நெல்லை விடுதலை எழுச்சிக்கு நூற்றாண்டு
நெல்லைச் சீமையில் பூலித் தேவர், கட்டபொம்மன் காலத்திற்குப் பின்பு வ.உ.சி., பாரதி, வாஞ்சிநாதன், சிவா போன்ற ஆறுமைகள் விடுதலை வேள்வியில் இறங்கினர். விடுதலையே நமது குறிக்கோள்; அதனை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீரவேண்டும்; விடுதலையின்றி வாழ்வதைவிடச் சாவதே மேல்; ஆன்மா அழிவற்றது; பொது நலத்திற்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் உயிர் துறப்பவனே நற்பேறு அடைவான் என்று கூறி மக்களைப் புகழ் மணக்கும் நெல்லையில் தட்டியெழுப்பிய வ.உ.சிதம்பரனார், வெள்ளையனை எதிர்க்க “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” எனும் சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கினார். திலகர் வழியில் தனது போராட்டத்தை நடத்தினார். இவருடைய தேசியப் போராட்டத்திற்கு இருமுறை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர் குறைக்கப்பட்டது. 1906இல் சுதேசிக் கழகத்தைத் தொடங்க வ.உ.சி. மக்களிடம் நன்கொடை கேட்டார்.
பாரதியார், இராஜாஜி முதலியோர் பொருள், நிதி திரட்டினர். சேலத்தில் வழக்குரைஞராய்த் தம் பணியைத் தொடங்கிய இராஜாஜி தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயைத் தேசியக் கப்பல் கழகத்திற்கு அளித்தார். மக்கள் தலைக்கு நான்கு அணா மேனிக்கு (25 காசு) பொருளுதவி அளித்தனர். இவ்வாறு சேர்த்த பணத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வாங்கப் பெற்றன.
24.9.1907இல் வெளியான அறிக்கையில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் அக்கிராசனராக (தலைவராக) பாலவநத்தம் ஜமீன்தார் பொ.பாண்டித்துரைத் தேவர் அவர்களுடன், எஸ்.நல்லபெருமாள் பிள்ளை, வி.ஏ.வி.எஸ்.வெங்கடாசலம் செட்டியார், எம்.வி.மாயன் நாடார், எஸ்.வேங்கடேச ராமானுஜம் செட்டியார், எஸ்.டி.ஏ.ஆறுமுகம் பிள்ளை, எஸ்.எஸ்.வி. கிருஷ்ணப் பிள்ளை, பி.ஏ.எஸ். ஆதிநாராயணன் செட்டியார், ஏ.எஸ்.வி.திருச்சிற்றம்பலம் பிள்ளை, கொழும்பில் வணிகம் செய்துவந்த ஏ.எம்.செய்யத் இப்ராஹிம், திண்டுக்கல் ஏ.அசனுசைன் இராவுத்தர், இராமநாதபுரம் சீனி அசனுசைன் இராவுத்தர் ஆகியோரைச் சேர்த்து மொத்தம் 31 பேர் இயக்குநர்களாக (டைரக்டர்களாக) இருந்தனர். கௌரவச் செயலாளராக எஸ்.டி.கிருஷ்ண அய்யங்காரும், துணைக் காரியதரிசியாக வ.உ.சிதம்பரம் பிள்ளையும், ஆடிட்டராகத் திருநெல்வேலி வழக்கறிஞர் பி.கே.இராம அய்யர், எம்.கிருஷ்ணன் நாயர், பால் பீட்டர், பி.எஸ்.வேஷ அய்யர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். சேலம் விஜயராகவ ஆச்சாரியார் சட்ட ஆலோசகராகப் பொறுப்பிலிருந்தார். நாவலர் சோமசுந்தர பாரதியும் நிர்வாகக் பொறுப்பில் இருந்தார். கம்பெனி அலுவலகம் தூத்துக்குடி பீச் ரோடு, நான்காம் எண் கட்டடத்தில் இயங்கியது.
சுதேசிக் கப்பல் கழகம், உலகப் புகழ்பெற்ற கடல் ஆளுமை படைத்த வெள்ளையரை எதிர்த்து விடுதலையுணர்வின் அடிப்படையிலேயே வ.உ.சிதம்பரனார் கப்பலை அலைகடல் நடுவில் செலுத்தினார். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் இரவில் நகருக்குள் தூங்குவதற்கு அஞ்சி இரவு முழுவதும் படகுகளிலேறிக் கடலில் மிதந்து தூங்கினரென்றால் வ.உ.சி.யின் வேட்கை எப்படிப்பட்டது என்று நன்கு அறிய முடியும். வ.உ.சி.யின் விடுதலைக் குரலைக் குற்றமாகக் கொண்டே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
விபின் சந்திரபாலர் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை நாடெங்கும் விழாவாகக் கொண்டாடும்பொழுது, நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்நிகழ்ச்சி நடத்த வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் ஊர்வலமாக நடந்து கூட்டத்திற்கு வருவதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி ஊர்வலத்திலும், பொதுக் கூட்டத்திலும் இருவரும் பேசினர். பல குற்றச்சாட்டுகள் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் மீது சுமத்தி, ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ் 1908 மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். சிதம்பரனார் மீது இ.பி.கோ. 124ஏ-யும், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு இ.பி.கோ. 153ஏ என்ற பிரிவுகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டார். சிவா மீது இ.பி.கோ.124ஏ-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
3.2.1908 நெருப்புப் பேச்சாளர் சுப்பிரமணிய சிவா தூத்துக்குடியில் முதன் முதலாகக் கூட்டம் பேசினார். அதைத் தொடர்ந்து 23.2.1908இல் சிதம்பரனார் தலைமையில் திரும்பவும் தூத்துக்குடியில் உச்சினி மாகாளி கோவில் அருகில் ஆங்கிலேயரை எதிர்த்து சிவா முழக்கம் செய்தார். இதன் தொடர்ச்சியாக கோரல் மில் வேலை நிறுத்தத்தில் சிதம்பரனாரும் சிவாவும் ஆங்கிலேயரை எதிர்த்துக் களத்தில் இறங்கினர். போராட்டம் கடுமையாக இருந்தது. இதுகுறித்து சப்-கலெக்டர் ஆஷைச் சிதம்பரனார் வக்கீல் டி.ஆர்.மகாதேவ அய்யருடன் சென்று சந்தித்தார்.
9.3.1908 நெல்லை கூட்டம் முடிந்து இரவில் வ.உ.சி. தூத்துக்குடி சென்றார்.
10.3.1908 தூத்துக்குடியில் விபின் சந்திரபாலத் விடுதலை விழா கொண்டாட்டம். பின்னர் வ.உ.சி. புறப்பட்டு நெல்லை வந்து கலெக்டர் முன் ஆஜரானார்.
11.3.1908 அடுத்த நாளும் வ.உ.சி. கலெக்டர் முன் ஆஜரானார்.
13ஆம் தேதி திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து வெள்ளையர் அரசை எதிர்த்துப் போராடினர். இதனைத் “திருநெல்வேலி கலகம்” என்று குறிப்பிடுவது உண்டு. மார்ச் 14ஆம் தேதி தச்சநல்லூரிலும், கரூரிலும் மக்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தினர். பலரது பசியின்போது உணவளித்த வ.உ.சிதம்பரனாரின் கரங்கள், கோவைச் சிறையில் செக்கிழுத்து இன்னலுற்றன. சுப்பிரமணிய சிவாவைச் சேலம் சிறையில் அடைத்து ஆங்கில அரசு சித்திரவதை செய்தது.
தூத்துக்குடியில் வ.உ.சி.க்கு ஆதரவாக கோரல் மில் ஊழியர்கள், பெஸ்ட் அண்ட் கம்பெனி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், நகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
நெல்லையில் தெரு விளக்குகள் நொறுக்கப்பட்டன. நெல்லை பாலம் எனப்பட்ட வீரராகவபுரத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகே கடைகள் மூடப்பட்டன. தெருக்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லை. இந்துக் கல்லூரிக்குள் 3,000 விடுதலைப் போராட்ட வீரர்கள் புகுந்தனர். எதிர் பகுதியில் இருந்த பாரிக் கம்பெனி கட்டடத்தையும் தாக்கினர். பாளை ரிசர்வ் லைனில் இருந்து காவல் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
சி.எம்.எஸ். கல்லூரிக்குள் (தற்போதைய சாப்டர் பள்ளி) புகுந்த கும்பல் அங்கிருந்த உதவிப் பேராசிரியரைத் தாக்கினர். கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நகராட்சி சுவர் இடிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் விளக்குகள் உடைக்கப்பட்டன. ‘வந்தே மாதரம்’ முழக்கம் எங்கும் கேட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சுடு நடத்தினர். 4 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.
தூத்துக்குடியில் கடைகள் மூடப்பட்டன. வண்டிப்பேட்டையில் அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு சப்-கலெக்டர் ஆஷ் தலைமையில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சப்-கலெக்டர் மீது கற்கள் வீசப்பட்டன. அப்பகுதியில் 4 மணி நேரம் பெரும் கலவரம் நடந்தது.
1908 ஏப்லல் 26இல் பாரதியார் நெல்லை வந்தார். இந்தியா பத்திரிகையில் ‘திருநெல்வேலி எழுச்சி’ குறித்து பேட்டியில் குறிப்பிட்டது. “26ஆம் தேதி மாலை நெல்லை வந்தேன். நெல்லையில் சுடப்பட்டு இறந்த நபர்கள் குறித்து விசாரித்தேன். நான் விசாரித்ததில் இறந்தவன் பெயர் ஆறுமுகம் பிள்ளை, வண்ணார்பேட்டை ஸ்பெஷல் செட்டில்மெண்ட் அலுவலகத்தில் சேவக வேலை செய்து வந்தவன். சம்பவம் நடந்த நாட்களில் நெல்லை ‘மாண்புரம்’ போல இருந்தது. தற்போது பீதி தெளிந்துவிட்டது.”
சுதேசமித்திரன் பத்திரிகை, ‘இறந்தவர்களில் ஒருவர் வம்புலியம்மன் கோயில் பூசாரி, மற்றவர்கள் முஸ்லிம் (முகமது யாசின்), தலித், போலீஸ் சூப்பிரெண்டன்ட் துப்பாக்கியால் சுட்டடிபோது ரொட்டிக்கடை பையல் அலறிக் கொண்டே கீழே விழுந்தான். அவன் உடலில் இருந்து வெளியான ரத்தம் 10 அடி தரையை நனைத்தது’ என எழுதியிருந்தது.
நெல்லையில் மக்கள் எழுச்சியின்போது தாக்கப்பட்ட பொதுக் கட்டடங்களுக்குத் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. நெல்லை நகர போலீஸ் ஸ்டேஷனுக்கு 2,253 ரூபாய் 7 பைசா, நகராட்சிக் கட்டடத்திற்கு ரூ.14,255/-, மாவட்டத் துணை முன்சீப் கோர்ட்டிற்கு ரூ.287/- இழப்பீடு வழங்கப்பட்டது. நகராட்சியில் புதிய வரிப் பதிவேடு தயாரிக்க பணியாளர், தற்காலிக இடம் ஆகியவற்றிற்கு ரூ.14,255/- செலவானது. நெல்லையில் அமைதி ஏற்படுத்த தண்டக்காவல் படை நியமிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சார்ஜென்ட்கள், 1 ஏட்டு, 150 கான்ஸ்டபிள்கள் பணியாற்றினர். இதற்கு ரூ.98,125/- செலவிடப்பட்டது.
1991 ஜூன் 14 நெல்லை கைலாசபுரத்தில் ராமலிங்க அய்யரின் உணவு விடுதியில் இளைஞரான வாஞ்சிநாதன் உணவு உண்டு, 3 நாட்கள் நெல்லை டவுனில் முகாமிட்டார். டவுன் ஒற்றை மாட வீதியில் தாசியின் வீட்டுக்குச் சென்று நண்பர்கள் மூலம் முக்கிய தகவலைப் பெறுகிறார். அந்தத் தகவலின்பஐ நடக்க வாஞ்சிநாதன் உறுதி பூண்டார்.
ஜூன் 17 நெல்லை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மணியாச்சி மெயிலில் மாவட்ட ஆடிங்க கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி’எஸ்கார்ட் ஆஷ் பயணம் செய்வார். அவரைச் சுட வேண்டும் என்று முடிவெடுத்து, பச்சை கோட், டுவில் சட்டை, வெள்ளை வேட்டி, வண்ணக்கரை போட்ட மேல் துண்டு அணிந்து, நெல்லையில் இருந்து மணியாச்சிக்கு அதே இரயிலில் வாஞ்சிநாதனும் புறப்பட்டார். இரண்டாம் வகுப்பில் எண்.125இல் மலையாளிப் பயணி போல் காட்சி அளித்தார்.
காலை 10.35 மணிக்கு மணியாச்சியில் ரயில் நிறுத்தப்பட்டது. 10.48க்கு தூத்துக்குடியில் இருந்து வரும் சிலோன்போட் மெயில் ரயிலுக்காக மணியாச்சி ரயில்லி காத்திருந்த ஆஷை வாஞ்சிநாதன் சுட்டார். சுடப்பட்ட ஆஷ் 11.30 மணிக்கு கங்கைகொண்டானுக்குக் கொண்டு வரப்பட்டபோது இறந்தார். கலெக்டர் ஆஷைச் சுட்ட வாஞ்சிநாதன் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு இறந்தார்.
கலெக்டர் ஆஷ்ஷை வாஞ்சி சுட்டுக் கொல்ல மூலக் காரணம் — கப்பலோட்டிய சிதம்பரனாரை ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்ததற்கும், 1909 அக்டோபர் 16ஆம் தேதி (கட்டபொம்மன் நினைவு நாள்) துவக்கப்பட்ட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை அழித்ததற்கும் பழி தீர்க்கத்தான். வாஞ்சிநாதனுடைய நடவடிக்கையை மேடம் காமா பாரிஸிலிருந்து ‘வந்தே மாதரம்’ இதழில் கீழ்குறிப்பிட்டவாறு பாராட்டினார்.
“திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப் பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, மேற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதில்கள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாய சங்கு ஊதப்பட்டு விட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டியாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வர வேண்டியிருக்கும்.”
வாஞ்சிநாதன் நிகழ்த்திய இந்த தீரச் செய்ல இங்கிலாந்தை உலுக்கியது. 1911 ஜூன் 17இல் ஆஷைச் சுட்டது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அதே வருடம் ஜூன் 19ஆம் தேதி விவாதத்திற்கு உள்ளானது. சென்னையிலிருந்து வாஞ்சிநாதனுடைய துணைவியார் பொன்னம்மாளைப் பசும்பொன் தேவர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து அவரின் வாழ்த்துக்கள் பெறுவது வழக்கம்.
1908இல் பிரிட்டிஷாருக்கு எதிராக நெல்லையில் போராடியவர்கள் மீது கலெக்டர் வின்ச் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் மாண்டனர். வ.உ.சி. வழக்கில் உதவ டாக்டர் வரதராஜுலு நாயுடு அடக்கடி நெல்லைக்கு வந்து செல்வார். பாரதியை உ.வ.சி. மாமா என்று அழைப்பார்.
விடுதலைக்குப் பின்பு வ.உ.சிதம்பரனார் திருக்குறளுக்கு உரை எழுதுதல், மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார். செல்வச் சீமானாக இருந்த வ.உ.சிதம்பரனார், 1924ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை பெரம்பூரில் சில காலம் வாழ்ந்தபொழுது தவிடு விற்று வாழ்க்கை நடத்தினார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள விஸ்வகர்மா பள்ளியின் அருகில் உள்ள ஒரு வீட்டில் வறுமையில் வாடியதும், கோவில்பட்டி நீதிமன்றத்துக்குக் கிழிந்த கோட்டை உடுத்திக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டதையும் பார்த்துப் பலர் கண்ணீர் சிந்தினர். இதை அறிந்த இராஜாஜி ஒரு சிறு தொகையை அவருக்கு அனுப்பினார். காந்திக்கு நெருக்கமான வேதியப்ப பிள்ளை தென் ஆப்பிரிக்காவில் வ.உ.சிதம்பரனாருக்காக நிதி திரட்டினார்.
வறுமையில் வாடினாலும் தமிழ் வளர்க்க வேண்டுமென்று தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சா.வையாபுரி பிள்ளை, வெங்கடேசுவரா நாயுடு ஆகியோர் வ.உ.சி.க்கு துணைõயக இருந்தனர்.
நெல்லைப் பகுதியில் விடுதலை வேள்வியில் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றினர். ஒவ்வொருவரும் இதயசுத்தியோடு இப்போராட்டத்தில் சர்வபரித் தியாகம் செய்தனர். ‘சிவம் பேசினால் சவமும் எழும்’ என்று சொல்வார்கள். பேச்சாற்றலில் எழுச்சியை உருவாக்கிய சிவமும் வ.உ.சி.யுடன் சிறைக்குச் சென்றார். சிறைவாசத்துக்குப் பின்பு சிவத்திற்கு கொடிய நோய் பற்றிக் கொண்டது. அதற்குப் பின்பு, சிவம் தருமபுரி அருகில் உள்ள பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவில் கட்டி, ஆசிரமத்தை நிறுவினார். தன்னுடைய பேச்சில் அயர்லாந்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டத்தை அடிக்கடி சிவம் நினைவு கூர்வார். சிவம் மொத்தம் நான்கு வழக்குகளில் சிறைத் தண்மனை பெற்றவர்.
பரலி சு.நெல்லையப்பர், கோமதி சங்கர தீட்சிதர், நீலகண்ட பிரம்மச்சாரி, நாவலர் சோமசுந்தர பாரதி, எஸ்.எஸ்.கரையாளர், தினமணி ஆசிரியர்களான டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், சோமயாஜுலு, இன்றைய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களான நல்லகண்ணு, நல்லசிவம், பாலவிநாயகம், மீனாட்சிநாதன் போன்ற எண்ணற்றவர்களின் பணியும் தியாகமும் நினைவில் கொண்டு போற்ற வேண்டும். விஜயா, நெல்லைச் செய்தி, இளந்தமிழன் போன்ற தமிழ் இதழ்கள் விடுதலை வேள்வியில் நெய்யூற்றின. கலைத் துறையைச் சார்ந்த செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, பழம்பெரும் நடிகைகளான இரத்னாபாய், ஸ்ரீவைகுண்டம் சந்தானலட்சுமி போன்றவர்கள் கலைகள் மூலமாக விடுதலை வேள்வியை வளர்த்தனர். நீலகண்ட பிரம்மச்சாரி உட்பட 17 பேர் மீது நெல்லை சதி வழக்கு, குலசேகர பட்டணத்தில் இராஜகோபாலன் போன்ற தியாகிகள் மீது போடப்பட்ட லோன் கொலை வழக்கு, பூச்சிக்காடு கள் மறுப்புப் போராட்ட வழக்கு, குரங்காணிப் பகுதியில் ஆங்கில அரசால் பொய்யாக வடிக்கப்பட்ட மாவடிப் பண்ணை மரம் வெட்டு வழக்கு என்ற பல்வேறு வழக்குகள் இம்மண்ணில் விடுதலைப் போரில் தவறாக போடப்பட்டு எண்ணற்ற தியாகிகளைச் சிறையில் தள்ளினர். இவ்வாறு, விடுதலைப் போருக்குத் திருநெல்வேலி மாவட்டமும் தன் பங்கினைப் பாங்குறச் செய்தது.
திருநெல்வேலி நகராட்சியில் இந்த வ.உ.சி. எழுச்சிப் போராட்டத்தைக் கண்டித்து ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தீர்மானம் இன்றும் உயிரோடு இருக்கிறது. அதைத் திருத்தவோ அல்லது திரும்பப் பெறவோ எவ்வித முயற்சிகளும் இன்றுவரை நகராட்சி, மாநகராட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்கள் முடிவுகளை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தீர்மானத்தை ரத்து செய்ய கடந்த ஒரு மாத காலமாக பல தரப்பினராலும் நெல்லை மாநகராட்சிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும் செவிடன் காதில் ஊதிய கதையாக இருக்கிறது.
‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என சம்பந்தரும், ‘தண் பொருநைப் புனல்நாடு’ என சேக்கிழாரும், ‘பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி’ என்று கம்பரும் பாடிய பூமி விடுதலைப் போரில் சிவந்து நூற்றாண்டு ஆகிறது. அதைப் போற்றுவோம்.
– தினமணி, 21.05.2008