தலைவர் கலைஞர் அவர்கள் நள்ளிரவு கைது.. தமிழக அரசியலில் வரலாற்றுப் பிழை – டெசோ – தொடர் 16

தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பு (TESO) 07.05.1985ல் துவக்கப்பட வேண்டும் என்று கலைஞர், நெடுமாறன், வீரமணி, முரசொலி மாறன் ஆகியோர் கோபாலபுரத்தில் அமர்ந்து பேசும்பொழுது உடனிருந்தேன். முறையான அறிவிப்பு டெசோ தொடங்கப்பட்டது என்று 13.05.1985 திங்கட்கிழமை செய்தித்தாள்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவாலயம் கட்டப்படவில்லை. அன்பகத்தில் திமுக தலைமை நிலையம் இருந்தது. மாதத்திற்கு இரண்டு முறை டெசோ கூடி தீர்மானங்களும் போராட்டக் களங்களையும் வெளியிட்டது. இதனிடையில் 1985 ஜூன் 30ம் தேதி தமிழ்ப் புத்தகாலயம் நண்பர் அகிலன் கண்ணன் வெள்யிட்ட நெடுமாறனின் “மத்திய மாநில உறவுகள் – சில குறிப்புகள்” பெரியார் திடலில் கலைஞர் வெளியிட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த கிருஷ்ணசாமி பாரதி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். கி. வீரமணி போன்றோர் கலந்துக் கொள்ள நானும் உறையாற்றினேன். அதில் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராளிகள் கலந்துக் கொண்டனர். அதற்குப் பின் நான்கைந்து நாட்கள் கழித்து அதாவது 1985 ஜூலை 04ம் தேதி திம்பு பேச்சுவார்த்தைக்கு அமிர்தலிங்கம் மற்றும் அவருடைய (TULF) சகாக்களும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிக் குழுக்களும் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திம்பு பேச்சுவார்த்தை தமிழர்களுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பேசினார். இதற்கிடையே ஆகஸ்ட் 23, 1985 அன்று பிற்பகல் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திராவை சென்னையிலிருந்து நாடு கடத்தினார்கள். அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 25, 1985 டெசோ சார்பில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்ட மாபெரும் பேரணி சென்னை மயிலாப்பூர் வள்ளுவர் சிலை அருகே துவங்கி இன்றைய அறிவாலயம் அமைந்துள்ள தேனாம்பேட்டை வரை நடந்தது. இறுதியில் டெசோ தலைவர் கலைஞர் உறுப்பினர்கள் நெடுமாறன், வீரமணி, அய்யனம்பலம் நாடு கடத்தப்பட்ட பாலசிங்கம், சந்திரஹாசன், சத்தியேந்திரா என மூவரையும் இந்தியாவிற்கு திரும்ப அழைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் பின் டெசோ பேரணிகள் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி (03.10.1985), திருச்சி, சேலம் நகரங்களில் நடைபெற்றது. கடைசி டெசோ பேரணியில் நெடுமாறன் கலந்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அவர் அப்போது ரகசியமாக படகு மூலம் இரண்டு வார சுற்றுப் பயணமாக இலங்கை சென்றிருந்தார்.

டெசோ உச்ச மாநாடு மதுரையில் 04.05.1986 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் அழைப்பிதழில் அகில இந்திய தலைவர்களின் பெயர்களோடு 22.04.1986 ல் தயாராகி முரசொலி மாறனோடு எடுத்துக் கொண்டு டெல்லி சென்று கே.பி. உன்னிகிருஷ்ணனனை சந்தித்ததும், மாநாட்டை குறித்து அங்குள்ள தலைவர்களிடன் விளக்கிக் கூறினேன்.

டெசோ மாநாடு பணிகள், தீர்மானங்களை இறுதி செய்தல் 03.05.1986ல் கலைஞர், நெடுமாறன், வீரமணி, முரசொலி மாறன் உடனிருக்க வரைவுத் தீர்மானம் குறித்தான விடயங்கள் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டுக்கு வரும் வட இந்திய தலைவர்கள் தங்குவதற்கான அறைகள் அவர்களுக்கான மற்ற வசதிகளையெல்லாம் நெடுமாறன் மேற்கொண்டார். திமுக சார்பில் அன்றைய மாவட்ட செயலாளர் பொன். முத்துராமலிங்கம் மாநாட்டு பணிகளை கவனித்தது எல்லாம் நினைவில் உள்ளது.

வாஜ்பாய் போன்ற தலைவர்கள் சென்னை விமான நிலையம் வந்து மதுரைக்கு வர வேண்டிய விமானம் தாமதமாகியதால் சற்று பதற்றம் ஏற்பட்டு முரசொலி மாறன் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி மதுரைக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக வந்து சேர்ந்தது. எனவே காலை மாநாடு துவங்க காலதாமதம் ஆனது.

04.05.1986 அன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், எச்.என். பகுகுணா, ஃபரூக் அப்துல்லா,  ராமுவாலியா, கே.பி.உன்னிகிருஷ்ணன், ராசைய்யா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்ற பல அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் என்னைப் போன்றோர்கள் எல்லாம் அப்போது முன்னின்று மாநாட்டின் ஏற்பாடு மற்றும் முக்கியப் பணிகளை செய்தோம்.

மாநாட்டின் தீர்மானங்களை அண்ணன் முரசொலி மாறன் வடித்தார். அவருக்கு துணையாக நானும், தி.சு.கிள்ளிவளவனும் உதவியாக இருந்தோம். இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள ஆங்கிலத் தீர்மானத்தில் முதல் வரியில் expresses என்பதை அடித்து pledges என்று திருத்தம் செய்து மாறன் பேனாவால் எழுதினார். இந்த தீர்மானத்தின் பக்கங்களை கலைஞர் கையில் 45 நிமிடங்கள் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இதன் பக்கங்களின் பக்கவாட்டில் கருப்பு மையால் கோடிட்டது தலைவர் கலைஞர் அவர்கள். இந்த ஆவணம் நீண்டநாட்களாக அடியேனின் கைவசம் இருப்பதை பெருமையாக கருதியதும் உண்டு. அந்த தீர்மானத்தின் வாசகங்கள் அப்படியே கீழே உள்ளன.

தாமதமாக கூடிய தலைவர் கலந்துக் கொண்ட அரங்க மாநாடு காலை 10.30க்கு துவங்கி நன்பகல் 2 மணி வரை நடந்தது. மாநாட்டில் பல நிகழ்வுகள் ஒவ்வொரு தலைவருடைய ஈழத்தமிழரின் பிரச்சினைகள் குறித்தான அக்கறையான பேச்சுகள் தீர்மானங்கள் என மறுநாள் பத்திரிக்கையில் செய்திகளாக வந்தன.

இந்நிகழ்வில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழைக்க நெடுமாறன் கேட்டுக் கொண்டதால் நேரில் சென்று அழைத்தேன். அப்போது ‘அண்ணே பயிற்சி பணிகள்  ஏற்கனவே திட்டமிட்டுவிட்டோம். அதனால் வர இயலவில்லை’என்றார். எனவே பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம், திலகர் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு (Conclave) துவங்கும் போது, திடீரென என்.டி.ராமாராவ் கலைஞரிடம் எல்.டி.டி.ஈ மற்றும் இலங்கை தமிழர் இயக்கங்களின் பெயர்களின் விரிவாக்கத்தை ஆங்கிலத்தில் கேட்டார். அருகில் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த பழ.நெடுமாறன்,  என்னிடம் ‘ராதா இந்த அரங்கத்தில் இதை பற்றியான புரிதலுள்ள ஆட்கள் யாருமில்லை, நீங்களே எழுதிக் கொடுங்கள்’ என்று என்னிடம் கூறினார்.  நான் அனைத்திற்கும் விரிவாக்கம் எழுதி கொடுத்தேன்.  இந்த நிகழ்வில் பேராசிரியர், கி. வீரமணி, முரசொலி மாறன், வைகோ, அய்யன அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.   கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்  சி.டி. தண்டபாணி மற்றும் திமுக மாவட்ட செயலாளர் பொன் முத்துராமலிங்கம் மாநாட்டு அரங்கில் இருந்தனர்.

இந்த மாநாட்டில் பல அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள் குறிப்பாக எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பின் தலைவர் பிரபாகரன் சார்பில் பேபி சுப்பிரமணியம் ,திலகர், கலந்து கொண்டனர். டி.யு.எல்.எப் (TULF) சார்பில் ஏ. அமிர்தலிங்கம் மற்றும் எம். சிவசிதம்பரம், ஈ.பி.ஆர்.எல்.எப் (EPRLF) சார்பில் எஸ். வரதராஜபெருமாள், ப்ரோடெக் (ProTEC) சார்பில் எஸ்.சி.சந்திரஹாசன்,ஏ.தங்கதுரை, ஆகியோர் பங்கேற்றனர். ஈரோஸ் (EROS) சார்பில் ஈ. ரத்தினசபாபதி, கோவை மகேசன், ஆகியோர் டி.ஈ.எல்.எப் (TELF) எம்.கே.ஈழவேந்தன் சார்பில் பங்கேற்றனர். டெலோ (TELO) சார்பாக மதி, தமிழ்நாடு தகவல் மையம், மதுரையின் சார்பில் மகேஸ்வரி வேலாயுதம், தமிழ்நாடு தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (TIRU) எஸ். விநாயகம், ஈ.பி.ஆர்.எல்.எப். (EPRLF) சார்பில் ரூபன், பிளாட் (PLOTE) அமைப்பின் சார்பில் முகுந்தன் மற்றும் ENDLF போன்ற பல்வேறு ஈழ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். மாநாடு தொடங்கியதற்கு பின்னர் புகைப்படக் கலைஞர்களை அனுமதிக்கவில்லை. அதனால் தாமதமாக வந்த பிளாட் பிரதிநிதிகளை படமெடுக்கவில்லை.

காலை Conclave என்ற தலைவர்கள் மாநாடு முடிந்து மதுரை பந்தயத் திடலில் (Race Course) லட்சக்கணக்கான மக்கள் திரண்ட டெசோ மாநாட்டில் தலைவர் கலைஞர் தலைமையில் வருகை தந்த அனைத்து வட இந்திய தலைவர்கள் அனைவரும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தங்கள் ஆதரவு உண்டு என முழக்கமிட்டனர். மறுநாள் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களின் ஷரியத் சட்டத்தில் ஷா பானு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறித்தான மசோதா வாக்கெடுப்புக்கு வந்தது. எனவே அகில இந்திய தலைவர்கள் மறுநாள் உடனடியாக டெல்லி புறப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். டெசோ மாநாடு முடிந்தவுடன் 05.05.1986 காலையில் கலைஞரை சந்தித்த போது பட்டுத் துண்டை என் மீது அணிவித்து “நன்றாக டெசோ பணியை செய்தாய்” என்று வாழ்த்தியதை மறக்க முடியாது.  

RESOLUTION

——————

Place: Madurai Dated: 04-05-1986.

This Conference pledges its staunch solidarity with the Tamils of Sri Lanka and expresses its deep national concern over the continuing intensification of the crisis in the island.

The people of India are shocked that the Sri Lankan Government has been carrying on a massive offensive against the Tamil people by strafing from helicopter gun-ships, bombing from light air crafts, shelling from the sea, and firing from artillery.

We wish to draw the attention of the people all over the world that every human-right is being violated with impunity by the Sri Lankan Government. Tamil young men and many young girls, between the ages of 14 and 35 have been arrested for no reason, detained for long periods without trial in Army camps and tortured in barbarous and inhuman ways. Many mass murders of such detainees have come to light.

The entire economic life of the Tamils is in ruins. By declaring the Tamil areas as Prohibited Zones and Surveillance Zones the Tamils as a people are under siege.

The Sri Lankan Government’s systematic genocide of the Tamils stands exposed before civilized international community despite its empty denials and disinformation.

Therefore, we call upon the Government of India to raise the issue with vigor in all international forums like the U.N. NAM and CHOGM and to seek prompt remedial action.

This Conference feels that the policy so far pursued by the Government of India towards Sri Lanka and the Tamil question has failed in producing any tangible results, because it is superficial, vacillating and incoherent. The mere fact that more people have been killed in Sri Lanka after India started to express its concern bears testimony to this. Moreover, in spite of Annexure C of 1983, Thimpu talks of 1985 and the so-called “Cease-fire”, the solution still seems to be and elusive as in the beginning while Sri Lanka is acquiring arms from all over the world, and moving towards a total military solution. The policy of placing trust on the Sri Lankan Government to achieve a negotiated settlement has thus proved to be sterile. Making use of the time gained in-between the pretense of talks and negotiations the Sri Lankan Government has brought into the picture dangerous external elements unfriendly to India, thereby adding a new dimension to the geopolitics of this region.

This Conference therefore considers the Sri Lankan problem is not a mere internal problem affecting Sri Lankan Tamils. It has escalated and assumed an international dimension, threatening the rights of Tamils in Sri Lanka as well as the peace of the region including India.

Every year, on the eve of the meeting of the international aid consortium, it has become customary for Sri Lanka to pass through motions of negotiations. This year also India by unwisely sending a delegation to Colombo for talks at a time when AID Sri Lanka Consortium is about to meet has created an illusion of normalcy.

This Conference therefore calls all aid-giving Governments and International agencies not to give aid to Sri Lanka which could be used to perpetrate the genocide of Tamils which is a crime against humanity.

We, therefore urge upon the Government of India that they should give up their present casual attitude to the issue, and take up this matter not as a mediator but as a nation intimately and deeply connected with the fate of Tamils of Sri Lanka, and demand that it should effectively restructure its policy and all its viable options for settling this question, so that the Tamils can live with equality, dignity and security.

_________________________________________________

இந்த இடத்தில் டெசோ மாநாட்டிற்கு வாஜ்பாய் வந்தது பற்றி குறிப்பிட வேண்டும்.

1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திரு வாஜ்பாயும் கலந்துகொண்டார். அப்போது அவரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என் பகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பும் போது, வாஜ்பாய் “இட்லி தோசா சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும்அழைத்துச் சென்றேன்.

காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், “அமைதியாக எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பாய் அவர்கள். மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பிய போது வாஜ்பாயிடமும் பகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், வை.கோ, தமிழக மற்றும் ஈழத்தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்ற என்னுடைய திருமணவிழா அழைப்பிதழைக் கொடுத்தேன். உடனே இருவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

ஆனாலும் வாஜ்பாய் அவர்கள் டெல்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார்.

_________________________________________________

ஈழத்து தந்தை செல்வாவின் மருமகளும், திரு சந்திரஹாசன் அவர்களுடைய துணைவியார் நிர்மலா அவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய தகப்பனார் மறைந்த திரு. நாகநாதன் ஈழத் தமிழ் தலைவர்களில் ஒருவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

சட்டம் படித்து, சட்டத்துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறுவது எளிதான காரியம் அல்ல. நிர்மலா அவர்கள் சட்டம் படித்து, சட்டத்திலே முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது சகோதரியும் வெளிநாட்டு தூதராகப் பணியிலிருந்து, சிங்கள அரசைக் கண்டித்து தான் வகித்த பதவியிலிருந்து விலகியவர்.

நிர்மலா அவர்களைச் சந்தித்தபோது, சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய நினைவுகள் மனத்தில் ஊசலாடின. அன்றைக்கு எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த #பாலசிங்கம், மற்றும் #சந்திரஹாசன், டெலோ இயக்கத்தைச் சார்ந்த #சத்தியேந்திரா ஆகியோர்களை நாடு கடத்தியது.

அப்போது உடனே நிர்மலா சந்திரஹாசன் தொலைப்பேசியில் என்னை அழைத்து, சட்டரீதியாக என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தார். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பாலசிங்கத்தையும், சந்திரஹாசனையும், சத்தியேந்திராவையும் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவரவேண்டும் என்று மாலையே முடிவெடுத்தோம்.

அன்றையதினம் வெள்ளிக்கிழமை. மறுநாள் நீதிமன்றம் விடுமுறை. முறைப்படி உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் மறுநாள் சனிக்கிழமை முறையிட்டு, வழக்கை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டுவர முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையில் நிர்மலா சந்திரஹாசன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தந்தி மூலமாக நாடுகடத்தப்பட்ட மூவரையும் திரும்ப அழைக்கவேண்டுமென்று அவசரமாக முறையிட்டார்.

திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இம்மூவரையும் நாடு கடத்தியது தவறு என்று உத்தரவைப் பெற்றோம். உடனே அவர்களனைவரும் தமிழகம் திரும்பவேண்டுமென்று அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையிலிருந்த அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்ற ஆணைகள் சென்றது. பின், இந்த மூவரும் சென்னை திரும்பினர்.

இன்றைக்கு இருக்கின்ற நவீன வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத அந்த நேரத்தில், நீதிமன்ற விடுமுறை நாளில் குருசாமி நாயக்கர் தூக்குதண்டனை வழக்குபோல, இந்த வழக்கையும் காத்துக்கிடந்து நடத்தியது ஒரு பரபரப்பான சூழ்நிலையே.

இதற்கு மத்தியில் தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், கி.வீரமணி, அய்யன அம்பலம் ஆகியோர் இணைந்து நடத்திய “டெசோ” இந்த மூவரையும் நாடு கடத்தியதைக் கண்டித்தனர். அன்றைக்கு மாலையே டெசோ சார்பில் சென்னையே குலுக்கிய மாபெரும் பேரணியும் நடந்தது. 1985 செப்டம்பரில் வெறும் ஆறு மணி நேரத்தில் இந்தப் பேரணி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியாக அமைந்தது ஒரு ஆச்சர்யமான நடவடிக்கையாகும். இந்தப் பேரணிக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் பங்கேற்றது எம்.ஜி.ஆரையே அதிரவைத்தது.

இந்த நினைவுகளை எல்லாம் குறித்து சந்திப்பின்போது நிர்மலா அம்மையார் நினைவு கூர்ந்தார். என்னிடம், “இன்றைக்கும் அதே வழக்கறிஞராகத் தான் இருக்கின்றீர்கள். யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள், உங்களைப் போன்றோர்கள் எல்லாம் ஏன் வரமுடியவில்லை. 80களில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமாக இருந்து அவர்களின் வழக்குகள், அவர்களின் பயிற்சி முகாம் போன்ற பல்வேறு பணிகளுக்குத் தோன்றா துணையாக இருந்தீர்களே. தமிழகம் தங்களை நினைக்கிறதோ இல்லையோ, ஈழத்தில் உள்ளவர்கள் உங்களை நினைப்பார்கள்” என்று சொன்னது நெகிழ்வாக இருந்தது.

நிர்மலா அவர்கள், 11-09-1985 தேதியில் வெளியான தேவி இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த நிகழ்வுகளின் முழு விபரங்களும் இடம்பெற்றன. இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.

14.08.2020

#டெசோ_1986

#ஈழம்

#இலங்கை_பிரச்சினை

#ஏ_பி_வாஜ்பாய்

#ksrposts

Share Button
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons