தலைவர் கலைஞரும் விவேகானந்தர் இல்லமும் (ஐஸ் ஹவுஸ்)

0

இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தா அவர்களையும், அந்நிறுவனத்தின் மேலாளர் சுவாமி அபிராமினந்தா அவர்களையும் சந்தித்து பல செய்திகள், பிரச்சினைகளை அவர்களுடன் பேசக் கூடிய வாய்ப்பு அடிக்கடி எனக்குக் கிடைக்கும். அவ்வாறு நான் அவர்களை சந்தித்தபொழுது, விவேகானந்தர் இல்லத்தின் குத்தகையை மேலும் 10 ஆண்டுகாலத்திற்கு நீட்டித்து தந்த தலைவர் கலைஞர் அவர்களை, அவர்கள் பெருமிதத்தோடு பாராட்டி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

சுவாமி கௌதமானந்தா அவர்கள், இல்லத்தின் குத்தகை காலம் முடிந்து விட்டது. எனவே, அதனை புதுப்பித்துத் தருமாறு கேட்பதற்காக, தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்க கால அவகாசம் வேண்டி கேட்ட கடிதம் ஒன்றினை என்மூலம் அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை நான் முறையாக, தலைவர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் ஒப்படைப்பதற்காக சென்றபோது, திரு.சண்முகநாதன் அவர்கள் அங்கு இல்லை. தலைவர் இல்லத்தில் கொடுத்து விட்டு வந்தேன். அந்த கடிதம் தலைவர் கலைஞர் அவர்களின் கவனத்திற்கு சென்று, உடனடியாக குத்தகை காலத்தை நீட்டித்து புதுப்பித்த உத்தரவை, தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக அரசின் சார்பில் அறிவித்ததை அறிந்த சுவாமி கௌதமானந்தா, சுவாமி அபிராமினந்தா ஆகியோர், முதல்வர் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகளை நாங்கள் தெரிவிக்கின்றோம் என இன்று நான் அவர்களை சந்தித்தபொழுது கூறினார்கள். கலைஞர் அவர்களின் தயாள உள்ளம் எங்களை நெகிழச் செய்துள்ளது என குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள், இவ்வளவு பெரிய தலைவர்; அவருக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். இருப்பினும், உங்கள் மூலம் நாங்கள் கால அவகாசம் கேட்டு அனுப்பிய கடிதத்தை கண்டவுடனே, நாங்கள் விரும்பியதை செய்துள்ள ஒப்பற்ற பெருந்தகையான குணமுள்ளவர் தலைவர் கலைஞர் என்று குறிப்பிட்டது மிகவும் உருக்கமாக இருந்தது.

தந்தை பெரியாரின் வழியில் வந்த தலைவர் கலைஞர் அவர்கள், ஆன்மிகத்தை நம்புவோர்களுடைய எண்ணங்களுக்கும் மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றுகின்ற பாங்கை இராமகிருஷ்ண மடம் நிறுவனத்தினர் பாராட்டியது சாதாரண செய்தி அல்ல. ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்ததிலிருந்து இன்றைக்கு விவேகானந்தர் இல்லப் பிரச்சினை வரை, மதசம்பந்தமான பல விஷயங்களில் செய்ய வேண்டியவற்றை செவ்வன செய்கின்ற ஒரு ஒப்பற்ற உயர்வான தலைவர் கலைஞர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், துணை முதல்வர் தளபதி அவர்கள் ஆற்றுகின்ற மக்கள் பணிகளையும், அவர் சென்னை நகரில் அமைத்துள்ள பாலங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கின்ற வசதிகள் யாவும் தி.மு.கழக ஆட்சியின் சாதனைகள் என்றும் புகழ்ந்துரைத்தனர். அதுபோலவே, மத்திய அமைச்சர் அண்ணன் மு.க.அழகிரி அவர்கள் மதுரையை பசுமையாக்கும் திட்டத்தை அறிவித்திருப்பதை அவர்கள் வெகுவாக பாராட்டினர். இத்திட்டம் இக்காலத்திற்கு மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறெல்லாம் அவர்கள் விவாதித்து பாராட்டியுள்ளதை கண்டபொழுது, கழக ஆட்சியின் மீது நடுநிலையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தெளிவாகின்றது. இந்த உண்மைகள் மனதிற்கு களிப்பு தருகின்ற செய்தியாக உள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் இப்பிரச்சினை குறித்து பேசிய கருத்துகளை பார்த்தால் மனிதநேயமுள்ளவர்கள் நமது தலைவர் கலைஞர் அவர்களை நன்றியோடு போற்ற வேண்டும். அந்த சட்டமன்ற உரை:

முதலமைச்சர் கலைஞர் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு எதிர்க்கட்சி கொறடா திரு. செங்கோட்டையன் அவர்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. ஞானசேகரன் அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திரு. ஆறுமுகம் அவர்களும், ம.தி.மு.க. சார்பில் திரு. இராமகிருஷ்ணன் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திரு. செல்வம் அவர்களும் விவேகானந்தர் இல்லம் குறித்த சில கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இல்லாத ஒன்றைப் பற்றி, நடக்கப் போகாத ஒன்றைப் பற்றி அவர்கள் பேசினார்கள் என்பதுதான் ஆச்சரியப்படக் கூடியது. (மேஜையைத் தட்டும் ஒலி) தம்பி கம்பம் இராமகிருஷ்ணன் விவேகானந்தர் இல்லம் பழைய இடத்திலே இருக்கட்டும், “பழைய இடத்திலே இருப்பதுதான் நல்லது” என்று சொன்னார். ஆமாம், “பழைய இடத்தில்” இருப்து தான் நல்லது (மேஜையைத் தட்டும் ஒலி) என்பதை நான் தம்பி இராமகிருஷ்ணனுக்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கிறேன் – அண்ணன் என்ற முறையில்.

விவேகானந்தருக்கு அல்லது அவருடைய நினைவுச் சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட, அதன் காரணமாகப் பெருமை பெற இங்கே உள்ள அனைவருக்கும் – தமிழகத்திலே உள்ள ஆறு கோடி மக்களுக்கும் உரிமை உண்டு என்றாலும் கூட இன்றைக்கு தென்கோடி முனையிலே இருக்கின்ற கடற்கரையில் – குமரி முனையில் இருக்கின்ற விவேகானந்தர் ஆலயத்தை வி.வி.கிரி அவர்கள் 1970ஆம் ஆண்டு என்னுடைய தலைமையிலேதான் திறந்து வைத்தார்கள் என்பதை நான் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 2.9.1970 அன்று திறந்து வைக்கப்பட்ட அந்த மண்டபம் அது. அப்போது அந்த மாவட்டத்து மக்களால் சில பிரச்சினைகளுக்கெல்லாம் உள்ளாகி இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்தவர்கள் – விவேகானந்தருடைய போதனைகளைப் பரப்புகின்றவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை என்னிடத்தில் எடுத்துச் சொல்லி அவைகளையெல்லாம் அன்றைக்கு ஆட்சியின் சார்பில் தீர்த்து வைத்தவனும் நான்தான்.

அதன்பிறகு, இந்தப் பிரச்சினை இப்போது. சென்னை மாநகரத்தில் 1897ஆம் ஆண்டில் 9 நாட்கள் தங்கியிருந்து விவேகானந்தர் விரிவுரைகள் செய்த காரணத்தினால், அதன் நினைவாக விவேகானந்தர் இல்லத்தை, சென்னை இராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கும்படி அந்த மடத்தின் தலைவர் இந்த அரசிடம் கோரியிருந்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள 27 ஆயிரத்து 546 சதுர அடி பரப்பளவு கொண்ட விவேகானந்தர் இல்லத்தில் அவருடைய நினைவாக அந்த இடத்தை அரசு அந்த மடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது 24.2.1997 நாளிட்ட உயர்கல்வித் துறையின் அரசாணை எண்.89ன்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த இல்லம் முதன் முதலாக இராமகிருஷ்ண மடத்திடம் குத்தகை அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்கு – ஆண்டொன்றுக்கு குத்தகைத் தொகை ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

விவேகானந்தர் இல்லத்திற்கு நுழைவு வழி இல்லை எனக் கூறி, அந்த இல்லத்தின் முன்னுள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தையும் குத்தகைக்கு அளிக்கும்படி இராமகிருஷ்ண மடம் கோரியதை அடுத்து அதையும் தி.மு.கழக அரசு பரிசீலனை செய்து, 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் மூன்றாண்டு கால குத்தகைக்கு ஆண்டொன்றுக்கு ஆயிரம் ரூபாய் குத்தகைத் தொகை என 10.6.1998 நாளிடப்பட்ட வருவாய்த் துறை அரசாணை என்.487ன்படி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் அந்தக் கட்டடத்திற்கான பழைய வரலாறு.

இந்த இடத்தினுடைய மற்றொரு கோரிக்கையாக, இதை 30 ஆண்டுக்கு குத்தகைக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது நான் அதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் தான் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி விவேகானந்தர் இல்லத்தின் சந்தை மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால், சலுகைக் குத்தகையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைத் தொகையாகவும், குத்தகைக் காலத்தை 10 ஆண்டுகள் என்றும் நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அந்த முடிவையொட்டி 18.1.2000 நாளிடப்பட்ட உயர்கல்வித் துறை அரசாணை என்.20 வெளியிடப்பட்டது. இதெல்லாம் ஆதாரபூர்வமான தேதிவாரியன விவரங்கள்.

ஏதோ விவேகானந்தர் இல்லத்திலே உள்ளவர்களுக்கும் தி.மு.கழக அரசுக்கும் தகராறு என்பதைப் போல் பத்திரிகைகள் எழுதி – நேற்றைக்குக் கூட ஒரு பத்திரிகையில் “விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க தி.மு.க. ஆட்சி முயற்சி” என்று பெருந்தலைப்பே இட்டிருக்கிறார்கள். அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. விவேகானந்தரிடத்திலே எங்களுக்கு ஏதாவது பகையா என்றால் இல்லை. இன்னும் சொல்லப் போனால், பகுத்தறிவு இயக்கத்தினுடைய கருத்துக்களை, பெரியாருடைய கருத்துக்களை, அண்ணாவுடைய கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிற போது எங்களுக்கு விவேகானந்தரிடத்திலே என்ன விரோதம் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

20.12.1999 அன்று அப்போது நான் முதலமைச்சராக இருந்தபோது சென்னையிலே உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு நான், நம்முடைய நிதியமைச்சர் பேராசிரியர், அமைச்சர்களாக இருந்த ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் சென்று அந்த இல்லத்திலே இந்திய கலாச்சார கண்காட்சியையும் திறந்து வைத்தேன். அந்த இல்லம் இருந்த இடத்திற்குப் பெயர் “ஐஸ் ஹவுஸ்” அந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமத் சுவாமி சமரணானந்தஜி மகராஜ் எங்களை வரவேற்றுப் பேசினார். வரவேற்றுப் பேசும் போது அந்த இடத்தை முழுமையாகத் தங்களுக்கே கொடுத்துவிட வேண்டும் என்பதைப் போலவும், 90 வருடம், 30 வருடம் “லீஸ்” என்பார்களே அப்படிக் கொடுத்துவிட வேண்டும் என்பதைப் போலவும் பேசினார்கள். அங்கே நன்றி கூறிய சிலரும் அதே கருத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நான் சட்டப்படி எதுவும் செய்ய வேண்டும் என்பதிலே நம்பிக்கை உள்ளவன் என்ற காரணத்தினால் நான் பேசும் போது சொன்னேன் – “அறிக்கை படித்தவர்கள், வரவேற்புரை ஆற்றியவர்கள், நன்றியுரை ஆற்றிய நண்பர் உள்ளிட்ட அனைவரும் இந்த இல்லத்தை விவேகானந்தர் இந்திய கலாச்சாரக் கண்காட்சிக்கு நான் ஒப்படைத்து விட்டதாகச் சொல்லி, அதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நான் ஒரு முக்கியமான பொறுப்பிலே இருப்பவன். உள்ளத்திலே நல்ல நினைவுகள் இருந்தாலும்கூட, அதை ஒழுங்காக, முறையாக, சட்டரீதியாக செயல்படுத்த வேண்டுமென்பதிலே அக்கறை உள்ளவன். எனவே, இன்றைக்கு இந்தக் கட்டடத்தை ஒப்படைத்து விட்டதாக நீங்கள் கூறுவதை நான் உடனடியாக ஏற்க இயலாது. ஒப்படைப்பதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவரே இதில் யோசிப்பது என்பது இயலாது. எனவே, எங்களுடைய அமைச்சரவை அதைப்பற்றி யோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்கும்” என்று குறிப்பிட்டேன்.

இன்னும் சொன்னேன் – “எல்லோரும் என்னை இங்கே எதற்கோ புகழ்ந்து புகழ்ந்து பேசினார்கள். ஆரம்பத்திலேயே கட்டடம் வழங்குவதற்காக வழி வகுத்தவர் நம்முடைய கல்வி அமைச்சர் பேராசிரியர் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்கள். ஒரு விழாவிலே பேராசிரியர் கலந்து கொண்ட போது “பரிசீலிக்கப்படும்” என்று சொல்லியிருக்கிறார். அதையும் கோடிட்டுக் காட்டினார்கள் இவர்களெல்லாம் எங்களைப் புகழ்ந்து பேசும்போது எனக்கொரு நினைவு – இந்தக் கட்டடத்திற்குப் பெயரே “ஐஸ் ஹவுஸ்” – அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டு (சிரிப்பு) விட்டு மேலும் அந்த விழாவில் நான் பேசும்போது,

“இங்கே நம்முடைய கல்வி அமைச்சர் பேராசிரியர் அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல் விவேகானந்தருடைய மொழிகளை – கருத்துக்களை விவேகானந்தரைப் போல் அவருக்கு முன்பு இருந்தவர்கள், பின் வந்தவர்கள் எடுத்துச் சொன்ன கருத்துக்களையெல்லாம் இன்றைக்கு செயல்படுத்துகின்ற அரசாக தி.மு.கழக அரசு இருக்கின்ற காரணத்தினால்தான் விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் இல்லமாக இந்த இல்லத்தை அமைக்க மூன்றாண்டு காலத்திற்கு ஒப்பந்தமாக எங்களிடம் இந்த இடத்தைத் தாருங்கள் என்று கேட்டபோது, அட்டியின்றி உடனடியாக இது வழங்கப்பட்டது. விவேகானந்தர் என்ற தனி மனிதர் மீதல்ல, அவருடைய கருத்துக்கள் எங்களுடைய தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தந்த கருத்துக்களோடு ஒத்து வருகின்ற காரணத்தால் எங்கள் கருத்துக்களுக்கு மேலும் மெருகூட்டுகின்ற வகையில், வலுவூட்டுகின்ற வகையில் இருக்கின்ற காரணத்தால், எங்கள் கருத்துக்களை, அவைகளைத் துணையாகக் கொண்டு பரப்ப முடியும் என்கிற காரணத்தால் நானும் என் அமைச்சரவையிலே உள்ளவர்களும் விவேகானந்தரிடத்திலே பரிவும் பற்றும் கொண்டிருக்கிறோம்” என்றுதான் அன்றைக்கேக் குறிப்பிட்டேன்.

இதுவரையிலே, இங்கே சொல்லப்பட்டதைப் போல, செங்கோட்டையன் எடுத்துக் காட்டியதைப் போல விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை, கடிதமும் எழுதவில்லை. மத்தியிலேயிருந்து எங்களுக்கு வந்த தகவல் செம்மொழியாகத் தமிழை ஆக்கி அதைப் பரப்புவும், ஏற்ற முறையில் அதற்கான வழிவகைகளைக் காணவும், அதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற “ஐம்பெருங்குழு”, “எண்பேராயம்” போன்ற அமைப்புக்கள் செயல்படவும் 76 கோடி ரூபாய் உங்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒரு கட்டடம், ஒரு அமைப்பு இவைகளையெல்லாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றபோது தற்காலிகமாக ஒரு இடத்தைத் தேடலாம் என்று எண்ணி அதைத் தேடிய நேரத்தில் சோளிங்கநல்லூரிலே ஒரு நிரந்தரமான கட்டடத்தை பிறகு கட்டுவது என்று அதற்கான முனைப்பான முயற்சிகளிலே ஈடுபட்டபோது, தற்காலிகமாக ஏதாவது அரசுக்குச் சொந்தமான இடங்கள் கிடைக்குமா என்று எண்ணிய நேரத்திலே யாரோ ஒரு கதை கட்டி ஏதேதோ கதை கட்டி, அது பலிக்காத காரணத்தால் இவர்களைச் சாமியார் பக்கம் தள்ளி விடுவோம் என்று இன்றைக்கு சாமியார்களிடம் மோத விடுவதற்காக சில காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள். நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கட்டடத்தைத் தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் எல்லோரும் பேசுவதற்கு இடம் கொடுத்துக் கொண்டாய் என்று கேட்பீர்கள். எனக்கு ஒரு ஆசை – விவேகானந்தரைப் பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் எல்லோரும் பேச அது இங்கே பரவ வேண்டும், ரொம்ப நாளாகி விட்டது விவேகானந்தரைப் பற்றிப் பேசி என்பதற்காக – அவர் மூட நம்பிக்கைகளையெல்லாம் சாய்த்தவர் – மத வெறிக்கு ஆளாகாதவர் – ஜாதி வெறியைச் சாய்த்தவர் – அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர் என்ற காரணத்தாலும், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது மனம் சுத்தமாக இருந்தால் என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண்டபமா? இல்லை; வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை.

“அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம்” என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம். ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே – அவருடைய குருநாதர் இராமகிருஷ்ண பரஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது. குமரி முனையிலே எவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, இங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக்கின்ற இடம் அதே காமராஜர் சாலையில் “பாலாறு இல்லம்” – அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்களுக்கு அந்தப் பெரிய கட்டடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்து அமைகின்றேன்.

இவ்வாறு தெளிவுபட தலைவர் கலைஞர் அவர்கள் பேசியுள்ளர். இவ்வாறான பிரச்சினைக்குரிய விவேகானந்தர் இல்லத்தின் சுருக்கமான வரலாற்றை காண்போம்.

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பிரடெரிக் தியூடர் என்பவர் தனது ஐஸ் கம்பெனியான தியூடர் ஐஸ் கம்பெனிக்காக சென்னையில் 1842ஆம் ஆண்டில் கட்டிய கட்டடம் தான் இது. அக்காலத்தில் இக்கட்டடத்தில் ஆங்கிலேயர்கள் ஐஸ் கட்டிகளை சேமித்து வந்ததால் “ஐஸ் ஹவுஸ்” எனப் பெயர் பெற்றது. பிற்காலத்தில் விவேகானந்தரின் சீடராக இருந்த பிலிகிரி ஐயங்கார் இக்கட்டத்தை வாங்கினார். அப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர் கெர்னன் ஆவார். இவர் பிலிகிரி ஐயங்காரின் நண்பராவார். எனவே, இவரது பெயரையே இக்கட்டடத்திற்கு வைக்க பிலிகிரி ஐயங்கார் விரும்பினார். அதன்படியே, இக்கட்டடத்திற்கு கெர்னன் கேஸில் என பெயர் சூட்டினார். பின்னர் 1963ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் என தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது.

1893ஆம் ஆண்டில் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் பங்கேற்ற விவேகானந்தர் மிக சிறந்த சொற்பொழிவாற்றினார். பின்னர் அங்கிருந்து தாயகம் திரும்பிய விவேகானந்தர் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இந்த கட்டடத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது அவரை சந்திக்க வந்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இங்கு இராஜாஜி மற்றும் ஆந்திர பிரதேச முதல்வர் டி.பிரகாசம் ஆகியோர் விவேகானந்தரை சந்தித்து உரையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விவேகானந்தருக்குப் பிறகு, சசி மகராஜ் என்று அழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தர், 1897ஆம் ஆண்டில் இங்கு இராமகிருஷ்ண மடத்தைத் துவக்கினார். 10 ஆண்டு காலத்திற்கு இங்குதான் இராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது. அந்த காலகட்டத்தில் சுவாமி சிவானந்தர், நிரஞ்சனானந்தர், திரிகுணாதீதானந்தர், அபேதானந்தர் ஆகியோர் சுவாமி ராமகிருஷ்ணாந்தரின் சீடர்களானார்கள்.

1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் பேலூர் மடத்தில் விவேகானந்தர் மகா சமாதி அடைந்தார். இதற்கு பிறகு 1903ஆம் ஆண்டு விவேகானந்தரின் முதல் ஜெயந்தி விழா இக்கட்டடத்தில்தான் கொண்டாடப்பட்டது. பின்னர் இந்நாளே இளைஞர் தினமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

1906ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அங்கிதம் வெங்கட ஜக்கையா இந்த இல்லத்தை வாங்கியதாகவும், அவரது சொந்த பிரச்சினையால் சில காலம் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் உள்ளன. பின்னர் ஆங்கில அரசு 1917ஆம் ஆண்டில் ஜக்கையாவிடம் இருந்து இந்த இல்லத்தை வாங்கி அதற்கு மரைன் மேன்ஷன் என பெயரிட்டது. இந்த இல்லத்தை ஆங்கில அரசு ரூ.79,944 கொடுத்து வாங்கியது.

இந்த இல்லத்தை ‘இளம் விதவைகள் தங்கும் இல்லம்’ நடத்த விரும்பிய சகோதரி சுப்புலட்சுமிக்கு ஆங்கில அரசு வாடகைக்கு வழங்கியது. இவர் ஏற்கனவே சாரதா ஆஸ்ரமம் என்ற ஒன்றை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் சீரிய முயற்சியில் உருவானதுதான் இன்றைய சாரதா வித்யாலயா ஆகும்.

இவ்வாறு நீண்ட வரலாற்றில் உருவான விவேகானந்தர் இல்லத்தை, இராமகிருஷ்ணா மடம் ரூ.65 இலட்சத்தை மக்களிடம் நிதியாக பெற்று புதுப்பித்தது. 1999இல் புதுப்பிக்கப்பட்ட இந்த இல்லத்தை தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார். ஐஸ் ஹவுஸ் வரலாற்றைக் குறிக்கும் கண்காட்சி, இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் ஓவியங்கள், விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது உபதேசங்களை அறிந்து கொள்ள உதவும் வகையில் புகைப்படக் கண்காட்சி போன்றவை இந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர் கலைஞர் அவர்களின் பெருந்தன்மைக்கும், அரசியல் பண்பாட்டிற்கும் இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். இந்த நடவடிக்கைக்காக, அரசியல் மாச்சரியங்கள் கடந்து சகலரும், தலைவர் கலைஞர் அவர்களைப் போற்ற வேண்டும்.

– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons