யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்?

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவற்றின் விலை அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஏற்ற வேண்டியுள்ளது’ என்று கீறல் விழுந்த ஒலித்தட்டைப் போல் திரும்பத் திரும்பப் பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

விலை உயர்வை நியாயப்படுத்தி நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரையில் சர்வதேச மதிப்பில் கணக்கிட்டால் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71க்கு விற்க வேண்டியிருக்கும். ஆனால் மக்கள் மேல் உள்ள அக்கறையின் காரணமாக ஐந்து ரூபாய் மட்டும் ஏற்றியிருக்கிறோம் என்று சற்றும் கவலையில்லாமல் பேசியிருப்பது பித்தலாட்டப் பேச்சாகும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71 என்றால் ஒரு பீப்பாயின் விலை 256 டாலராகிறது. ஆனால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையே (இன்றைய விலையில்) 135 டாலர்தான். அப்படியானால் ஏறத்தாழ 121 டாலர் சுத்திகரிப்புச் செலவு என்றாகிறது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க இத்தனை செலவு ஆகாது என்பதுதான் உண்மை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளின் சரக்குக் கட்டணம் உயரும். இதனால் அந்த லாரிகளில் பயணப்பட்டு நாட்டின் மற்ற பகுதிகளை அடையும் காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட எல்லாவற்றின் விலைகளும் தானாகவே உயர்ந்து விடுவதை யாரால் தடுக்க இயலும்? இந்தியால் 18 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இதில் 17 ஆலைகள் தனியார் ஆலையாகவும் உள்ளது. இந்தியா தன்னுடைய தேவைகளுக்கு 72 சதவிகித கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்தியாவிற்குள் உற்பத்தி ஆகும் கச்சா எண்ணெயின் அளவு சுமார் 28 சதவிகிதம்தான். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ONGC மற்றும் Oil India Limited ஆகிய இரண்டு அரசுத் துறை நிறுவனங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்பதைவிட இந்த உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

காங்கிரஸ் எம்.பி. என்.ஜனார்த்தன ரெட்டி தலைமையில் அமைந்த 2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கடல்வழிப் போக்குவரத்து, சர்வதேசக் காப்பீடு, சர்வதேசத் துறைமுகங்களின் விலை மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு செய்யும் விலை ஆகியவற்றைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி விலையின் அடிப்படையில் இந்தக் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை அரசு ஏற்காமல், நீண்டகால விலை நிர்ணயக் கொள்கையை வகுக்கப் போவதாகக் கூறி சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து, பிரச்சினையைத் தீர்க்காமல் காலம் தள்ளிவிட்டது. மத்திய அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டில் 2007-08ஈம் ஆண்டில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் சுங்கவரி மட்டும் ரூ.87,992 கோடி சலுகையாக முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கார்ப்பரேட் வரியில் ரூ.58,655 கோடி முந்தைய ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இவ்வாறாகப் பெரும் தொகை பெரும் முதலாளிகளுக்கு ஏன் சலுகையாக வழங்க வேண்டும்? அந்தச் சலுகைகளை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் மத்திய அரசு தடுக்கக் கூடாது?

கடந்த 60 ஆண்டுகளில் 54 மடங்கு விலை உயர்ந்த ஒரு பொருள் கச்சா எண்ணெய். 1948ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.5 டாலர் மட்டும்தான். 1960ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒன்றிணைந்து ‘ஒபெக்’ என்ற அமைப்பை ஏற்படுத்தின. தொடக்கத்தில் ஈரான், குவைத், சவூதி, வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் பங்கு பெற்றிருந்தன. 1971ஆம் ஆண்டு மேலும் 5 நாடுகள் அந்த அமைப்பில் இணைந்து கொண்டன. 1973இல் ஈக்வடார் இணைந்தது. அந்தக் காலகட்டத்தில் 13 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருந்தன. 1973ஆம் ஆண்டு வரையிலும் கச்சா எண்ணெய் விலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. புதிய எண்ணெய் வயல்கள் அந்த நாட்டில் கண்டறியப்பட்டன. அப்பொழுதெல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. 1973க்குப் பிறகு புதிய எண்ணெய் வயல்கள் கண்டறிய முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதன் பிறகு கச்சாப் எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒபெக் அமைப்பு பெற்றது. 1972இல் 3 டாலராக இருந்த பேரல் எண்ணெய் 1974இல் நான்கு மடங்கு உயர்ந்து 12 டாலரானது. 1979, 80ஆம் ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஈரான், இராக் போர் ஆகியவை காரணமாக உற்பத்தி குறைந்தாலும், பல எண்ணெய் வயல்கள் தீப்பிடித்து எரிந்ததாலும் 14 டாலராக இருந்த ஒரு பேரல் எண்ணெய் 35 டாலரானது. அதன்பிறகு அவ்வப்போது விலை ஏற்ற இறக்கம் இருந்தாலும் 2005ஆம் ஆண்டில் 60 டாலராக உயர்ந்து அதற்கடுத்த ஆண்டில் 75 டாலரானது. அதன் பின்னர் படிப்படியாக உயரத் தொடஙகிய கச்சா எண்ணெய் விலை 2007ஆம் ஆண்டு அக்டோபரில் 92 டாலராகவும், அதே ஆண்டின் டிசம்பரில் 99 டாலராகவும் உச்சத்தை எட்டியது. 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 110 டாலராக இன்னும் உச்சத்தை எட்டியது. நியூயார்க் சந்தையில் மே மாதம் 9இல் 126 டாலராக விலை உயர்ந்தது போதாதென்று, மே மாதம் 22இல் மீண்டும் விலை உயர்வு 135.09 டாலரைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விலை ஏற்றத்திற்குக் காரணம் எண்ணெய் வயல்கள் குறைந்து வருவது, வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பங்கள், அமெரிக்காவின் அணுகுமுறை, இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உருவாகி இருக்கும் எரிபொருள் தேவை மற்றும் ஊக வணிகத்தால் விலை உயர்வு ஆகியவை ஆகும். ஒபெக் ஆய்வு அமைப்பான ஓ.டபிள்யு.இ.எம். அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டில் உலகின் ஒரு நாள் எண்ணெய் தேவை 7.6 கோடி பேரல்கள். இந்த அளவானது 2010ஆம் ஆண்டில் 9.06 கோடி பேரல்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பான ஒபெக் 1970 மற்றும் 80களில்தான் விலையைத் தீர்மானிக்கும் நிலைமையில் இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலையை உற்பத்தி நிறுவனங்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன. இப்பொழுது நியூயார்க் வர்த்தக சந்தை (நிமெக்ஸ்) லண்டனில் உள்ள சர்வதேச பெட்ரோலியச் சந்தை (ஐபிஇ), சிங்கப்பூர் சர்வதேச மானிடர் சந்தை (சிமெக்ஸ்) ஆகிய மூன்று சந்தைகள்தான் கச்சா எண்ணெய் விலையைப் பெரிதும் தீர்மானம் செய்கின்றன.

மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள புதிய இந்தக் கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் மூலம் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என்கிறார்கள் நிதி அமைச்சர் சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங்கும். பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்தாலே அவற்றின் விலை கணிசமாகக் குறைந்துவிடும். பெரும் முதலாளிகளுக்கும், அந்நிய மூலதனத்திற்கும் மாபெரும் வரிச் சலுகைகளை வாரி வழங்காமல் இருந்தாலே கச்சா எண்ணெய் மீதான இந்த விலையேற்றங்களிக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவைகளின் விலையைக் குறைக்கச் செய்ய வேண்டியவை:

இந்தியத் தகவல் தொடர்புத் துறையில் பெரும் லாபம் ஈட்டும் ரிலையன்ஸ் நிறுவனம், பெட்ரோலியத் துறையிலும் புகுந்துள்ளது. இந்நிறுவனம் 2005-06ஆம் ஆண்டில் ரூ.5,915 கோடி மூலதனத்துடன் நுழைந்து அதற்கடுத்த இரண்டு ஆண்டுக்குள் அந்த மூலதனம் ரூ.10,372 கோடியாக உயர்ந்துவிட்டது. இவ்வளவு லாபம் ஈட்டும் ரிலையன்ஸ் கம்பெனி மீது அரசாங்கம் 20 சதவீதம் சிறப்பு வரிகள் விதித்து இருந்தால் அரசாங்கத்துக்கு ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும். இதன் மூலம் பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தனியார்மயத்தை ஆதரிக்கும் அமெரிக்காவே இத்தகைய சிறப்பு வரிகளை நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கிறது.

ரிலையன்ஸ், எஸ்ஸார், கெயின்ஸ் போன்ற நிறுவனங்கள் எண்ணெய் வயல்களை ஏலத்தில் பெற்றபோது உலக மார்கெட்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 25 முதல் 30 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது சர்சதேச விலை 100 டாலரைத் தாண்டிவிட்டது. இந்த நிறுவனங்கள் தற்போதைய சர்வதேச விலைக்கே பெட்ரோலியப் பொருள்களை விற்பனை செய்கின்றன. கொள்ளை லாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் கண்காணிப்பு செலுத்த வேண்டும்.

கோதாவரி – கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயுவை எடுக்கும் உரிமத்தை ரிலையன்ஸ் வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 2007இல் ஒரு யூனிட் எரிவாயுவுக்கு 420 டாலர் என்று அரசு விலை நிர்ணயம் செய்ய ரிலையன்ஸ் நிர்ப்பந்தித்தது. அப்போது சர்வதேசச் சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர். கச்சா எண்ணெய் விலை ஏறியதால் எரிவாயுவின் விலையை ரிலையன்ஸ் உயர்த்தியுள்ளது. இங்கேயே உற்பத்தியாகும் எரிவாயுவுக்கு சர்வதேச மதிப்பில் விலை நிர்ணயிப்பார்களாம். இதுதான் இறககுமதி சமன்பாடு எனப்படுகிறது.

இந்தியாவின் பெட்ரோலியத் தேவையில் 20 முதல் 30 சதம் நம் நாட்டின் இயற்கை வளங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன. எரிவாயு விலை நிர்ணயம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்தால் உயர்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், சாமானிய சாதாரண ஏழை – எளிய – எளியவர்கள் வரை அனைத்துப் பிரிவினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிந்தும் மத்திய அரசு இந்த விஷயத்தில் சாதுர்யமற்று நடந்து கொண்டிருப்பது ஏன்? மக்களின் பொறுமையை அளவுக்கு அதிகமாக சோதிக்கும் எந்தவோர் அரசும் நிலைத்ததில்லை என்பதைப் பிரதமரும், நிதியமைச்சரும் உணர்ந்ததாக தெரியவில்லையே, ஏன்?

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

– தினமணி, 27.06.2008

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons