தமிழ்நாடு என்ன கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் வடிகாலா?——————————————————-

முல்லைப் பெரியாறு மூலமாக தமிழகத்திற்கு அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2109 கனஅடி தண்ணீர் வரத்து இருக்கின்றது. அதேநேரத்தில் வினாடிக்கு 1750 கனஅடி தண்ணீர்வீதம் திறந்து விடப்படுகிறது. கேரளாவில் கடும் வெள்ளம். மழை கடுமையாக உள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு அதிகமாகும்.
இந்த நிலையில், தாராளமாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேரளா அரசு சொல்கிறது. அது மகிழ்ச்சிதான். முல்லைப் பெரியாறு அணையின் முழு கொள்ளளவான 142 அடியை தண்ணீர் எட்டிவிடும்.
ஆனால், தேவையான நேரத்திற்கு தமிழக விவசாயிகளுக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேவையான நேரத்தில் தண்ணீர்விட மனதே இல்லாத கேரளா, ஒரு சொட்டுத் தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும் என்றாலும் சட்டமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் தர முடியும் என்று சட்டத்தை சொல்லியது பத்தாண்டுகளுக்கு முன்பே.
இன்றைக்கு தாராளமாக தண்ணீர் கொடுப்பது மகிழ்ச்சிதான். அங்கே கேரளாவில் வெள்ளக்காடாக இருக்கின்றது. மற்றொருபுறம் கடந்த இரண்டு நாட்களாக பீதியை கிளப்பும் விதத்தில், முல்லை பெரியாறு அணை இடிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு அங்குள்ள இயக்கங்கள் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அதற்கான மனுக்களைத் தயாரித்துக் கொண்டு கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தேவையில்லாத ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோவையும் ரபெல் என்ற வழக்கறிஞர் மூலமாக அங்கே பேசப்பட்டு வருகிறது.யூடியூப் மூலமாக அங்கே தேவையில்லாத வதந்தியைப்பரப்பிகொண்டிருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டுமா? இது என்ன நியாயம்?
அதே போல கர்நாடகாவிலிருந்து வெள்ளம் வந்தால், உடனே தமிழகத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் தமிழ்நாடு என்ன கர்நாடகத்திற்கும் கேரளத்திற்கும் வடிகாலா? வங்கக் கடலில் அந்தத் தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதற்கான வடிகாலா?
தேவையான நேரத்திற்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் இரண்டு மாநிலங்களும் இப்பொழுது மட்டும் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
மேட்டூர் அணையும் 85 ஆண்டு கால வரலாற்றில் 67 வது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது.
1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டத் தொடங்கி 1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டே முதன் முறையாக 100 அடியைத் தாண்டியது.
தமிழகம் தாராளமாக தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கர்நாடகமும் இன்றைக்கு நினைக்கின்றது. ஆனால், நமக்கு தண்ணீர் தேவையான நேரத்தில் இந்த இரு மாநிலங்களும் தண்ணீரை வழங்குவதில்லை.
இப்படியான நிலையில் உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, வலுவாக இல்லை என்று சர்வதேச ஒரு ஆய்வறிக்கையும் சமீபத்தில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது என்பது பலரும் அறியாத செய்தி.
இப்படி இரண்டு மாநிலங்களும் தேவையான நேரத்தில் நமக்கு தண்ணீர் வழங்குவதும் இல்லை. இத்தனைக்கும் கடைமடைப் பகுதியில் இருக்கின்றோம். நமக்குத் தேவையான நேரத்தில் நீர் தர மறுத்துவிட்டு அவர்களுக்கு பிரச்சனை என்றால் திறந்து விடுவதற்கு தமிழ்நாடு என்ன அவர்களின் தண்ணீர் செல்லக்கூடிய வடிகால் பகுதி என்று நினைத்து விட்டார்களா? என்பதுதான் நமது கேள்வி. வேதனையாக உள்ளது.
முல்லைப் பெரியாறு உடைக்கப்பட வேண்டும் என்று தற்போது ஒரு பக்கம் மறுபடியும் சர்ச்சை எழுப்பி உள்ளார்கள். இப்படியான சூழ்நிலையில் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் இருக்கின்றது. இது குறித்து வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதிலும் சரியான முகாந்திரம் இல்லாமல் தமிழகத்திற்கு விரோதமாக நடந்து கொள்கின்றது கேரள அரசு. தண்ணீர் தாராளமாக கொடுப்பது என்பது மனப்பூர்வமா? இல்லை தங்களது நெருக்கடிக்கு மட்டும்தானா?
Karnataka and Kerala consider Tamil Nadu as a Channel to run their excess water of Cauvery and Mullai Periyar respectively. Whenever Tamil Nadu was in need of water supply both states refused to fulfil Tamil Nadu’s demand for irrigation.
Now, Kerala is insisting Tamil Nadu to take water . There are many water dispute issues pending between the states for perusal. It’s so disheartening to see the way Tamil Nadu is being treated.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.