நக்சலிசம் தேவைதானா?
கடந்த ஜூலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 காவல் துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
23.6.2009இல் பீகார் மாநிலத்தில் லக்ஷஷராய் மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்து தீவிரவாதிகளை விடுவித்துள்ளனர்.
13.6.2009 அன்று பக்கோரா நகரத்துக்கு அருகில் 10 காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே மாதத்தில் சாரண்டா காட்டில் மத்திய காவல் துறை ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் 9 பேர் சுடப்பட்டு பலியானார்கள்.
ஒரிசா மாநிலத்தில் பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காமாண்டோக்கள் 38 பேர் சுடப்பட்டனர். ஒரிசா மாநில போலீஸ் பயிற்சி கல்லூரி காவல் துறை அதிகாரிகள் 12 பேர் சுடப்பட்டு உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியும், அங்குள்ள காவல் துறையினர் பலியாயினர். கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் கடுமையான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டு செய்துள்ளனர். தன்பாத் அருகே ரயில்வே பாதைகளை தகர்த்தது மட்டுமல்லாமல் செல்போன் கோபுரங்களையும் தகர்த்து பலர் இவர்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியானது துயரமான செய்தியாகும். இதுவரை இம்மாதிரி சம்பவங்கள் 2009ல் மட்டும் 1,431. பலியான பொது மக்களின் எண்ணிக்கை 341. பாதுகாப்புப் படையினர் 250 என்ற எண்ணிக்கையில் கடந்த ஒன்பதரை மாதங்களில் இவ்வளவு சேதாரங்கள். ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இப்பகுதிகளில் இவர்களின் நடவடிக்கைகள் கடும் தீவிரமாக உள்ளது. 2.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மாவோயிஸ்டுகள் பிரச்சினை கடுமையாக உள்ளது. இதற்காக அரசாங்கம் 7,300 கோடிகளை அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்யப்பட்டுள்ளது.
இப்படியான துயரமான செய்திகள் செய்தித் தாள்களில் தினமும் இடம் பெறுகின்றன. இவையாவும் நக்சலிசம், மாவோயிசம் என்ற கொள்கையை கையிலெடுத்துக் கொண்டவர்களால் நடத்தப்பட்டவை. இந்த பலியான காவல் துறை அதிகாரிகள் யாரும் பெரிய வசதி படைத்த செல்வ சீமான்கள் அல்ல. அவர்களும் அரசு ஊழியர்கள். இவர்களில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் பலியாகி இருக்கலாம். அனைவருக்கும் சமத்துவமும் சமநீதியும் வேண்டும். இல்லையென்று மறுக்கவில்லை. அதை பெறுவதற்கு நமக்கு நாமே ஆயுதம் தாங்கி போராடி, ஒன்றும் அறியாத நம் சகோதரர்கள் பலர் அழிவது எந்த வகையில் நியாயம்? சமூக – பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் அவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு மாற்ற வேண்டுமேயொழிய ஆயுதப் போராட்டம் மட்டும் தீர்வல்ல; இவைகளில் மதம், சமத்துவ வேட்கை, புரட்சிகர சிந்தனை என்று மக்களை ஈர்க்கக் கூடிய கருத்துகளை பேசுவதில் எவ்வித பயனும் இல்லை. இலங்கையில் நடப்பது போன்ற அரச பயங்கரவாதம் இந்தியாவில் எப்போதும் ஏற்பட்டது இல்லை.
போராடும் நக்சலைட்டுகளைப் பற்றி ஜார்கண்ட் மாநில காவல் துறை அதிகாரி குறிப்பிடுவது: “சாலை ஒப்பந்தகாரர்களை அணுகி தரக்கேட்டை மறைக்க சாலைகளை வெடி வைத்து தகர்க்க பேரம் பேசுவது, அதன்மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு சேர வேண்டிய ரசீது தொகை ஆய்வு இல்லாமலே பைசலாகி விடுகிறது” என்று கூறியுள்ளார். இந்த செய்தி உண்மையானால் எவ்வளவு வேதனை தரும்.
இதற்கு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் தீவிரவாதிகள் ஏன் பேச்சு வார்த்தைக்கு வரக் கூடாது என்பது நம்முடைய வாதமாகும். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதன் மூலமாகவே ஆக்கப்பூர்வமான முடிவுகளை எட்ட முடியும்.
அதிகமான மக்கள் தொகையும், பல பிரச்சினைகளும் இருந்தாலும் இந்தியாவில் அரசியல் மாண்புகள் காக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்திரா காந்தி காலத்தில் அறிவித்த அவசர நிலையை இந்திரா காந்தி அவர்களே தன் தவறை பின்னாளில் உணர்ந்தார். வெவ்வேறு தளத்தில் அரசியல் தலைவர்கள் பயணித்தாலும் ஜனநாயகம் என்னும் மய்யப் புள்ளியில் அனைவரும் இங்கு இணைக்கப்படுகின்றனர். உலக அளவில் பல நாடுகளில் உள்நாட்டு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இவை யாவும் நுழைய முடியாது. ஆங்காங்கு மதவாத பிரச்சினைகள் உள்ளனவே தவிர, ஜனநாயகத்தை கவிழ்க்கும் போக்கு இங்கு இல்லை. நம்மை சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், மியான்மர் ஏன் சீனாவில்கூட பிரச்சினைகள் ஏற்பட்டபொழுது இந்தியாவில் ஜனநாயகம் செழித்தோங்கியது.
இந்நிலையில் இந்தியாவில் நக்சலிசம், மாவோயிச இயக்கங்கள் தோன்றியுள்ளன. மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஆயுத புரட்சியால் மாற்ற வேண்டுவது நம் நாட்டிற்கு உகந்தது அல்ல. இந்தியாவில் தற்பொழுது 34 பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 7 அமைப்புகள் பன்னாட்டு அளவில் உறவு வைத்துள்ளன.
இந்திய விடுதலைப் போரில்கூட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐ.என்.ஏ. நிறுவினார். பகத்சிங், வாஞ்சிநாதன் போன்ற பல்வேறு ஆளுமைகள் ஆயுதந்தாங்கி போராடினாலும் அது அன்றைய சூழ்நிலையில் ஆங்கிலேயரின் கட்டுக்கடங்காத தாக்குதலை, பிரிட்டிஷ் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து புரட்சி செய்தனர். அந்த மாதிரி கொடுமை இப்பொழுது நம் நாட்டில் இல்லை. நமக்கு நாமே அரசை உருவாக்கும் அளவில் வாக்குச் சீட்டை நம்பிதான் நமது அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டுமேயொழிய துப்பாக்கி ரவைகளை நம்பி நடைபோடுவது நாட்டுக்கு நல்லதல்ல.
பிரெஞ்சு புரட்சியின்போது பிரான்சில், மாக்சி மிலியன் ராபஸ்பியர் நேர்மையான பயங்கரவாதம் என்ற வகையில் டெயிசம் (ஈஞுடிண்ட்) என்ற கோட்பாட்டை அறிவித்தார். அதன் மூலம் சர்வாதிகாரமே ஜனநாயகத்தை காக்கும் என்று கூறினார். அந்த வகையில் பிரெஞ்சு புரட்சி வெற்றி பெற முடியவில்லை. திரும்பவும் அதே மண்ணில் சகோதரத்துவம், சமத்துவம், விடுதலை என்ற வகையில்தான் பிரெஞ்சு புரட்சி வெற்றி கண்டது. டையிசம் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களால் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட அழிவு நிலைமைகளை தடுக்க முடியவில்லை. எந்த பயங்கரவாதத்தை ஆதரித்து பேசினாரோ ராபர்ஸ்பியர் பின்னாளில் அவருக்கே பிரச்சினைகள் ஏற்பட்டு பயங்கரவாதத்தால் அழிந்தார்.
நக்சலிசம் மாவோயிசம் போன்றவைகளுக்கும் மார்க்சிய தத்துவத்திற்கும் தொடர்பில்லை என்று கம்யூனிச சித்தாந்தி அன்வர் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த இயக்கங்கள் துவங்க அடிப்படை காரணம் இடதுசாரி அரசியலும், பொதுவுடைமை தத்துவங்களும்தான் என்று குறிப்பிட்டாலும், கம்யூனிச சித்தாந்தவாதிகள் இதை மறுக்கின்றனர்.
1980களுக்குப் பிறகு தனி மனிதர்களை அழிப்பதை விட்டு வேறு பிரச்சினைகளில் மாவோயிஸ்டுகள் ஆயுதமேந்தி போராடத் துவங்கினர். 1991முதல் உலகமயம், தாராளமயம், தனியார் மயம் போன்றவற்றை எதிர்த்து இயக்கங்களை நடத்தினர். 1948இல் தெலுங்கானா பகுதியில் உழவர்கள் ஆயுதம் ஏந்தி போராடிய அனுபவத்தைத் தங்களுக்கு முன்னுதாரணமாக கொண்டு ஆந்திரத்தில் மக்கள் யுத்தக் குழுக்கள் செயல்படுகின்றன.
நக்சல்பாரி கிராமத்தில் சார் மஜும்தார் துவக்கிய நக்சலிசம் இன்றைக்கு மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ஆந்திரா, ஒரிசா, மத்தியப் பிரதேசம் என்று பல மாநிலங்களில் செயல்படுகின்றன. ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழு என்ற பெயரிலும் போராடுகின்றனர். பல சமயம் ஆந்திர அரசு இதுகுறித்து முயற்சி எடுத்து பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. 600 மாவட்டங்கள் கொண்ட இந்தியாவில் கிட்டத்தட்ட 160 மாவட்டங்களில் இந்த குழுக்கள் செயல்படுகின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்தக் குழுக்கள் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றன. சராசரியாக மாதத்திற்கு 60 பேர் இவர்களால் பலியாகின்றனர் என்ற தகவலும் உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த தீவிரவாத இயக்கமான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் முப்பல லஷ்மண ராவ் (எ) கணபதி ஆயுதம் ‘தாங்கிய போராட்டத்தை இந்தியாவின் தென் மாநிலங்களில் தீவிரப்படுத்த உள்ளதாக’ கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (கணுசன்யால்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேசன்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி – மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ஜனசக்தி) போன்ற பல அமைப்புகள் உள்ளன. சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்து பலியான ஹெலிகாப்டர் விழுந்த நலமலா காட்டில் இவர்கள் பயிற்சி எடுப்பதாகவும் ஒரு ஆங்கில ஏடு சொல்கிறது. இப்பகுதிகளில் எல்லாம் விவசாயம், தொழிற்சாலைகள் அமைக்கவே அச்சப்படுகின்றனர். இதனால் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை 6 கோடியே 69 லட்சத்து 388 கோடி ரூபாய் மூலதனம் செய்து தொழில்கள் துவங்க ஆரம்பித்தாலும் அவை யாவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
நமது நாட்டின் பட்ஜெட்டில் நூற்றுக்கணக்கான கோடிகள் இம்மாதிரி தீவிரவாத கொடுமைகளிலிருந்து பாதுகாக்க செலவு செய்யப்படுகிறது. இவை யாவும் மக்களின் வரிப் பணங்கள். காஷ்மீர் தீவிரவாதிகளை அடக்கவே நம்முடைய வரிப் பணம் ஏராளம் செலவாகிறது. அரசு கஜானாவிலிருந்து செலவு செய்யப்படுகின்ற இத்தொகையைப் பார்த்தாலே நமக்கு பெருமூச்சு விடத் தோன்றுகின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செலவினங்கள் அவசியமாக்கப்பட்டு விட்டது. இதை ஒரு அவசிய ய கடமையாகவே மத்திய மாநில அரசுகள் செய்கின்றன. இதற்கென்று தனி காவல் துறை. இந்தியா மாதிரி வளரும் நாடுகளுக்கு இந்த பயனற்ற செலவினங்கள் தேவைதானா? ஒரு ஆங்கில வார ஏட்டில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஒரு நக்சலைட்டிடம் எடுக்கப்பட்ட பேட்டியைக் காண நேர்ந்தது. அதில் தெளிவாக தன்னுடைய கருத்துகளை சொல்கின்றார் அந்த நக்சலைட். அவர் நிச்சயம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்கலாம். அவருடைய வாதங்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உள்ளதே தவிர ஒரு விசால பார்வை இல்லை. இப்படிப்பட்ட மனித ஆற்றல் வேறு வகைக்கு பயன்பட்டால் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றியது. அவ்வாறான விஷய ஞானம் பெற்றவர்களுக்கு பட்ஜெட்டில் செலவு செய்யப்படுகின்ற தொகையைப் பற்றி தெரியாமலா இருக்கும்? மனிதர்கள் உலகத்தில் தோன்றுவது இயற்கை தரும் காலத்தில் பயனுள்ள தன் கடமைகளை செய்வதற்குதான். ஆனால் அதற்கு மாறாக அழிவு, மனித அழிப்பு, பயங்கரவாதம் என்ற கொடிய செயல்கள் செய்வதற்கு இல்லை. நம் முன்னோர்கள் வகுத்த மனித நேய வழிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு பயங்கரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு நர்த்தனம் ஆடுவதால் எந்த பயனும் இல்லை.
