பாழாகும் பாலாறு
பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்கல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென் பகுதியில் தொன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.
தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணிகையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று தற்போது சென்னைக்கு வடகிழக்கில் எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப்பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் ஒரு சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கப்படடணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.
கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் கூறு பாலாறு என்று காட்டப்படுவதால் காஞ்சிக்கு வடக்கில் கி.பி.11, 12ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை பாலாறு காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது. ஆனால் இன்று பாலாறு சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.
800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு மதிர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
ஆந்திர அரசு தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ. பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.
ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர்கூட வருவது இல்லை. ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.
1850இல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்டகால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855இல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855இல் அணை 1874இல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877இன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920இல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண) மைசூர் அரசாங்க ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்துவிட்டது.
இப்பிரச்சினைக் குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்டி நீரைத் தடுத்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்தும் எவ்வித மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கிவிட்டது.
1802இல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.
1954இல் வட ஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்த தீர்மானத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினர். தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ.250 கோடி செலவில் 160 அடி உரயத்தில் கணேசபுரம் அணைக் கட்ட பணிகளைத் துவக்கிவிட்டனர்.
இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன்பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழை நீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதைத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.
– தினமணி, 03.02.2007