்களும், மலையாளம், தென் கன்னடம் ஜில்லாவின் முக்காற் பங்கும், மைசூரின் தென் பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்ற சமஸ்தானங்கள், கடலில் மூழ்கிய குமரிப் பகுதிகள் தமிழ் நிலங்களாகவே அக்காலத்தில் இருந்தன. இங்கு வேறு மொழிகள் வழங்கியது இல்லை என கா.ர. கோவிந்தராஜ முதலியார் தனது நூலில் எழுதி உள்ளார்.

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் மொழிவாரி மாநிலத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948இன் துவக்கத்தில் மொழிவழி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட தார் கமிஷன் 13.9.1948 அன்று சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழரசுக் கழகம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துக்களை இக்குழுவிடம் தெரிவித்தன. அக்குழுவில் தமிழரான டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ண ராஜும் உறுப்பினர்களாக இருந்தனர்.

தமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு இப்போதைக்கு மொழிவழி மாநிலம் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களை மொழிவழியில் பிரிப்பதாயின் அவற்றுக்கு இடையே மலை அல்லது ஆறு இருந்தால் அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வேங்கட மலையும், குடகு மலையும் கிடைத்து இருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை.

1954இல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு இரண்டாவது எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தது. 1954இல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல் அலி எனும் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம். பணிக்கர் என்ற கேரளாவைச் சேர்ந்தவர், எஸ்.என். குன்ஸ்ரு என்ற இந்திக்காரரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்தக் குழு10.10.1955இல் அளித்த பரிந்துரையில்,

1) சென்னை மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கருநாடகத்தோடும் சேர்த்து விட வேண்டும். (இதில் தென் கன்னட மாவட்டம் பற்றிய பரிந்துரை இக்குழுவின் வரம்பிற்கு அப்பாற்பட்டது)

2) திருவிதாங்கூர் – கொச்சி இராச்சியத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தமிழ்த் தாலுக்காக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் சென்னை ராஜ்யம் என்றே இருக்க வேண்டும்.

3) தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தொடர்பாக பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும் உத்தேசித்து அவை திருவிதாங்கூர் – கொச்சி ராஜ்ஜியத்திலேயே இருந்து வரவேண்டும். (மொழிவழியில் மாநிலங்களைத் திருத்தி அமைப்பது பற்றிப் பரிந்துரைக்கத்தான் இந்தக் குழுவே அமைக்கப்பட்டது. ஆனால் மொழி அடிப்படையை முதன்மையாகக் கருத முடியாது என்று சொன்னது இக்கமிஷன். பணிக்கரால் ஒரு சார்பாகப் பரிந்துரை செய்தது)

4) சென்னை மாகாண – ஆந்திர ராஜ்ஜிய எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப் படவிருக்கும் எல்லைக் கமிஷன் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை இக்கமிஷன் ஒப்புக் கொள்கிறது.

(அதாவது இக்கமிஷன் மொழி அடிப்படையையோ, கிராம அடிப்படையையோ ஒப்புக் கொள்ளவில்லை. ஒப்புக் கொண்டு இருந்தால் திருவனந்தபுரத்தையே தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலை தோன்றி இருக்கும். ஏனென்றால், அக்கால கட்டத்தில் திருவனந்தபுரமே தமிழ் பகுதியாகத்தான் இருந்தது)

1956க்கு முன் சென்னை ராஜதானி என்று விரிந்த மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டோடு வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டம் வரையிலும், மேற்கே காசர்கோடு பாலக்காடு வரையிலும், கர்நாடகத்தில் தென் கன்னடமும் அமைந்த பகுதிகளாக இருந்தன. பசல் அலி குழுவிடம் தமிழர்கள் கடுமையாக போராட வேண்டி இருந்தது. நத்தானியேல், நேசமணி, பி.எஸ்.மணி, கரையாளர் போன்ற பல தலைவர்கள் செய்த தியாகத்தால் தெற்கே குமரியும், செங்கோட்டையும் பெறப்பட்டது. மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் எனும் கோரிக்கை எழுந்தபொழுது ஆளும் கட்சியான காங்கிரசில் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் மொழி வழியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு துணை நின்றனர். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. மற்றும் அவரது சகாக்களின் பணி காலத்தாலும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நீண்ட பக்கங்களில்தான் அடக்க முடியும்.

ஆனால், இன்றைக்குள்ள பிரச்சனை தமிழகத்தில் எல்லைகளை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் அபகரிக்க நினைப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை விளைவிக்கும் முயற்சியே ஆகும். தமிழகத்தில் தொடர்ந்து மாநில கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க ஒவ்வொரு கட்டத்திலும் கடமை ஆற்றியுள்ளன. ஆனால் அகில இந்தியக் கட்சிகள் ஆளும் இந்த மூன்று மாநில தலைவர்களே இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனை தருகிறது. இதுபோலவே கச்சத்தீவையும் நாம் இழந்தோம். அந்தமான் தீவிலும் அவ்வப்போது பிரச்சனைகள் எழுகின்றன. மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆளுமையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தமானின் நீதிபரிபாலனம் சென்னை நீதிமன்றத்தின் கீழ்தான் இருந்திருக்க வேண்டுமேயொழிய இன்றைக்கு கல்கத்தா நீதிமன்ற ஆளுமையில் இருக்கிறது. தமிழர்கள் என்ற வெறியோடு சொல்லவில்லை. இதிலுள்ள நியாயங்களையும் பிரச்சனைகளையும் அறிந்து தீர்வு காண வேண்டும். அந்த கடமையை செய்யத் தவறினால் தமிழ் மண்ணுக்கு பேராபத்து வரும். இன்றைக்கு நாம் இருக்கின்ற பகுதிகளிலேயே அண்டைய மாநிலத்தவர் ஒரு ஜனநாயக நாட்டில் தவறாக உரிமை கொண்டாடுவதை எப்படி சகிக்க முடியும். கடந்த காலங்களில் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்சனைகளால் விளைந்த தலைவலிகளை தீர்க்க முடியாமல் நாம் இன்று தவிக்கின்றோம். இந்த நிலையில் கர்நாடகம் ஒகேனகல்லை கேட்கிறது. ஆந்திரம் ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு வம்பு செய்கிறது. தென் கோடியில் கேரளம் அபகரிக்க நினைக்கிறது. இதை நாம் எப்படி வேடிக்கை பார்ப்பது.

– தினமணி, 26.07.2009

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons