கதைசொல்லிக்கு தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களின் பாராட்டு.

0

இன்றைய தினமணி (24-05-2015)  தமிழ்மணியில், தினமணி ஆசிரியர் அன்புக்குரிய நண்பர் திரு.கே.வைத்தியநாதன் அவர்கள், “இந்தவாரம்- கலாரசிகன்” பத்தியில், சமீபத்தில் நாங்கள் கி.ரா அவர்களைப் புதுவையில் சந்தித்தது, அப்போது வட்டார மொழிகள் பற்றிய அவசியத்தை கி.ரா அவர்கள் குறிப்பிட்டது குறித்து சிறப்பாக எழுதியுள்ளார்.

அதே பத்தியில் கதைசொல்லியில் வெளிவந்துள்ள, எனக்கு உதவியாக இருக்கும் தம்பி கார்த்திக் புகழேந்தி அவர்களுடைய சிறுகதையான, “பண்டாரவிளை வைத்தியரும் காந்திமதி சித்தியும்”  கதையினை படித்துரசித்தது மட்டுமில்லாமல், தெக்குச் சீமையான திருநெல்வேலியின் மொழியையும், மாண்பையும், சிறப்பையும் எழுதியதுபற்றிக் குறிப்பிட்டது மனதுக்கு நிறைவாக இருக்கின்றது.

தம்பி கார்த்திக் புகழேந்தி தமிழ் இலக்கியத்தில்  வளர்ந்து வரும் படைப்பாளி. எதைச் சொன்னாலும் நுண்மான்நுழைபுலமாகப் புரிந்துகொண்டு செய்யும் ஆற்றல் கொண்டவர். அவர் சிறுகதைத் தொகுப்பு வற்றாநதி, நெல்லை வட்டாரநடையில் அமைந்த படைப்பாகும். அதையும் தினமணி ஆசிரியர் பாராட்டியுள்ளார்.

இளம் படைப்பாளிகளை கலாரசிகன் தொடர்ந்து அவர் பாராட்டுவது தமிழுக்குச் செய்கின்ற சேவையாகும். இதே பத்தியில் தினமணி முதுநிலை நிருபர்.நண்பர்.தா.அரவிந்தனுடைய குழி வண்டுகளின் அரண்மனையில் கவிதைத் தொகுப்பின் நடையையும், அதில் கூறப்பட்ட கருத்தையும் பாராட்டியுள்ளார்.

கார்த்திக் புகழேந்தி போன்ற இளைஞர்கள் தமிழ் படைப்புலகத்தின் இன்றைக்குள்ள சமூக நிலையையும் மனதில் வைத்து தங்கள் படைப்புகளை படைக்கின்றனர். இப்படி எண்ணற்ற இளைஞர்கள் ஆர்வமும் தாகமும் இலக்கியத்தின் மீது கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கின்றேன். இவர்கள் பணி தொடரவேண்டுமென்று இதயசுத்தியோடு வாழ்த்துகிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-05-2015.

Share Button

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Show Buttons
Hide Buttons