மண்ணும் கடவுள்; மரமும் கடவுள்!

0

நாட்டுப்புற மக்களின் வாழ்வி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைகிறது. அவர்களின் கடவுள் நம்பிக்கை அலாதியானது. கிராமத்து மக்கள் கடவுளைத் தேடி கோயில் கோயிலாக அலைவது இல்லை. தன் புஞ்சைக் கரையில் உள்ள ஒரு மரம் அவனுக்குக் கடவுளாகி விடுகிறது. கிராமத்து மக்களின் வழிபாடு என்பதே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. மரம் இல்லாத ஒரு சிறு தெய்வக் கோயிலைக்கூட நம்மால் பார்க்க முடியாது.

பெருந்தெய்வ மரபில் ஸ்தல விருட்சம் என்று இருப்பதைப் போல சிறு தெய்வ மரபிலும் மரங்கள் வணங்கப்படுகிறது. ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்கள் சிறு தெய்வக் கோயிக்ளைச் சுற்றிக் காணப்படுகின்றன. ஸ்தல விருட்சம், கோயில் மரம் என்ற கருத்தாக்கங்கள் மக்களுக்கும்மரங்களுக்குமான உறவை வளர்க்கின்றன. இயற்கையைப் பேண வேண்டும், மரங்களை வளர்க்க வேண்டும், சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனைகள் கிராமத்து மக்களுக்கு இருந்ததால்தான் தாம் வணங்கும் தெய்வங்களுடன் மரங்களையும் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

கிராமத்துப் பெண்கள் வயலில் இறங்கி நாற்று நட ஆரம்பிக்கும்போது முதலில் ஒரு முடி நாற்றை வயலின் ஈசான மூலையில் நட்டு வைத்து விடுவார்கள். அவர்களுக்கு அன்றைக்கு அதுதான் சாமி. அந்தச் சாமிக்கு நாற்றுகளையே மாலையாகக் கட்டிச் சாத்தி விடீவார்கள். கிராமத்து மக்கள் தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கான சாமியைத் தானே உருவாக்கிக் கொள்கிறார்கள். நாட்டுப்புறத்து மக்களின் சிறுதெய்வ வழிபாடு என்பது இப்படி மிக இயல்பாகத் துவங்கி விடுகிறது.

தன் வீட்டு மாட்டுக் கொட்டகையில் இருந்து ஒரு பிடி சாணத்தை எடுத்து அதை வீட்டு மூலையில் வைத்து அதன் மேல் மூன்று அருகம்புல்லைச் சொருகிவிட்டால் போதும் சாமி ரெடியாகி விடுகிறது. நாட்டுப்புறத்து மக்களிடம்தான் தனக்கான சாமியைத் தானே படைத்துக் கொள்கிற இயல்பு காணப்படுகிறது. வீட்டில் பெரியவர் ஒருவர் வாழ்ந்து, அவர் இறந்து விட்டபின், அவர் புழங்கிய பண்ட பாத்திரங்கள், அவர் உடுத்திக் களைந்த வேஷ்டி, சட்டைகூட அந்தக் குடும்பத்தினரால் புனிதச் சின்னமாகப் போற்றப்படுகின்றது. அந்த வேஷ்டி, சேலைகளையே வீட்டின் மூலையில் வைத்துக் கும்பிடும் நாட்டுப்புற மரபு இன்றும் கிராமத்து மக்களிடம் உள்ளது. இத்தகைய வழிபாடுகள் மிக யதார்த்தமாக நடைபெறுகிறது. அதற்குப் பெரும் செலவு ஒன்றும் ஆவதில்லை.

பச்சை மண்ணைக் குழைத்து உருவாக்கப்படும் பீடம் காய்ந்தவுடன் அதை வெள்ளை அடித்தால், அதுவே மக்கள் வழிபடும் தெய்வமாகி விடுகிறது. மண்ணையே சாமியாக்கி வழிபடும் நாட்டுப்புற மக்களின் மரபு, உழைக்கும் மக்களின் உளவியல் சார்ந்ததாகும். கழனியில் வேலையை ஆரம்பிக்கும் சம்சாரி, மண்வெட்டியை மண்ணில் போடும் முன் அந்த மண்ணைத் தொட்டு வணங்குகிறான். இப்படி மண்ணைத் தொட்டு வணங்கும் மரபின் வளர்ச்சி தான் பீடங்களை வணங்கும் முறையாக வளர்ந்திருக்க வேண்டும்.

நாட்டுப்புறத்து மக்கள் தன் இனக் குழுவில் தியாகம் செய்த அல்லது வீரம், கொடை முதலிய பண்புகளில் தலைசிறந்து விளங்கிய தன் முன்னோர்களில் ஒருவரையே தன் தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடுகிறார்கள். தன் முன்னோர்களையே தெய்வீகப் பிரதியாக ஏற்றுக் கொள்ளும் மரபு உலகில் மிகப் பழம்பெரும் இனக் குழு மக்களுக்கு உரியதாகும். ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி இரு பாலாரும் குறுந்தெய்வமாக நாட்டுப்புற மரபில் வணங்கப்படுகிறார்கள். இளம் வயதில் பல்வேறு பண்பாட்டுக் கலாசாரக் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட கன்னிப் பெண்களும், இளைஞர்களும் கூட பிற்காலத்தில் சிறு தெய்வங்களாக நாட்டுப்புற மக்களால் வழிபடப்படுகிறார்கள்.

இத்தகைய தெய்வ உருவாக்கங்களை நாம் ஒற்றைப் பார்வையால் பார்க்காமல் அவற்றை மானுடவியல் மற்றும் உளவியல் நோக்கில் ஆராய வேண்டும். ஆய்வாளர்கள் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களை கொலையில் உதித்த தெய்வங்கள் என்று வணக்கப்படுத்துகிறார்கள்.

இத்தகைய நாட்டுப்புற தெய்வங்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு அல்லது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும் கிராமத்து மக்கற் தன் இனக் குழுவில் ‘ஆளுமை’ செய்து இறந்தவரின் நினைவாக, அவர் இறந்த நாளிலேயே பொங்கலிட்டும் படையலிட்டும் வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய படையல் என்பது இறந்த நபரின் விருப்பமான உணவாகவோ இல்லது பானமாகவோ இருக்கிறது. மூதாதையரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்யும்போது, கிராமத்து மக்கள் தான் எதைச் சாப்பிடுகின்றோமோ அதையே தான் வழிபடும் ‘சாமிகளுக்கும்’ படையலாக இடுகிறார்கள்.

தமிழகத்தில் கிராமங்கள்தோறும் காணப்படுகின்ற நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களாலேயெ வணங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஆதியில் இத்தகைய வழிபாடுகளே இருந்தன. தான் வழிபடுகிள சாமிக்கான வடிவம் தேடியும் நாட்டுப்புறத்து மக்கள் நெடுக அலையவில்லைக். காட்டில் ‘நீளவாளமாக’ (கன செவ்வக வடிவம்) ஒரு ஒழுங்கான கல் கிடைத்தால் போதும். அதை ஒரு மரத்தடியில் நட்டு வைத்து, அதன் மேல் சற்றே சந்தனம் கரைத்துச் சாத்தி, சிறிது குங்குமம் வைத்தால் புனித இடமாகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது.

நடுகற்களை வணங்குவது ஆதி தெய்வ வழிபாடுகளில் ஒன்றாகும். இந்த கருத்தாக்கங்களின் அடிப்படையில் தான் இத்தகைய வழிபாடுகள் தோன்றியிருக்க வேண்டும். செங்கல் சூளையில் இருந்து எடுத்து வரப்படும் ஒரே ஒரு செங்கலுக்கு சந்தனமும், குங்குமமும் இட்டால் அதுவும் கட்டடம் கட்டும் தொழிலாளர்களுக்கு வழிபடும் ‘சாமி’யாகி விடுகிறது. சச்சமுக்கமான (ஒழுங்கான வடிவிலான) கல்லும், செங்கல்லும் சாமியான காலகட்டத்தின் வளர்ச்சிதான் சிறிய சுதைமண் சிற்பங்களாக மாறியது.

குடிமக்களுக்கு, வீட்டில் புழங்க பானைச் சட்டிகளை வளைந்து சூளையில் வைத்து சுட்டுக் கொடுத்த குயவர்களிடம் அவ்வூர் மக்கள் சென்று, ‘நாங்கள் வழிவடுவதற்கான சாமியையும் செய்து தாருங்கள்’ என்று கேட்டதன் விளைவாக, குயவர்கள் என்ற மண்பாண்டக் கலைஞர்கள், கிராமத்து மக்கள் வழிபடுவதற்கான சாமியின் உருவங்களை மண் பொம்மைகளாகவும் படைத்து அவற்றிற்கு வண்ணமும் பூசிக் கொடுத்தார்கள். சுட்ட செங்கல்லில் இருந்து நாட்டுப்புறத்து மக்கள் வழிபடும் சாமி மண் சிலையாக வடிவெடுத்தபோது, சிற்பக் கலையும் சேர்ந்து வளரத் தொடங்கியது. படைப்புக் கலை விழித்துக் கொண்டது.

ஒரு இனக் குழு மக்களின் சாமி சிலையைப் பாத்தவர்கள், தத்தமது இனக் குழுவிற்கான வேறுபட்ட வடிவங்களைப் படைக்க வேண்டினர். இத்தகையச் சூழலில்தான் வெவ்வேறு வடிவங்களுடைய குறுஞ்சாமிகளின் சிலைகள் தோன்றின. அப்படி படைக்கப்பட்ட சாமிகளின் வடிவ வேறுபாட்டில், அச்சாமிகள் தோன்றிய வரலாறுகளும், கதைக் கூறுகளும் குறியீடுகளாகப் பதிவாயின.

சுதைமண் சிற்பங்கள் எளிதில் உடைந்து விடும் என்பதால், நாட்டுப்புற வழிபாட்டு மனம் மண்ணில் இருந்து கல்லிற்குத் தாவியது. கல்லில் சிற்பங்களும், சிலைகளும் செதுக்கித் தரும் கலைஞர்களை மக்கள் நாடினார்கள். மழை, வெயில், காற்று என்ற இயற்கையில் பல்வேறுபட்ட தாக்குதல்களையும் தாண்டி நிலைத்து நிற்கக் கூடிய கற்சிலைகள், இத்தகைய சூழலில்தான் நாட்டுப்புறத்து தெய்வங்களாகத் தலைநிமிர்ந்தன.

சிலைகள் எழுந்தபோதும், அச்சிலைகளை நிறுவ, வேதமந்திரங்களை கிராமத்து மனம் தேடவில்லை. தனக்கான பூசாரிகளையும், தன் குழுவில் இருந்தே கிராமத்து மக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். வெட்டவெளியில் மரத்தடியில் நிறுவப்பட்ட தன் குலத்தின் சாமி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, சூறைக் காற்றில் அசைவதைக் கண்ட கிராமத்து மக்கள் ‘பக்த’ மனம் பதைபதைத்தது.

தான் மட்டும் மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பாதுகாப்பாக ஒரு வீட்டினுள் வாழும்போது, தம் இனக்குழுவின் தலைவனான, தான் வணங்கும் தெய்வமான சாமியின் சிலை, வெயிலில் காய்ந்து, மழையில் நனையாமல் இருக்க, அச்சிலை இருக்கும் இடத்தில் ஒரு சிறிய நிழலை அமைத்தான். தன் தோட்டத்தில் உள்ள மரக்கம்புகளைக் கொண்டும், பனை அல்லது தென்னை ஓலைகளைக் கொண்டும் சாமிக்கு ஆரம்ப காலத்தில் குடிசைகளை அமைத்தான்.

அக்குடில்களே பிற்காலத்தில் ஓட்டுக் கட்டடங்களாகவும், பின்னர் காரைக் கட்டடங்களாகவும் மாறின. நாட்டுப்புளத் தெய்வங்களும், அத்தெய்வங்கள் வாழும் கோயில்களும் இப்படித்தான் மிக இயல்பாக மக்களால் வழிபாடுகளுக்கு என்று உருவாக்கப்பட்டன. இயல்பான, இயற்கையான இந்த நாட்டுப்புறத் தெய்வங்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகுதியாகக் காணக் கிடைக்கின்றன. பக்தி நெறியில் ஆன்மிக வாழ்வில் இத்தெய்வங்கள் மக்கள் மனங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் உமையன் சாமி, நெல்லிவீரன் போன்ற அரிதான சாமிகளுக்கும், சுடலைமாடன், பேச்சியம்மன், கறுப்பன், சின்னத்தம்பி, புலமாடன் போன்ற துடியான சாமிகளுக்கும், மதுரைவீரன், காத்தவராயன் போன்ற வரலாற்று நாயகர்களுக்கும் ஏராளமான கோயில்கள் உள்ளன. இத்தகைய நாட்டுப்புளத் தெய்வங்களுக்கான வழிபாடுகள், தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் காணப்படுகின்றன.

பாரத தேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்தியாவில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பழம்பெரும் நாடுகளில் எல்லாம் நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாடுகள் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

– தினமணி தீபாவளி மலர், நவம்பர், 2007

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons