நெருக்கடியில் நெய்யாறு
கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை – வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளும், நியாயங்களும் மறுக்கப்படுகின்றன. இப்போது குமரி மாவட்டத்தின் நெய்யாறு பிரச்சினையிலும் கேரளம், தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில் நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்ககோடு பகுதியில் பாசனம் பெறக்கூடிய வகையில் 84.75 அடி கொண்ட நெய்யாறு அணை அமைக்கப்பட்டு அன்றைய கேரள முதலமைச்சர் சங்கரின் முன்னிலையில் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராஜர் 1963இல் சுந்தரிமுக்கு என்ற பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாயைத் திறந்து வைத்தார். அன்று குமரி மாவட்டத்துக்கு தண்ணீர்விட கேரள அரசு சம்மதித்தது. இந்த நெய்யாறு அணைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் களியல் அணைமுகம், கருப்பையாறு ஆகிய நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலிருந்துதான் தண்ணீர் வருகிறது. இந்த அணைக்கு 40 சதவிகித தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வருகிறது.
1963இல் பாறசாலை அருகே தமிழகப் பொதுப்பணித் துறையின் சார்பில் இரு கால்வாய்கள் அமைக்கப்பட்டு நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக குமரி மாவட்டத்துக்கும், வலதுகரை கால்வாய் வழியாக கேரளத்தின் பாறசாலை, நெய்யாற்றங்கரை என்ற பகுதிகளுக்கும் பாசனத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டது. 1963இல் அன்றைய முதல் அமைச்சர்களாக இருந்த காமராஜரும், சங்கரும் இரு மாநிலங்களில் கிடைக்கிற தண்ணீரைக் கொண்டு இடதுகரை மற்றும் வலதுகரை கால்வாய்கள் மூலம் அந்தந்த மாநிலங்களுக்குப் பாசனத்திற்காக நெய்யாற்று நீரைப் பயன்படுத்தலாம் என்று இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.
இடதுகரை கால்வாய் மூலமாக குமரி மாவட்டத்தில் அண்டுக்கோடு, இடைக்கோடு, பாக்கோடு, விரிகோடு, ஏழுதேசம், கொல்லங்ககோடு உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இதன் மூலம் நீர் வந்தது. அதுமட்டுமில்லாமல் 200க்கும் மேற்பட்ட பாசனக் கால்வாய்களும் இதன்மூலம் ஆயக்கட்டுக்கு வேண்டிய தண்ணீரைப் பெற்றது. நிலத்தடி நீரால் கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று வந்தது. இவ்வாறு நியாயமாக நெய்யாற்றின் மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமை 2003ஆம் ஆண்டு கேரளத்தை ஏ.கே.அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசு வேறு மாநிலங்களுக்கு தண்ணீர் தர வேண்டுமெனில் கேரள சட்டப் பேரவையின் ஒப்புதலோடுதான் தர முடியும் என்ற விநோதமான சட்டத்தைக் கொண்டு வந்தததால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் வழியே பாயும் ஆறுகள் பிரச்சினை குறித்து எந்த மாநிலத்திலும் இதுமாதிரியான சட்டம் இல்லை. கேரளம் மட்டும் இந்திய ஒருமைப்பாட்டை சற்றும் நினையாமல் இதுபோன்ற வேடிக்கையான சட்டத்தைக் கொண்டு வந்தது.
கடந்த காலங்களில் 182 கன அடி தண்ணீர் நெய்யாற்றில் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் அப்பகுதிக்குப் போதுமானதாக இருந்தது. இதுகுறித்து ஓர் ஒப்பந்தம் ஏற்பட 1971இல் தமிழக அரசு ஓரு வரைவு ஒப்பந்தத்தை கேரளத்துக்கு அனுப்பியது. அந்த ஒப்பந்தத்தில் இடதுகரை கால்வாய் தண்ணீர் திறந்து விடும் அளவு எவ்வளவு? எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும்? என்பது குறித்த வரைவு ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில் அந்தோனி முதல்வராக இருந்தபோது கேரள அரசு பாசனங்கள் மற்றும் தண்ணீர் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது நெய்யாற்றைப் பிரச்சினைக்குள்ளாக்கி விட்டது. அதன் பின்பு, நெய்யாற்றின் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.
கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், தமிழகம் நெய்யாற்றில் நீர் பெற வேண்டுமெனில் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அர்த்தமற்ற முறையில் கூறினார். இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழக அரசும் இதற்கு ஏனோ தானோ என்று விளக்கம் கொடுத்துவிட்டு உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கவில்லை. இதற்கு மத்தியில் 14.11.2008 அன்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் நெய்யாறு பன்மாநில நதி இல்லை என்று பொய்யான செய்தியைப் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஆனால் அதே பிரேமச்சந்திரன் கடந்த காலங்களில் நெய்யாறு இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட நதி எள்று குறிப்பிட்டுள்ளார். நெய்யாறு ஒரு பன்மாநில நதி என்பது கேரள அரசு 1958இல் வெளியிட்டுள்ள கேரளாவில் நீர் ஆதாரங்கள் என்ற ஆவணத்தில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறு இருக்க முன்னுக்குப்பின் முரணாக கேரளம் பேசுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
நெய்யாறு இடதுகரைக் கால்வாய் மூலம் குமரி மாவட்டத்தில் இருபோகம் பயிர் செய்யப்பட்டது. வாழையும் நெல்லும் விளைந்தன. கடந்த மூன்று வருடங்களாக விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இடதுவரைக் கால்வாயில் புதர் மண்டியுள்ளது. விவசாயிகள் தற்போது மரச்சீனியையும், வாழையையும் பயிரிடுகின்றனர். விவசாயம் பொய்த்ததனால் விளவங்கோடிலிருந்து கேரளத்துக்குக் கட்டட வேலைக்குப் பலர் சென்றுவிட்டனர். தொடர்ந்து நெய்யாறு இடதுகரை கால்வாய் தண்ணீர் வராததால் குமரி மாவட்டம் வறண்டு விட்டது. பல போராட்டங்கள் நடத்தியும் விடிவுகாலம் வதவில்லை. ஆனால் நெய்யாறு வலதுகரை கால்வாய் வழியாக கேரளத்துக்குச் செல்லும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. வீணாகும் நீரைக்கூட தமிழகத்துக்கு வழங்க கேரளத்து விருப்பம் இல்லை. அனைத்து நதி நீரையும் கடலுக்குச் செல்ல அனுமதிப்போம். ஆனால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் தரமாட்டோம் என்ற பிடிவாத உணர்வுதான் அங்கு உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீர்வளம் குறைவு. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் நதி நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தின் உரிமைகள் காவிரியிலும், பாலாறிலும், முல்லைப் பெரியாறிலும் மறுக்கப்பட்டது. தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். கேரளத்தில் அரசாங்கள் மாறினாலும் நடவடிக்கைகள் மாறவில்லை. தமிழகத்துக்கு விரோதமாக நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து விரோதம் காட்டி வருவது அரசியல் நாகரிகமற்ற பண்பாடாகும். ஒருமைப்பாடு பேசுவோர் இதுபற்றி கவலைப்படுவது இல்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு ஆர்.சாம்பசிவ ராவ் குழு முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாகும்.
அந்தக் குழுவில் தமிழக ஆளுங்கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ஒரு பெண்மணி இடம் பெற்றிருந்தும் அந்தக் குழு அணையைப் பார்க்க வந்தபோது அவர் அணையைப் பார்க்க உடன் செல்லவில்லை. ஒருக்கால் தி.மு.க.வினர் அந்தக் குழுவின் மேல் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஒரு வாதத்தை வைத்தாலும், எப்படி அதிகாரபூர்வமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி. இடம் பெற்றார் என்று தெரியவில்லை. அந்த மாநிலங்களவை உறுப்பினருக்கு இந்தப் பணியைவிட முக்கியமான பணி வேறு என்ன உள்ளது? இதே சூழல் வேறு கட்சியில் நடந்திருந்தால் உடன்பிறப்பே! பார்! பார்! என்று மடல் வந்திருக்கும். ஆயிரம் நியாயங்களை வாயளவில் சொல்வோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போறார்கள்? மத்தியில் ஆளுகின்ற ஆட்சியும், மாநிலத்தில் ஆளுகின்ற ஆட்சியும் இதற்கான கடமைகளை ஆற்றத் தவறிவிட்டன.
இவ்விதம் ஒவ்வொரு தளத்திலும் தமிழக உரிமைகள் பறிபோகின்றன. கேரளம் அரிசி, பருப்பு, பால், மீன், கருவாடு, வைக்கோல், மின்சாரம் போன்ற பல அத்தியாவசியப் பொருள்களையும் நம்மிடம் பெற்றுக் கொண்டு நமது உரிமைகளை மறுத்து தமிழகத்துக்கு விரோதமாக கேரளம் நடந்து கொள்கிறது. பத்மநாபபுரம் கோட்டையையும், குமரி முனையிலும், சென்னையிலும் உள்ள கேரள அரசின் சொத்துக்களையும் தமிழகம் எவ்வளவு கண்காணித்து பாதுகாக்கிறது என்ற நன்றி உணர்வுகூட கேரள ஆளும் தரப்பினருக்கு வரவில்லையே! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள உறவுகளைப் பலப்படுத்துவது இப்படித்தானா? இதையெல்லாம் பார்க்கும்போது முண்டாசுக்கவி பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
“விதியே விதியே தமிழ்ச்சாதியை
என்செய நினைத்தாய்?”
– தினமணி, 06.08.2008