தேனி விவசாயி இன்று தற்கொலை. நிலம் கையகப்படுத்தும் மசோதா (5) – Land Acquisition Bill (5)

0

மோடி அரசு எப்படியும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்திலும் நான்கு விவசாய சங்கங்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏன் அவசரச்சட்டம் என்று மக்களுக்குக் காரணம் சொல்லவேண்டுமென பொதுநல வழக்குகள் தொடுத்துள்ளன.

மத்திய அரசோ, இது  விவசாயிகளுக்கு நன்மைகளும் சாதகமும் நிறைந்த  சட்டம் என்று பசப்பு வார்த்தைகள் சொன்னாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் ஆதாயமடையவே விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கவேண்டுமென்பது அதன் ஒரே குறிக்கோள்.

உச்ச நீதிமன்றமும் இதற்கு நான்குவார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது. இந்த கால அவகாசத்தின் பெயரால் விவசாயிகள் சங்கங்களின் மனுக்கள் ஒன்றும் பயனற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் தான் நேர்கின்றது.

மக்களிடமும், விவசாயிகளிடமும் கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசாங்கம் இதுவரை சரியான இழப்பீடுகளை தரவில்லை. இதுவரைக்கும் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிரச்சனையில் ஆறுகோடிக்கும் மேலான மக்கள் தங்கள் ஊர்களையும், நிலங்களையும் விடுத்து ஒன்றுமில்லாத அகதிகளாக்கப் பட்டுவிட்டார்கள்.

அரசுகள் ஏற்கனவே  கையகப்படுத்திய நிலங்களில் மாநிலம் வாரியாக பயன்படுத்தப்படாத நிலங்கள் ஹெக்டெர் அளவில் கீழ்கண்ட படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள்  பயன்படுத்தப் படாமல் இருக்கும் போது மேலும் விளை நிலங்களைக்  கையகப்படுத்த துடிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்கள் அவையில் ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர்பார்த்து அ.தி,மு,க ஆதரித்திருக்கிறது. ஆனாலும் மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. கட்சிவாரியாக பார்க்கும் பொழுதும் 69 கட்சிகள் ஆதரவாகவும், 27 கட்சிகள் சார்புகளற்றும் 148 கட்சிகள் எதிர்த்தும் வருகின்ற நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா ஒப்பேறாது என்றே தெரிகின்றது.

2012காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலிருந்து இந்த மசோதாவைக் கொண்டு வரவேண்டுமென்று ஆட்சிபீடத்துக்கு வருபவர்கள் தீர்மானமாக இருக்கின்றார்கள். 1894ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரங்களை அரசுக்குத் தந்துவிட்டு அதன் உரிமையாளர்களின் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன.

ஏதோ ஒப்புக்கு இழப்பீடு தந்து நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்ற நிலை இருந்தது.  இந்த மசோதாவிலும் அதே நிலை ஆரம்பத்திலிருந்தே உள்ளது. இந்த மசோதாவில் மீள் குடியமர்த்தும் விசயத்திலும் தெளிவான பாதுகாப்பான நிலைப்பாடுகளும் கிடையாது.
நட்ட ஈட்டிலும் இனிப்பான வார்த்தைகள் தான் உள்ளதே ஒழிய செயல்பாடுகள் என்று எதுவும் இல்லை.

உலக அளவில் பெரும் நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு  எட்டாவது இடம். சீனாவுடன் ஒப்பிடும் போது மூன்றில் ஒரு பங்கு. இந்தியாவைப் பொறுத்தவரை 36-லிருந்து 38 சதவிகிதம் மக்கள் விவசாயத்தையே பிரதானமாக நம்பியுள்ளனர். 85% விவசாயிகள் இந்தியாவில் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர். இவர்களிடமிருந்துதான் நிலத்தை பறித்து பெருமுதலாளிகளுக்குக் கொடுக்க நினைக்கிறது மத்திய அரசு.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி தனியாருக்கு கொடுக்க அவசியமும், அவசரமும்  ஏற்பட்டிந்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட அறுபது சதவிதத்தும் மேலான நிலங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் இருப்பது ஏன்? அதை என்ன செய்யப் போவதாய் உத்தேசம்.

உதாரணத்துக்கு  கோத்ரேஜ் நிறுவனம் 2800ஏக்கர் நிலத்தை மும்பையிலும், இன்போசிஸ் நிறுவனம் 1.4சதுர கி.மீ நிலத்தை பெங்களுரிலும், அதே போல பல பெரும் நிறுவனங்கள் கொல்கத்தா, டெல்லி, சென்னை, கொச்சி போன்ற பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் வெறுமனே இருக்கும் போது இன்னும் ஏன் இந்த நில ஆர்ஜித சட்டமசோதா.  அப்படி விவசாய நிலங்களைக் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் நம்முடைய வினா!

வளர்ச்சி வளர்ச்சி என்று மக்களைத் தளர்ச்சியாக்கும் நடவடிக்கையாகத்தான் இந்த நிலக் கையகப்படுத்தும் சட்டமசோதாவை நாம் பார்க்கவேண்டியுள்ளது .

ஏற்கனவே கடந்த இருபது ஆண்டுகளாக கடன் தொல்லையால் 2லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்திருக்கிறார்கள். இந்த துக்கங்களையே இன்னும் தடுத்து நிறுத்தாமல் மேலும் விவசாயிகளைப் பராரியாக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் அரசு மேற்கொண்டது, தற்போது பா.ஜ.க அரசும் அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

நிலம் கையகப்படுத்துவதற்கு ஏன் ஒட்டுமொத்தமாக மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் கொஞ்சமும் சிந்திக்க மறுப்பது ஏன்? இந்தியாவில் இதுவரை 350 இயக்கங்கள் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து களமிறங்கியுள்ளனர்.

நிலம் என்பது ஒரு விவசாயியின் உயிருக்குச் சமமானது. பயிர் செய்யும் நிலத்தை தங்கள் ஆன்மாவாக பாடுபடும் உழவன் நினைக்கின்றான். எவ்வளவோ நட்டமும் துயரமும் பிரச்சனையும் இருந்தாலும் அந்த விவசாய நிலத்தில் தன்னுடைய கால்நடைகளோடு உழைத்து, அறுவடை செய்து, அந்த மண்ணிலேயே தன் இறுதிகாலங்களில் உயிர் போகவேண்டுமென்று விரும்புகின்றார்கள்.  இயற்கை தந்த இந்த அருட்கொடையான விவசாய பூமியிலிருந்து எந்த விவசாயியையும் நம்மால் பிரித்துவிட முடியாது.

அரசுகள் பழங்குடியினரின் நிலங்களையும், ஒடுக்கப்பட்டவர்களின் நிலங்களையும் பிடிங்குவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. மத்திய அரசு இந்த சட்டத்தின் மூலம் வம்பு செய்வதை எதிர்த்து விவசாயிகள் பல போராட்டங்கள் மூலம் பாதிப்புக்குள்ளாகி, இந்தியாவில் 165 மாவட்டங்களில் 280க்கும் மேலான வன்முறைகளும், மோதல்களும் ஏற்பட்டு சட்ட ஒழுங்கும் கெட்டுப் போயிருக்கிறது.

விடுதலை பெற்ற 67 ஆண்டுகாலத்தில் நிலம் கையகப்படுத்தப் பட்ட பிரச்சனையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கோ விவசாயிகளுக்கோ கிடைக்கவேண்டிய பரிகாரங்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். விவசாயிகளிடமிருந்து ஏற்கனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பறித்த நிலங்கள் வீணாக இருக்கின்றது என்பதை நாட்டின் ஆடிட்டர் ஜெனரல் வருத்தத்தோடு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இந்நிலையில் விவசாயிகளின் நிலத்தை ரியல் எஸ்டேட் தரகர் போன்று அரசுகள்  பெரும் முதலாளிகளுக்கு வாங்கித் தருவதில் முனைப்பு காட்டும் போது,  இது  மக்கள் நல அரசாங்கமா ? நடப்பது மக்களாட்சி தானா என்று கேள்வி உருவாகிறது.

மக்களுக்கு உணவளிக்கின்ற விளைநிலங்களை இப்படி பிடிங்கிக் கொடுத்துவிட்டால் உணவை எங்கிருந்து உற்பத்தி செய்வார்கள் என்பது அரசுகளின் மண்டையில் ஏறவில்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

இவ்வளவு காரணகாரியங்கள், எதிர்விளைவுகள் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காங்கிரஸ் ஆனாலும் சரி, பா.ஜ.க ஆனாலும் சரி இந்த மசோதாவை நிறைவேற்றியே தீர்வோம் என்று உடும்புப் புடி புடிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது என்றுதான் புரிபடவில்லை.

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது, தேனியில் வாழை விவசாயி அழகுவேல் தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தன்னுடைய தோட்டத்திலே அரளிக்காயைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்.  கடந்த வாரம் தான் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பருத்தி விவசாயி ராஜாரமன்  தற்கொலை செய்துகொண்டதை வருத்தத்தோடு பதிவு செய்திருந்தோம்.

தமிழகத்தில் மட்டும் இதுவரை  கோவில்பட்டி அருகேயுள்ள நெல்லைமாவட்டம் வரகனூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், சங்கரன்கோவில் அருகேயுள்ள  மேலநீலிதநல்லூர் வெள்ளப்பனேரி செந்தூர்பாண்டியன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பூமிநாதன், கீவளூர் ராஜாங்கம், கீழையூரைச் சேந்த செல்வராஜ், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி, ஏழை உழவன், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், சிவகாசி அருகே பாண்டி,  இப்படி பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழ்நாட்டில்  கடன் தொல்லையால் தற்கொலைச் செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.

மோடி அவர்களே இது தான் வளர்ச்சியா!

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-05-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons