சங்கரன்கோவில்- கோவில்பட்டி களப்பணிகள்.

2

இன்று (02-08-2015) காலை சங்கரன்கோவில் அருள்மிகு.கோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு அவர்கள் முயற்சியில், கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் சங்கரன்கோவில் அரசு வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் திறப்பு விழா  நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்ட மாணவர்கள் விளையாடப் பயன்படுத்தும் விளையாட்டு அரங்கின் சுவர்களும், ஜன்னல்களும் இடிக்கப்பட்டு, சமூக விரோதிகளால் துவம்சம் செய்யப்பட்டிருந்தது.

இதனைச் சரிசெய்ய வேண்டுமென்று சகோதரி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். இன்று காலை பத்து மணியளவில்  சகோதரர் ச.தங்கவேலு அவர்களும், நானும் இரண்டாவது முறையாக அங்கு சென்று பார்வையிட்டோம்.

ஏற்கனவே, திரு.தங்கவேலு அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்தக் கட்டிடத்தை சரிசெய்து சீர்திருத்தலாம் என்றால் அதற்கான வழிவகை இல்லை என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சொல்லிவிட்டது. நல்லது செய்ய
வேண்டுமென்றாலும் பல தடங்கல்கள். இதற்கு ஆயிரம் அரசு உத்தரவுகள்.

இதுவரை அலங்கோலமாக நாசப்படுத்தப்பட்ட இக்கட்டிடத்தின் அழிவைக் குறித்து, பள்ளி நிர்வாகம் எந்தப் புகாரையும் காவல்த்துறையினரிடம் கொடுத்ததாகத் தெரியவில்லை. சங்கரன்கோவில் நகரக் காவல்த்துறையினரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனவே, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அந்தக் கட்டிடத்தை இன்று காலை பத்துமணிக்கு பார்வையிட்டோம். அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காவல்த் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதுவது என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

இதை எப்படியாவது சரிபடுத்த முயற்சிகளை எடுத்துக் கொள்வது என்றும் , இதைக்குறித்து மாநில அரசு தலைமைச் செயலாளரிடம் பேசுவது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

ஏற்கனவே, முதல்முறை பார்வையிட்டபோது இக்கட்டிடம் பற்றி பதிவு செய்திருந்தேன். அப்போது பலரிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை வீண்போகாமல் நிச்சயமாக கடமையை ஆற்றவேண்டியது
எங்கள் பொறுப்பாகும்.

பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு முடித்துவிட்டு,
இன்று முற்பகல்  11:30 மணியளவில் கோவில்பட்டி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமி ஆலை அருகே , மேம்பாலம் இறக்கத்தின் கீழ் உள்ள மணியாச்சி விளக்கில் உயர்கோபுர விளக்கு அமைக்க ஆய்வுப் பணிகளை நானும், நாடாளுமன்ற உறுப்பினர் ச.தங்கவேலு அவர்களும் மேற்கொண்டோம்.

அப்போது பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டியன், முன்னாள் நகரச் செயலாளர் எம்.டி.ஏ காளியப்பன், மணியாச்சி பச்சைமால் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

ஏற்கனவே இந்த விளக்கை கோவில்பட்டி மெயின்ரோட்டில், இளையரசனேந்தல் விளக்கில், பழைய பாலமுருகன் எதிர்ப்புறத்தில் அமைக்க சில மாதங்கள் முன்பு திட்டமிட்டு, சகோதரர் ச.தங்கவேலு தன்னுடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை ஒதுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.அந்த இடத்தில் பாலம் கட்டும் பணிகள் தொடங்க இருப்பதால் உயர்கோபுர விளக்கு அமைப்பது சாத்தியமில்லை என்று பதில் வந்தது.

அதனால் இன்றைக்கு திருநெல்வேலிக்குச் செல்லும் நாற்கரச் சாலை அருகே உள்ள கோவில்பட்டி மணியாச்சி விளக்கில் இந்த உயர்கோபுர விளக்கை அமைக்க முடிவு செய்து உரிய பரிந்துரையும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்துவிடும்.

எங்களைப் பொறுத்தவரையில் கோவில்பட்டியில், மறைந்த சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பதும், நதிநீர் இணைப்பைக் குறித்து எனது உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நதி நீர் இணைப்பின் நன்மைகள் குறித்தான விழிப்புணர்வையும்  ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்வதும் என இரண்டு முக்கியப்பணிகள் எங்கள் முன் இருக்கின்றன அதையும் உறுதியோடு செய்வோம். இதேபோன்ற கருத்தரங்கங்கள் சங்கரன்கோவிலிலும் மற்றும் இராஜபாளையம் அல்லது சிவகாசியிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்யவேண்டியது கடமை.
இனி வரும் காலங்களில் தேர்தல்களில் நிற்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பணிகளை ஆற்றவில்லை என்பதை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-08-2015

Share Button

Share

2 thoughts on “சங்கரன்கோவில்- கோவில்பட்டி களப்பணிகள்.

  1. தாராளமாகக் கருத்தரங்குகளை நடத்துங்கள்.எம் போன்ற இளைஞர்கள் தன்னார்வலராய் வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons