ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் – Alankulam TamilNadu Cements -TANCEM.

0

ஆலங்குளம் ஆலையினை அமைச்சர்  மூடமாட்டோம் என்று சொல்கிறார்.  அரசு வழக்கறிஞர்    நீதிமன்றத்தில் மூடப்போகிறோம், அதற்கு மனு செய்ய அவகாசம் கேட்கிறார்.

                                               *******

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலையினை மூடக்கூடாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நான் தாக்கல் செய்திருந்த ரிட் மனு ( WP 4696 /2015)  31-03-2015 அன்று  விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விளக்கம் கேட்டு,  மாநில அரசுக்கு உரிய தாக்கீது நோட்டீசு அனுப்பியது.  இது குறித்து அனைத்து நாளேடுகளும்  செய்தி வெளீயிட்டன.

கடந்த சட்டமன்றத் தொடரில் தொழில்துறை அமைச்சர். தங்கமணி, சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பியபோது, “ஆலையை மூடமாட்டோம். மேலும், நவீனப்படுத்த உரிய பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால்,  எனது வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அரசு வழக்கறிஞர். புகழேந்தி ”ஆலங்குளம் சிமெண்ட் ஆலை நஷ்டத்தில் இயங்கிவருவதால் மூட முடிவு செய்யப்பட்டது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என்று பதிலளித்ததாக “தி இந்து “ தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. (ஏப்.1.2015/ பக்16 ).

அரசுத் தரப்பில் அமைச்சர் ஒன்று சொல்கின்றார். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒன்று சொல்கின்றார். இதென்ன கண்கட்டி வித்தையாக உள்ளது.  நீதிமன்றம் தான் உண்மையை ஆராய்ந்து முடிவுசெய்யவேண்டும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலே ஆலையினை விற்பனை செய்ய முடிவெடுத்தபோது,  சுற்றுச்சூழல் , விவசாயம் பாதிக்கப்படுகின்றதென்று 1986ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் ரிட் மனு தாக்கல் செய்த போது, இதே நிலைமைதான் இருந்தது. அப்போது தனியாருக்கு விற்கமுடியாமல் நிலுவையிலுருக்கும் என்னுடைய வழக்கால் அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டது என்பது வேறு செய்தி.

ஒருகாலத்தில் ஈரான், ஈராக் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்துக்கெல்லாம் இங்கிருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆலையின் லாபத்தினால் தான், அரியலூர் சிமெண்ட் ஆலை, மாயனூர், விருத்தாச்சலம் பகுதிகளில் சிமெண்ட் பைப் செய்யக்கூடிய அரசு ஆலைகளும் நிறுவப்பட்டன. இப்படியான நிலையில் இந்த ஆலையினை மூடவேண்டிய அவசியமென்ன. தனியாருக்கு விற்கப்போவதாக சொல்வது ஏன்?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-04-2015

#MadrasHighCourt (Madurai bench),
 #TamilnaduCements,
 #WritPetition,
#KSR_Posts. 

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons