லத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்!
திருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது தவறு என்றும் சொல்லியுள்ளார். தவறான வாதங்களை எழுப்புவதற்கு முன் உண்மைகளை அறிந்து பேசுவது அனைவருக்கும் நல்லது. அதற்கு பதிலாக சில கருத்துகளை வைக்க விரும்புகின்றேன்.
திருமதி. லத்திகா சரண் நியமனத்திற்கு முன் இப்பொறுப்பிலிருந்த திரு. ஜெயின் நீண்டநாள் விடுமுறையில் சென்று விட்டதால், காலியாக இருந்த இப்பதவிக்கு வேறு மாநிலம் அல்லது மத்திய அரசு பதவிக்கு சென்றுள்ளவர்களைத் தவிர்த்து மொத்தம் மூன்று பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் திருமதி. லத்திகா சரண், திரு. நடராஜ், திரு. போலோநாத் என்ற மூன்று பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு, திருமதி. லத்திகா சரண் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். திரு. விஜயகுமார் ஏற்கனவே மத்திய அரசுப் பணிக்குச் சென்று விட்டார். திரு. பாலச்சந்திரன் ஓய்வு பெற்றுவிட்டார். இதனை எதிர்த்து அந்த பட்டியலிலிருந்த திரு. நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருமதி. லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்து கடந்த 8.10.2010இல் தீர்ப்பை வழங்கினர். அத்தீர்ப்பில், லத்திகா சரண் நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விதிமுறைகள் யாவும் நடைமுறைக்கே வரவில்லை; மத்திய அரசு, மாநிலங்களில் டி.ஜி.பி. நியமனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்த மனுவும் நிலுவையில் இருப்பதை, சென்னை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியது.
மாநில காவல் துறை தலைமை இயக்குநராக ஒருவரை நியமிக்கும் பொழுது, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பெற்று, அதிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நெறிமுறை இன்னும் நடைமுறையில் சட்டமாக்கப்படவில்லை. இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் கருத்துகளை அறிய அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜெ. தாமசுடைய குழுவின் அறிக்கைகூட தற்போதுதான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வராத ஒரு சட்டத்தைக் கொண்டு லத்திகா சரணின் நியமனம் செல்லாது என குறிப்பிட்டது எந்த வகையில் நியாயமாகும். இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் மனுவும் உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
லத்திகா சரணின் நியமனம் செல்லாது என தீர்ப்பு வந்த அன்றே தமிழக அரசும் இதுகுறித்து முழுமையான, தெளிவான, பதிலோடு அறிக்கை வெளியிட்டது. தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இப்பதவிக்கான நியமனம் தேர்வு நியமனம் (குஞுடூஞுஞிtடிணிண) ஆகும். இந்த காலிப் பணியிடத்திற்கு நியமனம் செய்யும் பொழுது, அந்த காலகட்டத்தில் பணியில் இருக்கும் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களின் பணித் திறன், அனுபவத் திறன் ஆகியவற்றை கொண்டே திருமதி. லத்திகா சரண் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார் என்று தமிழக அரசு அந்த அறிக்கையில் தெரிவித்தது. மேலும் இந்த நியமனம் தேர்வு நியமனம் என்பதால் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டும் செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்த மனு மீது இதுவரை எந்த சட்டபூர்வமான நடவடிக்கையும் இல்லை. இதையெல்லாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு இதுகுறித்து இருமுறை கடிதங்களை எழுதியுள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கின்போது இவற்றையெல்லாம் நீதிமன்ற பரிசீலனைக்கு கொண்டு வந்தார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் பட்டியல் தயாரிக்க முடியாத சூழ்நிலையில், தகுதி பெற்ற காவல் துறை மூத்த அதிகாரிகளை கொண்டு பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு நியமனம் (குஞுடூஞுஞிtடிணிண) முறையில் லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். இதில் உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றியுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது, தி.மு.க. அரசு தனக்கு வேண்டிய லத்திகா சரணை பணி நியமனம் செய்து விட்டது என்று தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது வேதனையை அளிக்கிறது. இந்த பிரச்சினையில், புரிந்தும் புரியாதது போல் தி.மு.க. அரசின் மீது கடுமையான தாக்குதல்களை அவசர கோலத்தில் தொடுப்பது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது.
மாநிலங்களில் டி.ஜி.பி.களை நியமனம் செய்யும் பொழுது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து மூன்று நபர்களின் பட்டியலை பெற்று, அவர்களில் ஒருவரைதான் நியமனம் செய்ய வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமோ, இதுகுறித்த நெறிமுறைகள் எங்களுக்கு இதுவரை வரவில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில் மத்திய அரசு பணி தேர்வு தான் எங்களுடைய பொறுப்பு. மாநில அரசு பணி நியமனங்களின் பட்டியல் தயாரிக்கும்பொழுது பல சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்றும், நெறிகாட்டு வழிமுறைகளே எங்களுக்கு இல்லாதபொழுது நாங்கள் எப்படி பட்டியல் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசு நியமனம் செய்யும் அதிகாரிகள் வெறும் பணிமூப்பை மட்டுமே அடிப்படையாக கொள்ளாமல், பணி திறன், அனுபவ திறன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைமைக்கு நம்பிக்கை உள்ளவராக நியமனம் செய்வது ஒரு மரபு. பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை பின்பற்றுகின்ற நாம் மக்களிடம் வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் தங்களுடைய கொள்கைகள், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்களின் திறன், அனுபவம் இவற்றோடு அவர்கள் அளிக்கும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் சிந்தித்துத்தான் நியமனம் செய்வது வாடிக்கை, மரபு. பல சமயங்களில் நீதிபதிகள் நியமனத்தின்போதுகூட பணி மூப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் இம்மாதிரி நியமிக்கப்பட்ட பொழுது பலர் வாய் மூடி மௌனிகளாக இருந்தனர். அரசை நடத்துகின்ற முதலமைச்சருக்குத்தான் இதிலிலுள்ள சிரமங்கள் தெரியும். இவ்வாறு உண்மைகள் இருக்கும்பொழுது, தகுதியில்லாத லத்திகா சரணை நியமித்து விட்டது போன்று மேலும் கீழும் குதித்து, முதல்வர் மீது விமர்சனங்களை அள்ளித் தெளிப்பது வாடிக்கையாகி விட்டது. முதன் முதலாக ஒரு பெண்மணியை காவல் துறையின் தலைமை பதவிக்கு தமிழகத்தில் நியமிக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் செய்தது தவறா?
உயிர் காக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 அவசர ஊர்தி, இலவச வீடுகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என நித்தமும் மக்கள் நலப் பணிகளை ஆற்றும் அரசை பழி சொல்வதுதான் இவர்களது வேலை என்றால், ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல முடியாது. எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சிகளாக இல்லாமல், எதிரிகட்சிகளாக இருந்தால் ஜனநாயகத்தில் என்ன செய்ய முடியும்? இச்சூழலில் தான் இம்மாதிரி தேவையற்ற விதண்டாவாத சர்ச்சைகளை திட்டமிட்டு சிலர் செய்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் தெள்ள தெளிவாக பதில் மனு தாக்கல் செய்த பின்பும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருவது முறையற்றதாகும். தமிழக அரசு டி.ஜி.பி. அந்தஸ்திலிருந்த அனைத்து அதிகாரிகளின் பெயரையும் முறையாக பரிசீலனை செய்த பின், தகுதி, திறமை, அனுபவம், ஒத்துழைப்பு என்ற நிலையில் திருமதி. லத்திகா சரணை நியமித்தது முறையானது தான் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியபோதும், தேவையற்ற சர்ச்சைகளை சிலர் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் திருமதி. லத்திகா சரண் நியமனத்தில் உள்ள உண்மைகள். நடைமுறைகள், நெறிமுறைகள், சட்டங்கள் போன்றவை செயல்பாட்டுக்கு வராத நிலையில் வந்துவிட்டது என்று கூறி, பெரிய தவறு நேர்ந்துவிட்டது போல குறை சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இப்பிரச்சினைக் குறித்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யலாம். அப்போது தீர்ப்புகள் மாறலாம். இறுதி முடிவு தெரியாமலேயே போகின்ற போக்கில் தி.மு.க. அரசு மீதும், முதல்வர் மீதும் விமர்சனங்களை அள்ளித் தெளிக்கின்ற இவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
– வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்