வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயி!
பாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, கொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள், ‘வேலையே வாழ்க்கை’ என்று தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்” என்கிறார் கரிசல் இலக்கியக் கர்த்தா கி.ராஜநாராயணன்.
பாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, கொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள், ‘வேலையே வாழ்க்கை’ என்று தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்” என்கிறார் கரிசல் இலக்கியக் கர்த்தா கி.ராஜநாராயணன். விவசாயிகள் என்போர் ஏகலைவன் போன்றவர்களாவர். அவர்கள் தங்களுடைய விவசாயத் தொழிலை எந்த ஆசானின் மூலமோ அல்லது தொழிற் கல்வியாலோ தெரிந்து கொண்டதில்லை. தன்னைத் தானே தொன்றுதொட்டு பாரம்பரியமாகத் தானாக அறிந்து கொண்டு, தன்னைத் தானே விவசாயத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கின்றனர். நகர்ப்புற வாசனையோ, அடிப்படை வசதிகளையோ அறியாதவனாகவே பிறந்து விவசாயமே தன் உயிராக நினைத்து வாழ்ந்து மடிகிறான்.
‘இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயமே’ என்று மார்தட்டிக் கொள்ளும் அரசு, விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய பொருளாதாரச் சட்ட திட்டங்களை இன்னும் திருப்திகரமாக வகுக்கவில்லை என்பதே உண்மை. பசுமைப் புரட்சி, மானியங்கள் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டும் அவை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு சரியாகச் சென்றடையாமல் இடைத்தரகர்கள் பயன்பெறும் நிலையில்தான் இருக்கின்றன.
மத்திய அரசின் தாராளமயக் கொள்கையால் மிகவும் பாதிக்கப்பட்டது விவசாயம். அரசின் முதலீடு பெருமளவில் இத்துறையில் குறைந்து விட்டது. ஐக்கிய முன்னணி அரசு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் அளித்த மூன்று பட்ஜெட்டுகளில் இப்பிரச்சினைகளைத் தீர்க்க இதயசுத்தியான வழிமுறைகள் இல்லை. இவர் பட்ஜெட்டில் விவசாயிகளின் பிரச்சினைபற்றி அதிகமாக சிலாகித்தாலும் தீர்வேதும் இல்லை.
வறட்சி, விளைபொருள்களுக்கு ஆரதவற்ற நிலை, கடன் சுமை போன்றவற்றினால் விவசாயிகளுடைய சமூக நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்திற்கு வேண்டிய விதை, இரசாயன உரங்கள் மற்றும் இரசாயன மருந்துகள் ஆகியவற்றுக்கும் ஆகும் செலவு, தங்களுடைய குழந்தைகள் அருகாமையில் உள்ள நகரத்தில் கடித்தால் அதற்கான செலவு ஆகியவற்றையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய சொந்த மண்ணில் மணத்தை சுவாசித்து, தன் தொழிலை செய்து கொண்டே வருகின்றான். இந்த உழைப்பினால்தான், இந்திய உணவு நிலைமையில் தன்னிறைவு அடைந்துள்ளது எனப் பெருமையுடன் உலகளவில் கூறிக் கொண்டுள்ளது. இந்தப் பெருமை ஆரோக்கியமாக நீடிக்க வேண்டுமானால் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் பொருளாதார நலத் திட்டங்களையும், விவசாய நலச் சட்டங்களையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம், விவசாயக் கடன் நிர்வாணச் சட்டங்கள், குத்தகைதாரர் பாதுகாப்புட் சட்டங்கள் என பல சட்டங்களை அரசுகள் இயற்றியும் சட்டத்தின் நோக்கங்கள் சரிவர செயல் வடிவில் வரவில்லை. விவசாயிகள் ‘தானும் இந்த நாட்டின் உரிமைகளைப் பெறும் ஒரு குடிமகன்’ என்று பெருமையாகச் சொல்லக் கூடிய அளவில் விவசாயிகளுக்குப் பாதுகாப்பான – பயன்தரக் கூடிய அரசு சட்டங்களும் இல்லை.
இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதம் என்றாலும் அதில் விவசாயத்தின் வளர்ச்சி 2 சதவீதம்கூட தொடர்பில்லை. கடன் இல்லாத விவசாயம் வேண்டுமென்று கேட்டால் நிதியமைச்சர் சிதம்பரம் ‘இரண்டு மடங்கு கடன் கொடுத்து கடனாளியாக ஆக்குவேன்’ என்று சொல்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் தூக்கில் தொங்குவதற்கு இதோ தூக்குக் கயிறு என்று சொல்வதுபோல் இருக்கிறது. அப்படியே நிதியமைச்சரின் உறுதிமொழிபடி பார்த்தாலும் வங்கிகளிலிருந்து கடன் எளிதாக விவசாயிகள் வாங்கவும் முடியவில்லை. வங்கி அதிகாரிகள், “உன் கூரை வீட்டை நம்பி எப்படி அய்யா கடன் கொடுப்பது?” என்று விரட்டியடிக்கும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. தொலைநோக்கற்ற பிரதமர்கள், நிதியமைச்சர்கள் அதிகார வர்க்கங்களால் இதுவரை விவசாயம் சீரழிந்து விட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயிகளின் நிலை சொல்லவே மாளாது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை வெட்டி அறவை செய்ய முடியாமல் விரக்தியோடு நன்கு வளர்ந்த கரும்பைத் தீயிட்டுக் கொளுத்துகின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விவசாயி தன் கரும்பை யார் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள் என்று தண்டோரா போட்டு அறிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முத்தரப்புக் கூட்டம் கூட்டி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்யுங்கள் என்றும், கரும்பு வாகன வாடகை சரியாக வழங்குவதில்லை என்றும் விவசாயிகள் குறை கூறுகின்றனர். கரும்பை அறவை செய்ய பதிவு செய்து 18 மாதங்கள் மேலாகியும் காத்திருக்க வேண்டிய நிலைமையோடு அடிமாட்டு விலைக்கு கரும்பை விற்க வேண்டியுள்ளது. இதுவரை சுமார் 35 இலட்சம் டன் கரும்பு வெட்டப்படாமல் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு இதைக் கண்டும் காணாமல் ஒப்புக்குப் பேச்சுவார்த்தை என்று கூறி காலத்தைத் தள்ளிக் கொண்டு வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் டன் ஒன்றுக்கு ரூ.1,200/-யிலிருந்து ரூ.1,250/- வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வெறும் ரூ.1,025/- வரைதான். இப்படி தமிழகத்தில் நெல், பருத்தி, மிளகாய், பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது. பருத்தி உற்பத்தி செய்து ஆலைகளுக்கு அனுப்பிய விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். தென்னை உற்பத்தி விவசாயிகளின் நிலைமை சொல்லவே முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட நோயினால் பல மரங்கள் பட்டுப்போய் விட்டன. நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
1960ஆம் ஆண்டு நெல் மூட்டை ரூ.30/- ஆகும். சிமெண்ட் மூட்டை அப்போது ரூ.5/-க்கு கிடைத்தது. சிமெண்ட் விலை பன்மடங்கு ஏறிவிட்டது. ஆனால் நெல்லுக்கு விலை ஏறவில்லை. மிளகாய், பருத்தி உற்பத்தி செய்யும் மானாவரி விவசாயிகளுக்கு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஆதரவான நல்ல விலை கிடைக்கிறது. ஒரு வருடப் பராமரிப்பில் வாழை பயிரிட்டு ஒரு வாழைப்பழம் 10 பைசாவுக்கு விவசாயியிடம் வாங்கி, நகரத்தில் ரூ.1.50க்கு விற்கப்படுகிறது. இந்த ஒரு வருடக் காலத்தில் காற்றின் சீற்றத்தால் சில சமயங்களில் வாழை மரங்கள் சாய்ந்து அழிவதும் உண்டு. இப்படித் தொடர்ந்து இடைத்தரகர்களால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதால் செலவில்லாமல் பல கிராமங்களில் கருவேல மரங்களை நட்டுவிட்டனர்.
விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை கட்டுப்படியான வகையில் நிர்ணயிக்க ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து பாராமுகமாகவே உள்ளனர். விவசாய இடுபொருள்களான விதைகள், உரங்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. 2004 விதைச் சட்டமும் விவசாயிகளுக்கு ஆதரவு இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொண்டதை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள். தமிழகத்தில் 72 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் ஒரு வருடத்திற்கு 20 இலட்சம் டன் இரசாயன உரங்களைப் பயன்படுத்துகின்றன. மூன்று மடங்கு நிலவரியும் அதிகரிக்கப்பட்டு விட்டது.
கடன் தொல்லையால் இந்தியாவில் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத்துயரச் சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆந்திரம், விதர்பா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகளின் தற்கொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக, பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள் தான் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். இதைத் தடுக்க முப்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நீதிபதிகள் அரசின் திட்டங்கள் பாதுகாக்கக் கூடிய வகையில் அடையவில்லை என்றும், கட்டுப்படியான விலையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் உற்பத்திச் செலவு அதிகமாகவும், சந்தை விற்பனை மூலம் வரும் வருமானம் அதற்கு மிகவும் குறைவாக இருப்பதே காரணம் என்று எடுத்துச் சொன்னது. இந்தக் கொடிய தற்கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளும் ஒப்புக்குத்தான் பேசுகின்றனவே தவிர தெளிவான திட்டங்களை வகுக்கவில்லை.
தமிழகத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினையால் விவசாயிகளுக்கு நீர் ஆதாரங்கள் இல்லாமம் அவதிப்படுகின்றனர். காவிரிப் பிரச்சினையில் காவிரி டெல்டாவில் சிறு விவசாயிகளே எலிக் கறியைச் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கிராமப்புறங்களில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் தூர் வாராமல் நீர்ப்பிடிப்பு குறைந்து வருகிறது. பல ஏரிகளும் குளங்களும் காலனிகளாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் நுழைய விட்டு மரபு ரீதியான விவசாயத்தை மத்திய அரசு அழித்து வருகிறது. விவசாயிகள் சார்புத் தொழிலாக நடத்தும் பால் பண்ணைகளும், ஆட்டுப் பண்ணைகளும் தொடர்ந்து நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் குறைந்தபட்சம் சில நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
1. விவசாயிகளின் கடன் தொல்லையிலிருந்து முழுவதுமாக மீட்க வேண்டும். கடனுக்கான வட்டியை 4 சதவீதமாகக் குறைப்பதோடு கூட்டு வட்டியும் இரத்து செய்ய வேண்டும். வறட்சி, வெள்ளம் காலங்களில் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2. பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.
3. விலை ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, சீரான இலாபகரமான விலையை விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு வழங்க ஒரு நிதியம் ஏற்படுத்த வேண்டும்.
4. விவசாய உற்பத்திப் பொருள்களில் இடைத்தரகர்கள் அடக்கும் கொள்ளையைத் தடுக்க வேண்டும்.
5. பயிர் இழப்புக்கு ஆளாகும் விவசாயிகளைப் பாதுகாக்க பேரிடர் நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும்.
6. தொழில் சார்ந்த விவசாய முறையைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
7. விவசாயிகளின் தற்கொலை குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அதைத் தடுக்கக் கூடிய நடவடிக்கைகளைச் சட்டவடிவமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
8. விவசாயக் பண்டங்களின் இறக்குமதியைப் பெருமளவில் கட்டுப்படுத்த வேண்டும்.
9. விவசாயத்திற்கு நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை நன்கு பரிசீலனை செய்தால் விவசாயத்திற்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். விடுதலைக்குப் பின் 60 ஆண்டுகளாக விவசாய நலன் கருதிப் பல குழுக்கள் அமைத்தும் அவற்றின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கும்பகர்ண தூக்கத்தில் தூசிகள் படிந்து டெல்லி கிசான் பவனில் துயில் கொண்டுள்ளன. என்ன செய்ய? விவசாயி இரண்டாந்தர குடிமகன் என்று நினைத்த டெல்லி பாதுஷாக்கள் பரிபாலனம் செய்கின்றனர். இதை வேதனையோடு விவசாய சங்கத் தலைவர் மறைந்த பானுபிரதாப் சிங்க அவர்கள் பலமுறை அகில இந்திய அளவில் விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதேபோல தமிழகத்தில் 1969லிருந்து விவசாயிகள் போராடி, பலர் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். நாராயணசாமி நாயுடு இயக்கம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தது. ஆனால், சில அரசியல் கட்சித் தலைவர்களில் பலர் விவசாயிகளின் கட்டுக்கோப்பான வலிமையான வீரியத்தைத் திட்டமிட்டு அழித்தனர். ஆனால், விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தால் நாடு பொறுக்காது என்பது அதிகார மமதையில் உள்ளவர்கள் அறிய வேண்டும்.
‘கிராமங்களில் டீக்கடை வைத்தவர்கள் மாளிகைவாசிகளாக இன்றைக்கு வாழ்கின்றனர். கிராமத்தில் தோல்கள் வாங்க வந்தவர்கள் பெரும் வணிகர்களாக மாறிவிட்டனர். காய்கறிகளையும், புளியங்கொட்டையையும் வாங்க வந்தவர்கள் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகி விட்டனர். ஆனால், பல ஏக்கர் நிலமுள்ள விவசாயி குடிசை வீட்டிலிருந்து ஓட்டு வீட்டுக்குத்தான் மாறியுள்ளான்’ என்று நடவு இதழ் வேதனையோடு குறிப்பிடுகிறது.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை
என்கிறது குறள்.
விவசாயி கிணறு வெட்டுவதற்கு அரசு கடன் (இலஞ்சம் போக) வாங்கி, அதனால் ஒன்றும் பயனில்லாமல்போக இருக்கின்ற சொந்த தோட்டத்தையும் கடனில் வெட்டிய கிணறையும் விற்று கூலி விவசாயி ஆகி இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்ற இந்தப் பரிணாமப் பரிதாப நிலைதான் உள்ளது. இதுதான் இன்றைய எதார்த்த விவசாயியின் நிலைமை. பாடுபட்டு, விவசாயிகள் வியர்வையை விதைத்து, வேதனையை அறுவடை செய்கிறார்கள். இந்தியாவில் விவசாய மண்வாசனை, கிராமிய கலாச்சாரங்கள் பாழ்பட்டுப் போய்க் கொண்டிருப்பதை இன்றைக்கு முண்டாசுக் கவிஞன் பாரதி இருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.. .. என்ற பாடலில் இந்தத் துயரத்தைச் சொல்லியிருப்பான்.
– தினமணி, 04.07.2007