நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதேன்?

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித நேரு, ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அன்றைய குடியரசத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன், அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிறுவனம்தான் முதன் முதலாக நிலக்கரியைக் கொண்டு மின்சாரத்தை இந்தியாவில் தயாரித்தது. இந்நிறுவனத்தின் மூலமாக யுரியா, லிக்கோ, பினால், நாப்தா போன்ற பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்பொழுது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஏழு நிலையங்கள் இங்கு உள்ளன. ஒவ்வொன்றும் 210 மெகாவாட் திறன் கொண்டது. இந்நிறுவனம் 100 கோடி ரூபாய் ஆண்டொன்றுக்கு லாபத்தை ஈட்டித் தருவதோடு, ஆண்டொன்றுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்தின் மதிபு ரூ.ஆறாயிரம் கோடியாகும். இந்த நிறுவனத்தின் மூலம் 46 சதவீதம் மின்சாரத்தை தமிழக மின் வாரியம் பெறுகிறது. இந்த நிறுவனத்தின் மின்சார உற்பத்தி 35.5 மில்லியன் யூனிட் ஆகும்.

இவ்வாறு திருப்தியான நிலையில் இயங்கிக் கொண்டு இருக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு ஜீரோ யூனிட்டை தாரை வார்த்து கொடுப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் சமூக அமைப்புகளும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்நிறுவனம் இதுவரை நஷ்டத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்கினால் தனியாரிடம் ஒப்படைக்கலாம். ஏற்கனவே மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் வெளியார் தலையீடு இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவின் இறையாண்மை அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. என்.எல்.சி. (நெய்வேலி லிக்னைட் நிறுவனம்) தனியாரிடம் ஜீரோ யூனிட்டை மிகவும் குறைந்த விலையில் விற்றுள்ளது. தனியாரிடம் கொடுக்கப்படுவது இந்திய கம்பெனிகள் சட்டத்தின்படி (1956) இந்நிறுவனத்தின் தொழிலாளர்களிடம் விவாதிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின் 710 மெகாவாட் கொதிகலங்களுக்கு ஏற்கனவே கரி தட்டுப்பாடு இருக்கிறது. அவ்வாறு இருக்கும்பொழுது இதை தனியாருக்கு வழங்கினால் வணிகம் மற்றும் நிர்வாக ரீதியாக தவறான பின் விளைவுகள் ஏற்படும். ஏற்கனவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் ஏரியில் தண்ணீர் மட்டத்தை பார்த்துக் கொண்டுதான் நடைமுறையிலுள்ள யூனிட்டுகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் இன்னொன்று தனியார் அமைப்பின் கீழ் வந்தால் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தினால் சுமார் 2,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்தும், சி.ஈ.எ., பி.ஐ.பி. நிறுவனங்களிலிருந்து நெய்வேலி லிக்னைட் நிறுவனம்தான் இந்த ஜீரோ யூனிட்டை நடத்த அனுமதி பெற்றுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன?

இந்த ஜீரோ யூனிட்டை துவக்க உத்தங்கள் கிராமத்தில் 200 ஏக்கர் நிலம் கையகம் செய்யும்போது நில சொந்தக்காரர்களுக்கு புனர்வாழ்வு அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுக்கும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு நிலத்தின் முன்னாள் சொந்தக்காரர்களுக்கு எஸ்.டி. நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை. நெய்வேலி நிறுவனம் சரத்தக் நிறுவனத்திற்கு வெறும் ரூ.30,000/- வீதம் என ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் இன்றைக்கு ஒரு ஏக்கர் 2 முதல் 3 இலட்சம் வரை என்ற நடைமுறை விலை இருக்கிறது. இதனால், நிலம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியை மீறி வேலை உரிமை மறுக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு மத்திய அரசு 2ஆவது அனல் மின் நிலையத்திற்கு அனுமதி அளித்தது. 210 மெகாவாட் கொண்ட 3ஆவது யூனிட் 1986 மார்ச் மாதம் தொடங்கி 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 4ஆவது யூனிட் தொடங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹங்கேரி நாட்டு உதவியுடன் இயந்திரம் உதிரிபாகங்களைக் கொண்டே புதியதாக 7 யூனிட்டுகளும் துவக்கப்பட்டது. இப்போது புதியதாக இந்த நிறுவனமே எட்டாவது யூனிட்டை தனியாக தொடங்கி இருக்கலாம். ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 1989ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.240 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த துறை செயலாளராக இருந்த ஜெயின் 11.2.1992 அன்று எட்டாவது யூனிட்டிற்கு அடிக்கல் நாட்டினார்.

1991இல் காங்கிரஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு, புதிய பொருளாதார கொள்கையில் மின் உற்பத்தி தனியாரிடம் அளிப்பது என்ற திட்டத்தின் கீழ் இந்த ஜீரோ யூனிட்டை அமெரிக்காவில் வாழும் சரத்தக் என்பவருக்கு வழங்கினார். ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் பெற்றபின் மத்திய அரசு ஒப்புதல் பெற்றபின் இந்த திட்டத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே தனியாரிடம் வழங்காமல் 210 மெகாவாட் 8ஆவது யூனிட்டை துவக்கி இருக்கலாம்.

31.8.1992 அன்று 8ஆவது யூனிட் துவக்கப்பட, திரு. சரத்துக்கும், நெய்வேலிõ நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. 29.10.1992இல் நெய்வேலி நிறுவனத்தின் ஆண்டு பேரவை கூட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனியாரிடம் 8ஆவது யூனிட்டை ஒப்படைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த 8ஆவது யூனிட் தொடங்க சுமார் 750 கோடி ரூபாய் தேவை என திட்டம் தீட்டப்பட்டது. நெய்வேலி நிறுவனமே செயல்படுத்தினால் சுமார் 350 கோடி ரூபாயில் தொடங்கலாம். வெறும் 150 கோடி ரூபாய்தான் எஸ்.டி. நிறுவனத்தின் மூலதனமாகும். எஞ்சிய 600 கோடி ரூபாயை நிதி நிறுவனங்களிடம் கடனாகப் பெறுகிறது.

இதுமட்டுமல்லாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கீழுள்ள வீட்டு வசதி, பணியாளர்கள் மருத்துவ வசதி, கல்வி நிலையங்கள், சாலைகள், பாலங்கள், புகை வண்டி பாதை போன்றவைகளை எஸ்.டி. பவர் சிஸ்டம் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சலுகைகளை ஒப்பந்தம் மூலம் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் பணி பாதுகாப்பு இருக்காது. இட ஒதுக்கீடு கொள்கைக்கு உத்தரவாதம் கிடைக்காது. இதனால் வேலை வாய்ப்பு நலன் தொழிலாளர் நலன் பெரிதும் பாதிக்கப்படும். தற்பொழுது நெய்வேலி நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டம் இருக்கிறது. எஸ்.டி. பவர் சிஸ்டத்திலோ கட்டாய ஓய்வு திட்டம் அமுலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

நெய்வேலி அனல் மின் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டுமானால், தற்பொழுது தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டதை, தனியாரிடம் அனுமதி பெற்று தான் விரிவாக்கப்பட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், நெய்வேலி அனல் மின் திட்டங்கள் பிற்காலத்தில் நிர்வாகத்தில் அல்லது அமைப்பு ரீதியில் மாற்றம் ஏற்பட்டால், அதை மாற்றம் செய்யும்பொழுது எஸ்.டி. பவர் சிஸ்டத்திற்கு தான் முன்னுரிமை இருக்கிறது.

ஏற்கனவே, நெய்வேலி நிறுவனம் தற்பொழுது முதல் அனல் மின்சார நிலையத்திலிருந்து தமிழக மின்வாரியத்திற்கு வழங்கும் மின்சாரத்திற்கு 66.5 காசு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு மின் வாரியம் வாங்கும் மின்சாரத்திற்கு அதிகபடியான ரூ.1.22 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஜீரோ யூனிட் மூலம் தமிழக அரசு மின்சார வாரியம் மின்சாரத்திற்குரிய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.75 காசு செலுத்த வேண்டும். இது காலப்போக்கில் ரூ.4ஆக உயரும் அபாயம் இருக்கிறது. எதிர்காலத்தில் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டி வரும். தற்போதே விலைவாசிகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன. மேலும் மின் கட்டணம் உயர்ந்து சாதாரண மக்களை பாதிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு தேவையான கையகம் செய்யப்பட்ட 200 ஏக்கர் நிலம் சரத்தக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்காக கையகம் செய்யப்பட்ட நிலத்தை மற்றவர்களுக்கு மாற்றுவது பெரிய குற்ற செயலாகும். இவ்வாறு எவ்வித பயனும் இல்லாத நிலையில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் தனியாரிடம் ஜீரோ யூனிட்டை தாரை வார்ப்பது முறையற்ற செயலாகும். இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையிலுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நெய்வேலி நிறுவனத்திற்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

எவ்வித டெண்டரும் இல்லாமல், பொது மக்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் இந்த நிறுவனத்தை தன்னிச்சையாக சரத்தக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முற்றிலும் முரணானது. இவ்வாறு டெண்டர் மூலமாக ஒரு நிறுவனத்தை விற்பது என்பது அந்த நிறுவனம் நஷ்டத்தில் நடைபெற்று அதை காக்க முடியாத சூழ்நிலை இருந்தால்தான் வேறொரு நிறுவனத்திற்கு தர முடியும்.

நெய்வேலி நிறுவனம் சரத்தக்குடன் ஏற்பட்ட Mஞுட்ணிணூச்ணஞீதட் ணிஞூ க்ணஞீஞுணூண்tச்ணஞீடிணஞ் 11ஆவது பிரிவின்பஐ அமைக்க இருக்கும் ஜீரோ யூனிட்டிற்கு மின்சாரம், தண்ணீர், மற்ற தேவைகள் மிகுந்த சலுகை அளவில் தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதன் முதலாக தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நெய்வேலி யூனிட்டை புதிதாக தனியாருக்கு வழங்கவில்லை. ஏற்கனவே நெய்வேலி 8ஆவது திட்ட பூர்வாங்க பணிகள் நெய்வேலி நிலக்கரி நிறுவனமே துவக்கிவிட்டது. மத்திய அரசின் கீழுள்ள இந்த நிறுவனம் தனியார்க்கு யூனிட்டை விற்றதை, சிதம்பரம் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. வள்ளல் பெருமான் தன்னுடைய கண்டனத்தை எழுப்பியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. வாழப்பாடி இராமமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார். மத்தியில் உள்ள காங்கிரச கட்சி நிருவாகத்தின் கீழ் வரும் இந்த நிறுவனத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தும் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரசும் கண்டித்தும் யூனிட்டை தனியார்க்கு விற்றதில், பல தவறுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என தெரிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் எட்டாவது யூனிட்டை தனியாருக்கு விற்றதை மத்திய காங்கிரஸ் அரசையும், அதற்குத் துணையாக உள்ள மாநில அ.இ.அ.தி.மு.க. அரசையும் கண்டித்துள்ளார். சோசலிசம் தாரக மந்திரம் என்று பொய்யாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்களுக்கு சோசலிசத்தைப் பற்றி பேச சற்றும் அருகதை இல்லை என தெள்ள தெளிவாகக் கூறியுள்ளார் வைகோ. அதுமட்டுமன்றி பொதுச் செயலாளர் அவர்கள் தனியாரிடம் ஒப்படைத்ததால், ஊழல் நடந்துள்ளது என்றும் அதை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு காரண காரியங்களை ஆலோசிக்காமலும் நெய்வேலி நிறுவனம் தனிõயாருக்கு ஜீரோ யூனிட்டை அமைக்க அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியின் கொள்கையான கலப்புப் பொருளாதாரம், சோசலிசம் என்ற கொள்கைக்கு சவால் விடும் செயலாகும். எனவே, மத்திய காங்கிரஸ் அரசு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சோசலிசம் என்ற சொல்லை காலப்போக்கில் அகற்றி விடுமோ என்ற அச்சம் இப்படிப்பட்ட நடவடிக்கையினால் எழுந்துள்ளது. பண்டித நேரு தொழிற்சாலைகள் தான் இந்த நாட்டின் ஆலயங்கள் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதார கொள்கை, டங்கல் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதிலிருந்து பண்டித நேருவின் கருத்திலுள்ள மதிப்பின் ஆழத்தை மத்திய அரசு இழந்துவிடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவிலிருந்து அனுப்பிவிட்டு இந்தியாவிற்கு விடுதலை பெற்றோம் என்ற சரித்திய உண்மைக்கு மாறாக இன்றைக்கு மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசு மறுபடியும் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து கொட்டம் அடிக்க கதவை திறந்து விட்டுவிட்டது. இதனால், இந்தியாவின் இறையாண்மை பறிக்கப்பட்ட காலனி நாடாக மாற்றப்படுமோ என்ற சூழ்நிலை நெய்வேலி நிறுவனம் தனியாருக்கு வழங்கப்பட்டதன் மூலம் உருவாகிவிட்டதையே எடுத்துக்காட்டுகிறது.

– இலட்சியப் பாதை, 25.02.1994

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons