விவசாயம்
கரானா வைரஸ் பிரச்சினை எப்போது தீரும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. இதனுடைய கொடுமை காலவரையற்று நீண்டுக் கொண்டே போகலாம். இந்நிலையில் விவசாயம் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, மின் உற்பத்தி, பற்றாக்குறையற்ற குடிநீர் வசதி போன்றவைகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். கரானா காலத்தில் குறிப்பாக உணவு உற்பத்தியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அடிப்படையாக இருப்பது விவசாயமாகும். நாட்டிலுள்ள மக்களுக்கு விவசாயிகளின் கை தான் அட்சய பாத்திரம். ஏறத்தாழ 29 கோடி டன் அளவிற்கு விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்தால் தான் இன்றைய தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு விவசாயிகள் துணிச்சலுடன் கடமையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய சல்யூட்.
மழையின்மை, வறட்சி விவசாய சாகுபடி பொருட்களுக்கு லாபகரமான விலையில்லை, விவசாய இடுபொருளினுடைய விலை அதிகமாக உயர்ந்து விட்டது, தரமான விதைகள் கிடைக்கவில்லை. கடனில் மாட்டிக் கொண்டு அல்லாடும் விவசாயிகள் இவற்றையெல்லாம் மீறி நமக்கான உணவினை உற்பத்தி செய்து வழங்குகின்றனர். நாட்டில் 60% மேலானவர்கள் விவசாயத் தொழிலில் நம்பி வருகின்றனர். காந்தியடிகள் சொன்னது போல கிராமங்களும் விவசாயமும் தான் உண்மையான இந்தியா என்பதைப் மறந்து அவருடைய பிரச்சினைகள் மீது அக்கறையில்லாமல் அவர்களை தற்கொலைக்கு தான் தள்ளியுள்ளோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டது எவ்வளவு பெரிய மானக்கேடான விஷயம்.
தற்போது நெல் சாகுபடி, 34.73 லட்சம் ஹெக்டேருக்கு (37.70%) அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் இது 25.22 ஹெக்டேராக இருந்தது. இது போலவே எள், பருப்பு வகை, நிலக்கடலை போன்ற அவசியப் பொருட்களுடைய சாகுபடி நிலங்களும் உயர்ந்துள்ளன. எண்ணெய் வித்துக்கள் 6.80 லட்சம் ஹெக்டேரில் இருந்து 8.73 லட்சம் ஹெக்டேருக்கு கூடுதலாகியுள்ளது. பருப்பு வகைகள் 3.82 லட்சம் ஹெக்டேரில் இருந்து 5.7 லட்சம் ஹெக்டேர் வரை உயர்ந்துள்ளது. விவசாயம் சார்ந்த பால்வளம், கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல கடப்பாடுகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளை இந்த கரானா காலம் முடிந்தவுடன் அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க ஆட்சியாளர் மட்டுமல்லாது சகலரும் கடமைகள் ஆற்ற வேண்டும். விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கு இடையே ஆற்றுகின்ற பணியை நாம் வணங்க வேண்டும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
04.05.2020