வரலாறு தெரியாத ஜெயலலிதா
சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜனா ஜேக்கப் பேசும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு மதிய உணவு திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர் கொண்டு வந்தார் என்று மெத்த படித்த மேதாவியாக பேசியுள்ளார். காமராஜர் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கேர் (ஞிச்ணூஞு) என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் நடைபெற்றது. அந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு ஒரு வரலாறு உண்டு.
தியாகச்சுடர் காமராஜர் அனைவருக்கும் கல்வி வேண்டுமென்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்புக்கு அடித்தளமாக தமிழகத்திலுள்ள கல்விக் கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தைத் ‘தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடிய அமரகவி பாரதி பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடு அப்போது உடன் இருந்தார். கல்வி இயக்குநராக (Director of Public Instrucion) இருந்த என்.டி.சுந்தரவடிவேலு கோவில்பட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தபொழுது கி.வேங்கடசுப்பிரமணியம் நெல்லை மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு என்.டி.சுந்தரவடிவேலு தன்னுடைய புதல்வர் திருவள்ளுவரைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பூமாலைகளைப் பொது மக்கள் அலுவலருக்குப் போடும் பொழுது, அதை மதிப்புடன் பெற்றுக் கொண்டவுடன், அந்த மாலைகளை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் பார்த்து, திருவள்ளுவர் தன் தகப்பனார் என்.டி.எஸ்.ஸிடம் ‘ஏன் அப்பா, இந்த மாலைகளை வீண் செய்கிறார்கள்? இதற்கு நன்கொடையாகப் பணத்தைக் கொடுத்தால் ஏழை மாவணவர்களுக்கு உணவு கொடுக்கலாமே’ என்று அறியாப் பருவத்தில் சொன்னதைக் கேட்ட என்.டி.சுந்தரவடிவேலுவுக்கு இந்த கருத்து தாக்கத்தை உருவாக்கியது. ஏற்கனவே அன்றைய முதல்வர் காமராசருக்கும் இதுகுறித்து யோசனைகள் இருந்தபொழுது என்.டி.சுந்தரவடிவேலு சென்னைக்குச் சென்றவுடன் ஒன்றுமறியாச் சிறுவன் திருவள்ளுவர் சொன்னக் கருத்தைச் சொல்லவும், காமராசர் மிக மகிழ்ச்சியோடு ‘ஏற்கனவே என்னுடைய மனதில் இருக்கின்றது. இதை எட்டயபுரத்திலேயே தொடங்கலாம்’ என்று கூறினார் என்பது செய்தி.
இவ்வாறு காமரஜாரால் கொண்டு வரப்பட்ட திட்டத்தைத் தான் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டம் என்று அறிவிக்கப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 1989இல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டம் என்பதற்காக சத்துணவு திட்டத்தை கிடப்பில் போடாமல், சத்தான உணவு வழங்கும் திட்டமாக முட்டை, வாழைப்பழம் வழங்கக் கூடிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. தலைவர் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களான சமச்சீர் கல்வி, உழவர் சந்தை போன்ற எண்ணற்ற அற்வுத திட்டங்களை ஜெயலலிதா தற்போது நிறுத்தியுள்ளார். ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள், பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்து, எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டம் என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தை கைவிடாமல் இது பயனுள்ள திட்டம் என்பதற்காக நடைமுறைப்படுத்திய பாங்கு வரலாற்றில் என்றைக்கும் இருக்கும். வரலாறு தெரியாமல் பொத்தாம் பொதுவாக அவையில் தன்னுடையக் கட்சி உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு, சட்டாம் பிள்ளைத்தனமாக எதையும் பேசுவது ஜெயலலிதாவின் வாடிக்கையாக இருக்கின்றது. ஜெயலலிதாவின் இந்த பேச்சு அவை உரிமை மீறல் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். தமிழர்கள், ‘விதியே விதியே தமிழ் சாதியே’ என்று நொந்துக் கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது.
– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்