கதை சொல்லி இதழ்-29

0

கதைசொல்லியின் 29-வது இதழின் பணிகள் முடிந்து அச்சுக்குச் செல்ல உள்ளது. இதழின் மெய்ப் பிரதியினை கி.ரா அவர்களுக்கு அனுப்பிவைத்தாயிற்று.

மற்றொரு மெய்ப் பிரதியை கையில் எடுத்துக்கொண்டு,
திருநெல்வேலி டவுண் சுடலைமாடன் தெருவில் உள்ள தி.க.சியின்  இல்லத்தின் முற்றம் வரை சென்றுவிட்டு கடந்தகாலங்களில் மூழ்கிவந்தேன்.

 அவர் உயிரோடு இருந்தபொழுது கதைசொல்லியைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும், ஏனைய விவாதங்களும்  நினைவுக்கு வந்தது.

அவரோடு அமர்ந்து பேசிய ஒரு பழைய இரும்பு நாற்காலி ஒன்று  அங்கு இருந்தது. அதில் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு, அவர் விரும்பிச் சாப்பிடும் ஓமப்பொடி தின்பண்டத்தை மனதிலே நினைத்துக் கொண்டு திரும்பினேன்.

சுடலைமாடன் கோவில் தெருவில் திகசிக்கு இறுதிவரை உதவியாக இருந்த ஓவியர் வள்ளிநாயகத்தை அவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்க்கும் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அறையில் சந்தித்துப் பேசி, அவரோடு தேநீர் அருந்திவிட்டுத் திரும்புகையில், அந்தப் பள்ளியில் படித்த கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றவர்களின்  பணிகள் நினைவுக்கு வந்தன.

நெல்லை மாவட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பேர்சொல்லக்கூடிய கல்விக் கூடமாக, அப்படியே பழமை மாறாத கட்டிடங்களாக மந்திரமூர்த்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன்றைக்கும் காட்சியளிக்கின்றது.

அதன் பக்கத்தில் வேப்பமரங்களும், அரசமரங்களும், ஆல மரமும் ஓங்கி வளர்ந்து, பகல் நேரத்தில் சிலுசிலுக்கும் காற்றும், இப்பள்ளியைச் சுற்றி பச்சைப்பசேலென்ற வயல் வெளிகளும் பார்க்க ரம்மியமாக இருந்தது.

கடந்த கதைசொல்லி இதழ் கையில் கிடைத்தவுடன் பாராட்டுகளும், வாழ்த்துகளும் வந்தவண்ணம் இருந்தது. தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியா, ஈழம், உலகெங்கும் வாழும் தமிழர்கள் இடையே இந்த இதழ் அச்சுப் பிரதியாக மட்டுமில்லாமல், மின்னிதழ் பிரதியாகவும் சென்றடைந்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது.

இந்த இதழின் தயாரிப்புப் பணிகளில் அன்புக்குரிய கழனியூரன்,
தம்பி கார்த்திக்புகழேந்தி, ஸ்ரீதேவி செல்வராஜன் போன்றோருடைய உழைப்பை நன்றியுடன் பார்க்கின்றேன். இதழுக்கான அட்டைப் படத்தை மதுரை ரெங்கா அனுப்பியது பொறுத்தமாக இருந்தது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-08-2015.

#KsRadhakrishnan #KSR_Posts  #kathaisolli

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons