நீதிமன்றங்கள் செயலாற்றும் நடவடிக்கைகள்
நீதிமன்றங்களின் செயலாற்றும் நடவடிக்கைகள் பற்றி (Judicial Activism) 1996இல் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஜுடிசியல் ஆதடிவிசம் என்பதில் ஆக்டிவிசம் என்பதற்கு தமிழில் பொருள் என்ன என்று அறிய அகராதிகளைப் புரட்டும்பொழுது ஆக்டிவிசம் மனத்திட்பமே வினைத்திட்பம் என்ற ருடால்ஃப் யூகன் கோட்பாடாகும். தமிழில் இதற்கு நீதிமன்றங்களின் விறுவிறுப்பாக செயலாற்றும் முறை எனப் பொருள் கொள்ளலாம். தவறு செய்பவர்களை நீதிமன்றம் தண்டிக்கும் என்றும், நீதிமன்றத்தில் சமநீதி கிடைக்கும் என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. பண்டைய இலக்கியத்தில் கண்ணகி நீதி கேட்டு மதுரையை அழித்ததும், மனுநீதி சோழன் துலாக்கோல் நிலையில் இருந்து நீதி காத்த நிகழ்வுகள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அதேபோன்று ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங் போன்றோர்கூட ஊழல் காரணமாக இறுதியில் நீதிமன்றத்திற்கு தலைவணங்க வேண்டிய நிலை உருவாயிற்று. இதற்கு என்ன காரணம்?
தவறு செய்பவர்கள் செல்வாக்குமிக்க பதவியில் இருந்தாலும் சட்டப்படி தட்டிக் கேட்கும் தார்மீக அதிகாரம் நீதி மன்றத்திற்கு இருக்கின்றது என்ற நிலைப்பாடு இருப்பதுதான் இதற்குக் காரணம். ஆள வந்தவர்கள் தான்தோன்றித்தனமாக இருந்தால் அவர்களுடைய காதைப் பிடிக்கக் கூடிய வகையில் நீதித்துறை இன்று இருக்கின்றது.
பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அவரது தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. பெரும்பான்மையற்ற நிலையில் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமராக இருந்த நரசிம்மராவ் இன்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு நீதிமன்றப் பிணையில் இருக்கிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கு, லக்குபாய் வழக்கு போன்றவற்றில் நரசிம்மராவ் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். யூரியா ஊழலில் அவருடைய உறவினர்களும், அவரைச் சார்ந்தவர்களும் ரூ.133 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. இதுமட்டுமன்று, செயிண்ட் கீட்ஸ் மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை குற்றவாளியாகச் சேர்க்க நரசிம்மராவ் சதி செய்தார் என்கின்ற வழக்கும் இருக்கிறது.
இந்தியாவையே உலுக்கிய ஹவாலா மோசடியில் ஜெயின் சகோதரர்களிடமிருந்து பணம் பெற்ற எல்.கே.அத்வானி, வி.சி.சுக்லா, அர்ஜுன் சிங், சிந்தியா, கல்பனாத் ராய் என்ற ஒரு நீண்ட அரசியல் தலைவர்களின் பட்டியலைப் பற்றி நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.
உயர் போலீஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில்லை, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரூபன் பாஜாஜியிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு உரைத்திருக்கிறது. டில்லியில் வீட்டுவசதி வாரியத்தின் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் ஷீலா கவுல், பி.கே.துங்கன் சட்டத்திற்குப் புறம்பாக ஒதுக்கீடு செய்து லஞ்சம் பெற்றுள்ளார். இவ்வழக்கில் ஷீலா கவுலுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு உரைத்திருக்கிறது. காப்டன் சதீஷ் சர்மா பெட்ரோல் பம்ப் ஏஜென்சீஸ் வழங்கியதில் முறைகேடுகள் செய்து உள்ளார் என்ற வழக்கில் ரூ.60 லட்சம் அபராதமாகக் கட்டச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது. இந்த இரு வழக்குகளின் தீர்ப்புகளும் இந்திய அரசியல் வழக்குகளில் திருப்புமுனையை ஏற்படுத்தியவை ஆகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் சுக்ராம் செய்த தொலைபேசித் துறை ஊழல், பீகாரை உலுக்கிக் கொண்டுள்ள மாட்டுத் தீவன ஊழல் ஆகியவற்றில் பல ஆளுங்கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றவாளிகளாக உள்ளனர்.
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும், வருங்காலத்தில் இந்தியப் பிரதமர் என்றும் தன்னுடைய கட்சிக்காரர்களைப் பேச வைத்த ஜெயலலிதா கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்து, சிறைக் கம்பிகளை எண்ணி முடித்து, இன்றைக்கு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளார். தமிழகத்தை ஊழல் வேட்டைக்காடாக்கி ஜெயலலிதாவும், அவருடைய தோழி சசிகலாவும் செய்த ஊழல்கள் எவராலும் மறக்க முடியாதவையாகும். அவர்களுடம் பல முன்னாள் தமிழக அ.தி.மு.க. அமைச்சர்களும் இன்றைக்கு சிறையில் இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்துவிட்டோம்; நாம்தான் நிரந்தரமாக ஆளுவோம் என்ற மமதையில் இருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு சாவு மணி அடிக்கும் வகையில் நீதிமன்றங்களின் செயலாற்றும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை முனிசிபாலிடிகளைப் போன்று கருதி அரசியல் சட்டப் பிரிவு 356ஐ விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்துவதை நீதிமன்றம் தட்டிக் கேட்டு இருக்கிறது. சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், பி.ஜே.பி. தொடுத்த வழக்கில் நாட்டில் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்கக் கூடிய வகையில் தீர்ப்பை வழங்கியுள்ளது. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டுக்குச் சென்றாலும் அய்க்கிய முன்னணி அரசு பிரிவு 356ஐப் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு மற்றொரு பக்கத்தில் அந்தத் தவறைச் சொல்கிறார்கள். இதனைக் கண்டிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நமது அவா ஆகும்.
உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்புக்கும் மேலாகச் செயல்படுகிறது என்ற கருத்தும் சில தரப்பினரிடமிருந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை வழிமொழிபவர்கள் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 124இன்படி இந்தியக் குடியரசுத் தலைவர் நீதிபதிகளை கேபினட் விருப்பத்தின்படி நியமிக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு உச்சநீதிமன்றம் இந்த அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அந்த பணியை மேற்கொண்டுள்ளது என்றும், பிரிவு 142இன்படி நாட்டிலுள்ள சட்டத்தில் வினா எழுப்பும் தார்மீக அதிகாரம் வரம்பில்லாதபடி தனக்கு உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது என்றும், 129இன்படி நீதிமன்ற அவமதிப்பு என்ற முறையில் மற்ற குற்றங்களிலும் தண்டனை வழங்கவும், அதை விசாரிக்கவும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது என்றும், பிரிவு 356இன்படி மத்திய அரசின் நிலைப்பாட்டைக் குறித்து வினா எழுப்பவும், அதை ஆராயவும் அதற்கு மேல் ஆணை வழங்கவும், உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.
