தாமிரபரணி கரையில் திராவிட நாகரிகத்தின் வீச்சு ஆதிச்சநல்லூர் மட்டுமல்லாமல் அதன் நான்கு திசைகளிலும் மதுரை கீழடி வரை தொடரலாம்
தாமிரபரணி கரை திராவிட நாகரிகத்தின் முதல் தரவுகள் கிடைத்த தலமாகும். இன்றைக்கு ஆதிச்சநல்லூர், சிவகலை, கொற்கை, தெற்கே திருச்செந்தூர், பாளையங்கோட்டை மறுகால்தலை (2-ம் நூற்றாண்டு), திருநெல்வேலி குன்னத்தூர் – பொத்தை (3-ம் நூற்றாண்டு) வடக்கே கடம்பூர் (3-ம் நூற்றாண்டு), கயத்தாறு அருகே தெற்கு எலந்தபுலம், கழுகுமலை, கரட்டுமலை (3-ம் நூற்றாண்டு), ஆலங்குளம், மருதன்கிணறு, குருவிக்குளம் (10-ம் நூற்றாண்டு), சங்கரன்கோவில் பாடத்தூர் (12 மற்றும் 13-ம் நூற்றாண்டு), மேலநீலிதநல்லூர், வாடிக்கோட்டைவீரிருப்பு, மேற்கு முகமாக தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருவல்லீஸ்வரம், நத்தம், நாங்குனேரி அருகே தளபதி சமுத்திரம் – மேலூர், வள்ளியூர் அருகே துலக்கர்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், முறம்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு, கிருஷ்ணன் கோவில், விருதுநகர் பாவாலி, பாலவநத்தம், திருவேங்கடம் செவல்பட்டி, சாத்தூர் இருக்கன்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் என பல ஊர்களில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளடங்கிய நிலப்பகுதிகளில் அகழராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வையாபுரிப்பிள்ளை ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் தரவுகள் பொருநை ஆற்றங்கரை மட்டுமல்லாமல் நான்கு திசையிலும் இதன் வீச்சு இருக்கும் என ஏற்கனவே தெளிவப்படுத்தியுள்ளார். தாமிரபரணி நாகரிகம் கீழடி, கொடுமணல், அழகன்குளம், அரிக்கன்மேடு என பல பகுதிகளிலும் ஆய்வு நடத்தினால் பல செய்திகள் நம் முன்னே வந்து நிற்கும். சிலர் வரலாறு எதற்கு தேவையில்லாமல் என்பார்கள். வரலாறு இல்லாமல் இந்த மண்ணும் இல்லை மனிதனும் இல்லை என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதை உயிரோட்டமான நிலைப்பாடாக கருதி இந்த அகழ்வாராய்ச்சிகளை இந்தப் பகுதிகளில் செய்து நமது வரலாற்றை கண்டறிந்து உறுதிப்படுத்தவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல நமது கடமையாகும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
04.06.2020