பனை உயர நாடு உயரும்!

தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை மாநகரம் எங்கும் வானளாவிய கட்டடங்கள், மாநகரைச் சுற்றிலும் அந்நிய நாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு மிக ஒய்யாரமாய் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரமோ இதற்கு மாறாக வேதனை தருவாக உள்ளது.

ஆம்! தமிழகத்தின் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள் அழிந்து வருகின்றன. நமது கிராமியத் தன்மையும், அதன் பொருளாதாரமும் மாறிவிட்டது. தனக்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் வேலை தந்த சின்னச் சின்ன நிறுவனங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. காலம் காலமாக யாரையும் நம்பி இராமல், தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட தொழிலாளிகள் இன்று தங்கள் வாழ்வைத் தேடி சென்னை, திருப்பூர் போன்ற பெரு நகரங்களை நாடி வருகின்றனர். ஆனால்; சென்னை நகரமோ, அவர்களின் வாழ்வுக்கு இடம் அளிக்க மறுக்கிறது. இப்படிப்பட்ட நபர்களின் வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்க வேண்டிய மத்திய – மாநில அரசுகளோ அவர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு, தமிழகத்தின் மிகத் தொன்மையான தொழிலான பனைத் தொழிலில் ஈடுபடும் பனைத் தொழிலாளர்கள். ஆம்; பனைத் தொழில் உலகின் மிகவும் தொன்மையான தொழில் ஆகும். இதன் தொன்மை எவ்வளவு காலம் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. உலகப் பொது மறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர், திருக்குறளை எழுதுவதற்கு பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஓலைச் சுவடிதான் பயன்பட்டது. மேலும் முற்காலத் தமிழ் இலக்கியங்கள் யாவும் காலத்தால் அறியாத பொக்கிஷங்கள். இன்று நம் முன் அழியா வடிவம் பெற்றிருப்பதற்குக் காரணம் அவை அனைத்தும் பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டது தான். அப்படிப்பட்ட இலக்கியங்களை எழுதுவதற்கு உதவி செய்த பனைத் தொழிலாளர்களின் இன்றைய சந்ததியினரது நிலைமை மிகவும் கொடுமையானதாக உள்ளது.

இன்றைக்குப் பலர் ஜாதகங்கள் ஓலைச் சுவடிகளில் உள்ளன. வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் யாவும் இந்த ஓலைச் சுவடிகளை வைத்துத்தான் நடைபெறுகின்றன. நாயக்கர் மக்கள் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் முருகன் விக்கிரகம் இங்கைக்குக் கடத்தப்பட்டபோது அன்றைய நெல்லைப் பகுதி திவான் வடமலையப்பப் பிள்ளை அவர்கள் முருகன் விக்கிரகத்தை மீட்க உதவிய நாடார் சமூகத்தினருக்குப் பனைத் தொழில் நடத்த பல உதவிகளை வழங்கினார். இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அப்பகுதி மீனவர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார்.

நாம் தமிழகத்தில் உள்ள பனையைப் பற்றி ஆராயும்போது, தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 10 இலட்சம் பனை மரங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இவை அனைத்தும் பரவலாகத் தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், நாங்குனேரி, கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார், சாயல்குடி பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளிலும் மற்றும் இராமநாதபுரம், ஈரோடு, தாரதாபுரம், கரூர் ஆகிய பகுதிகளிலும் அதிகமாக உள்ளது.

இவ்வளவு பனை மரங்கள் இருந்தாலும், பயன்பாட்டில் இருப்பவை வெறும் 80 இலட்சம் பனைமரங்கள்தான். 60 இலட்சம் பனை மரங்கள் யாரும் எளிதில் நுழைய முடியாத அடர்ந்த காடுகளுக்குள் உள்ளது. மீதமுற்ற பனை மரங்கள் எல்லாம் எவ்வித பயன்பாடும் இன்றி செங்கல் சூளைகளின் எரிப்பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க பனைத் தொலையே நம்பி பல இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் தான் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பனை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு விதத்தில் பயன்படுகின்றன. எந்தப் பொருளும் வீண் போவது இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ‘பனைமரம் ஒரு கற்பகத் தரு’ என்றால் மிகையாகாது. பனையில் இருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சீனி, பனை நார், பனை ஓலைப் பொருட்கள், பனந்தும்பு, சில்லுக் கருப்பட்டி, பிரஷ், பதநீர், கள், ஓலைச்சுவடி என பல பொருட்கள் கிடைக்கின்றன.

பனை மரத்தில் இருந்து நொங்கு, பனம்பழம் போன்றவை மக்களுக்கு உணவுப் பொருட்கள் ஆகும். அதன் பின்பு பனம் பாளையில் இருந்து சுவையான பதநீர் கிடைக்கும். குளிர்ச்சி மிகுந்த பதநீரிலிருந்து மருத்துவ குணம் கொண்ட கருப்பட்டியைக் காய்ச்சி எடுப்பார்கள். அதன் பின்பு அதில் சுண்ணாம்பு சேர்க்காமல், கள் இறக்காமல், பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டி மிகவும் சுவையானது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கப் பெறும் பதநீரைப் பெரிய டாங்கியிலும் வைத்து காய்ச்சி அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி முதலில் ஒரு பொருளாகவும், அதன் பின்பு பதனீரை நன்கு காய்ச்சும் பொழுது முற்றிய நிலையில் அதனுடன் இஞ்சி, ஏலம், எள் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப்படுவது தான் சில்லுக் கருப்பட்டி என அழைக்கப்படுகிறது. இதற்கு பிரசித்தி பெற்ற இடம் திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் அவற்றின் சுற்று வட்டாரங்கள் ஆகும்.

இவ்வாறு தொன்மையும், பல்வேறு பயன்பாட்டையும் கொண்ட பனைத் தொழில் இன்று அழிந்து வருகிறது. மழை இன்மை, குறைந்த வருமானம் கொண்டு பனை மரங்கள் வளரும். இன்று அரசின் கவனிப்பாரற்ற தன்மையே முக்கியக் காரணம் ஆகும்.

உடலுக்குக் கெடுதலான மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய உள்நாட்டு – வெளிநாட்டுத் தயாரிப்பு மது வகைகளை அரசே தனது டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்கிறது. இதுபோக ஆங்காங்கே கள்ளச் சாராயமும் ஆறாய் ஓடுகிறது. இவற்றிற்கு எந்தவித தங்கு தடையும் இல்லை. ஆனால்; உடலுக்கு ஓரளவு நன்மை பயப்பதாகவும், போதுமான மருத்துவ குணங்கள் இருப்பதுமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ள கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்; அருகில் உள்ள கேரளாவில் அரசின் அனுமதியுடன் கள் இறக்கப்படுகிறது. கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை பொருளாதார ரீதியிலாக இத்தொழிலுக்கு மிகப் பெரிய அடி ஆகும். இது போகட்டும். இந்னொரு கொடுமை நடக்கிறது. தனது வயிற்றுப் பாட்டுக்காக பதநீர் இறக்குபவர்களைக் காவல் துறையினர் பிடித்து கள் இறக்குவதாகப் பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுகின்றனர். இதனால் பதநீர் இறக்க பெரும்பாலானோர் பயப்படுகின்றனர். இதை எதிர்த்துப் போராடியும் மாநில அரசு எவ்வித சட்டப் பாதுகாப்பையும் இதுவரை வழங்கவில்லை.

பனை வெல்லத்திற்கும் உரிய விலை கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளி காலையில் 30 மரமும், மாலையில் 30 மரமும் ஏறி அதில் கிடைக்கும் 30 லிட்டர் பதனீரைக் காய்ச்சினால் கிடைக்கின்ற 7 கிலோ பனை வெல்லத்தை விற்றால் 180 ரூபாய்தான் கிடைக்கும். அதனால் பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டுவது இல்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படும் பனைப் பொருள் வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆரம்பத்தில் 139 பணியாளர்களுடன் செயல்பட்ட இந்த ஆணையம் தற்பொழுது போதிய பணியாளர்கள் இல்லாமலும், உரிய நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து கிடைக்கப் பெறாமலும் பெயரளவுக்கு மட்டுமே இயங்குகிறது. ஏனென்றால் நாடு முழுவதும் பனைத் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது, பயிள்சிக் கருவிகளை தொழிலாளர்களுக்கு அளிப்பது, பனைத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உரிய முறையில் சந்தைப்படுத்துவது, அவர்களுக்குத் தேவையான கடன் உதவி அளிப்பது என்ற எந்த ஆக்கப்பூர்வமான திட்டங்களும் பனை வாரியத்திடம் இல்லை. அரசின் ஒத்துழைப்பும் இல்லை.

‘பனை மரமாக உயர்ந்திருக்கிறாயே; ஒரு பிரயோஜனமும் இல்லை’ என்பது பழமொழி. அது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பழமொழி அல்ல. பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, குடிசைகள் அமைக்க பனை ஓலை, வீடுகள் கட்ட பனை மரம் என அனைத்துப் பகுதியும் பல பயன்பாடுகளாகக் கொண்ட பனையை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமற்றது.

ஒப்புக்கு அமைந்துள்ள பனை வாரியமும் சொல்லக்கூடிய அளலில் செயல்பாடுகள் இல்லை. பல கல்வி நிலையங்கள்கூட கலைமகளுக்கு ஒப்பான பனை மரத்தின் அமைப்பை அடையாளச் சின்னமாக (இலச்சினை) வைத்துள்ளனர். பனையில் குறை ஒன்றும் இல்லை. இத்தொழில் சிறக்க நமது கவனம் தேவை.

– நெல்லை, தினமலர், செய்திமலர், 13.07.2008

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons