முக்கியப் பிரச்சினைகளைக் கைநழுவவிட்ட ஐக்கிய முன்னணி அரசின் பொதுத்திட்டம்

மத்தியில் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்து தன்னுடைய குறைந்தபட்ச செயல் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரம், பண்பாடு இருக்கின்ற இந்தியாவில் சமஷ்டி அமைப்புக்கு ஏற்றவாறு மத்தியில் அமைச்சரவை இயங்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. ஆகவே, மாநில கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அரசு மத்தியில் அமைவதை யாரும் தடுக்க முடியாது என்பது அரசியல் வல்லுநர்களின் நீண்டகால கணிப்பாக இருந்தது. அதற்கேற்ற வடிவமாக தேவகவுடாவின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். பிரதமராக இருக்கின்ற தேவகவுடா அவர்களுக்கு பிரச்சினைகளும், பொறுப்புகளும் அதிகமாக இருக்கின்றது. தன்னுடைய கூட்டு செயல்பாட்டு திட்டத்தில் சமஷ்டி அமைப்பைக் காப்பது, சமூகநீதியைக் காப்பது, மதச்சார்பின்மை கொள்கை, கிராமங்களின் முன்னேற்றம், பொது வாழ்வில் தூய்மை, தொலைக்காட்சி, வானொலிக்கு தனியாட்சி சட்டம், காஷ்மீர் மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவத என ஐக்கிய முன்னனி அரசின் குறைந்தபட்ச திட்டம் கூறப்பட்டுள்ளது.

க்மிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் நீண்ட காலமாக காவிரி நதி நீர்ப் பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நதி நீர் பிரச்சினையைத் தீப்பதுப் பற்றி எதுவும் இந்த திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மத்தியில் இருக்கும் தேவகவுடா அரசில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய தமிழக கட்சிகள் காவிரிப் பிரச்சினைப் பற்றி உறுதிமொழிகள் எதுவும் கவுடாவிடமிருந்து பெறத் தவறிவிட்டது எனத் தெரிகிறது. மறுபடியும் பேச்சுவார்த்தை என்று கூறி காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் அபாயம் இருந்து வருகிறது. காவிரி பிரச்சினையில் தேவகவுடா பிரதமர் என்ற அடிப்படையில் நடுநிலையாளராக இருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் தன்னுடைய கருநாடக மாநிலத்திற்காக காவிரி பிரச்சினையில் கடுமையான முடிவுகள் எடுத்தவர் இன்றைய பிரதமர். தமிழகத்தின் உரிமைனையைக் காக்க எவ்வாறு செயல்படுவார் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்று கூறியிருப்பது காவிரியில் தண்ணீர் வரத்து இல்லை என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் மறுபடியும் பேச்சுவார்த்தை மூலமாக காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி பேசியுள்ளார். தமிழக எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் காவிரி பிரச்சினை முற்றிலும் திசை திருப்பக் கூடிய வகையில் கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். பேச்சு வார்த்தை என பல ஆண்டுகளாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இறுதியில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இந்த முயற்சியில் இறங்கிய பின்பு மறுபடியும் பேச்சுவார்த்தை என்பது கேலிக் கூத்தாகும். தேசிய நதி நீர் கொள்கை வகுத்து கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது என கொள்கை திட்டத்தில் கூறியிருப்பது நதி நீர்ப் பிரச்சினை சம்பந்தமாக தெளிõவான சட்டம் நடைமுறையில் இருக்கின்றபொழுது, இன்னொரு வகையான தீர்வு தேவைதானா என்பது சிந்திக்க வேண்டும்.

மேலும், அய்.நா. மன்றத்தின் பாதுகாப்பு அவையில் நிரந்தர அங்கம் வகிக்க நீண்டகாலமாக இந்தியா கோரி வருகிறது. அதைப் பற்றியும் எந்த கருத்தும் இத்திட்டத்தில் இல்லை.

எல்லோருக்கும் கல்வி (கீடிஞ்டt tணி உஞீதஞிச்tடிணிண), எல்லோருக்கும் வீடு (கீடிஞ்டt tணி ஏணிதண்ஞுடிணஞ்), எல்லோருக்கும் வேலை வாய்ப்பு உரிமை (கீடிஞ்டt tணி தீணிணூடு) போன்றவை இன்றைக்கு அடிப்படை பிரச்சினையாகும். ஜனதா தளமும், தேசிய முன்னணியும் இந்தப் பிரச்சினையில் கடந்த காலங்களில் தீவிரமாக இருந்தது. ஆனால், தற்போதைய செயல் திட்டத்தில் இந்த பிரச்சினைகளில் ஆர்வம் அதிகம் இல்லை என காட்டுகிறது. மறுமலர்ச்சி தி.மு.க. தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இதை வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிப் பிரச்சினையில் அனைத்து மொழிகளும் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. தி.மு.கழகம் இதைப்பற்றி ஆர்வத்தை ஏன் வெளிப்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. தங்களுடைய திருச்சி மாநாட்டில் முக்கிய தீர்மானமாக இருந்த ஒன்றை பொதுத் திட்டத்தில் ஏன் வலியுறுத்த விரும்பவில்லை என்று தெரியவில்லை.

பாபர் மசூதி பிரச்சினையில் மறுபடியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தினை கோரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் கருத்துக் கூற இயலாது என தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில் மறுபடியும் பிரச்சினையை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு போவது விரைவில் தீர்வு ஏற்படாமல் இருக்கக்கூடிய நிலையையே உண்டாக்கிவிடும்.

பஞ்சாயத்து ராஜ் என்ற மூன்று அடுக்கு முறையில் நேரிடையாக மத்திய அரசாங்கம் கிராம பஞ்சாயத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்வதை தி.மு.க. நீண்டகாலமாக எதிர்த்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் மாநில உரிமைகளை காக்கக் கூடிய அளவில் இந்த செயல் திட்டத்தில் சேர்க்க தி.மு.க. எந்த ஆர்வமும் காட்டவில்லை.

ஆளுநர் பதவி மறுபரிசீலனை செய்வோம் என்று ஜனதாதளம் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபோதிலும், அதைப்பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. விலைவாசி குறைப்பு பற்றியும் தெளிவாக இந்த அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் பங்கு மார்கெட் ஊழல், ஹவாலா ஊழல், சர்க்கரை பேர ஊழல் போன்ற சங்கிலித் தொடர் ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுபற்றி இதயசுத்தியோடு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து யூரியா வாங்கப்பட்ட பிரச்சினையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் குடும்பத்தினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது. இப்பிரச்சினையில் தேவகவுடா திடமாக முடிவுகளை மேற்கொள்வாரா என்பதும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. தமிழகத்தை நாசப்படுத்திய ஊழல் ராணி ஜெயலலிதா சொத்துக்கள் பறிமுதல் பற்றியும் மத்திய அரசு என்ன முடிவுகள் எடுக்க இருக்கிறது என்பது முக்கியப் பிரச்சினையாகும்.

காங்கிரஸ் தயவில் அமைச்சரவை நடத்திக் கொண்டு வருகிறோம் என்ற அச்சத்தில் புதிய பொருளாதாரம், உத்தேசத் திட்டங்கள், காப்பு உரிமைச் சட்டம் போன்றவற்றைப் பற்றி எவ்வித கருத்தும் குறிப்பிடப்படவில்லை. சென்ற மாதம் வரை காங்கிரசை வன்மையாக எதிர்த்து வந்த இந்த அரசியல் கட்சிகள் ஏன் வாய் மூடி மௌனியாகி விட்டது என்று தெரியவில்லை. இந்தியாவின் இறையாண்மை கெடக்கூடிய அளவில் காங்கிரசின் புதிய பொருளாதார கொள்கையை மறுபரிசீலனை செய்வோம் என்று சொல்லக்கூடிய தைரியம் ஐக்கிய முன்னணி அரசுக்கு இல்லை. மொத்தத்தில் பல்வேறு நல்ல திட்டங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், காங்கிரசின் கொள்கைகளை எதிர்க்கத் தவறிவிட்ட நிலையில்தான் தேவகவுடா அரசு இருக்க வேண்டியிருக்கும்.

– சங்கொலி, 21.06.1996

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons