வைகோவே, நிழலோடு யுத்தம் செய்வது யார்?

0

தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து தான் அரசியல் நடத்தவில்லையென்றும், அதற்கு அவசியம் தனக்கு இல்லையென்றும் சொல்லும் வைகோவே, தினமும் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி ஏதாவது ஒன்று சொல்லி விமர்சித்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். வேறு எந்த பணியும் இல்லையே!

ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து பேசும்பொழுது, தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, திரும்பவும் ஆனந்த விகடன் (09.12.2009) இதழில் கேள்வி எழுப்பி உள்ள வைகோவுக்கு சில கேள்விகள்.

1. தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து தான் அரசியல் நடத்தவில்லையென்றும், அதற்கு அவசியம் தனக்கு இல்லையென்றும் சொல்லும் வைகோவே, தினமும் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி ஏதாவது ஒன்று சொல்லி விமர்சித்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். வேறு எந்த பணியும் இல்லையே! அதுவும் இட்டுக்கட்டியே ஏதாவது புறஞ்சொல்வது தானே தங்களது வாடிக்கை. இது தமிழக மக்களுக்குத் தெரியாதா?

2. பிரபாகரனை கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதாவைக் கண்டித்ததுண்டா என்ற விகடன் கேள்விக்கு, தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து பழங்கதைகளைப் பேசக் கூடாது என்று சொல்லும் வைகோவே, பொடா சிறையில் நான் இருக்குபொழுதே ஜெயலலிதாவை கண்டித்து விட்டேன் என்று சொல்லும் தங்களின் வாயில் இப்பொழுதும் கண்டிக்கிறேன் என்று வரவில்லையே. இப்போது தங்களின் நிலைமை என்ன? அன்று கண்டித்ததை இன்று கண்டிக்கவில்லையா? அதுபோலதான், சேது சமுத்திரத் திட்டத்தை நான்தான் கொண்டுவந்தேன் என்று ஊர் முழுக்க ழுழங்கிய நீங்கள், அப்பிரச்சினைக் குறித்து இப்பொழுது பேச பயம் ஏன்? வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்? அப்படிப் பேசினால் ஜெயலலிதா உங்களை போயஸ் கார்டனுக்குள் விடமாட்டார் என்ற அச்சமா?

3. பழங்கதையை பேசும் பழைய வை.கோபால்சாமியே, ஆதாயத்திற்காக விடுதலைப் புலிகளின் திட்டத்தை குறித்து மத்திய அரசு அனுப்பிய கடிதம் குறித்த சர்ச்சையில் பல சமயங்களில் அரைத்த மாவைதானே நீங்களும் அரைக்கிறீர்கள். இது பழங்கதை இல்லையா? தேய்ந்து போன கிராமபோன் ரிக்கார்டு இல்லையா? இதையெல்லாம் பேசிவிட்டு தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து பழங்கதைகள் பேசுகிறார் வைகோ. இது பைத்தியக்காரத்தனமில்லையா. இதைக் குணப்படுத்த குணசீலத்திற்கோ அல்லது ஏர்வாடிக்கோதான் உங்களை அனுப்ப வேண்டும். இந்தப் பிரச்சினையில் அன்றைக்கு தமிழகம் முழுவதும் 1993இல் ஓலமிட்ட தாங்கள் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து கொண்டு அந்தக் கடிதத்தை அனுப்பிய நரசிம்மராவ் ஆட்சியைப் பார்த்து நாடாளுமன்றத்தில் கேட்டு இருக்கலாமே? அதில் ஏன் தயக்கம்? அப்போது விடிய விடிய தமிழகமெங்கும் ஒப்பாரி வைத்த உங்களுக்கு டில்லியில் இருக்கும்பொழுது இந்த ஒப்பாரிக்கு விடுமுறை விட்டீர்களே, ஏதாவது பயமா? நரசிம்மராவ் ஆட்சியில், ராஜீவ் படுகொலையின்போது உள்துறை அமைச்சராக இருந்த சவாணை பலமுறை பார்க்கப்போன தாங்கள் இதுகுறித்து பேச வசதியாக மறந்து விட்டீர்களா?

4. மாத்தையா என்ற கோபால்சாமியை, தலைவர் கலைஞர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததே நீங்கள்தான் என் குறிப்பிட்ட கேள்விக்கு ஏதேதோ உளறி, வரலாறு தெரியாமல் பேசிக் கொண்டிருப்பதன் மூலமே உங்களுடைய வாதங்கள் அபத்தமானவைகளாக உள்ளன என்று தெரியாதா? உப்புச் சப்பில்லாத வாதங்கள், தலைவர் கலைஞர் அவர்கள் வைத்த கருத்துக்கு சம்பந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் தங்களைப் பற்றி பேசுவதே வீண் வேலை. தங்களின் சொத்தை வாதங்களை விகடன் வெளியிட்டிருப்பதால்தான், விகடனுக்காக பதில் சொல்ல வேண்டி உள்ளது. ஈழத் தமிழர்களுக்காக அப்படி உழைத்தேன், இப்படி உழைத்தேன்; வேறு யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை; நான்தான் செய்தேன் என பேசும் வைகோவே, உங்களை தமிழக மக்கள் எப்படி கவனித்தார்கள்? தேர்தல் மூலம் மக்கள் உங்களைப் புறக்கணித்தனரே! இதைவிடவா வேறு ஒரு குட்டு உங்களுக்கு வேண்டும்?

1996இல் சிவகாசி நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த புதுமுகமான அழகிரிசாமி என்ற இளைஞரிடம் தோற்றீர்கள். அதைப் போலவே விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதியிலும் உங்களுக்குத் தோல்வி. 2006இல் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், டில்லியிலிருந்து வந்த காங்கிரசைச் சேர்ந்த மாணிக்க தாகூர் என்ற புதுமுகத்திடம் தோற்றீர்கள். இதைப் பற்றியெல்லாம் யோசித்ததுண்டா? வீண் ஜம்பம் அடித்துக்கொண்டு, உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் வைகோவே, தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டு காலம் சட்டமன்றத்திற்கு சென்றாரே; 5 முறை தமிழக முதல்வர்! இதைவிட வேறு என்ன மதிப்பீடு செய்ய முடியும். முதலில் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு மற்றதை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இதை எல்லாம் சிந்தித்துவிட்டு, ஆளுமைமிக்க இமயத்திற்கொப்ப உயர்ந்த தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து வினா எழுப்புவது உங்களுக்கு முட்டாள்தனமாக தெரியவில்லையா? இன்றைக்குள்ள நிலையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களைக் காக்க, இவ்வளவு பேசும் உங்களிடம் ஏதாவது யோசனையோ, நடவடிக்கையோ உள்ளாதா? அதை தெரிவித்தால் ஈழத் தமிழர்களுக்கு நல்லது. இன்னொரு செய்தியும் உங்களுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் இலங்கையில் அவர்கள் படும் துயரை கவனிக்காமல், தங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஒன்றை பேசிக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என்ற கருத்து ஈழ மக்களிடம் இருப்பது தெரியுமா?

இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தவளை தன் வாயால் கெடும் என்பதைப் போல, கானலை தண்ணீராய் காண்பதுபோல் உளறிக் கொட்டாமல், ஓட்டை விழுந்த ம.தி.மு.க. படகை தேற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை பார்க்காமல், ஏடுகளில் ஏதாவது பேட்டியோ செய்தியோ தன்னைப் பற்றி வரவேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து பேசுவதுதான் தாங்கள் சொல்லிய நிழலோடு சண்டை போடுவது.

– பாஞ்சாலங்குறிச்சி பாமரன்

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons