பிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்

சில அரசியல் தலைவர்களுடைய நீதிமன்ற அவமதிப்பும் தண்டனைகளும்
- உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு.
- ஒரு ரூபாய் அபராதம்.
- கட்ட தவறினால் மூன்று மாத சிறைவாசம்.
- மூன்று வருடம் வழக்காட தடை.
கடந்த 1967-ம் ஆண்டு இரண்டாவது முறையாக கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்த பின் முதலமைச்சர் ஈ.எம்.எஸ், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, “நீதித்துறை ஓர் அடக்குமுறைக் கருவி. நீதிபதிகள் தங்களது வர்க்கத்தின் சார்பாக நீதியளிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். உடனடியாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாராயணன் நம்பூதிரி என்பவர் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக முதலமைச்சர் ஈ.எம்.எஸ்ஸுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து, அதைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஈ.எம்.எஸ். அவருக்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் வாதாடினார். “ஈ.எம்.எஸ் எந்தவிதத்திலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யவில்லை. ஒரு வர்க்க சமுதாயத்தில், நீதிபதிகள் வர்க்க நலனை மட்டுமே பிரதிபலிப்பார்கள். ‘அரசு என்பது ஓர் அடக்குமுறைக் கருவி. அதன் ஒரு பகுதிதான் நீதிமன்றம்’ – இத்தகைய மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் அவர் இவ்வாறு பேசினார்” என்று வாதாடினார். ஆனால், நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரித்தனர். ஈ.எம்.எஸ்ஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து அபராதத்தை மட்டும் 50 ரூபாயாகக் குறைத்தனர். கூடவே, ‘ஈ.எம்.எஸ் மார்க்சியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’ என்றும் குறிப்பிட்டனர். ஈ. எம். எஸ். நீதிமன்ற தண்டனையை ஏற்றுக் கொண்டு அபராதத் தொகையை கட்ட மறுத்தார்.ஈ.எம்.எஸ்ஸுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த பி.சிவசங்கர் மீது ஹைதராபாத் பார் கவுன்சில் கூட்டத்தில், ”நீதிபதிகள் வசதி படைத்த குடும்பங்களிலிருந்து நியமிக்கப்படுவதால், சீர்திருத்தச் சட்டங்களை ரத்து செய்கிறார்கள். ஜமீன்தார் குடும்பத்திலிருந்து வந்ததால் நிலச் சீர்திருத்தங்களை எதிர்க்கிறார்கள்” என்று அவர் பேசிய பேச்சுக்காக வழக்கு பாய்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சிவசங்கர் பேச்சில் நீதிமன்ற அவமதிப்பு ஏதுமில்லை; தனிப்பட்ட முறையில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. பேச்சுரிமையை நீதிமன்றம் மதிப்பதால், இது போன்ற விஷயங்களில் தலையிட விரும்பவில்லை’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தனது கட்சிப் பத்திரிகையான `சாமனா’வில், ‘நீதித்துறை ஊழலிலிருந்து விடுதலை பெறவில்லை’ என்று தலையங்கம் எழுதிய சிவசேனா கட்சியின் பால் தாக்கரே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கினார், . அவர்மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு மகாராஷ்டிர மாநில அட்வகேட் ஜெனரலிடம் ஒப்புதல் பெறவில்லை என்ற நடைமுறைக் கோளாறைக் காரணம் காட்டி, அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கேரளாவில் பொது இடங்களில் அரசியல் கூட்டம் நடத்துவதற்குத் தடைவிதித்த நீதிபதிகளை, ‘முட்டாள்கள்’என்றும், ‘அவர்களுக்கு சுயமரியாதை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறட்டும்’ என்றும் கூறியதற்காக மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.வி.ஜெயராஜன் என்பவருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையுடன், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது கேரள உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் சிறைத்தண்டனையை நான்கு வாரங்களாகக் குறைத்தது. அந்தத் தீர்ப்பில், ‘நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் நியாயமாக விமர்சனம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேசமயம் நீதிமன்றத் தீர்ப்புகள் திருப்தி தரவில்லையெனில், மேல்முறையீடு செய்ய வேண்டுமேயொழிய அவற்றைத் தெருக்களில் விமர்சனம் செய்து நீதிமன்றங்களை அசிங்கப்படுத்தக் கூடாது’ என்றும் எச்சரிக்கை செய்தார்கள்.
அதைப் போல உத்திரபிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக தலைவர்களுள் ஒருவருமான கல்யாண் சிங்கும் 1994 அக்டோபரில் இது மாதிரி ஒரு நாள் சிறைத் தண்டனை பெற்றதும் உண்டு.
அரசியலில் ஒரு ரூபாய் அறிவிப்புகள் பல நடந்தது உண்டு. அண்ணா ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார். ஜெயலலிதா முதல்வராக ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்கினேன் என்றார். ஆனால் கர்நாடகா நீதிமன்றத்தில் ஊழல் வழக்கிலும் தண்டனையும் பெற்றார்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
31.08.2020