அரசியல் வழக்குகள் குறித்த நீதிமன்றங்களின் “Judicial Activism’ ‘அண்டி பயோடிக்’ என்று சொல்லக்கூடிய அளவில் ஆட்சியாளர்கள் எடுத்த முடிவுகளுக்கு எதிர்விளைவுகள் (Negative) ஏற்படா வண்ணம் தடுக்கக் கூடியது என்பதுதான். ஆனால், எப்பொழுதுமே இந்தச் செயல்பாடு தங்குத்தடையின்றி இருக்குமா என்பதும் கேள்விக்குறி. அரசின் முடிவுகள், நெறிமுறைகள் சம்பந்தமாக இந்தியா போன்ற பெரிய நாடுகளில் “Judicial Activism’ எல்லாப் பிரச்சினைகளிலும் எப்பொழுதும் இருக்குமா என்பது பற்றியும் சிலர் அய்யம் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் நீதிமன்றம் அரசு மற்றும் அரசியல் தொடர்புடைய செயலாற்றும் நடவடிக்கைகளினால் ஒரு சிக்கல் அண்மைக் காலமாக எழுந்துள்ளது. அதாவது இத்தகைய வழக்குகறில் தீர்ப்புரைக்க நீதிமன்றங்களுக்கு அதிகார வரம்புடையதா அல்லது வரம்பில்லாததா என்பது கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால், அதுவல்ல நமது நிலை. நீதி தழைக்கவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும், சர்வ வல்லமை படைத்த மக்களின் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் தவறு செய்யும்போது தட்டிக் கேட்கும் கேடயமாக நீதித்துறை முழு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அண்மைக்கால நீதிமன்றங்களின் செயலாற்றும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
இதுவன்றி, பொதுநல வழக்குகளும் பிரிவுகள் 32, 226 கீழ் ரிட் மனுவாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் பரிசீலனைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு இப்பொழுது மக்களுக்கு உள்ளது. ரட்லம் முனிசிபாலிட்டி வழக்கின் மூலம் பொது நலம் (கஐஃ) வழக்கு நடைமுறைக்கு வந்தது. ரட்லம் நகரில் சாக்கடையை அகற்றக் கோரிய மனு பொதுநல வழக்காக உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டு விசாரணை செய்யலாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுநல அடிப்படையிலான வழக்குகள் வளர்ச்சி பெற நீதிபதிகள் கிருஷ்ணய்யர், பகவதி, வெங்கட்ராமையா, சின்னப்பரெட்டி போன்றவர்கள் காரணமாவார்கள். நீதிமன்றத்திற்கு பொதுநல வழக்குகள் இதயசுத்தியோடு எடுத்துச் செல்லப்பட வேண்டுமேயொழிய அதை விட்டுவிட்டு ‘பப்ளிக் இன்டரஸ்ட் லிட்டிகேசன்’ ஆக அது மாறிவிடக் கூடாது என நீதிபதிகள் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதி 57,000 சிக்மா அகதிகள் அருணாசலப் பிரதேசத்திலிருந்து அகற்றப்படாமல் பாதுகாத்தார். நீதிபதி குல்தீப் சிங், கங்கை – தாஜ்மகால் பகுதிகள் சுற்றுச்சூழல்களினால் பாதிக்கப்படுகிறது எனக் கூறி அதைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் 292 நிறுவனங்களை மூட வேண்டும் என தீர்ப்புரைத்தார். நீதிபதிகள் வர்மா, ஜீவன் ரெட்டி, பருச்சா போன்றோர் பொதுநல வழக்கில் வித்தியாசமான, தீர்க்கமான, மக்களுக்கு ஏற்ற நல்ல தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள். இன்றைக்கு நீதிமன்றங்கள் பல வழக்குகளில் தீர்ப்புகளின் மூலம் அரசுக்கு நெறிமுறைக் கொள்கைகளை வழிகாட்டுதல்களாக வழங்கியுள்ளன. உச்சநீதிமன்றம்:
ற் அரியானா ஐ.பி.எஸ். அதிகாரி தவறாக வணிகர் ஒருவரை சிறையில் வைத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
ற் பீகாரில் ஊழல் அரசு அதிகாரி ஒருவருக்கு சிறைத்தண்டனை ஒரு மாதத்திலிருந்து 6 மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
ற் கருநாடக அரசு அதிகாரி வழக்குமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார்.
ற் அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகள் பற்றிய கணக்குகளையும் வரவுகளையும் முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் காட்ட வேண்டும் என தீர்ப்பளித்தது.
