வீண் குப்பையில் விளையும் வீண் செடி!

0

இன்றைய (18.11.2009) தினமணியில் பழ.நெடுமாறன் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, ஒக்கனேக்கல், ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற பல பிரச்சைனகளும் பாழ்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறைப் பொறுத்தவரை நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே சட்டமன்றத்தில் பேசியபோது, அன்றைய ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனியாக இருந்ததை மறந்துவிட்டாரா?

(தினமணி ஏடு 18.11.2009 அன்று திரு.பழ. நெடுமாறன் அவர்களின் கட்டுரையை வெளியிட்ட அன்றே, இந்த பதில் கட்டுரை உடனே அனுப்பப்பட்டும், தொலைபேசியில் ஆசிரியர் குழுவிடம் தெரிவித்தும், இதுவரை வெளியிட தினமணி ஆசிரியர் குழுவுக்கு மனம் வரவில்லை. விவாதம் என்றால் பதில் வாதங்களையும் பதிவு செய்வதுதான் பத்திரிகை தர்மம்.)

இன்றைய (18.11.2009) தினமணியில் பழ.நெடுமாறன் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, ஒக்கனேக்கல், ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற பல பிரச்சைனகளும் பாழ்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறைப் பொறுத்தவரை நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே சட்டமன்றத்தில் பேசியபோது, அன்றைய ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனியாக இருந்ததை மறந்துவிட்டாரா? தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்து 1989-91, பின் 1996-2001 துவக்கம் வரை, பின்பு இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் வரை தமிழக நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில், ஒரு சமஷ்டி அமைப்பில் தமிழக நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்கின்ற பணிகளில் ஓய்வறியாமல் உழைக்கின்றார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொறுத்தவரை, இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பிரிவுக்கு அனுப்பியபோது பாரதி குறிப்பிட்டவாறு கொதித்தெழுந்து, தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். ஜெய்ராம் ரமேஷ் கேரள அரசுக்கு ஆய்வுக்கு அனுமதி அளித்தபோதும் பிரதமருக்கு கடுமையான கண்டனக் கடிதம் எழுதியதும் யாருக்கும் தெரியாத செய்தி அல்ல. எந்தவகையிலும் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. அரசு விட்டுக் கொடுத்ததில்லை என்பதை உணர வேண்டும்.

1986இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மத்திய நீர்வளக் குழுவினர் பார்வையிட்டு, பிரதான அணைக்கு முட்டுச் சுவர் எழுப்புவது போல, பேபி அணைக்குப் பின்பும் சுவர் வைக்க வேண்டும் என கூறியதை கேரள அரசு தடுத்துவிட்டது. அன்றைக்கு பலப்படுத்தும் பணிகளில் தமிழக அரசுக்கு மாறாக கேரளா இருந்ததுதான் இந்தப் பிரச்சினையினுடைய ஆரம்பக் கட்டம். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர். இவையெல்லாம் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வந்தன. அப்போது எம்.ஜி.ஆர். அரசு 1986இல் கேரளா கொடுத்த இடையூறுகளை தடுத்து நிறுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதுதான் பிரச்சினைகள் தோன்ற காரணமாயின.

1989இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வருகின்றார். இப்பிரச்சினைக் குறித்து அதிகாரிகள் மத்தியில் பேசி சுமூகமாக பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக பணிகளை மேற்கொண்டிருந்தபொழுது 1991இல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. அதற்குப் பின் 1996இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் விவாதிக்கப்பட்டு முறையாக கடிதங்கள் மூலமாக தி.மு.க. அரசு மத்திய மற்றும் கேரள அரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் கணக்கில் அடங்காதவை. அவை; 2.12.96, 29.3.97, 7.11.97, 18.11.97, 3.12.97, 9.12.97. 10.12.97, 11.12.97, 15.12.97, 8.1.98, 20.1.98, 24.2.98, 3.4.98, 28.5.98, 13.6.98,2.7.98, 13.8.98, 21.8.98, 30.9.98, 13.10.98, 6.7.99, 14.7.99, 22.7.99, 5.8.99, 24.5.99, 25.5.99, 05.08.99 என பல காலக்கட்டங்களில் அனுப்பப்பட்டன.

இதில் 24.2.98இல் தலைவர் கலைஞர் அவர்கள் கேரள முதல்வருக்கு விரிவான கடிதம் எழுதினார். 24.5.99 அன்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்விசை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். 13.8.98 அன்று இருமாநில நீர்வளத் துறை அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது. கேரள அரசுடன் அதிகாரிகள் மட்டத்திலான விரிவான பல பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டது. முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களே 5.4.2000 அன்று திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் போது, முல்லைப் பெரியாறு சம்பந்தமான 7.12.1886 ஒப்பந்தம் மற்றும் தலைவர் கலைஞர் ஆட்சியில் 25.9.1970 அன்று போடப்பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பிரச்சினைகளை பேச வேண்டும் என வலியுறுத்தினார். முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நதி நீர் வழித் தடங்கள் மூலமாக மறிக்கக் கூடாது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது பேசப்பட்டது. அதன்பின் 19.5.2000இல் டில்லியில் நடைபெற்ற இரு மாநில முதல்வர்களுடனான பேச்சுவார்த்தையிலும் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கேரளாவின் பிடிவாதத்தால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இதுகுறித்துப் பேச திருவனந்தபுரம் சென்றது உண்டா? இருப்பினும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக தாமே இறங்கிச் செல்லலாம் என்ற பெருந்தன்மையில் திருவனந்தபுரம் சென்ற ஒரே முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். பின்பு இரண்டு முறை தனது பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. துரைமுருகனையும் அங்கு அனுப்பி பேச வைத்தார். நீதிமன்ற வாசலையும் தொட்டோம். இவ்வாறு ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பில் இருந்துகொண்டு, இந்த அளவு போர்க் குணத்தோடு முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மற்றவர்களைவிட அதிக அக்கறைக் காட்டி இதய சுத்தியோடு கடமையாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள் மீது இம்மாதிரிக் கேள்விக்கணைகளை எழுப்புவது நியாயமற்றது. இதே கேள்விக்கணைகளை ஜெயலலிதாவிடம் எழுப்பியது உண்டா? தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், நெல்லை மாவட்டம் செங்கோட்டைப் பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த அடவிநயினார் அணை கட்டப்பட்டது. 2002 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தம் இந்த அணையை உடைக்க கடப்பாறை, மம்பட்டியோடு வந்தார். அப்போது ஜெயலலிதா ஆட்சி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்து ஏற்பட்ட இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தி.மு.க. முனைந்து செயல்பட்டு வருகின்றது. இதில் எந்த நிலையிலும் விட்டுக் கொடுப்பதோ, சமரசம் செய்து கொள்வதோ கிடையாது. இப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற நிலையில் செயல்படும் கைகளைக் கட்டிப் போட்டிருக்கும் நிலைதான். அதையும் மீறி என்ன செய்யலாம் என்று ஏதாவது புதிய ஆலோசனைகள் இருந்தால், அதை சொல்வதை விட்டுவிட்டு ஏதோ வேண்டா வெறுப்பாக முல்லைப் பெரியாறில் தி.மு.க. அரசு மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பது நியாயம் கிடையாது.

இன்னொரு கேள்விக்கு, டி.ஆர்.பாலுவோ, ஆ.ராசாவோ சுற்றுச்சூழல் அமைச்சர்களாக இருந்தபொழுது இந்தப் பிரச்சினை எழவில்லை என்பதுதான் யதார்த்தம். அதை விட்டுவிட்டு ஜெய்ராம் ரமேஷ் தற்போது கொடுத்த உத்தரவைக் கொண்டு, டி.ஆர்.பாலு, ராசா காலத்தை சம்பந்தப்படுத்திப் பேசுவது தவறாக பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும். அப்போது கேரள ஆய்வுக் குறித்து பிரச்சினை எழவில்லை.
அதுபோல காவிரிப் பிரச்சினையில் என்ன நடந்தது? இராமன் இருக்கும் இடம் அயோத்தி! அதுபோல இந்திரா உள்ள இடம் காங்கிரஸ் என்றும், அன்னை இந்திரா என்றும் அழைத்த நெடுமாறன் அவர்களுக்கு, காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை, அன்றைய மத்திய நீர்வள அமைச்சர் கே.எல்.ராவ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ், கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகியோர் இந்திரா காந்தியிடம் கொடுத்த வாக்குறுதி மற்றும் நம்பிக்கையை தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு நீண்ட விவாதத்திற்குக் பின், காவிரி நதி நீர்ப் பிரச்சினைக் குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அவசர நிலை காலத்திற்குப் பின், அரசியல் சூழ்நிலைகள் மாறிவிட்டன. இதற்கு யார் பொறுப்பு? அன்றைக்கும் அதற்குப் பின் 1980 வரை இதைப்பற்றி கேள்வி எழுப்பாத நெடுமாறன் அவர்கள் இன்றைக்கு 1971ஆம் ஆண்டு கூட்டணிக்காக இந்திராவினுடைய சொல்லைக் கேட்டு காவிரிப் பிரச்சினை பாழாகிவிட்டது என்று பேசுவது உண்மைக்கு மாறானது.
அப்படி இந்திரா காந்தி அவர்களின் தயவு வேண்டும் என்று எண்ணியிருந்தால், அவசர நிலை காலத்தில் அவரை எதிர்த்துப் போராடி, தி.மு.க. ஆட்சியை இழக்க வேண்டியதில்லையே. அப்போது ஓராண்டு காலம் ஆட்சியை நீட்டித்துத் தருகின்றோம் என்றதை மனதாலும் ஏற்றுக் கொள்ளாமல் இந்திரா காந்தியின் அவசர நிலையை கடுமையாக எதிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்ட தலைவர் கலைஞர் அவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டாரே அதற்கு நெடுமாறன் அவர்கள் என்ன சொல்லப் போகிறார். அதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்த விலை அதிகமானது. நூற்றுக்கணக்கான தி.மு.க. தோழர்கள் மிசாவில் அடைக்கப்பட்டார்களே. அப்படி போராடிய தலைவர் கலைஞரா காவிரிப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்திருப்பார் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா? தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தானே வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார். இதற்காக தலைவர் கலைஞர் எத்தனை முறை டில்லி சென்றுள்ளார். இன்றைக்கு ஒக்கனேக்கல் பிரச்சினையிலும் தி.மு.க. அரசு விட்டுக் கொடுக்கவில்லையே? அப்பிரச்சினையில் தமிழக நலன் காக்கும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றது.

ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் இல்லை என்று சொல்வது வேடிக்கையானது. 1991இல் ஈழத் தமிழர் பிரச்சினைகாகத் தானே தலைவர் கலைஞர் ஆட்சியை இழந்தார்; வேறு என்ன காரணம்? அப்போது பத்மனாபா கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தப்பி ஓடினார்களே. அதற்கும் தலைவர் கலைஞர் அவர்கள் தானே மத்திய அரசுக்கு பதில் சொல்லும் நிலையில் இருந்தார். முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்குத் தெரியாமலேயே வைகோ அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்தனர். முதல்வருக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் தெரியாமலேயே அந்த உதவியாளர்கள், தப்பி ஓடிய விடுதலைப் புலிகளுக்கு ஜாமின் கையெழுத்துப் போட்டார்களே, இதற்கும் தலைவர் கலைஞர் தானே பதில் சொல்லல வேண்டி இருந்தது. வைகோ சொல்லவில்லையே!
1983இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக தலைவர் கலைஞர் தலைமையில் எத்தனை போராட்டங்கள், சிறைவாசம் என்பதெல்லாம் மறந்து விட்டதா? இந்தப் பிரச்சினைக்காகத் தானே தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார் ஆகியோர் தங்களது சட்டமன்ற பதவியை தூக்கி எறிந்தனர். ஈழ ஆதரவு அமைப்பான டெசோ நடத்திய மாபெரும் மக்கள் திரள பேரணிகள், மாநாடுகள் போன்றவற்றை யார் நடத்தியது? அன்றைக்கு அதில் நெடுமாறன், வீரமணி, அய்யன் அம்பலம் போன்றவர்கள் பங்கேற்றனரே. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நாடு கடத்தப்பட்ட பாலசிங்கம், சந்திரஹாசன், சத்யேந்திரா போன்றவர்களை திரும்பவும் தமிழகத்திற்கு அழைக்க பத்து மணி நேர அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டப் பேரணியால் சென்னைக் குலுங்கியதே? அது யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைதிப்படை இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் போது முதல்வர் என்ற வகையில் அமைதிப் படையை வரவேற்க செல்லவில்லையே? இப்படி ஈழத் தமிழர் பிரச்சினையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றியப் பணிகளைப் பட்டியலிட்டால் நீண்ட பட்டியலாகிவிடும்.

1991இல் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நாசகார சக்தி என்றும், பிரபாகரன் ஒரு கொலைகாரர் என்றும், அந்த இயக்கத்தை அழித்தே விடுவேன். தி.மு.க. அவர்களுக்குத் துணைப் போகின்றது என்று சொன்ன ஜெயலலிதா, அதே இயக்கத்திற்கு இன்று தானாகவே சென்று வக்காலத்து வாங்குவது எவ்வளவு பெரிய பித்தலாட்ட நடவடிக்கை! ஈழத் தமிழர்களை பாகற்காய் போல நினைத்த ஜெயலலிதாவுக்கு, தான் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற வெறிதானே ஒழிய தமிழர் நலன் என்ற ஒன்றுமில்லை.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொடோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட வைகோ, நெடுமாறன் போன்றவர்களை சிறையிலிருந்து மீட்க தலைவர் கலைஞர் எடுத்த முயற்சிகளும் செயல்பாடுகளும் மறந்தா போய்விடும். இத்தனைக்கும், 2001இல் கடைசி நேரத்தில் கூட்டணியை வெட்டிவிட்டு, தி.மு.க. தோற்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார் வைகோ என்பதையும் மறந்துவிட்டு, தலைவர் கலைஞர் அவர்கள் வேலூர் சிறைக்குச் சென்று அவரை சந்தித்தாரே, அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் இவர்களெல்லாம் விடுதலை பெற்றனரே, இதற்கெல்லாம் தலைவர் கலைஞர், வாஜ்பாய் ஆட்சியில் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளை இவ்வளவு விரைவில் மறந்துவிட்ட இவர்களுக்கு என்ன பதில் சொன்னாலும் எடுபடாது.

1991இல், இராஜிவ் காந்தியின் கொடூர மறைவை பயன்படுத்தி ஜெயலலிதா ஆடிய கொடிய நர்த்தனங்களால்தான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டது என்பது நெடுமாறன் அவர்களுக்குத் தெரியாதா? ஜெயலலிதாவால் ஒன்றும் அறியாத அப்பாவி ஈழத் தமிழர்கள் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற நிலையில் அன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் இருந்த ஜெயலலிதாவின் கோரத்தனத்தால் தமிழினத்திற்கு எவ்வளவு கொடுமைகள் ஏற்பட்டது. இன்றைக்கு ஈழத் தமிழருக்காக அவர் நீலிக்கண்ணீர் வடிப்பது, இதுவும் நடிப்பின் அரங்கக் காட்சியாகவே உள்ளது. தலைவர் கலைஞர் அவர்கள் இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையும், அவர்கள் வாழும் முகாம்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய திட்டங்களையும் அறிவிக்கும்போதுகூட அவற்றை வரவேற்க விரும்பாதவர்கள் வினாக்களை மட்டும் எழுப்ப எப்படி மனம் வந்தது?

தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை, இணக்கமும் இல்லை என்று சொல்லும் நெடுமாறன் அவர்களே, இந்த மாதிரி நிலை எப்போது ஏற்பட்டது. அ.தி.மு.க. பிரிந்தபோது இம்மாதிரி நிலை ஏற்பட்டது. அவசர நிலை காலத்தில் முதல்வர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜரிடம் ஆலோசனை பெறவில்லையா? எந்த பிரச்சினை ஆனாலும் மூதறிஞர் இராஜாஜி, காயிதே மில்லத், பொதுவுடைமை தலைவர்கள் போன்றவர்களை தலைவர் கலைஞர் அவர்கள் அணுகியது கடந்த கால வரலாறு. பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபின்பு அவரது உடலை அடக்கம் செய்ய உரிய இடமான காந்தி மண்டபம் அருகில், தன்னுடைய மூத்த அண்ணன் மறைந்து விட்டார் என்ற வகையில் தலைவர் கலைஞர் பணிகளை ஆற்றவில்லையா? இதை இராஜாராம் நாயுடு காமராஜரின் உடன்பிறந்த சகோதரர் போல் இருந்து செய்தார் என்று கூறவில்லையா? காயிதேமில்லத், இராஜாஜி, தந்தை பெரியார் போன்றவர்களிடத்திலும் அவருக்கு மரியாதை இருந்தது. அத்தகைய தலைவர் கலைஞரிடமா ஒற்றுமையும், இணக்கமும் தமிழகப் பிரச்சினைகள் குறித்த செயல்பாடுகளில் இல்லாமல் போய்விடும்?
2001இல் ஜெயலலிதா பதவியேற்றபோது அந்நிகழ்ச்சிக்கு சென்ற பேராசிரியர் அன்பழகனார், இன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போன்ற தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களை ஜெயலலிதா அரசு எவ்வாறு கௌரவப்படுத்தியது என்று அன்றைக்கு பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அவர்களை பின்னாடி 7ஆவது வரிசையில் அமர செய்தது ஜெயலலிதா அரசின் பரிவாரங்கள். அம்மாதிரி தலைவர் கலைஞர் அவர்கள் நிகழ்ச்சியில் நிகழ்ந்தது உண்டா? எந்த காலத்திலாவது தலைவர் கலைஞர் அவர்களின் பதவியேற்புக்கு அ.தி.மு.க.வினர் வந்ததுண்டா. தமிழகத்தின் உரிமைப் பிரச்சினையில் யார் இணக்கம் காட்டவில்லை. அந்த சூழலை பாழ்படுத்தியது யார் என்று ஆய்ந்து பார்த்தால் தெரியும்.
தமிழ் செம்மொழி அறிவிப்பு யாரால்? பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து வலியுறுத்தப்பட்ட செம்மொழி கோரிக்கையை தலைவர் கலைஞர் தானே சாதித்துள்ளார். நெடுமாறன் அவர்கள் பல காலம் போராடிய, கோரிக்கையான 150 ஆண்டுகாலமாக முடக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப் பட்டதை மறந்து விட்டாரா? இராமர் – சேது என்று பிரச்சினையை கிளப்பியது யார்? சேதுக்கால்வாய்த் திட்டத்தில் விதண்டாவாதம் செய்த ஜெயலலிதா மீது இம்மாதிரி குறைகளை சொல்லியது உண்டா? ஈழத் தமிழர் பிரச்சினை இவ்வளவு திசை மாறிப் போனதற்கு காரணமே ஜெயலலிதாதான்.

வாய்ப் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்ற கதையாக போகிற போக்கில் விரல் நீட்டி வினாக்கள் எழுப்புவது அரசியல் நாகரீகம் கிடையாது. தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் எவ்வளவோ நலத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. குடிசைகளுக்குப் பதில் மாடி வீடுகள், கண்ணொளித் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பல்வேறு மகளிர் நலத் திட்டங்கள், ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி, இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள், உயிர் காப்பீட்டுத் திட்டம், பெரியார் சமத்துவபுரங்கள், தமிழகம் முழுதும் அகல இரயில் பாதைத் திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்களை வழங்குகின்றார்.

கலைஞன் பதிப்பகம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கட்டுரைப் போட்டி நடத்தி, ஆயிரகணக்கில் கட்டுரைகள் பெற்று, அதிலிருந்து மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு “நாம் விரும்பும் தமிழகம்” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டிக்கு 20,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டன என பதிப்பக நண்பர் குறிப்பிட்டார். அதில் தலைவர் கலைஞருடைய திட்டங்களும், ரூ.1க்கு 1 கிலோ அரிசி திட்டம் பற்றி ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன என மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் சாதனை வீச்சுகளும், அழுத்தங்களும் குழந்தைகளின் உள்ளங்களுக்கேச் சென்றுள்ளபோது, முதிர்ச்சியும், அனுபவமும் பெற்றவர்களுக்கு கலைஞருடய சாதனைகளும் அணுகுமுறைகளும் எட்டவில்லையே என்பதுதான் நமது கவலை. இவற்றையெல்லாம் வீண் குப்பையில் விளையும் வீண் செடி என்று ஒதுக்கித் தள்ள வேண்டியதுதான்.

– வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons