நீதித் துறையில் தப்புத் தாளங்கள்

0

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம் சி.பி.ஐ. இந்த ஊழல் சம்பந்தமாக விசாரிப்பது முதல் தடவையாகும். காசியாபாத் நீதிமன்றத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக தாங்களே கையெழுத்து போட்டு அனுமதி தந்துள்ளனர். இதில் பணம் மட்டும் இல்லாமல் விலை உயர்ந்த பொருள்களையும் நீதிபதிகள் கையூட்டாகப் பெற்றதாக தகவல்களும் உலவுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், ஏழு பேர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும், பனிரெண்டு பேர் உத்திரப்பிரதேச கீழாண்மை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும், மீதமுள்ள ஆறு பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி ஓய்வி பெற்றவர்களாவர். இவர்களை எல்லாம் விசாரித்து சி.பி.ஐ. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க நீதிபதிகள் அரிஜித் பசாயத், வி.எஸ். சிர்புக்கர், சிங்வி ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்தது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். துலாக்கோல் போன்று நீதியை வழங்கும் நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கு அப்பால் இருந்து தங்களின் பொறுப்பை உணர்ந்து பலர் பணிகளில் இருந்த காலங்கள் உண்டு. நீதிபதிகள் சுப்பாராவ், எச்.ஆர்.கன்னா, வி.ஆர்.கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, துணைக் குடியரசுத் தலைவராக விளங்கிய இதயத்துல்லா போன்ற பல நீதிபதிகள் தாங்கள் வகித்த பதவிக்குப் பெருமை தேடித் தந்தனர்.

பாரசீகத்தில் ஒரு நீதிபதி இலஞ்சம் வாங்கியதற்காக கழுவில் ஏற்றி அவருடைய உடம்புத் தோலை நீதிபதியின் நாற்காலியில் தைத்து, அதில் நீதிபதியின் மகனையே நீதிபதியாக அமரச் செய்தார் அந்நாட்டு மன்னர் கேம்பீசஸ். நமது நீதித் துறையின் நம்பகத்தன்மை கடந்த 80களின் இறுதியிலிருந்து கேள்விக்குறியாகிவிட்டது. நீதிபதி சேளமித்ரா சென் 1993இல் இந்திய ஸ்டீல் ஆணையம் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு இடையே நடந்த வழக்கில் ரூ.32 இலட்சத்தை வாங்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அந்தப் பணத்தைத் தன்னுடைய கணக்கில் வங்கியில் சேர்த்துவிட்டார் என்றும், அவரைப் பதவி நீத்ககம் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் 100 எம்.பி.க்கள் ஆதரவும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. ஏற்கனவே 1883இல் நீதிபதி வி.இராமசாமி பிரச்சினையில் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்று சௌமித்ரா சென் விஷயத்திலும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நீதிபதி சென் மற்றும் 26 நீதிபதிகள் பி.எப். பிரச்சினைகள் எழுப்பப்படும் என்று நம்பப்படுகின்றன. நீதிபதிகளின் மீது குற்றச்சாட்டுகள் சங்கிலித் தொடர்போல நீட்சி அடைகிறது. பஞ்சாப், அரியானா நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் யாதவுக்கு 15 இலட்சம் பங்கு உண்டு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அவரை விடுமுறையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். இதுவும் சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. அதேபோன்று சண்டிகரில் நீதிபதி யாதவிடமும் இலட்சக்கணக்கில் பணக் கட்டுகள் கொடுக்கப்பட்டதும் டெலிபோன் பேச்சு டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மற்றொரு நீதிபதி ஜெகதீஷ் பல்லாமீது நடவடிக்கை இல்லாமல் அவரைக் காப்பாற்றி தற்போது உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வும் பெற்றதுதான் நாட்டில் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டுகொள்ளாமல் துணை போகின்றனர் என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. முறைகேடாக டில்லி அருகே உள்ள நொய்டாவில் பல்லாவின் துணைவியார் பெயரில் ரூ.7 கோடி மதிப்புள்ள 7,200 சதுர மீட்டர் வீட்டு மனையை ரூ.5 இலட்சத்திற்குப் பெற்றதாகவும் பிரச்சினைகள் கிளம்பி கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறுத்த பின்னர் அதே பல்லாவை பின்னாளில் இமாசலப் பிரதேச தலைமை நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