ற் நீதிபதி குல்திப் சிங் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க தீர்ப்புரைத்தார்.
ற் நீதிபதி வர்மா ஊழல் சம்பந்தமான சி.பி.ஐ. விசாரணைகளை வழக்கு மன்றத்திற்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், ஆளும் மய்யத்தில் இருப்பவர்களிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் ஆணைப் பிறப்பித்து இருக்கிறார்.
இவ்வாறு இன்னும் பல தீர்ப்புகளை நீண்ட பட்டியலிடலாம்.
குல்திப் சிங், நீதிமன்றங்கள் வரம்புக்கு மீறி செயல்படவில்லை. மக்கள் பிரச்சினைகள் எங்களிடம் வரும்பொழுது அதை அறிவியல் பூர்வமாக ஆய்ந்து அதற்கு ஏற்றவாளு இன்றைய சூழ்நிலையின் அவசியம் கருதி அரசியல் அமைப்பு சட்டத்தின்கீழ் செயல்படுகிறோம். நாங்கள் எங்களின் எல்லைகளுக்கு மீறி செயல்படவில்லை என ஸ்டார் டி.வி. பேட்டியில் கூறியிருக்கிறார்.
நீதிமன்றங்களும் கம்ப்யூட்டர் மயத்திற்கு ஏற்ற வகையில் செயல்முறைக்கு வரவேண்டும். சிவில் நீதிமன்றம் பழைய நடைமுறைகள் இருப்பதை மாற்றி தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீதிமன்ற நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும். நீதிமன்றக் கட்டணங்களையும் வழக்குகள் விரைவில் பைசல் செய்யக்கூடிய வகையில் மாற்றப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 1988இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு இதுவரை வரவில்லை. 1983இல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு 1995ஆம் ஆண்டு இறுதியில்தான் விசாரணைக்கு வந்தது.
இவ்வாறு வழக்கு விசாரணைகளில் காலதாமதம் வருடகணக்கில் ஆவதை மனதில் கொண்டு நீதித் துறையினர் மக்கள் நீதிமன்றங்களை உருவாக்கி ஆங்காங்கே பிரச்சினைகளைப் பரிசீலனை செய்து தீர்ப்புகளை விரைவில் வழங்கலாம். நீதிமன்றங்களில்கூட ஊழல் என்ற பேச்சுகள் எழுகின்றன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறுவதைப்போல் நீதிமன்றம் விளங்க வேண்டும்.
மாண்டஸ் கீயூ – அதிகார பிரிவு நாடாளுமன்றம், நீதிமன்றம், அதிகார வர்க்கம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டட எல்லைகளுக்குள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் ஒன்று தவறு செய்தால் மற்றொன்று தடையாக (இடஞுஞிடுண் – ஞச்டூச்ணஞிஞு) இருந்து குறைகளைக் களைய வேண்டும். அந்த வகையில்தான் நீதிமன்றம் அதிகார வர்க்கத்தின் தவறான ஆணைகளையோ அல்லது நிலைப்பாடுகளையோ சுட்டிக்காட்டி வழிகாட்டலாம். நிலைமையைப் பொறுத்து அதன் செயலாற்றும் நடவடிக்கைகள் அமையலாம். அதனால் மக்களாட்சியின் உண்மையான மாண்பு மேலும் சிறக்கும்.
ஊழல், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்கின்ற அடிப்படைப் பிரச்சினையில் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் இன்றைக்கு இருக்கின்றன. அந்த வகையில் நீதிமன்றம் 1996இல் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வாக்குக்கு ஒப்ப அதிகார வர்க்கத்தில் யாரும் தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி தட்டியும் கேட்டுள்ளது. உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் தமது பல தீர்ப்புகளின் மூலம் வழங்கியுள்ள செயலாற்றும் நடவடிக்கைகளால் மேலும் முன்னேற்றத்தை நோக்கி விரைந்து செல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
– சங்கொலி, 17.01.1997