நக்சலிசம் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வை நீக்கி, சமதர்மம் காக்கவே ஆயுதம் ஏந்துகிறோம் என்று சூளுரைத்தாலும் அதுவே தீர்வு காண முடியாது. இந்த இயக்கங்களில் படித்த பல சிந்தனையாளர்கள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அப்படி இருக்கும்பொழுது உயிர் பலி கொண்டுதான் மாற்றம் காண முடியுமா? என்பது ஆலோசிக்க வேண்டிய விடயமாகும். மானிடம் தழைக்க வேண்டும்; மனித நேயம் சிறக்க வேண்டும் என்று வள்ளலார் போன்றோர் அறிவுறுத்திய சொல்லுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமோ? என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. வடபுலத்தில் ரன்பீர் சேனா, சால்வா ஜூடு போன்ற அமைப்புகள் தேவையற்ற பயங்கரங்களையும், கொடூரங்களையும் ஏற்படுத்துவது ஏனோ என்று தெரியவில்லை? ஒருக்காலும் உலக சமுதாயம் தீவிரவாதம் – பயங்கரவாதம் பின் வராது. ஒருசில சக்திகள் இதில் ஈடுபட்டாலும் அவர்களின் அழிவின் நோக்கிம் வெற்றி பெறாது. பிணங்களின் மீது நின்று தத்துவம் பேசிய போல்பாட்டின் நிலை என்னவானது? மதிப்புக் குன்றிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
ஆரோக்கியமற்ற ஜனநாயகத்தையும், மக்கள் விரோத போக்கையும் அழிக்க இம்மாதிரியான தீவிரவாதங்கள் தொடர்வது அவசியம் என ஒரு சாரார் சொல்கின்றனர். அவர்கள் சொல்கின்ற இந்த நியாயங்களால் ஒரு சில மனித நேயமற்ற உயிர்களை அழிக்கலாம். அப்படிப்பட்ட மனிதநேயமற்ற அரக்கர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், அமைப்பியல் மூலமாக தீர்வு காண முடியுமா என்பதுதான் நமது கேள்வி. அந்த வகையில் தீவிரவாதத்தால் பொருளாதா ரீதியாகவும், முன்னேற்ற ரீதியாகவும் பின்னடைவுகள் ஏற்படுகின்றன. அவையும் சிந்திக்க வேண்டிய செய்திகளாகும்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகளைக் கொண்டது. பன்மையில் ஒருமை என்கிற நிலையில் இங்கு அரசியல் கட்டமைப்பு போக்கு உள்ளது. இருப்பினும் மாநிலங்களிடையே பாரபட்சம் இருந்தாலும் அதை நியாயமான போர் குணத்தோடு வெற்றி பெறலாம். ஏற்றத் தாழ்வுகளை களைய நமது உரிமைகளை பெறுவதை விட்டுவிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது சரியல்ல. இந்த அவசியமற்ற போக்குளைத் தடுக்கின்ற வகையில் அரசு மட்டுமல்லாமல் மக்களும் இயக்கங்களாக மாற வேண்டும்.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்