கடந்த காலங்களில் மகாராஷ்டிராவில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி டிராவல் ஏஜென்ஸி பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதனால் பல வழக்குகள் சிலருக்கு சாதகமாக ஆனதாகவும், வேறொரு நீதிபதி பிரச்சினையில் முஸ்லிம் சட்ட நூல் வெளியிட்டதில் தவறுகள் நடந்ததாகவும் எனப் பரவலாக 80களின் இறுதியில் நீதித்துறையில் பேசப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய கே.வீராசாமி, அப்பதவிக்கு வருவதற்கு முன் அவருக்கு எதிராக சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமி முறையிட்டார். ஆனால் அவரது முறையீட்டை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை உச்சநீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்பியது. இந்த வழக்கைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெறுவது மிகவும் அவசியம் என தெரிவித்தது. நீதிபதிகளின் சட்டபூர்வமான உரிமையைப் பாதுகாக்க இது மிகவும் அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கைத் தொடர்ந்து எல்லா நிலைகளிலும் பணிபுரியும் நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நீதிபதி வி.இராமசாமிக்கு எதிராக 1991ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இராமசாமி பணியாற்றியபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புகார் எழுப்பப்பட்ட நேரத்தில் இராமசாமி உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். தீர்மானத்தை முன்மொழிந்து 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 196 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்திற்கு 3இல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காததால் நீதிபதி இராமசாமியைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்லால் மீது அவர் குடும்பத்தார் நடத்திய வணிகத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எம்.புன்ஜிக்கு எதிராக 1998ஆம் ஆண்டு 25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால், மூன்று முக்கிய நிபந்தனைகளை அவர்களால் நிறைவு செய்யவில்லை. நீதிபதிக்கு எதிராக எழுப்பப்டும் புகாரில் முழுமையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அவற்றைத் தீர்மான நகலுடன் இணைக்க வேண்டும். குற்றச்சாட்டு பற்றிய விவரங்கள் முன்னணி ஊடகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இந்த மூன்று நிபந்தனைகளும் நீதிபதி எம்.எம்.புன்ஜிக்கு எதிரான புகாரில் இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவு செய்ய புகார் எழுப்பிய எம்.பி.க்களால் இயலவில்லை. எனவே, இந்தப் புகார் நாடாளுமன்ற விவாதத்திற்கு வரவில்லை. இதே புன்ஜியைதாத் மத்திய – மாநில உறவுகளைக் குறித்து அறியும் குழுவின் தலைவராக இன்றைய மத்திய அரசு நியமித்துள்ளது.

நீதிபதி ஆனந்த் ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு ஆட்பட்டார். கொல்கத்தாவில் பகாபதி பிரசாத் பேனர்ஜி என்ற நீதிபதி அங்குள்ள உப்பு ஏரி அருகில் உள்ள விலையுயர்ந்த வீட்டு மனையை முறைகேடாகப் பெற்றார் என்று அதைத் திரும்ப வழங்குமாறு வலியுறுத்தப்பட்டார்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டுகள் எழும்பொழுது மாவட்ட மற்றும் கீழாண்மை நீதிமன்ற நீதிபதிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது. நீதிபதிகள் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எவ்விதக் குற்றச்சாட்டுகளும் எழாவண்ணம் நீதித் துறையும், நீதித் துறையைச் சார்ந்தவர்களும் கவனம் செலுத்த வேண்டும். தற்பொழுது ஒரு நீதிபதியிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் வாதாடினால் வழக்கு வெற்றி பெறலாம் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நீதிமன்றங்களின் மீது தவறான குற்றச்சாட்டுகள் வலுவடையும் வகையில் அமையுமானால், அது ஜனநாயக அமைப்பிற்கு முற்றிலும் முரணானதாக ஆகிவிடும். தற்பொழுது நீதிமன்றங்களில் இடைக்õல நிவாரணங்கள் கொடுக்கும்பொழுது சரியான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு பிரச்சினைக்கு ஒரு நீதிபதி இடைக்கால உத்தரவு தருகிறார். அதே பிரச்சினை வேறு நீதிபதியிடம் வரும்பொழுது இடைக்கால நிவாரணங்கள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நீதித் துறையின் மீதுள்ள நம்பிக்கை காக்கப்பட வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தில் நீதித்துறை முக்கிய தூணாகும். நீதிமன்றம் நாதியற்றவர்களுக்கு நம்பிக்கையாகவும், திக்கற்றவர்களுக்கு திசையாகவும் விளங்கக் கூடிய மக்களின் நம்பிக்கைக் கருவறையாகும். நீதித்துறை நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் செயல்பட கண்ணியமிக்க நீதிபதிகள் இன்றைக்குத் தேவை. நீதித் துறையிலும் இன்றைக்கு வம்சாவளி முறை புகுந்துவிட்டது. நீதிபதிகளின் உறவினர்கள் நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் தங்கள் தந்தையார் நீதிபதியாகப் பணியாற்றுகின்ற பணிகளை இன்றைக்கு மேற்கொள்வது பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. இந்தியா முழுவதும் 540 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஏறத்தாழ 120 நீதிபதிகள் ஏற்கனவே பதவி வகித்த நீதிபதிகளின் உறவினர்கள் ஆவர் என்ற புள்ளி விவரமும் உண்டு. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி திடமான நியாயமான செயல்பாடுகளை அந்நாட்டு வழக்கறிஞர்கள் அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் அந்நாட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் செய்தது. இன்றைக்கு நீதிபதிகளின் போக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் பெறும் அன்பளிப்புகள், கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்வது நீதித்துறைக்கு நல்லதல்ல. இதுபோன்ற கொடிய புற்றுநோய் வருவதற்கு முன் அதைத் தடுக்க வேண்டும். நீதிபதிகள் சமுதாயத்தில் கலக்கக் கூடாது என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அதுவே பல சந்தேகங்களுக்கும், பல பிரச்சினைகளுக்கும் துணையாகி விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

நீதிபதிகளின் மீது பொதுவாக ஊழல், பாலியல், இலஞ்சம், நடுநிலை இல்லாமை, சமூகப் பார்வை இல்லாமை என்ற கொடிய இயல்புகள் இருப்பதாக வி.ஆர்.கிருஷ்ணய்யர் குறிப்பிடுகின்றார். சில நீதிபதிகள் வழக்குகளை விரைவில் முடிக்காமல் இழுத்தடிப்பதும் வழக்குகளின் தன்மைகள் புரியாமல் சில வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதால் பிரச்சினைகள் எழுகின்றன என அவர் மேலும் குறிப்பிடுகிறார். இந்நிலையில் நீதிபதிகள் சென், நிர்மல் ஜித், நிர்மல் யாதவ் பிரச்சினைகளில் மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் பட்டும் படாமல் பேசி வருகின்றார் என்பதுதான் குழப்பமாக உள்ளது. பிரபல மூத்த வழக்கறிஞர் சாந்திபூஷண் நீதித் துறையில் 40 சதவீதம் பேர் உயர்நீதிமன்றங்களிலும் 80 சதவீதம் பேர் கீழாண்மை நீதிமன்றங்களிலும் ஊழலில் சிக்கியுள்ளனர் என்றும், இதை இரகசியமாகப் பெறுவதால் புலன் விசாரித்தே நிரூபிக்க முடியும்.

இவ்வாறு ஊழல், மற்றொரு பக்கம் வழக்கை பைசல் செய்வதில் தாமதம் என்று பல பிரச்சினைகள் மட்டுமல்லாமல் தற்பொழுது நீதித்துறை அவமதிப்பு வழக்குகள் அதிகமாக தாக்கல் செய்யப்படுவது போன்று பல சூழல்கள் நீதித்துறையைப் பாதித்து வருகின்றன. நீதித் துறையைச் சீர்திருத்தவும், சரி செய்யவும் திடமான நடவடிக்கைகள் இன்றைக்குத் தேவை. நீதித் துறையின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய பிரச்சினைகளை மத்திய – மாநில அரசுகள் கவனிக்க வேண்டும். நீதிமன்றம் ஆலயத்திற்கு ஒப்பானது. பிரச்சினைகள் வரும்போது பிரார்த்தனைகளோடு தங்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்வது போன்று சிக்கல்கள் ஏற்படும்போது பரிகாரம் தேட நீதிமன்றம் செல்கின்றனர். இன்றைக்கு மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வழக்குகளும் அதிகமாகி விட்டன. நீதிமன்றங்கள் அன்றாட மக்களின் வாழ்க்கைக்கு ஓர் அங்கமாகத் திகழ்கின்றன.

நீதிமன்றங்களின் சரிவர செயல்பாட்டால்தான் ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மற்றும் பல சிவில் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். ஆனால், இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கவலையான சூழல் மேலும் பிரச்சினைகளை உருவாக்கி விடக் கூடாது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஊழல் முறைகேடுகள் என்று இத்துறையில் புகுந்துவிட்டால் இதை யார் கண்காணிப்பது என்பதுதான் இன்றைய கவலையும் சலிப்பும் ஆகும். மங்கை சூதகமானல் கங்கையில் குளிக்கலாம். கங்கையே சூதகமானால் எங்கே போய் ஒருவர் புனிதப்படுத்திக் கொள்வது?

– தினமணி, 29.09.1998

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons