தமிழினம் உணர வேண்டிய நியாயங்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமார் பத்மநாதன், இலங்கையில் போர் நிறுத்தம் வராமல் தடுத்தது வைகோதான் என அளித்த பேட்டியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கடந்த 22.8.2010 அன்று வெளியிட்டது. அப்பேட்டியில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதனை மகேந்திரனே மறுத்துள்ளார். இந்நிலையில் தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்த உண்மைகளை குமார் பத்மநாதன் தெரிவிக்க வேண்டுமென்று கருத்தை வெளியிட்டுள்ளார். ஏனெனில், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கும் இலங்கையில் போர் நிறுத்தத்தால் நல்ல பெயர் கிடைத்து விடும். அது கூடாது என்ற நோக்கில் வைகோ, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டாம் என கூறியதாக கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. இதையும் இதுவரை வைகோ மறுக்கவும் இல்லை.
இந்தப் பிரச்சினையில் அடியேன் நினைவுக்கு எட்டியவரை சில செய்திகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொறுப்பாளர் மகேந்திரன் மூலம் பேசியது உண்மை. வைகோ அவர்கள் போர் நிறுத்தம் கூடாது. தொடர்ந்து போரை நடத்துங்கள். இப்போது என்ன போர் நிறுத்தத்திற்கு அவசியம்? என்ற கருத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தோற்று அடிவாங்கும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். நான் நாடாளுமன்றத்தில் இருப்பேன். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். நான் பார்த்துக் கொள்கிறேன் என திட்டவட்டமாக வைகோ கூறியது உண்மை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஈடுபாடு காட்டினால் அதை விமர்சிப்பதும், செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்தால் அது நிறைவேறாது என்று வேண்டுமென்று குறை கூறியதும் வைகோவின் மனசாட்சிக்கே நன்றாகத் தெரியும். தலைவர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினால் அதையும் விமர்சிப்பார். அடுத்து பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என ஈழத் தமிழர்களிடம் பேசியது எல்லாம் அனைவரும் அறிவர். இவையெல்லாம் கடந்தகால நிகழ்வுகள்.
2009 மே மாதம் இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும்பொழுது தலைவர் கலைஞர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் உண்ணாநோன்பு இருந்ததை கேலி பேசியவர் வைகோ. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே பெருமையும், புகழும் கிடைக்கும்; தனக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற நிலையில் வைகோ போர் நிறுத்தம் கூடாது என்று அவருடன் நட்பில் இருந்த நடேசனிடம் பேசியது உண்மை! உண்மை!! உண்மை!!! இதே நடேசன் என்னிடம் இதனை குறிப்பிட்டுள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள் விரும்பியபடி அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தால் கொடிய துயரங்களிலிருந்து ஈழத் தமிழர்கள் பத்திரமாக இருந்திருப்பார்கள். என்ன செய்வது? கேட்பார் பேச்சைக் கேட்டு அழிவு ஏற்பட்டு விட்டது. இந்த உண்மைகளையும், நிகழ்வுகளையும் தமிழினம் உணர வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்க நியாங்கள்.
வைகோ போன்றவர்கள் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தங்களுக்கு மட்டுமே பாத்தியம், பிதிரார்ஜிதம் என்று மார்தட்டி உரத்த குரலில் பேசுவதும், அவர்களின் போராட்டம் சேப்பாக்கம் சாலை ஓரத்திலிருந்து வேறு எங்கும் நகர விடாமல் பார்த்துக் கொண்டதும் ஈழப் பிரச்சினையில் ஒரு பின்னடைவே. ஈழம் என்றால் தான்தான் என்ற வைகோவின் மமதையும் ஒரு காரணமாகும். மற்றவர்கள் ஈழப் பிரச்சினையில் ஏதாவது செய்தால் அதை ரசிக்கவும், பாராட்டவும் மனதளவில் வைகோ ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்